Published:Updated:

அம்பிகையே ஈஸ்வரியே - நெல்லைச் சீமையின் அம்மன் தலங்கள்!

நெல்லை அம்மன்
பிரீமியம் ஸ்டோரி
News
நெல்லை அம்மன்

படங்கள்: பே.சுடலை மணிசெல்வன், முருகேசன்

தாமிரபரணி நதியாள், பெருமைமிகு பெண் தெய்வமாகவே வழிபடப்படுகிறாள்.

சகல ஜீவன்களின் பாவங்களையும் போக்கும் நதிப்பெண்ணான கங்காதேவியே, மார்கழி மாதத்தில் தாமிரபரணியில் எழுந்தருளி, தன்னிடம் சேரும் பாவங்களைப் போக்கிக் கொள்கிறாளாம். அவ்வளவு மகிமை மிக்கது, தட்சிண கங்கை எனப் போற்றப்படும் தாமிரபரணி.

இந்தப் புண்ணிய நதியின் 144 தீர்த்தக் கட்டங்களும் நம் பாவங்களைத் தீர்க்க வல்லவை. மேலும் தண்பொருணையாகிய தாமிரபரணியின் கரையினில் பல்வேறு திருநாமங்களோடு கோயில்கொண்டு அருளாட்சி செய்து வருகிறாள் அம்பிகை.

அம்பிகையே ஈஸ்வரியே - நெல்லைச் சீமையின் அம்மன் தலங்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அம்மன் மாதமாகிய நிகழும் ஆடி மாதத்தில் தாமிரபரணி தீரத்தில் அமைந்த அதியற்புதமான மூன்று அம்மன் தலங்களும் அவற்றின் மகிமைகளும் வாசகர்களுக்காக...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

குழந்தை வரம் தந்திடுவாள் முக்கூடல் முத்துமாலை அம்மன்!

தலம் - முக்கூடல் முத்துமாலையம்மன்

இறைவி - முத்துமாலையம்மன்

முக்கூடல் அருள்மிகு முத்துமாலையம்மன், தாமிரபரணி தீரத்தில் மிகவும் விசேஷமாகப் போற்றப்படக்கூடிய பெண் தெய்வம். தேவி பாகவதம் எனும் நூல் தரும் விளக்கத்துக்கு ஏற்ப, முக்கூடல் முத்துமாரியம்மனை லட்சுமி அம்சமாகவே போற்றுகிறார்கள் பக்தர்கள்.

அம்பிகையே ஈஸ்வரியே - நெல்லைச் சீமையின் அம்மன் தலங்கள்!

ஒரு முறை முப்பெரும் தேவியருக்கும் இடையே பெரும் சர்ச்சை ஏற்பட்டது. மூவரும் தாங்கள் அருள்பாலிக்கும் இடங்களைத் தனித் தனியே பிரித்துக்கொண்டார்களாம். அப்போது லட்சுமிதேவியிடம் ‘நீ தென் பாகத்தில் நதியாக ஓடி, அதில் குளிப்பவர்களின் பாவத்தைப் போக்கி, அங்கேயே அமர்ந்து அருள்வாய்’ என மற்ற இருவரும் கூறிவிட்டார்களாம்.

அதன்படியே தாமிரபரணியாக உருவெடுத்து பாயத் தொடங்கிய அலைமகள், முக்கூடலில் முத்து மாலையம்மனாக அருள் பாலிக்கிறாள் என்கிறார்கள் பக்தர்கள்.

முத்துமாலையம்மன்
முத்துமாலையம்மன்

செல்வம், ஆற்றல், கல்வி ஆகிய மூன்றையும் அருளும் அன்னை முக்கூடல் முத்து மாலையம்மன். பல ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள முத்துமாலையம்மன் திருமேனி மண்ணில் புதைந்துபோனதாம். அந்தக் கால கட்டத்தில், முக்கூடல் மக்கள் ஆனி மாதம் தோறும் குரங்கணி எனும் ஊரிலுள்ள முத்துமாலையம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தார்களாம். குரங்கணிக்குச் செல்ல இயலாத அன்பர்கள், முக்கூடல் ஆற்றங் கரையில் சிறிய குடில் ஒன்றை அமைத்து, அம்மனை வழிபட்டு வந்தார்கள்.

இந்த நிலையில் ஒருநாள், சலவைத் தொழிலாளி ஒருவர், வேலை முடிந்ததும் சலவைத் தாழியை (பானையை) இந்தக் குடிலுக்கு அருகில் கவிழ்த்துவைத்துவிட்டு, வீட்டுக்குச் சென்றார். மறுநாள், என்ன முயற்சி செய்தும் அவரால் அந்தத் தாழியை வைத்த இடத்திலிருந்து எடுக்க முடியவில்லை.

ஊரார் கவனத்துக்குச் செய்தி போனது. ஒட்டுமொத்த ஊரும் வந்து தாழியை அசைக்க முயன்றும் முடியவில்லை. கோயில் பூசாரியாலும் நகர்த்த முடியாமல் போனது!

அன்று இரவு பூசாரியின் கனவில் தோன்றிய முத்துமாலையம்மன், தாழியை அந்த இடத்திலேயே வைத்து வழிபடும்படி கட்டளையிட்டாள். வேறொரு திருவாக்கும் கிடைத்தது. அதன்படி அருகிலுள்ள அரிய நாயகி புரம் எனும் ஊருக்கு மேற்கே, அம்மன் கூறிய இடத்தில் கருடன் வட்டமிட்டது.

அந்த இடத்தில் லட்சுமியின் அவதாரமான முத்துமாலை அம்மனின் சிலை கிடைத்தது. அதை நீராட்டி மாலை அணிவித்து, மேளதாளத்துடன் முக்கூடல் கோயிலுக்குக் கொண்டு வந்து தாழி அருகிலேயே பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தனர். அன்று முதல் ஊர் செழித்தது!

ஆண்டுதோறும் ஆனி மாதம் கடைசிச் செவ்வாய் அன்று இந்தக் கோயிலின் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

குழந்தை வரம் கிடைக்கும்!

முத்துமாலை அம்மனுக்குத் தொட்டில் கட்டி வேண்டிக் கொண்டால், விரைவில் வீட்டில் தொட்டில் சத்தம் கேட்கும்!

ஆனித் திருவிழாவின்போது வெள்ளி, தங்கம் அல்லது மரத் தாலான கை, கால் முதலான உருவங்களைச் செய்து சமர்ப்பிக் கிறார்கள். இதனால் தேக பாதிப்புகள் நீங்கும் என்பது ஐதிகம்.

கடன் தீர்க்கும் வழிபாடு!

தொடர்ந்து 41 நாள்கள், அருகில் பாயும் தாமிரபரணி நதியில் நீராடி, கோயிலை வலம் வந்து அன்னையை வழிபட்டால், கடன் பிரச்னைகள் நீங்கும்; இழந்த பொன்னும் பொருளும் மீண்டும் வந்துசேரும்; வீட்டில் பொருளாதாரம் செழிக்கும்.

எப்படிச் செல்வது?: திருநெல்வேலி- திருச்செந்தூர் பாதையில், செய்துங்க நல்லூரில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது முக்கூடல். செய்துங்க நல்லூரிலிருந்து பஸ் மற்றும் ஆட்டோ வசதி உண்டு.

இந்தக் கோயில் காலை 7 முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும் (தொடர்புக்கு -94896 04607).

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விவசாயம் செழிக்க வரம் அருள்வாள் சுத்தமல்லி நல்லதாயம்மன்!

தலம் - சுத்தமல்லி

இறைவி - அருள்மிகு நல்லதாயம்மன்

குலோத்துங்கச் சோழனின் மகள் ‘சித்த வல்லி’. மகளின் பெயரில் அளவற்ற பாசமும் பற்றுதலும் கொண்டிருந்தார் மன்னர். தன்னுடைய ஆளுகையின் கீழ் உள்ள பல ஊர்களுக்குத் தன் மகளின் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார். அவ்வகையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவிலுள்ள ‘சித்த வல்லி’ என்று பெயர்பெற்ற சிற்றூர் தற்போது மருவி ‘சுத்தமல்லி’ என்றழைக்கப்படுகிறது.

அம்பிகையே ஈஸ்வரியே - நெல்லைச் சீமையின் அம்மன் தலங்கள்!

மன்னனின் மகள் சித்தவல்லி, அவ்வப்போது தன் தந்தையின் ஆட்சிக்குட்பட்ட இடங் களைப் பார்வையிடுவது வழக்கம். அப்படி இந்தப் பகுதிக்கு வந்த சித்தவல்லி, இங்கே சிறிது காலம் தங்கியிருந்தாள். அப்போது, தென்மேற்குப் பகுதிக்குச் சென்று சுற்றி பார்த்தாள். அங்கு அமைந்திருந்த சிவன் கோயிலில் கந்தர்வன் என்பவன் ஜப-வேள்வி செய்து கொண்டிருப்பதைக் கண்டாள்.

இளவரசிக்குத் தானும் சிவபெருமானை வழிபட வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. இதுகுறித்துக் கந்தர்வனிடம் வினவினாள். கந்தர்வன் ‘நமசிவாய’ எனும் பஞ்சாட்சர மந்திரத்தை அவளுக்கு உபதேசித்து, அதை ஓதி வருமாறு வழிகாட்டினான். அதன்படியே சித்த வல்லியும் மந்திரத்தை ஓதி, சிவபதம் அடைய முற்பட்டாள். இதற்கிடையில் குலோத்துங்கன், இலங்கையை ஆண்ட பாண்டிய வம்சத்து மன்னனாகிய வீரபெருமானுக்குத் தன் மகள் சித்தவல்லியை மணம் முடித்துக் கொடுக்க முடிவெடுத்தான்.

அருள்மிகு நல்லதாயம்மன்
அருள்மிகு நல்லதாயம்மன்

திருமணம் ஊரறிய உலகறிய மங்கலகரமாக நிறைவேறியது. ஆனால், காலம் செல்லச் செல்ல சித்தவல்லிக்கு மணவாழ்க்கையில் ஆர்வம் இல்லாமல் போனது. சிவ வழிபாடு செய்வதிலேயே காலத்தைக் கழிக்க விரும்பி னாள். அவளுக்காக, பகவதீஸ்வரர் கோயிலை எழுப்பிக் கொடுத்தார் மன்னர்.

இதையடுத்து இக்கோயிலிலேயே தங்கி சிவ பூசை செய்து வந்தாள் சித்தவல்லி. அவளின் வழிபாடுகளால் மகிழ்ந்த சிவபெருமான், அவளுக்கு முக்தி அடையும் மார்க்கத்தைக் கூறிச் சென்றார். அதன்பிறகு, சித்தவல்லி தான தர்மங்கள் செய்து ‘நல்லதாய்’ என்றும் ‘சித்த வல்லி நாச்சியார்’ என்றும் பெயர் பெற்று, சிவனருளால் தெய்வ நிலையை அடைந்தாள்.

பகவதீஸ்வரர் கோவிலின் ஈசான மூலையில், சித்த வல்லி நாச்சியார் என்னும் நல்லதாய் அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் கொடை விழா இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஆடி மாதம் நடைபெறுகிறது.

மதுக்குட வைபவம்!

இவ்விழாவின் சிறப்பு வைபவம் மதுக்குடம் பொங்குதல். திருவிழாவின் முதல் நாள் குடத்தில் வைக்கப்படும் நவதானியங்களிலிருந்து எடுக்கப்பட்ட பால், பாதியளவு புதிய மண்குடத்தில் ஊற்றப்படும். அந்தப் பால் சூடு பண்ணாமலேயே பொங்கும். இதை மதுக்குடம் பொங்குதல் என்று கூறுவார்கள்.

பால் நன்றாகப் பொங்கினால், அந்த ஆண்டு அம்மன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நல்ல மழையோடு விளைச் சலைத் தருவாள் என்பது நம்பிக்கை. கோயிலில் சப்பரம் கிளம்பும்போது ஒருமுறையும், புதன்கிழமை மதியம் மற்றொரு முறையுமாக மதுக்குடம் பொங்குதல் நிகழ்வு நடைபெறும்.

கண், கை, கால்களில் வலி மற்றும் வேறு உபாதைகள் உள்ளவர்கள், திருவிழாவின்போது தகட்டில் செய்யப்பட்ட கண், கை, கால்களின் உருவங்களை உண்டியலில் காணிக்கை யாகப் போடுகிறார்கள். அதேபோல் மண்ணில் உருவம் செய்து, அதை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதும் உண்டு. இந்நிகழ்வை 'உருவம் எடுத்து வரும் நிகழ்ச்சி' என்கிறார்கள்.

இந்த கோயிலில் கார்த்திகை மாதம் `சூறை' வைபவம் நடைபெறுகிறது. ஆடி மாதம் கடைசி ஞாயிறன்று அன்னாபிஷேகம் நடைபெறும். பௌர்ணமி தோறும் பௌர்ணமி பூஜை மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.

எப்படிச் செல்வது?: திருநெல்வேலி சந்திப்பிலிருந்து `டவுன்' மார்க்கமாக சேரன்மகாதேவி செல்லும் சாலையில், 8 கி.மீ. தொலைவில் - சுத்தமல்லி விலக்கிலிருந்து ஒரு கி.மீ தூரம் ஊருக்குள் சென்றால், நல்லதாய் அம்மனை தரிசிக்கலாம். கோயில் காலை 9 முதல் 11 மணி வரை; மாலை 5 முதல் 6 மணி வரை திறந்திருக்கும் (தொடர்புக்கு: 94870 58086).

பொன் பொருளைக் காத்திடுவாள் திருவரங்க செல்வியம்மன்

தலம் - செய்துங்கநல்லூர்

அம்மன் - அருள்மிகு திருவரங்க செல்வியம்மன்

ஒரு காலத்தில் செய்துங்கநல்லூர் அருகே உள்ள விட்டிலாபுரத்தில் மாயப்பித்தன், புதுமைப்பித்தன் எனும் இரண்டு மந்திரவாதிகள் வாழ்ந்து வந்தனர்.

இவர்கள், செய்துங்கநல்லூர் சுந்தர பாண்டிய சாஸ்தாவைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள். வைத்தியம் பார்ப்பதில் வல்லவர்கள்; மந்திரத்தால் விஷக் கடி பாதிப்புகளையும் நீக்கிவிடுவார்களாம். அதேநேரம், மலையாள தேசத்துக்குச் சென்று திருட்டுத் தொழிலும் செய்து வந்தார்கள்.

அம்பிகையே ஈஸ்வரியே - நெல்லைச் சீமையின் அம்மன் தலங்கள்!

அந்தக் காலத்தில் திருடர்களைப் பிடிக்க, மலையாளத்து மந்திரவாதிகளை அழைத்து `நெல் குறி' கேட்பது வழக்கம். அதன் மூலம் திருடர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விடுவார்கள். அப்படி ஒருமுறை, மலையாள மந்திரவாதி ஒருவன் இவர்கள் இருவரையும் பிடிக்க நெல் குறி வைத்துவிட்டான். விளைவு, அந்தத் தேசத்து அரசன் இவர்கள் இருக்கும் இடத்தை நெருங்கிவிட்டான்.

இதைக் கேள்விப்பட்ட மாயப்பித்தனும் புதுமைப்பித்தனும் அதிர்ந்துபோனார்கள். செய்வது அறியாமல் தவித்தவர்கள், ஊருக்குத் தெற்கில் கோயில் கொண்டிருக்கும் செல்வி அம்மனைச் சரணடைந்து வணங்கினர்.

அருள்மிகு திருவரங்க செல்வியம்மன்
அருள்மிகு திருவரங்க செல்வியம்மன்

அம்மன் அவர்களைக் காக்கத் திருவுளம் கொண்டாள். குளத்துக் கரையில் ஓர் அரங்காக உருவாகி நின்றாள். மாயப்பித்தனும் புதுமைப்பித்தனும் அந்த இடத்தில் இருப்பது, மலையாள மந்திரவாதிக்கும் மன்னனுக்கும் புலப்படாதவாறு அவர்களின் பார்வையை மறைத்தாள். அவர்கள் இருவரும் தம்மைத் தடுக்கும் சக்தி எதுவென்று தெரியாமல் திரும்பி சென்றனர்.

‘உயிர் பிழைத்தது திருவரங்கு செல்வியம்மன் அருளால். இனி, இதுபோல் தவறு செய்ய மாட்டோம்’ என்று உறுதி ஏற்ற மாயப்பித்தனும் புலமைப்பித்தனும் அதன் பிறகு திருட்டுத் தொழிலை அடியோடு விட்டு விட்டார்களாம்.

தன்னைச் சரணடைந்த உள்ளூர் பக்தர்கள் இருவரையும் அரங்காக இருந்து காப்பாற்றியதால், அம்மனுக்கு `திருவரங்கு செல்வியம்மன்' என்று திருப் பெயர் ஏற்பட்டது. அந்தப் பெயரே பிற்காலத்தில் `திருவரங்க செல்வியம்மன்' என்று மருவியதாகச் சொல்கிறார்கள்.

காக்கும் பெட்டகம்...

திருவரங்கு.. என்றால் பொன் பொருளைப் பாதுகாக்கும் பெட்டகம் என்றும் பொருள் உண்டு. எனவே, இந்தத் திருவரங்க செல்வியைத் தொடர்ந்து வழிபட்டு வந்தால், நம் பொருளாதாரமும் செல்வச் செழிப்பும் குறையாதபடி காப்பாள் என்பது நம்பிக்கை.

செவ்வாய் தோஷம் நீங்கும்

இந்தக் கோயிலுக்கு வந்து பரிகாரம் செய்து, மனம் உருக திருவரங்கச் செல்வியம்மனை வழிபட்டால், செவ்வாய் தோஷம் நீங்கி விரைவில் கல்யாணம் கைகூடும்; மனதுக்கு ஏற்ற மணாளனோ, மணப்பெண்ணோ வாய்ப்பார்கள். அதேபோல், சுற்று வட்டாரத்து மக்கள், குழந்தை வரம் வேண்டியும் சத்ரு தொல்லை நீங்கவும் இந்த அம்மனிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

எப்படிச் செல்வது?: திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில், சுமார் 15 கி.மீ தொலைவில் செய்துங்கநல்லூர் உள்ளது. அங்கிருந்து ஆட்டோ மூலம் திருவரங்க செல்வியம்மன் கோயிலைச் சென்றடையலாம்.

திருக்கோயில், காலை 7 முதல் 10 மணி வரை; மாலை 4 முதல் 7 மணி வரை திறந்திருக்கும். செவ்வாய்க்கிழமைகளில் உச்சிக் கால பூஜை சிறப்பாக நடைபெறும் (தொடர்புக்கு: 82705 66877).