Published:Updated:

திருவருள் திருவுலா: அம்பிகையே... ஈஸ்வரியே!

திருவருள் திருவுலா
பிரீமியம் ஸ்டோரி
திருவருள் திருவுலா

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். சக்திதேவி தவமிருந்து சிவனைப் போற்றியதால், அவர் மனம் மகிழ்ந்து இந்த மாதத்தை அம்மனுக்கு உரியதாக்கிக் கொண்டாடப் பணித்தார் என்கின்றன ஞானநூல்கள்.

திருவருள் திருவுலா: அம்பிகையே... ஈஸ்வரியே!

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். சக்திதேவி தவமிருந்து சிவனைப் போற்றியதால், அவர் மனம் மகிழ்ந்து இந்த மாதத்தை அம்மனுக்கு உரியதாக்கிக் கொண்டாடப் பணித்தார் என்கின்றன ஞானநூல்கள்.

Published:Updated:
திருவருள் திருவுலா
பிரீமியம் ஸ்டோரி
திருவருள் திருவுலா

மணியே மணியின் ஒளியே ஒளிரும் அணிபுனைந்த

அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்

பிணியே பிணிக்கு மருந்தே அமரர்பெரு விருந்தே

பணியே ஒருவரைநின் பத்மபாதம் பணிந்தபின்னே

- அபிராமி அந்தாதி

திருவருள் திருவுலா: அம்பிகையே... ஈஸ்வரியே!

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். சக்திதேவி தவமிருந்து சிவனைப் போற்றியதால், அவர் மனம் மகிழ்ந்து இந்த மாதத்தை அம்மனுக்கு உரியதாக்கிக் கொண்டாடப் பணித்தார் என்கின்றன ஞானநூல்கள். மட்டுமன்றி, தட்சிணாயன புண்ணிய காலத்தின் தொடக்கம் ஆடி மாதம். ஆகவே, இந்த மாதத்தில் அம்மனைப் போற்றி வழிபட்டால், பன்மடங்கு பலன்கள் கிடைக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருவருள் திருவுலா: அம்பிகையே... ஈஸ்வரியே!

நாமும் இந்த ஆடிமாதத்தில் அம்மன் திருத்தலங்களை நாடி தரிசிப்போம். பூரணி, புராந்தகி, புராதனி, சங்கரி, சாம்பவி, சுதந்தரி, சுமங்கலை, நாரணி, த்ரியம்பகி... இப்படி ஆயிரம் ஆயிரம் திருநாமங்களால் போற்றப்படும் மகாசக்தி, ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு காரணத்துக்காக சிறப்புப் பெயர்கொண்டும், விசேஷ கோலம் கொண்டும் அருள்பாலிக்கிறாள். அப்படியான தலங்களில் சில உங்களுக்காக...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வேற்காட்டில் அருளும் வேப்பிலைக்காரி!

தலம்: திருவேற்காடு

அம்மன் : ஸ்ரீகருமாரியம்மன்

திருத்தலச் சிறப்புகள் : ‘பாம்பே தலையணியாம், வேப்பிலையோ பஞ்சு மெத்தை...’ என அம்மன் தாலாட்டுப் பாடல் ஒன்று வர்ணிப்பதற்கேற்ப, அருள்கோலம் ஏற்று திருவேற்காட்டில் கோயில்கொண்டிருக்கிறாள், கருமாரி.கரியநிறத்து மழை மேகத்தைப் போன்று அருளை வாரி வழங்குபவள் ஆதலால், கருமாரி என்று திருப்பெயர்!

ஸ்ரீகருமாரியம்மன்
ஸ்ரீகருமாரியம்மன்

க - கலைமகள்; ரு - ருத்ரி; மா - திருமகள்; ரி - ரீங்காரி (நாத வடிவான வள்) என இந்த அம்மனின் நான்கு அட்சரங்களுக்கும் பொருள் கூறுகிறது, தலவரலாறு. வேலமரக்காட்டில் அன்னை இருந்ததால், தலத்துக்கு வேற்காடு எனப் பெயர் உருவானது.

மூலவர் அன்னை சுயம்பு. இவளுக்குப் பின்னே இருக்கும் அம்மன் கத்தி, சூலம், டமருகம், கபாலம் ஏந்தியபடி காட்சி தருகிறாள். ஒருமுறை, ஆதிசக்தியின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளான சூரியதேவன், ஒளியை இழந்து இருளடைந்துபோனான். பின்னர், அவனுடைய வேண்டுகோளை ஏற்று, விமோசனத்துக்கு வழிகாட்டினாள் அம்பிகை. அதன்படி, இந்தத் தலத்தில் அமர்ந்து சூரியனின் பூஜையைப் பெறுகிறாள் என்கிறது தலவரலாறு.

புற்றிலிருந்த அம்மன் சுயம்புவாக வெளிப்பட்டதால், கருவில் இல்லாத கருமாரி என்று இந்த அன்னை போற்றப் படுகிறாள். திருஞானசம்பந்தர் பதிகம் பாடிய திருக்கோயிலான வேதபுரீஸ்வரர் ஆலயமும் அருகிலேயே உள்ளது.

வழிபாட்டுச் சிறப்புகள்: ஆடி தொடங்கி புரட்டாசி வரையிலும் விழாக்கோலம் காண்கிறது ஆலயம். மேலும் தை மாத பிரம்மோற்சவம்,சித்ரா பௌர்ணமி, நவராத்திரி ஆகியவையும் இங்கே விசேஷம்.

திருமண வரம், குழந்தை வரம், வியாபார வளர்ச்சி, உடல் ஆரோக்கியம் போன்ற சகல வரங்களையும் வாரி வழங்குகிறாள், கருமாரியம்மன். அம்மனின் அருள்பிரசாதமான வேப்பிலையும் தீர்த்தமும் தீராத நோய்களையும் தீர்க்கும் என்பது நம்பிக்கை.

இங்கே தனிச் சந்நிதியில் அருளும் மரத்தாலான அம்மனையும் சிறந்த வரப்பிரசாதி என்கிறார்கள். இவளுக்கு ரூபாய் நோட்டு மாலை அணிவிக்கப்படுகிறது. இவளை வழிபட்டால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

அதேபோல், ராகு, கேது தோஷம் உள்ளவர்கள், இங்குள்ள புற்றில் பால் ஊற்றி வழிபட்டால், தோஷங்கள் விலகும் என்பது ஐதிகம்.

எப்படிச் செல்வது?: சென்னையிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவேற்காடு. கோயம்பேடு மற்றும் தாம்பரத்திலிருந்து பஸ் வசதி உண்டு.

நடை திறந்திருக்கும் நேரம்: அதிகாலை 5.30 முதல் 12 மணி வரை; மாலையில் 4 முதல் 8 மணி வரை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முத்துப்பல்லக்கில் பவனி வருவாள் முத்துமாரி!

தலம்: புன்னைநல்லூர்

அம்மன் : ஸ்ரீமாரியம்மன்

திருத்தலச் சிறப்புகள் : புற்று வடிவ மாகத் தோன்றியவள்; சுயம்புவானவள் புன்னைநல்லூர் ஸ்ரீமாரியம்மன். சோழமன்னர்கள் தஞ்சையை ஆண்ட போது நகரைச் சுற்றிலும் எட்டுத் திக்குகளிலும் எட்டுவித தேவியரை காவல் தெய்வமாக வைத்தார்கள். அவ்வாறு தஞ்சைக்குக் கீழ்ப்புறத்தில் கோயில்கொண்ட தேவியே புன்னை நல்லூர் மாரியம்மன் என்கிறது ‘சோழசம்பு’ எனும் நூல். காலப்போக்கில் கோயில் சிதிலப்பட, பிற்காலத்தில் இந்த அன்னை புற்று வடிவாக மீண்டும் வெளிப்பட்டாள் என்கிறார்கள்.

திருவருள் திருவுலா: அம்பிகையே... ஈஸ்வரியே!

சதாசிவ பிரம்மேந்திரர் உருவாக்கிய அம்மன்தான் இன்று நாம் வழிபடும் அம்பிகை என்றும் கூறுவர். சாம்பிராணி, புனுகு, ஜவ்வாது, சந்தனம், குங்குமப் பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, கோரோஜனை, அகில் மற்றும் பலவித மூலிகை மருந்துகள் கொண்டு புற்று மண்ணில் பிசைந்து உருவாக்கப்பட்ட திருமேனி என்கிறது தலவரலாறு. பிரமேந்திரரே இங்குள்ள ஸ்ரீசக்ரத்தையும் பிரதிஷ்டை செய்தாராம்.

கோடைப்பருவங்களில் அன்னையின் திருமுகம் வியர்க்கும் அற்புதம் இன்றும் தொடர்கிறது.அம்மனின் திருமுகத்தை அர்ச்சகர் துடைத்து அதில் உள்ள ஈரத்தை பக்தர்களுக்குக் காண்பிக் கிறார்.அதனால் இந்த அன்னை, முத்து மாரியம்மன் என்றும் போற்றப்படுகிறாள்.

வழிபாட்டுச் சிறப்புகள்: ஆடி மாத பல்லக்குத் திருவிழா இங்கு விசேஷம். பிரமாண்ட முத்துப்பல்லக்கில் அம்மன் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சி. எல்லா நோய்களும் தீர இங்கு மாவிளக்கு எடுத்து வேண்டிக் கொள்கிறார்கள், பக்தர்கள். அதேபோல் உப்பு, மிளகு இடுவதும், அக்னிச் சட்டி எடுப்பதும், வேப்பஞ்சேலை உடுத்துவதும் இங்கு சிறப்பான வழிபாடுகளாகத் திகழ்கின்றன.

வேண்டுதல் நிறைவேறும் பக்தர்கள், வெல்லம் வாங்கி அம்மனின் தீர்த்தமான வெல்லக்குளத்தில் போடுகிறார்கள். தோல் நோய், வயிற்று வலி, கட்டிகள் ஆகிய பிணிகளால் அவதிப்படுவோர், இந்தத் தலத்துக்கு வந்து விரதமிருந்து அன்னையை வழிபட்டு, புற்று மண் பிரசாதத்தைப் பெற்றுச் செல்கிறார்கள். இந்தப் புற்றுமண் பிரசாதம் பிணிகளைப் போக்கும் அருமருந்து என்பது பக்தர்களின் நம்பிக்கை.

எப்படிச் செல்வது?: தஞ்சையின் புறநகராகவே திகழ்கிறது புன்னைநல்லூர். தஞ்சை பெரியகோயிலிலிருந்து சுமார் 8 கி.மீ.

நடை திறந்திருக்கும் நேரம்: அதிகாலை 5.30 முதல் இரவு 9 மணி வரை இந்த ஆலயத்தின் நடை திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 4:30 முதல் இரவு 10:30 மணி கோயில் நடை திறந்திருக்கும்.

அன்னபூரணியாய் அருள் தருவாள் இளங்காளி

தலம்: சென்னை-சைதாப்பேட்டை

அம்மன் : ஸ்ரீஇளங்காளியம்மன்

திருத்தலச் சிறப்புகள் : எப்போது தோன்றினாள் என்று யாருமே கணித்துக் கூற முடியாதவள், இளங்காளி அம்மன். சென்னையின் காவல் தெய்வங்களில் முக்கியமானவள்; சைதாப்பேட்டையின் எல்லைக்காளியாகவும் இருப்பவள்!

திருவருள் திருவுலா: அம்பிகையே... ஈஸ்வரியே!

புன்முறுவல் தவழும் கருணை முகமும், சகல வேண்டுதல்களையும் நிறைவேற்றும் அருள் விழிகளுமாக அமர்ந்த கோலத்தில் ஆட்சி செய்து வருகிறாள், அன்னை பிடாரி இளங்காளி அம்மன். குங்குமக் கிண்ணமும், சூலமும், பாசமும், உடுக்கையும் ஏந்தியவாறு இந்த அன்னை தரிசனம் தருகிறாள். இவளை வணங்கி வழிபட்டால், எல்லா தீமைகளும் நீங்கி சகல வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அன்னபூரணியின் அம்சமாகவும் இந்த இளங்காளியம்மன் போற்றப் படுகிறாள். அமாவாசை, பௌர்ணமி, வெள்ளிக்கிழமைகளில் இங்கு அன்ன தானம் வழங்கப்படுகிறது.

வழிபாட்டுச் சிறப்புகள்: திருமண பாக்கியம், பிள்ளை வரம் வேண்டுவோர், வம்பு வழக்குகளில் இருந்து மீள விரும்புவோர் எனப் பலரும் இந்த அன்னையின் சந்நிதிக்கு வந்து வரம் பெற்றுச் செல்கிறார்கள். முக்கியமாக அநீதி இழைக்கப் பட்டவருக்கு இவளே ஆறுதலாக இருந்து வருகிறாள். பால் அபிஷேகம், நெய்தீபம் ஏற்றுதல், வளையல் காணிக்கை, தொட்டில் கட்டுதல், பொங்கல்வைத்தல் எனப் பலவித வழிபாடுகளை ஏற்று அருள் வழங்குகிறாள் இளங்காளி அம்மன்.

இந்த ஆலயத்திலுள்ள விநாயகர் சந்நிதியின் கோஷ்ட தெய்வமாக ஸ்ரீதட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இவரை வணங்கும் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். இவருக்கு வியாழக்கிழமை வழிபாடு சிறப்பானது.

இந்த அன்னையின் ஆலயத்திலுள்ள ஸ்ரீதுர்காதேவியின் சந்நிதிக் கதவில் பூட்டுகள் அதிகம் காணப்படுகின்றன. இங்கு வந்து அம்மனிடம் வேண்டிக்கொள்ளும் பக்தர்கள், தங்களின் வேண்டுதல் பலித்ததும் நேர்த்திக்கடனாகப் பூட்டுக் காணிக்கையைச் சமர்ப்பிக்கிறார்கள். மேலும், தீவினைகள் நீங்கவும், வாழ்வில் முன்னேற்றம் காணவும், சகல சம்பத்துகளைப் பெற்றுச் சிறக்கவும், தை மற்றும் ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் அன்னையை வழிபட நூற்றுக் கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்தில் குவிகிறார்கள்!

எப்படிச் செல்வது?: சென்னை - சைதாப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே பிரதானமான இடத்தில் (அண்ணா சாலையில்) அமைந்திருக்கிறது, ஸ்ரீஇளங்காளியம்மன் கோயில்.

நடை திறந்திருக்கும் நேரம்: அதிகாலை 5.30 முதல் 12 மணி வரை; மாலையில் 4 முதல் 8 மணி வரை.

முப்பொழுதும் காப்பாள் முப்பாத்தம்மன்!

தலம்: சென்னை- முப்பாத்தம்மன்

அம்மன் : ஸ்ரீமுப்பாத்தம்மன்

திருத்தலச் சிறப்புகள் : முப்போகம் விளையும் பூமியில் குடிகொண்டு அருள் செய்யும் சக்தியை நம் முன்னோர்கள், `முப்போகத்தம்மாள்’ என்று பக்தியோடு வணங்கி வந்தனர். அவளே விளைச்சலுக்கு உரிய தேவியாக இருந்து, வேளாண் மக்களைப் பாதுகாத்து வந்தாள். காலப்போக்கில் முப்போகத்தம்மாள் என்பது மருவி `முப்பாத்தம்மாள்’ என்ற பெயர் வந்தது என்கிறது தலவரலாறு.

திருவருள் திருவுலா: அம்பிகையே... ஈஸ்வரியே!

அம்மனின் ஆலயம் அமைந்திருக்கும் பகுதி, அந்தக் காலத்தில் நீர்வளமும், நிலவளமும் கொண்ட விவசாயப் பகுதியாகவே திகழ்ந்தது. அப்போது புற்று ஒன்றிலிருந்து வெளிபட்ட நல்ல பாம்பு ஒன்றின் மூலம், இங்கே கோயில் கட்டுவதற்கு அன்னையின் ஆணை கிடைத்ததாம். பின்னர், பெருவெள்ளத்தில் அடித்துவரப்பட்ட அம்மன் சிலை புற்று இருக்கும் இடத்தை அடைய, அதைக்கொண்டே கோயில் உருவானதாகச் சொல்கிறார்கள்.

வழிபாட்டுச் சிறப்புகள்: வேண்டியவை யாவற்றையும் நிறைவேற்றித் தரும் மங்கல நாயகியாம் முப்பாத்தம்மனை ஆடி மாதங்களில் வந்து வணங்குவது சிறப்பானது. அம்மனுக்குத் தீபமேற்றி, வளையல் காணிக்கை அளித்து வணங்கி நிற்கும் பெண்களின் கூட்டம், நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

சுற்றிலும் நாகர் சிலைகள் அமைந்திருக்கும் பிரமாண்ட புற்றில் பால் ஊற்றி, மஞ்சள், குங்குமம் தெளித்து அம்மனை வேண்டிக்கொண்டால் தீராத நோயும் தீரும் என்கிறார்கள், முப்பாத்தம்மனின் பக்தர்கள்.

கடுமையான நோயால் பாதிக்கப்பட்டோர், நாக தோஷம் உள்ளவர்கள், குழந்தை வரம் வேண்டுவோர், திருமண வரம் வேண்டுவோர் எனப் பலரும் இங்கு வந்து, இந்தப் பாம்பு புற்றைச் சுற்றி வந்து பாலூற்றி வழிபட்டுப் பலன் பெறுகிறார்கள்.

எப்படிச் செல்வது?: சென்னை - தியாகராயநகர் பனகல் பூங்கா அருகே, வடபழநி செல்லும் உஸ்மான் ரோட்டின் இடதுபுறத்தில், மகாராஜபுரம் சந்தானம் சாலையில் கோயில்கொண்டு ஆட்சி செய்து வருகிறாள் அருள்மிகு முப்பாத்தம்மன்.

நடை திறந்திருக்கும் நேரம்: அதிகாலை 5.30 முதல் 12 மணி வரை; மாலையில் 4 முதல் 8 மணி வரை இந்த ஆலயத்தின் நடை திறந்திருக்கும்.

இருக்கன்குடி மாரியம்மனுக்குக் கரும்புத்தொட்டில்!

தலம்: இருக்கன்குடி

அம்மன் : ஸ்ரீமாரியம்மன்

திருத்தலச் சிறப்புகள்: விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடியில் கோயில் கொண்டுள்ளாள் இருக்கன்குடி மாரியம்மன். திரேதாயுகத்தில் ராம பிரானாலும், துவாபரயுகத்தில் அர்ஜுனனாலும் தோற்றுவிக்கப்பட்ட அர்ச்சுனா நதி, வைப்பாறு ஆகிய இரண்டும் கங்கைக்கு நிகராக மகிமை பெற்றன. இந்த இரண்டுக்கும் நடுவில் அமைந்துள்ளதால் இந்த ஊருக்கு, இரு கங்கைக்குடி என்று பெயர் ஏற்பட்டது. அதுவே, பிற்காலத்தில் `இருக்கன்குடி' என்று மருவியதாகச் சொல்கிறார்கள்.

திருவருள் திருவுலா: அம்பிகையே... ஈஸ்வரியே!

சதுரகிரி மலையில் சித்தர் ஒருவர் அம்பிகையை தரிசிக்க விரும்பித் தவம் இருந்தார். அவருக்கு, அர்ச்சுனா நதி மற்றும் வைப்பாற்றுக்கு நடுவில் இருக்கும் மேட்டுப் பகுதிக்கு வரும்படி அசரீரியாக அருள்வாக்குத் தந்தாள் அம்பிகை. அதன்படியே இப்பகுதிக்கு வந்த சித்தருக்கு அம்பிகையின் தரிசனம் கிடைத்தது. அந்தக் கோலத்திலேயே அம்பிகைக்கு விக்கிரகம் வடித்துப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் சித்தர். காலப்போக்கில், அம்மனின் சிலை ஆற்று மண்ணில் புதைந்தபோனது. பிற்காலத்தில், சிறுமி ஒருத்தியின் மூலம் அம்மன் வெளிப்பட்டு, கலியின் துன்பங்கள் தீர கோயில்கொண்டாளாம்.

மாரியம்மன் இங்கே சிவ அம்சமாகத் திகழ்வதால், அம்மன் சந்நிதிக்கு எதிரில் நந்தி இருக்கிறது. கோயில் இருக்கும் இடத்துக்குச் சற்றுத் தொலைவில் - அம்பாள் சிறுமிக்குக் காட்சி கொடுத்த இடத்தில், ஆதி அம்பாள் சந்நிதி உள்ளது. இங்கே, சூலம் மட்டும் வைக்கப்பட்டுள்ளது. உற்சவ அம்மன் ஊருக்குள் இருக்கிறாள்; ஆடி வெள்ளிக் கிழமைகளில் மட்டுமே பிரதான கோயிலுக்கு எழுந்தருள்கிறாள்.

வழிபாட்டுச் சிறப்புகள்: குழந்தை இல்லாதவர்கள் இந்த அம்மனை மனதார வேண்டிக்கொள்கிறார்கள். குழந்தை பிறந்ததும் கரும்பில் தொட்டில் செய்து, அதில் குழந்தையைப் படுக்கவைத்து அம்மனின் சந்நிதியை வலம் வந்து வழிபடு கின்றனர். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறுகளில் அக்னிச் சட்டி எடுத்தல், அங்கப்பிரதட்சிணம் செய்தல் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். அதேபோல், இங்கு வந்து அம்மனின் அபிஷேகத் தீர்த்தத்தைக் கண்ணில் இட்டுக்கொண்டால், கண் பாதிப்புகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

எப்படிச் செல்வது?: மதுரையிலிருந்து சுமார் 73 கி.மீ. தூரத்திலுள்ள சாத்தூரை அடைந்து, அங்கிருந்து சுமார் 8 கி.மீ. தூரத்திலுள்ள இருக்கன்குடியை அடையலாம். சாத்தூரிலிருந்து பஸ் மற்றும் ஆட்டோ வசதி உண்டு.

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6 முதல் 1 மணி வரை; மாலை 4 முதல் இரவு 8 வரை; செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் காலை 5.30 முதல் இரவு 8.30 வரை.

குடிசையில் கோயில் கொண்டாள் காட்டூர் மாரி!

தலம்: கோவை

அம்மன் : ஸ்ரீமுத்துமாரியம்மன்

திருத்தலச் சிறப்புகள்: கோவை காந்திபுரத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது காட்டூர்.

ஒருகாலத்தில், கோவையில் கடும் பஞ்சம் நிலவியதாம். மழையின்றிப் பயிர்கள் காய்ந்தன; உணவின்றி மக்கள் வாடினர்; தொழில் நசிந்து வியாபாரிகள் கவலைப்பட்டனர். இந்த நிலையில், தற்போது ஆலயம் அமைந்துள்ள பகுதியில் குடிசை ஒன்று இருந்ததாம். ஒருநாள், இந்தப் பகுதிக்கு வந்தாள் பெண்ணொருத்தி. ‘அவள் யார், எந்த ஊர்’ என எல்லோரும் குழம்பினர். ‘இங்கேயே பஞ்சம் தலைவிரிச்சாடுது; இந்த நேரத்துல வெளியூர்லேருந்து ஒருத்தி இங்கே வந்து என்ன செய்யப் போறாளாம்’ என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.

திருவருள் திருவுலா: அம்பிகையே... ஈஸ்வரியே!

அந்தப் பெண் நாலாப்புறமும் பார்வையைச் செலுத்தினாள். எதிரில் உள்ள குடிசையையும் கண்டாள். மெள்ள நடந்து அந்தக் குடிசைக்கு அருகில் சென்றாள்; திரும்பி, தன்னையே பார்த்தபடி இருந்த ஜனங்களை ஒருமுறை உற்று நோக்கினாள். ‘இனி உங்க ஊர் நல்லாருக்கும்’ என்று சொல்லிவிட்டுக் குடிசைக்குள் போனவள்தான்... வெளியே வரவே இல்லை. உள்ளே சென்று தேடியும் அவளைக் காணவில்லை!

அடுத்தடுத்த நாள்களில், மழை பொழிந்தது; பஞ்சம் மறைந்தது; விளைநிலங்கள் செழிப்புற்றன; வியாபாரிகள் லாபம் ஈட்டினர். இவை அனைத்துக்கும், சாமியாகிப்போன அந்தப் பெண்ணே காரணம் எனச் சொல்லிச் சிலிர்த்த மக்கள், அந்தக் குடிசையையே கோயிலாக எண்ணி வழிபட்டனர். பின்னர், குடிசை இருந்த இடத்தில் அழகிய கோயிலை எழுப்பி, அம்மன் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து, ஸ்ரீஅம்பிகை முத்துமாரியம்மன் எனத் திருநாமம் சூட்டி, வழிபடத் தொடங்கினர்.

வழிபாட்டுச் சிறப்புகள்: இந்த அம்மனை வணங்கி வழிபட்டால், விரைவில் திருமண வரம் வாய்க்குமாம். இங்கே, சித்திரை மாத விழாவின்போது (சித்திரை விஷு), அம்மனுக்குப் பணமாலை சூட்டி அழகுபார்க்கின்றனர். இந்தக்கோலத்தை தரிசித்தால், வறுமை நீங்கி செல்வம் செழிக்கும்; மூல நட்சத்திரக்காரர்கள், ஒன்பது வெள்ளிக் கிழமைகள் இங்கு வந்து தீபமேற்றி வழிபட் டால், தோஷங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

எப்படிச் செல்வது?: கோவை - காந்திபுரத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது காட்டூர். காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பஸ் ஏறினால், நஞ்சப்பா சாலையிலுள்ள `பார்க் கேட்’ நிறுத்தத்தில் இறங்கி, கோயிலை அடையலாம்.

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7:00 முதல் 10:30 மணி வரை; மாலையில் 5:30 முதல் 7:30 மணி வரை.

அண்ணாமலையில் அருளும் நாயகி!

தலம்: திருவண்ணாமலை

அம்மன் : ஸ்ரீவனதுர்கை அம்மன்

திருத்தலச் சிறப்புகள்: நினைக்க முக்தி தரும் புண்ணிய க்ஷேத்திரமாம் திருவண்ணாமலையில், கிரிவலைப் பாதையில் பல அற்புதமான திருக் கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது, அருள்மிகு வனதுர்கையம்மன் ஆலயம்.

முன்னொரு காலத்தில் இந்த மலையடிவாரப் பகுதியில், குளம் வெட்டும் பணி நடைபெற்றது. அப்போது, பூமியிலிருந்து அழகிய துர்கை விக்கிரகம் கிடைத்தது. வனப் பகுதியில் கிடைத்ததால், அந்த அம்மனுக்கு ஸ்ரீவனதுர்கை என்று திருநாமம் சூட்டி, கோயிலும் கட்டி, ஊர்மக்கள் வழிபட ஆரம்பித்தனராம்.

திருவருள் திருவுலா: அம்பிகையே... ஈஸ்வரியே!

அந்தக் காலத்தில், அருணை மலையின் மீது முனிவர் ஒருவர் தவம் செய்து வந்தார். ஒருநாள், அந்த வழியே வந்த அரக்கன் ஒருவன், அந்த முனிவரின் தவத்தைக் கலைத்ததுடன், அவரைக் கொல்லவும் முற்பட்டான்.

அவனிடமிருந்து தப்பிக்க எண்ணிய முனிவர், தனது தவசக்தியால் மானின் வடிவெடுத்து மலையடிவாரத்துக்கு வந்தார். அங்கே கோயில் கொண்டிருந்த துர்கையை தரிசித்தவர், அவளை வணங்கி, அசுரனிடமிருந்து தன்னைக் காப்பாற்றும்படி அந்த அன்னையைச் சரணடைந்தார்.

அந்த முனிவருக்கு அபயம் அளித்த அம்பிகை, அவரை விரட்டி வந்த அரக்கனை அழித்து, முனிவரைக் காப்பாற்றினாள் என்கிறது, இந்தக் கோயிலின் வரலாறு.

வழிபாட்டுச் சிறப்புகள்: ஆடி மாதத்தில் அம்மனுக்கு தீ மிதித் திருவிழாவும், 1008 பால்குட அபிஷேகமுமாகத் திருக்கோயில் களைகட்டும். இவளை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. திருமணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள், வெள்ளிக்கிழமை, அமாவாசை அல்லது பௌர்ணமி தினத்தில் இங்கு வந்து அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவித்து, 48 எலுமிச்சை தீபங்கள் ஏற்றிவைத்து வழிபட்டால், கல்யாணத் தடைகள் நீங்கும். கன்னிப் பெண்களுக்கு மனதுக்கினிய மாப்பிள்ளையும், திருமணம் தள்ளிப்போகும் ஆண்களுக்கு நல்ல மணப்பெண்ணும் அமைவார்கள். அண்ணாமலையை கிரிவலம் வரும் எண்ணற்ற பக்தர்கள், ஸ்ரீவனதுர்கையின் அருளை அறிந்து அவளின் ஆலயத்துக்கு வந்து, எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டு வரம்பெற்றுச் செல்கின்றனர்.

எப்படிச் செல்வது?: கிரிவலப் பாதையில், ஸ்ரீரமணாஸ்ரமத்துக்கும் பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்துக்கும் அருகில் அமைந்துள்ளது, ஸ்ரீவனதுர்கை அம்மன் திருக்கோயில்.

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6 முதல் 10 மணி வரை; மாலை 5 முதல் இரவு 8 வரை; பெளர்ணமி தினங்களில் நாள் முழுவதும் கோயிலின் நடை திறந்திருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism