Published:Updated:

`1,000 கிலோ அரிசி; 500 கிலோ காய்கறி!' - தஞ்சைப் பெரியகோயில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்

1000 கிலோ அரிசியில் சாதம், 500 கிலோ காய்கறி மற்றும் பழங்களால் தஞ்சாவூர் பெரிய கோயில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

அன்னாபிஷேகம்
அன்னாபிஷேகம் ( ம.அரவிந்த் )

தஞ்சாவூர் பெரியகோயில் பெருவுடையாருக்கு 1000 கிலோ அரிசியில் வடிக்கப்பட்ட சாதத்தாலும், 500 கிலோ காய்கறிகளாலும் அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ‘பெருவுடையாரே’ கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.

பெரியகோயில்
பெரியகோயில்

உலகப் புகழ் பெற்ற தஞ்சைப் பெரியகோயில் ராஜ ராஜ சோழனால் கி.பி 1010 - ம் ஆண்டு கட்டப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாகக் காட்சி அளித்து தமிழர்களின் பெருமையை உலகத்திற்கே பறை சாற்றிக்கொண்டிருக்கிறது. இங்குள்ள மூலவர் 12 அடி உயரமும், 65 அடி சுற்றளவும் கோண்ட ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட சிறப்புடையது. இந்த நிலையில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில், இங்கு பெருவுடையாருக்கு மிக விமரிசையாக அன்னாபிஷேம் நடைபெறுவது வழக்கம்.

Vikatan

அதன்படி, இந்தாண்டிற்கான அன்னாபிஷேக விழாவிற்குச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக பக்தர்கள் அரிசி மற்றும் காய்கறிகளை நன்கொடையாக வழங்கினர். அன்னாபிஷேகத்திற்காக வழங்கப்பட்ட 1,000 கிலோ அளவிலான அரிசியைக் கொண்டு காலை 9 மணியிலிருந்தே கோயில் வளாகத்தில் உள்ள மடப்பள்ளியில், சாதம் வடிக்கப்பட்டது. அர்த்தமண்டபத்தில், காய்கறி, பழங்கள் மற்றும் இனிப்பு வகைகளைக் கொண்டு அலங்காரம் தயார் செய்யப்பட்டது.

அன்னாபிஷேகம்
அன்னாபிஷேகம்

இதையடுத்து மாலை 4.30 மணிக்கு பெருவுடையாருக்கு 1,000 கிலோ அரிசியில் வடிக்கப்பட்ட சாதத்தாலும், 500 கிலோ காய்கறி மற்றும் பழங்களாலும் அலங்கரிக்கப்பட்டு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 6 மணிக்கு மகா தீபாரதணை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டதுடன், ’பெருவுடையாரே’ என்ற கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

இதையடுத்து இரவு 9 மணிக்கு லிங்கத்திலிருந்து எடுக்கப்படும் சாதம், பக்தர்களுக்கும் கால்நடைகளுக்கும் பிரசாதமாக வழங்கப்படும். மீதமுள்ள அன்னம், அருகில் உள்ள கல்லணைக் கால்வாயில் நீர்வள உயிரினங்களுக்குப் போடப்படும் எனக் கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சாதம் வடிக்கப்பட்ட போது
சாதம் வடிக்கப்பட்ட போது

இது குறித்து சிவச்சாரியர்கள் கூறுகையில்,``இவ்வுலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் அடிப்படையாக விளங்குவது அன்னம். இதைப் படைத்தருளிய இறைவன் ஈசனுக்கு நன்றி சொல்லும் விதத்தில், அன்னாபிஷேகம் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. லிங்க வடிவில் வீற்றிருக்கும் ஈசனுக்கு அன்னத்தினால் செய்யப்படுகின்ற அபிஷேகத்தை தரிசித்து, அந்தப் பிரசாதத்தை உண்ணும் பக்தர்களுக்கு நோய்கள் மற்றும் வறுமை நீங்கும். அத்துடன் உணவுப் பஞ்சம் ஏற்படாமல் விவசாயமும் செழித்தோங்கும் என்பது ஐதிகம். அன்னாபிஷேகத்தை தரிசிப்பதால் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசித்த புண்ணியம் கிடைக்கும்” என்றனர்.