பிரீமியம் ஸ்டோரி

திருவண்ணாமலையைக் கிரிவலம் வரும் போது, மழை வந்தாலும் ஒதுங்கக் கூடாது என்கின்றன ஞானநூல்கள். பிரகலாதனின் தாய் கிரிவலத்தால் புண்ணியப் பலன் பெற்ற கதையைச் சிலிர்ப்புடன் விவரிக்கின்றன புராணங்கள்.

கிரிவலமும் பிரகலாதனும்!

றைவனிடம் வரங்கள் பெற இரண்யகசிபு, மனைவி லீலாவதிக்குத் தெரியாமல் தவம் புரியச் சென்றான். அவன் தவம் புரியும் இடத்தைத் தெரிந்துகொள்வதற்காக ஒவ்வொரு புனிதத் தலமாகத் தேடினாள் லீலாவதி. அப்போது, அவள் மூன்று மாத கர்ப்பிணி.

அவளின் நிலையை அறிந்த நாரதர், ‘அண்ணா மலைக்குச் சென்று காயத்ரீ மந்திரம் ஜபித்தபடி கிரிவலம் வந்தால் நல்வழி கிட்டும்’ என்று உபதேசித்தார். அதன்படி லீலாவதி அண்ணாமலை தலத்துக்கு வந்து காயத்ரீ மந்திரம் ஜபித்தபடி கிரிவலம் வந்தாள். அப்போது திடீரென்று ‘அமுத புஷ்ப மழை’ பொழிந்தது.

பூமியில் நடக்கும் அக்கிரமச் செயல்கள் அனைத்தையும் மிக்க பொறுமையுடன் தாங்குகிறாள் பூமாதேவி. அவளைச் சாந்தப்படுத்த இப்படிப்பட்ட மழை பொழியுமாம். இந்த மழைப் பொழிவு இறைத் தன்மையுடையது. ஒரு கோடி மழைத் துளிகளுக்குப் பின் அமுதத் துளி ஒன்று கீழே இறங்கும். இந்தத் துளி எங்கு விழுகிறதோ, அங்கு மக்கள் நோய் நொடியின்றி வாழ்வர்; விவசாயம் செழித்து வளரும்; அமைதி நிலவும்.

மட்டுமின்றி, அங்கு ‘அமுத புஷ்ப மூலிகை’ என்கிற அரிய வகைத் தாவரம் தோன்றும் என்கின்றன சில ஞானநூல்கள்.

அண்ணாமலையிலும் அமுத புஷ்ப மழை பொழிந்தது. மழைத் துளிகள் கனமாக விழவே, பாறை ஒன்றின் ஓரத்தில் ஒதுங்கினாள் லீலாவதி. எனினும், விடாமல் காயத்ரி மந்திரம் ஜபித்தாள். அப்போது அமுதத் துளி பாறையில் பட்டு அமுத புஷ்ப மூலிகை தோன்றியது. அந்த நேரத்தில் கிரிவலம் வந்த சித்தர்கள், உரிய மந்திரம் சொல்லி அமுத புஷ்ப மூலிகையைப் பறித்து லீலாவதியிடம் கொடுத்து ஆசி வழங்கினார்கள்.அவள் வயிற்றில் வளரும் சிசு மூலம் மகா விஷ்ணு புது அவதாரம் எடுக்க இருப்பதை அவர்கள் உணர்ந்தனராம்.

அந்த மூலிகையைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டாள் லீலாவதி. அந்த மூலிகையின் சக்தி கருவை அடைந்தது. அதுதான் பின்னாளில் ஶ்ரீநரசிம்மரின் உக்கிரகத்தைத் தாங்கும் சக்தியை பிரகலாதனுக்கு வழங்கியது என்பர்.

அன்று பாறை ஓரத்தில் ஒதுங்கியதால், அமுத புஷ்ப மழையின் சிறு துளியின் கடாட்சத்தையே பெற்றாள் லீலாவதி. அதுவே மகிமையைத் தந்தது எனில், பூரணப் பலன் கிடைத்தால்? அண்ணா மலையாரின் பூரணப் பலனை நாம் பெறுவோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு