Published:Updated:

இன்று `ஸ்ரீபோதேந்திராள் ஆராதனை வைபவம்!' - நாமசங்கீர்த்தனம் பாடி அம்பத்தூரில் கோலாகலம்

Aacharyarkal
Aacharyarkal

காஞ்சி சங்கர மடத்தின் 59-வது பீடாதிபதியாகத் திகழ்ந்து, நாம சங்கீர்த்தனத்தின் மகிமையை நாடெங்கும் பரப்பிய மகான் ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆராதனை வைபவம், அம்பத்தூரில் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது.

1610-ம் ஆண்டு, காஞ்சிபுரத்தில் வாழ்ந்த கேசவ பாண்டுரங்கன் என்பவருக்கும் சுகுணா அம்மையாருக்கும் மகனாக ஆதிசங்கரரின் அம்சமாக அவதரித்தார் போதேந்திரர். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர், புருஷோத்தமன். சிறுவயது முதலே பெரியவர்களிடம் மரியாதையும் இறைவனிடம் பக்தியும் கொண்டவராகத் திகழ்ந்த புருஷோத்தமன், ஒருமுறை தன் தந்தையோடு காஞ்சி மடத்துக்குச் சென்றார். சிறுவனின் முகத்தில் தெரிந்த தேஜசைக் கண்ட அப்போதைய மடத்தின் பீடாதிபதியான விஸ்வாதி கேந்திரர் என்னும் ஆத்ம போதேந்திரர், புருஷோத்தமனை மடத்திலேயே வளர்க்க விரும்பி, அவரின் தந்தையிடம் அனுமதியும் பெற்றார்.

Bothendral
Bothendral

சிறுவன் புருஷோத்தமனுக்கு சகலவிதமான கல்வியும் மடத்தில் பயிற்றுவிக்கப்பட்டது. புருஷோத்தமனும் நாளுக்குநாள் குருவின்மீது பக்தியும் கல்வியின்மீது ஆர்வமும் கொண்டு அனைத்தையும் ஒழுக்கத்தோடு கற்றுவந்தான். ஒருமுறை, விஸ்வாதி கேந்திரர் காசிக்குப் பயணம்செய்தார். காசி நகரம் முழுமையும் பாகவதர்கள் அநேகர் கூடி, நாமசங்கீர்த்தனம் சங்கீர்த்தனம் செய்வதைக் கண்டு மனம் நெகிழ்ந்தார். சகல ஜனங்களும் எந்தவித பேதமும் இன்றி ஒன்றுகூடி நாம சங்கீர்த்தனம் செய்வதையும், அது தரும் பரவசத்தையும் அறிந்து, இதைத் தென்னாட்டிலும் பரவலாக்க வேண்டும் என்று விரும்பினார். குருவைக் காண காசிக்கு வந்த புருஷோத்தமனிடம், தன் ஆவலை வெளிப்படுத்தினார்.

ஏற்கெனவே, நாமசங்கீர்த்தனத்தில் ஈடுபாடுகொண்ட புருஷோத்தமன், தன் குருவின் ஆணைப்படி நாமசங்கீர்த்தனத்தில் மகிமையைப் பரப்பும் கைங்கர்யத்தைத் தன் வாழ்வாகக்கொண்டார். காசியிலிருந்து திரும்பியதும், புருஷோத்தமனுக்கு 'போதேந்திராள்’ என்ற திருநாமமிட்டு, காஞ்சி மடத்தின் பீடாதிபதியாக்கினார் விஸ்வாதிகேந்திரர். அதன்பின் தன் வாழ்நாள் முழுதும் போதேந்திராள் நாம ஜப மகிமையையும், நாமசங்கீர்த்தன மகிமையையும் நாடெங்கும் பிரபல்யமாக்கினார். சாதி பேதமின்றி அனைவரையும் நாம ஜபம் செய்யுமாறு வலியுறுத்தினார். கலியுகத்தில் முக்திக்கான எளிய சாதனமாக நாம ஜபத்தை முன்வைத்தார். சமகாலத்தவரான ஶ்ரீதர அய்யாவாளோடு இணைந்து, நாமஜபத்தின் மகிமையை எடுத்துக்கூறி, பல அற்புதங்களைச் செய்து மக்களை ஈர்த்தார்.

rama
rama

காவிரிக் கரையில் சிறுவர்களோடு விளையாடும் வழக்கம் கொண்ட சுவாமிகள் ஒருநாள், விளையாட்டுபோல ஒரு குழியில் இறங்கி அமர்ந்துகொண்டு, தன்மேல் மணலைப் போட்டு மூடிவிடும்படிக் கூறினார். சிறுவர்களும் அவ்வாறே செய்தனர். மறுநாள், விவரம் அறிந்து மக்கள் அவரைத் தேடியபோது, அசரீரி வாக்காக ஒலித்த சுவாமிகள், `தான், ஜீவன் முக்தராகி நித்திய ஜபத்தில் இங்கு அமர்ந்திருக்கிறேன்’ என்று கூறியருளினார். சுவாமிகள் முக்தியடைந்த நாள் 1692-ம் ஆண்டு, புரட்டாசி மாதம் பௌர்ணமி திதி. இன்றும் கோவிந்தபுரத்தில் அமைந்திருக்கும் போதேந்திராள் சந்நிதியில், பௌர்ணமி தொடங்கி மகாளய அமாவாசை வரை சுவாமிகளின் ஆராதனை வைபவம் நாமசங்கீர்த்தனத்தோடு கோலாகலமாக நடைபெற்றுவருகிறது.

இதையொட்டி, நாடுமுழுவதும் பாகவதர்கள் நாமசங்கீர்த்தன சங்கீர்த்தன வைபவங்களை நடத்திவருகின்றனர். சென்னை அம்பத்தூரில்,`ஸ்ரீ மஹாஸ்வாமிகள் பாகவத சேவா டிரஸ்ட் சார்பில் ஆராதனை விழா கடந்த நான்கு தினங்களாக, அம்பத்தூர் வெங்கடாபுரத்தில் உள்ள சத்சங்கத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. தினமும் காலை நாமசங்கீர்த்தன சங்கீர்த்தனமும் உஞ்சவிருத்தி வைபவமும், மாலையில் நாமசங்கீர்த்தன சங்கீர்த்தனமும் உபன்யாசமும் நடைபெற்றுவருகின்றன. தமிழகத்தின் புகழ்பெற்ற பாகவதர்கள் கலந்துகொண்டு பஜனை செய்கிறார்கள். வைபவத்தின் இறுதிநாளான இன்று, நாள்முழுவதும் நாமசங்கீர்த்தனம் நடைபெறவிருக்கிறது. மாலையில், குருமஹிமை என்ற தலைப்பில் ஆனந்த தயாநிதி பாகவதர் போதேந்திராளின் சரித்திரத்தை உபன்யாசமாக நிகழ்த்த இருக்கிறார். இறுதியாக, ஆஞ்சநேய உற்சவத்தோடு வைபவம் நிறைவுபெறும்.

sridhara ayyavaal
sridhara ayyavaal

நாமசங்கீர்த்தன வைபவங்களில் கலந்துகொள்வதன்மூலம் குருவருள் கூடுவதோடு, நம் மனத்தின் வேண்டுதல்களும் நிறைவேறும். குறிப்பாக, மன நிம்மதியும் உடல் ஆரோக்கியமும் மேம்படும். எனவே, கலந்துகொள்ள வாய்ப்பிருக்கும் அன்பர்கள் கலந்துகொண்டு, குருவருளையும் திருவருளையும் பெற வேண்டும் என்று விழாக்குழுவினர் பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு