Published:Updated:

அழிவிலிருந்து காக்கப்படுமா 12 - ம் நூற்றாண்டு ஜெயசிங்க சோளீச்வரர் கோயில்?

கண்ணதாசன் அ

செஞ்சி அருகே சிதிலமடைந்து கிடக்கும் 950 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஜெயசிங்க சோளீச்வரர் கோயில்...

ஜெயசிங்க சோளீச்வரர் கோயில்
ஜெயசிங்க சோளீச்வரர் கோயில்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ளது தளவானூர் கிராமம். விவசாய நிலங்கள், மலைக்குன்றுகள் சூழ எழில் மிகுந்த இந்தக் கிராமத்தில் எல்லையில் இருக்கிறது `ஜெயசிங்க சோளீச்வரர் கோயில்'. இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் எழுப்பப்பட்ட இந்தக் கோயில் தற்போது சேதமடைந்து, பராமரிப்பின்றி கிடப்பது சிவனடியார்களையும் வரலாற்று ஆய்வாளர்களையும் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.

நான் முதல்முறை இந்தக் கோயிலுக்கு வந்தபோது, பார்ப்பதற்கே வருத்தமாக இருந்தது. உள்ளே நுழைய முடியாதபடி புதர் மண்டிக்கிடந்தது. அதுமட்டுமல்லாமல், கோயிலின் தளம் மண்மூடியிருந்தது. ஊர் மக்கள் உதவியுடன்தான் மண்ணை நீக்கினோம். அதன்பிறகுதான் கல்வெட்டுகள் தென்பட்டன.
- வரலாற்று ஆய்வாளர்

`தமிழர் வரலாற்றுப் பொக்கிஷமாக விளங்கும் இந்தக் கோயிலைப் புனரமைத்துப் பாதுகாக்க வேண்டும்' என்று கிராம மக்களும் வரலாற்று ஆய்வாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தளவானூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் இந்தக் கோயில் குறித்து வருத்தத்தோடு பேசினார்.

``எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே இந்தக் கோயில் பாழடைந்துதான் கிடைக்கிறது. பிரதோஷம், சிவராத்திரி மற்றும் பண்டிகை நாள்களில் மட்டும் சிரமப்பட்டுக் கோயிலுக்குள் நுழைந்து மூலவருக்குப் பூஜை செய்வோம். முன்பெல்லாம் சூழல் மிகவும் மோசமாக இருக்கும். தற்போது கோயிலில் மண்டியிருந்த புதர்கள் அனைத்தும் அகற்றப்பட்டு ஓரளவுக்கு கருவறைக்குச் செல்லும்படி ஏற்பாடு செய்திருக்கிறோம். கோயில் கோபுரம் மீது அரச மரம் ஒன்று வளர்ந்திருந்தது.

சிதிலமடைந்த கோயில்
சிதிலமடைந்த கோயில்

இந்த மரம்தான் கோயில் சிதிலமடைய முக்கியக் காரணம். உள்ளே நுழைய முடியாதபடி புதர்மண்டிக் கிடக்கும். அச்சத்தோடுதான் உள்ளே சென்று பூஜை செய்வோம். கோயிலைப் புனரமைக்க யாரும் எந்த முயற்சியும் எடுக்காததால் ஆலயம் அப்படியே இருக்கிறது. 1909-ல் இந்திய தொல்லியல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இங்கு வந்து கோயிலைப் பார்வையிட்டுப் பதிவு செய்தனர். இந்தக் கோயிலின் பெயர்கூட என்னவென்று தெரியாமல்தான் இருந்தோம். வரலாற்று அறிஞர்கள் வந்து கல்வெட்டுகளைப் படித்துப் பார்த்துதான் `ஜெயசிங்க சோளீச்வரமுடையார் கோயில்’ என்று தெரிவித்தார்கள்.

எங்களால் முடிந்தவரைக் கோயிலில் விளக்கேற்றி வழிபட்டு வருகிறோம். முக்கிய நாள்களில் பூஜை செய்கிறோம். புனரமைக்க வேண்டும் என்று பல வருடங்களாகவே கோரிக்கை வைக்கிறோம். கேட்பதற்குத்தான் ஆளில்லை” என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார். இந்தக் கோயிலின் வரலாற்று முக்கியத்துவத்தைப் பற்றி செஞ்சியைச் சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் லெனினிடம் பேசினோம்.

இந்தக் கோயிலின் பெயர்கூட என்னவென்று தெரியாமல் `சிவன் கோயில்' என்றே அழைத்துவந்தோம். வரலாற்று அறிஞர்கள் வந்து கல்வெட்டுகளைப் படித்துப் பார்த்துதான் `ஜெயசிங்க சோளீச்வரமுடையார் கோயில்’ என்று தெரிவித்தார்கள்...
- கிராம மக்கள்

``நான் முதல்முறை இந்தக் கோயிலுக்கு வந்தபோது, பார்ப்பதற்கே வருத்தமாக இருந்தது. உள்ளே நுழைய முடியாதபடி புதர் மண்டிக்கிடந்தது. அதுமட்டுமல்லாமல், கோயிலின் தளம் மண்மூடியிருந்தது. ஊர் மக்கள் உதவியுடன்தான் மண்ணை நீக்கினோம். அதன்பிறகுதான் கல்வெட்டுகள் தென்பட்டன. கோயில் கட்டுமான அமைப்பைக்கொண்டு `சோழர்கால கற்றளி'யாக இருக்கும் என்று யூகித்துக் கல்வெட்டுகளை வாசித்தோம். அதன்பிறகு, இந்தக் கோயில் 12-ம் நூற்றாண்டில் இரண்டாம் குலோத்துங்கச் சோழரால் கட்டப்பட்டது என்பதை அறிந்தோம். பலர் கோயிலுக்கு நிவந்தம் அளித்த தகவல்கள் கல்வெட்டுகளில் இடம்பெற்றிருக்கின்றன.

கல்வெட்டுகளின் மூலம் இறைவனார் பெயர் `ஜெயசிங்க சோளீச்வரமுடையார்’ என்றும் அம்பாள் பெயர் `ஞானப்பூங்கோதை நாச்சியார்’ என்றும் அறிந்தோம். கல்வெட்டுகளில், தமிழ் மட்டுமல்லாமல் கிரந்த எழுத்துகளும் காணப்படுகின்றன. கிரந்த எழுத்துகளைப் படிக்கும் ஆய்வாளர்கள் இவற்றைப் படித்தால் மேலும் பல வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கப்பெறும். இந்தக் கோயில் குறித்து அறநிலையத்துறைக்கும் தகவல் தெரிவித்திருக்கிறோம். அரசும் மக்களும் ஒன்றுசேர்ந்து இதைப் புனரமைக்க வேண்டும். இந்தக் கோயில் மீண்டும் தனது சிறப்பை அடைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது” என்றார்.

நந்தி
நந்தி

சுமார் 950 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயில், பாதுகாக்கப் படவேண்டிய வரலாற்றுப் பொக்கிஷம். அழிந்துவரும் இந்தக் கோயிலைக் காத்து எதிர்காலத்தவர்களுக்குப் பாதுகாப்பாக அளிக்கவேண்டியது நம் அனைவரின் கடமை. கோயிலை மட்டுமல்லாமல் கோயிலில் உள்ள ஆவணக் களஞ்சியங்களான கல்வெட்டுகளையும் காக்க அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது.