Published:Updated:

பக்தர்களை ஈர்க்கும் அத்திவரதர் பொம்மைகள்... மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் பொம்மைக்காரத் தெரு!

JAYAVEL B
சி.வெற்றிவேல்

காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயில் தெற்கு மாடவீதியை ஒட்டியிருக்கிறது, அஸ்தகிரி தெரு. இங்கு வசிக்கும் பெரும்பாலானோருக்கு பொம்மை செய்வதுதான் பிரதான தொழில். இதனால் இந்தத் தெருவை உள்ளூர் மக்கள் `பொம்மைக்காரத் தெரு’ என்றே அழைக்கிறார்கள்.

அத்திவரதர்
அத்திவரதர் ( பா.ஜெயவேல் )

காஞ்சிபுரம், தேவராஜ பெருமாள் கோயிலில் 40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசனம், ஜூலை 1-ம் தேதி தொடங்கியது. அத்திவரதரை தரிசிப்பதற்காக தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காஞ்சிபுரம் வருகிறார்கள். இதனால் கடந்த 15 நாள்களாக திருவிழாக்கோலம் பூண்டுள்ளது காஞ்சிபுரம்.

அத்திவரதர்
அத்திவரதர்
பா.ஜெயவேல்

அத்திவரதர் வைபவத்துக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு இருக்கக் கூடாது என்பதற்காக கோயில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடைகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை. ஆனால் தற்போது, இந்தப் பகுதியில் சுண்டல், வாட்டர் பாட்டில், பாசி மணி, பலூன்கள், அத்திவரதர் படங்கள், பொம்மைகள் என நடைபாதை முழுவதும் கடைகள் முளைத்துவிட்டன.

அத்திவரதர் சயனக்கோலம், நின்றகோலம் என இரண்டு விதங்களில் லேமினேட் செய்யப்பட்ட படங்கள் அதிக அளவு விற்கப்படுகின்றன. அத்திவரதரை தரிசித்த நினைவாகவும், தங்கள் வீடுகளில் அத்திவரதரை வைத்து வழிபடுவதற்காகவும் பக்தர்கள் அத்திவரதர் படங்களை வாங்கிச் செல்கிறார்கள். அதுபோல் அத்திவரதர் பொம்மைகளும் அதிக அளவு விற்பனையாகின்றன.

அத்திவரதர் பொம்மைகள்
அத்திவரதர் பொம்மைகள்
பா.ஜெயவேல்

காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயில் தெற்கு மாடவீதியை ஒட்டியிருக்கிறது, அஸ்தகிரி தெரு. இங்கு வசிக்கும் பெரும்பாலானோருக்கு பொம்மை செய்வதுதான் பிரதான தொழில். இதனால் இந்தத் தெருவை உள்ளூர் மக்கள் `பொம்மைக்காரத் தெரு’ என்றே அழைக்கிறார்கள். இங்கு செய்யப்படும் பொம்மைகள் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. இப்போது அங்கு செய்யப்படும் அத்திவரதர் பொம்மைகளுக்கு ஏகப்பட்ட டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு பகலாக அத்திவரதர் பொம்மைகள் செய்யும் பணி இங்கு நடந்துவருகிறது.

பொம்மைகள் செய்யும் சிவசங்கரி என்பவரிடம் பேசினோம். "கொலு பொம்மைகள், அலங்கார பொம்மைகள், விநாயகர் பொம்மைகள் என விதவிதமான பொம்மைகளை நாங்க செய்வோம். இங்கு தயாரிக்கப்படும் பொம்மைகள் கலைநுட்பம் கொண்டதாயிருக்கும். நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தத் தொழிலை நம்பித்தான் இருக்காங்க. நிறைய ஏற்றுமதியும் நடக்குது. வீட்டில் வைத்து கும்பிடுறதுக்காக விருப்பமான கடவுள் பொம்மைகளை நிறையபேர் வாங்கிட்டுப் போவாங்க. உதாரணமா, திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் பொம்மைகள் இங்கே கிடைக்கும். அந்தக் கோயிலில் சுவாமி எப்படி இருக்கிறாரோ அதேபோல் தத்ரூபமாக இங்கே செய்வோம். இங்கு உற்பத்தியாகுற பொம்மைகள் சென்னை, பெங்களூர்ன்னு தென் மாநிலங்கள் முழுவதும் போகும். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வோம்.

சிவசங்கரி
சிவசங்கரி
பா.ஜெயவேல்

வருடம் முழுவதும் தொழில் செஞ்சாலும், ஓரிரு மாதங்கள்தான் வியாபாரம் நடக்கும். நவராத்திரி, கிருஷ்ண ஜயந்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற சீசன்லதான் அதிக வருமானம் இருக்கும். இந்த வருஷம் அத்திவரதர் வைபவம் வந்ததால இரண்டு மாதங்களுக்கு முன்பே எங்களுக்கு சீசன் ஆரம்பிச்சிருச்சி. இந்தச் சமயத்துல அத்திவரதர் பொம்மைகள் நிறைய விற்பனையாகும்ங்கிறதால போன வருஷத்திலிருந்தே செய்ய ஆரம்பிச்சிட்டோம். அரை அடியிலிருந்து ஒன்றரை அடிவரை பொம்மைகளைச் செய்றோம். நாங்க செய்யும் பொம்மைகள் அதிக எடையில்லாம லேசா இருக்கும். அதனால வெளிநாடுகளுக்குப் போறவங்க விருப்பத்தோட வாங்கிட்டுப் போறாங்க.

இந்த வருடம் சுமார் 6000 பொம்மைகள் விற்பனை செய்திருக்கோம். 150 ரூபாயில் இருந்து ஆறாயிரம் ரூபாய் வரை சைஸ் வாரியா பொம்மைகள் இருக்கு. அத்திவரதர் அருளால எங்களுக்கு வருமானமும் அதிகரிச்சிருக்கு” என்கிறார் மகிழ்ச்சியாக.

Vikatan
சங்கர்
சங்கர்
பா.ஜெயவேல்

"நாங்க 45 வருடங்களா பொம்மைகள் செஞ்சுக்கிட்டிருக்கோம். நாப்பது வருடத்துக்கு முன்னால நடந்த அத்திவரதர் வைபவத்தப்போ ஒரு நாளைக்கு ஆயிரம், ரெண்டாயிரம் பேர்தான் வருவாங்க. இந்த வருடம் தினமும் ஒரு லட்சம் பேருக்கு மேல வர்றாங்க. கடந்த முறை அத்திவரதர் தரிசனத்தின்போது எடுத்த படங்களை வச்சு அச்சு உருவாக்கி பொம்மைகள் செய்யிறோம். பக்தர்கள் மத்தியில பெரிய வரவேற்பு இருக்கு.

கோயில் இருக்கற இடத்துல எங்களுக்கு இடம் ஒதுக்கிக் கொடுத்திருந்தா இன்னும் வியாபாரம் அதிகமாக இருந்திருக்கும். இந்த வருடம் நவராத்திரி கொலு வைப்பவர்கள் அத்திவரதர் பொம்மைகளை வைக்க ஆசைப்படுவாங்க. இதேபோல நவராத்திரி சீசனிலும் அத்திவரதர் பொம்மைகள் அதிக அளவு விற்பனையாகும்னு எதிர்பார்க்கிறோம்” என்கிறார் இந்தப் பகுதியைச் சேர்ந்த சங்கர்.

அத்திவரதர்
அத்திவரதர்
பா.ஜெயவேல்

அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கு, இந்தப் பொம்மைக்காரத்தெரு மக்களின் கைவண்ணத்தில் அத்திவரதர், இல்லங்கள்தோறும் காட்சி தரப்போகிறார்..!