Published:Updated:

`சிதம்பரம், உத்திரகோசமங்கை திருவாதிரைப் பெருவிழா!’- ஜனவரி 10-ல் ஆருத்ரா தரிசனம்

சிதம்பரத்தில் ஆருத்ரா அபிஷேகப்பெருவிழா ஜனவரி 1-ம் தேதி தொடக்கம்.

நடராஜர்
நடராஜர்

இந்த ஆண்டின் ஆருத்ரா அபிஷேகப் பெருவிழா வருகிற ஆங்கிலப் புத்தாண்டன்று தொடங்குகிறது. ஆருத்ரா தரிசனம் ஜனவரி 10-ம் தேதி நடைபெறுகிறது.

நடராஜ பெருமானுக்கு ஓர் ஆண்டில் ஆறு தினங்களில் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். அவற்றுள் ஆருத்ரா அபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. இதை தரிசிப்பதற்காகச் சிதம்பரம், உத்திரகோசமங்கை திருத்தலங்களில் பக்தர்கள் பலர் கூடுவர். இத்தகு சிறப்பு வாய்ந்த திருவாதிரை ஆருத்ரா அபிஷேகப் பெருவிழா ஜனவரி 1-ம் தேதி தொடங்குகிறது.

உத்திரகோசமங்கை
உத்திரகோசமங்கை

பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாத முனிவரும் சிவனாரின் திருநடனம் காண வேண்டினர். அவர்கள் விருப்பத்துக்கிணங்கி ஈசன் தில்லையில் திருநடனம் நிகழ்த்திக் காட்டினார். சிவவழிபாட்டுக்கு உகந்த மார்கழி ஆதிரை நன்னாளில் ஈசன் அந்தத் திருநடனத்தைப் புரிந்தார். அதுவே ஒவ்வோராண்டும் ஆருத்ரா தரிசனமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனந்தத் தாண்டவமாடிய கனகசபை சிதம்பரம், ஊர்த்துவத் தாண்டவமாடிய ரத்தினசபை திருஆலங்காடு, பாண்டியனுக்காய் இடக்கால் மாறி ஆடிய வெள்ளிசபை திருஆலவாய் மதுரை, தாமிர சபை நெல்லை, சித்திர சபை குற்றாலம் ஆகிய பஞ்ச சபைகளிலும் ஆருத்ரா அபிஷேகமும் தரிசனமும் வெகு சிறப்பாக நடைபெறும்.

இதில் உத்திரகோச மங்கையிலும், சிதம்பரத்திலும் மகா ஆருத்ரா அபிஷேகப் பெருவிழா ஜனவரி 1-ம் தேதி கோலாகலமாகத் தொடங்குகிறது.

சிதம்பரத்தில் 1.1.2020 அன்று உற்சவங்கள் தொடங்குகின்றன. நாள்தோறும் ஈசன் சூரியபிரபை, சந்திரபிரபை, பூதவாகனம், ரிஷபம், கஜவாகனம், கைலாச வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருவார். ஜனவரி 8-ம் தேதி பிட்சாடனர் தங்கத்தேரில் எழுந்தருளும் உற்சவமும் மறுநாள் மகா ரதோத்ஸவமும் நடைபெறும்.

10-ம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் நடராஜருக்கு ஆருத்ரா அபிஷேகமும், நண்பகல் பன்னிரண்டு மணிக்கு ஆருத்ரா தரிசனமும் நடைபெற இருக்கின்றன.

சிதம்பரம்
சிதம்பரம்

திருஉத்திரகோச மங்கையில் ஜனவரி 9-ம் தேதி காலை 6 மணிக்குமேல் மூலவர் மரகத நடராஜ பெருமானுக்குச் சந்தனக்காப்பு களையப்பட்டு 9 மணிக்கு அபிஷேகம் நடைபெறும். அன்றிரவு 11 மணிக்குமேல் மகா அபிஷேகம் தொடங்கும். 10-ம் தேதி அதிகாலையில் ஆருத்ரா தரிசனம் தொடங்கி நடைபெறும்.

தொடர்ந்து காலை 10 மணிக்கு கூத்தர் பெருமான் புறப்பாடும் மாலை 3 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும் இரவு 8 மணிக்கு மாணிக்கவாசகருக்குக் காட்சி கொடுத்தலும் நடைபெறும்.

சிவனாரின் ஆருத்ரா தரிசனம் கண்டிட, எல்லாப் பாவமும் நீங்கிப் புண்ணியம் பெறலாம். உத்திரகோச மங்கை திருத்தலத்தின் மரகத நடராஜ பெருமான் காட்டும் அருட்திருக்கோலம் இம்மை வாழ்வில் இறைவன் தருகிற அற்புதக்காட்சி. இதைக் காண்பவர்க்கு பிறவிப்பிணி தீரும் என்பது ஐதிகம்.