Published:Updated:

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி அத்திவரதர் தரிசன நேரத்தில் மாற்றம் - மூன்றடுக்குப் பாதுகாப்பு!

JAYAVEL B

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி நாளை பொதுமக்கள் அத்திவரதரை தரிசிக்கும் நேரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அத்திவரதர்
அத்திவரதர்

தேவராஜ பெருமாள் கோயிலில் நடைபெறும் அத்திவரதர் தரிசனத்துக்காகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை காஞ்சிபுரம் வருகிறார். இதனால் தேவராஜபெருமாள் கோயிலுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 2,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்தி வரதர்
அத்தி வரதர்
விகடன்

அத்திவரதரை தரிசனம் செய்யத் தினமும் லட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் காஞ்சிபுரம் வருகிறார்கள். அரசியல் பிரமுகர்களும், அதிகாரிகள், நீதித்துறையைச் சேர்ந்தவர்களும் தினமும் அத்திவரதரை தரிசனம் செய்கிறார்கள். இந்த நிலையில் நாளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அத்திவரதரை தரிசனம் செய்யக் காஞ்சிபுரம் வர இருக்கிறார். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி கடந்த இரண்டு நாள்களாகக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.

அத்திவரதர்
அத்திவரதர்

நேற்று பச்சையப்பன் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் ஹெலிகாப்டர்கள் தரையிறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. பார்க்கிங் ஏரியாவில் மட்டுமே வாகனங்களை நிறுத்த முடியும். கோயில் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

17 டிஎஸ்பி, 42 காவல் ஆய்வாளர்கள் உட்பட 2,500 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை மதியம் 12 மணிக்கு டெல்லியிலிருந்து தனி விமானத்தில் சென்னை விமான நிலையத்துக்கு வரும் குடியரசுத் தலைவர் அங்கிருந்து காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் உள்ள வளாகத்தில் தரை இறங்குகிறார்.

அத்தி வரதர்
அத்தி வரதர்

பச்சையப்பன் கல்லூரியிலிருந்து குண்டு துளைக்காத காரில் வடக்கு மாடவீதி வழியாக, தேவராஜ பெருமாள் மேற்கு கோபுரத்துக்கு வந்தடைவார். சுமார் 3 மணியிலிருந்து 4 மணிவரை தரிசன நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா,``வி.ஐ.பி தரிசனம் செய்பவர்கள் காலை 10 அல்லது 11 மணிவரை மட்டுமே மேற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். அதற்குப் பிறகு அந்தப் பகுதியில் உள்ள பக்தர்கள் வெளியேற்றப்படுவார்கள். அதுபோல் பொது தரிசனம் செய்வதற்கு கிழக்குக் கோபுர வாயில் வழியாகப் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த வாயில் பகுதியில் மதியம் 1 மணிவரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 1 மணிக்குள் அனுமதிக்கப்பட்ட பொதுமக்கள் இரண்டு மணிவரை மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மீண்டும் மாலை 5 மணியிலிருந்து இரவு 9.30 மணிவரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இரவு 10 மணிவரை பொதுமக்கள் அத்திவரதரை தரிசிக்கலாம்” என்றார்.

வரதராஜ பெருமாள்
வரதராஜ பெருமாள்

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி நாளை காலை முதலே காவல்துறையினரின் கெடுபிடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வெளியூர் பக்தர்கள் குடியரசுத் தலைவர் தரிசனம் செய்த பிறகு காஞ்சிபுரம் வருவது சிறந்தது.