அத்திவரதர் வைபவத்தில் 9.89 கோடி ரூபாய் காணிக்கை! - இந்துசமய அறநிலையத்துறை

நீரிலிருந்து வெளிப்பட்ட அத்திவரதர் ஜூலை 31-ம் தேதிவரை வசந்த மண்டபத்தில் சயன கோலத்திலும், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நின்ற கோலத்திலும் அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்ற அத்திவரதர் வைபவத்தில் வைக்கப்பட்ட உண்டியலில் 9.89 கோடி ரூபாய் காணிக்கை வசூலாகியிருப்பதாக இந்துசமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கிய அத்திவரதர் வைபவம், ஆகஸ்ட் 17-ம் தேதியுடன் நிறைவுபெற்றது. நீரிலிருந்து வெளிப்பட்ட அத்திவரதர் ஜூலை 31-ம் தேதிவரை வசந்த மண்டபத்தில் சயன கோலத்திலும், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நின்ற கோலத்திலும் அருள்பாலித்தார்.
அத்திவரதர் வைபவம் நிறைவுற்றதும் மீண்டும் தற்போது அனந்தசரஸ் குளத்துக்குள் எழுந்தருளியிருக்கிறார்.

அத்திவரதர் வைபவத்தின்போது தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்ட்ரா எனப் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் காஞ்சிபுரம் குவிந்தனர்.
48 நாள்கள் நடைபெற்ற இந்த வைபவத்தில் சுமார் ஒரு கோடிக்கும் மேலான பக்தர்கள் திரளாக வந்து அத்திவரதரைத் தரிசித்தனர். பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் கோயில் உண்டியலில் செலுத்தப்பட்ட பணத்தை எண்ணும் பணி இரவு பகலாக நடைபெற்று வந்தது.

கோயில் உண்டியல் மூலம் 9.89 கோடி ரூபாய் வசூலானதாக இந்துசமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. உண்டியல் பணம் மட்டுமல்லாமல் கோயிலில் வசூலான தங்கம், வெள்ளி போன்றவற்றின் மதிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.