Published:Updated:

காசி விஸ்வநாதரின் ஆத்ம சாந்நித்தியம்... காசி ஆத்ம வீரேஸ்வரர் தரிசனம்!

காசி ஆத்ம வீரேஸ்வரர் தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
News
காசி ஆத்ம வீரேஸ்வரர் தரிசனம்

பிறவியின் உயர்ந்த லட்சியம் முக்தி. அதை அருளும் தலம் காசி.

ந்து தர்மத்தின் மையம். ஞான விளையும் பூமி. பாரத தேசத்தின் ஒவ்வொரு இந்துவும் தன் வாழ்வில் தரிசிக்க நினைக்கும் க்ஷேத்திரம்.புராணங்களும், இதிகாசங்களும், சரித்திரமும் போற்றும் திருநகரம். சிவ-சக்தி இருவரும் தங்களின் பொற்பாதங்களைப் பதித்த புண்ணிய பூமி. காலபைரவர் காத்து நிற்கும் பெரும்பதி. உலக உயிர்களின் பசிப் பிணி தீர்க்க அம்பிகை அன்னபூரணியாய் அருளும் திருத்தலம்.

ஆம், இவ்வளவு அற்புதங்களையும் தன்னகத்தே கொண்ட ஞான க்ஷேத்திரம்தான் வாரணாசி எனப்படும் காசி. பிறவியின் உயர்ந்த லட்சியம் முக்தி. அதை அருளும் தலம் காசி.

காசி விஸ்வநாதரின் ஆத்ம சாந்நித்தியம்... காசி ஆத்ம வீரேஸ்வரர் தரிசனம்!

மோட்சம் தரும் ஏழு தலங்களுள் ஒன்று காசி. மற்றவை அயோத்தி, மதுரா, ஹரித்வார், காஞ்சி, அவந்தி, துவாரகா ஆகியவை. ‘கஸ்’ என்றால் ‘ஒளிர்தல்’ என்று பொருள். இந்த நகரின் தெற்கே அஸி நதியும், வட கிழக்கே வருணை நதியும் கங்கையுடன் கலப்பதால் இந்தத் தலம் ‘வாரணாசி’ என்றும் அழைக்கப் படுகிறது.

கிருத யுகம்- திரிசூல வடிவம், திரேதா யுகம்- சக்கர வடிவம், துவாபர யுகம்- தேர் வடிவம், கலி யுகம்-சங்கு வடிவம் என்று காசி நகரம் விளங்குவதாக காசி ரகசியம் நூல் கூறுகிறது. பகவான் மகாதேவ், தனது திரிசூலத்தின் மீது நின்று, காசியைப் படைத்தார் என்பது ஐதிகம்.

காசிக்கு அருந்தனா, சுதர்சனா, பிரம்ம அவதாரா, பூபவதி, ராமநகரா, மாளநி, காசிபுரா, கேதுமதி ஆகிய பெயர்களும் உண்டு. தவிர மச்ச புராணம் அவிமுக்தா க்ஷேத்திரம் என்றும், கூர்ம புராணம் மற்றும் காசி ரகசியம் ஆனந்தவனம் என்றும் குறிப்பிடுகின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
காசி விஸ்வநாதரின் ஆத்ம சாந்நித்தியம்... காசி ஆத்ம வீரேஸ்வரர் தரிசனம்!

மேலும், ஈசன் இங்கு தங்கி அருளுவதால் ‘ருத்ர வாசம்’ என்றும் ஞானம் வளர்க்கும் பூமி என்பதால் `ஞானபுரி என்கிற பிரம்மவர்த்தனா’ என்றும் ஸ்காந்த புராணம் கூறுகிறது. வெள்ளைக்காரர்களால் ‘பனராஸ்’ என்று குறிப்பிடப்பட்டதும் இந்த நகரமே.

‘முந்தைய ஜன்மங்களில் ஏராளமான ஆலயங்களுக்குச் சென்று வழிபட்ட உயிர்களுக்கு மட்டுமே இந்த ஜன்மத்தில் காசி நகரின் கதவுகள் திறக்கும்’ என்கிறது சிவமகா புராணம். இங்கு மரணம் அடையும் உயிர்களைத் தன் மடியில் வைத்துக் கொண்டு, அவர்களின் செவியில் தாரக மந்திரத்தை உரைத்துக் கரையேற்றுவாராம் ஈசன்.

இந்தப் புண்ணிய பூமியிலிருந்துதான் ஆதிசங்கரர் அத்வைதத்தின் திக்விஜயத்தைத் தொடங்கினார். புத்தபிரான் தன் உபதேசத்தைத் தொடங்கியதும் இங்கிருந்துதான்.

புனிதமிகு காசி கோயில்களின் நகரம். இங்கு பலகோடி சிவ லிங்கங்கள் இருப்பதாக பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது. அவை மனிதர்களால் மட்டுமே பிரதிஷ்டை செய்யப்பட்டவை அல்ல. அவற்றுள் சுயம்பு லிங்கங்கள் - 11, தேவர்கள் ஸ்தாபித்தவை - 46. முனிவர்கள் பிரதிஷ்டை செய்தவை- 47, கிரகங்கள் வணங்கியவை- 7, கணங்கள் வழிபட்டவை- 40. பக்தர்கள் நிறுவியவை- 295. திருத்தலங்களின் நினைவாக நிறுவப்பட்டவை- 65 என்ற தகவலும் நம்மை வியக்கவைக்கிறது.

இத்தகைய பல சிறப்புகளையுடைய காசியில் கங்கைக் கரையை ஒட்டி 87 படித்துறைகள் அமைந்துள்ளன. அவற்றுள் மணிகர்ணிகா படித்துறை, தசஅஷ்வமேத படித்துறை, அரிச்சந்திரன் படித்துறை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
காசி விஸ்வநாதரின் ஆத்ம சாந்நித்தியம்... காசி ஆத்ம வீரேஸ்வரர் தரிசனம்!

அதேபோல், காசியில் 100-க்கும் மேற்பட்ட கோயில்கள் அமைந்துள்ளபோதும் ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயில், ஸ்ரீகாசிவிசாலாட்சி கோயில், ஸ்ரீகாலபைரவர் கோயில், ஸ்ரீஅன்ன பூரணி கோயில், ஸ்ரீஅனுமன் கோயில், ஸ்ரீதுர்கை கோயில், ஸ்ரீசோழியம்மன் கோயில், ஸ்ரீதுளசிமானஸ மந்திர் ஆகியவை குறிப்பிடத் தக்கவை. இந்த வரிசையில் நாம் கட்டாயம் தரிசிக்க வேண்டிய மற்றோர் ஆலயமும் உண்டு. அது ஸ்ரீஆத்மவீரேஸ்வரர் ஆலயம்.

காசி காண்டம் போற்றும் ஆத்மவீரேஸ்வரர்

ஸ்காந்த புராணம், காசி காண்டம் போன்ற ஞானநூல்கள் ஸ்ரீஆத்மவீரேஸ்வரர் ஆலயச் சிறப்புகளை விவரிக்கின்றன. ஆத்மவீரேஸ்வரர், காசி விஸ்வ நாதரின் ஆன்மாவாகத் திகழ்பவர் என்கின்றன புராணங்கள். இந்த ஆலயம் மிகத் தொன்மையானது என்பதற்கு இங்குள்ள மூர்த்தங்களே சான்று. ஆத்மவீரேஸ்வரருக்கு பூஜை செய்பவர்கள் மூன்று கோடி லிங்கங்களுக் குப் பூஜை செய்த பலன்களைப் பெறுவார்கள் என்று புகழ்ந்துரைக்கிறது காசி காண்டம்.

காசி கண்டத்தில் காணப்படும் ஆத்மவீரேஸ் வரர் ஸ்தோத்திரத்தில் 22 வரிகள் இறைவனின் புகழைப் பாடுகின்றன.

‘ஸ்ரீவிபூதி பூஷிதம் பாலம் அஷ்டவர்ஷாக்ருதிம் சிகம்...’ எனத் தொடங்கி இறைவனைச் சிறப்பிக்கின்றது அந்தப் பாடல். அதன் கடைசி வரிகள் ‘எல்லாம் உன்னிடமிருந்தே உண்டா கின்றன. நீயே அனைத்துமாக இருக்கிறாய். மன்மதனை எரித்தவனே, கெளரியின் கணவனே, நீ பரமசாது, இளைஞனும் நீயே, குழந்தையும் நீயே, நீ எவ்விதமாக வெளிப் பட்டாலும் நான் உன்னை வணங்குகிறேன்’ என்று போற்றி வணங்குகிறது சிவபெருமானை.

வரதராஜர் எனும் மகான் இயற்றிய ‘கீரவாண பதமஞ்சரி’ எனும் நூலிலும் இதுகுறித்த தகவல்கள் காணப்படுகின்றன. பல நூறாண்டுகளுக்குப்பின் கி.பி 1650-ம் ஆண்டு இந்தக் கோயில் புனரமைக்கப்பட்டுள்ளது.

மிக எளிமையாக மேற்கு நோக்கித் திகழ்கிறது ஆலய நுழைவாயில். முகப்பில் `ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஆத்ம வீரர் மாகாதேவ்ஜி’ என்று பொறிக்கப் பட்டுள்ளது. உள்ளே நுழைந்ததும் விசாலமான மண்டபம். இடது புறம் மூலவர் சந்நிதி. நான்கு தூண்களுக்கு நடுவே காசி விஸ்வநாதர் போலவே ஆத்மவீரேஸ்வரரை தரிசிக்கலாம்.

அரிதான கோலத்தில் காட்சி கொடுக்கிறார் ஆத்மவீரேஸ்வரர். சுவாமியின் லிங்க பாணத்தைச் சுற்றிய ஆவுடையின் விளிம்பு களில் 28 முகங்கள் வானை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளன. இதைக் காணும்போது மனிதத் தலைகளை அணிந்த ஈசனின் பிரமாண்ட தோற்றம் நம் மனத்தில் விரிகிறது.சுவாமிக்கு எதிர்புறத்தில் சிறிய வடிவில் நந்தி தரிசனம். அருகே சக்தியின் வடிவங்களில் 6-வதாக விளங்கும் காத்யாயினிதேவி நின்ற கோலத்தில் அருள்கிறாள்.

முனிவரின் மகளாக மகிஷனை வதம் செய்ய மும்மூர்த்திகளின் சக்திகளையும் ஒருங்கே பெற்றுத் தோன்றிய வள் இவள் எனப் புராணம் கூறுகிறது. நவராத்திரியில் ஆறாவது நாள் காத்யாயனிக்கு உரியது. எனவே அந்த நாளில் இங்கு திரளான பக்தர்கள் கூடி வழிபடுவார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காசி விஸ்வநாதரின் ஆத்ம சாந்நித்தியம்... காசி ஆத்ம வீரேஸ்வரர் தரிசனம்!

குழந்தை வரம் அருளும் ஈஸ்வரன்!

காசியின் இந்த ஆத்மவீரேஸ்வரர் வேண்டும் வரமெல்லாம் அருள்பவர். குறிப்பாகக் குழந்தை வரம் கேட்டு வருவோரின் பிரார்த்தனைகளை விரைவில் நிறைவேற்றுவாராம். இதற்குச் சான்றாக ஒரு சம்பவம் உண்டு.

கொல்கத்தாவைச் சேர்ந்த தம்பதி விசுவநாத் தத்தா-புவனேஸ்வரி தேவி. இவர்கள் இருவரும் காசிக்கு வந்து வழிபட்டு, சாது ஒருவரின் வழிகாட்டுதல்படி இந்த ஆத்மவீரேஸ்வரரையும் தரிசித்து மெய்யுருக வணங்கிச் சென்றனர். அதன் பலனாக விரைவில் புவனேஸ்வரிதேவி ஓர் ஆண் மகவுக்குத் தாயானார்.

இப்படி ஆத்மவீரேஸ்வரின் திருவருளால் கிடைத்த அந்தப் பிள்ளை பின்னாளில் உலகம் போற்றும் ஞானியாக ஜொலித்தது. ஆம் சுவாமி விவேகானந்தர்தான் அவர். இதனை உறுதிப் படுத்தும் வகையில் ஆலயத்தில் சுவாமி விவேகானந்தரின் பெற்றோரின் புகைப்படம் காணப்படுகிறது.

காசி விஸ்வநாதரின் ஆத்ம சாந்நித்தியம்... காசி ஆத்ம வீரேஸ்வரர் தரிசனம்!

அடுத்தமுறை காசிக்கு ஆன்மிக யாத்திரைச் செல்லும் அன்பர்கள் அவசியம் இந்த ஆத்மவீரேஸ்வரர் ஆலயத்துக்கும் சென்று தரிசித்து வாருங்கள்.

உங்கள் பிரார்த்தனைகளை அந்த ஈஸ்வரன் சந்நிதியில் சமர்ப்பியுங்கள். நீங்களே வியக்கும் வண்ணம் விரைவில் பலிக்கும் உங்கள் வேண்டுதல்கள்.

காசியில் கங்கைக் கரையில் அமைந்துள்ள படித்துறைகளில் புகழ் பெற்றது மணிகர்ணிகா காட். இதனை அடுத்துள்ளது `சிந்தியா காட்’ எனும் படித்துறை. இங்கே கங்கையில் பாதம் நனைத்து படிகளில் ஏறினால், வலதுப் பக்க திருப்பத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு ஆத்மவீரேஸ்வரரின் திருக்கோயில்.

இந்தக் கோயில் காலை 5 முதல் 11:30 மணி வரையும்; பிற்பகல் 12:30 முதல் இரவு 9:30 மணி வரையும் திறந்திருக்கும். இரவு 7 முதல் 8:30 மணி வரை சிறப்பு ஆரத்தி நடைபெறும். இதை தரிசிப்பது மிகவும் விசேஷம்.

அன்னபூரணி தரிசனம்!

ஸ்ரீகாசிவிஸ்வநாதர் ஆலயத்துக்கு அருகில் உள்ளது ஸ்ரீஅன்னபூரணி ஆலயம். இதை ‘துளசி மானச மந்திர்’ என்பர். இங்கு உமாதேவி, அன்னபூரணியாக வீற்றிருக்கிறாள். பசிக் கொடுமையை ‘அன்னம்’ எனும் அருமருந்தால் நீக்கி, உயிர்களைக் காப்பதால் அவள் ‘அன்ன பூரணி’ எனப்படுகிறாள்.

மகாராஷ்டிர பேஷ்வாக்களின் காலத்தில் பூனாவைச் சேர்ந்த சர்தார் சந்திரசூடன் குடும்பத்தினரின் முயற்சியால் அன்னபூரணி கோயில் கட்டப்பட்டது. இக்கோயில் உட்புறம் பளிங்குக் கல்லாலானது. கருவறைக்கு எதிரில் 12 தூண்களுடன் சபா மண்டபம் உள்ளது. அங்கிருந்தே அன்னபூரணியைத் தரிசிக்கலாம்.

காசி விஸ்வநாதரின் ஆத்ம சாந்நித்தியம்... காசி ஆத்ம வீரேஸ்வரர் தரிசனம்!

கிழக்கு நோக்கி, 2 அடி உயர கருங்கல் விக்கிரமாக அருளும் அன்னபூரணி இடக்கையில் அன்னப் பாயசப் பாத்திரத்தையும், வலக்கையில் கரண்டியும் ஏந்தி காட்சியருள்கிறாள். இந்த அன்ன பூரணியை தரிசித்தால்தான் காசி யாத்திரை பூர்த்தியாகும் என்பது ஐதிகம்.

ஸ்ரீஅன்னபூரணியின் திருமேனி பெரும்பாலும் மூடப்பட்டிருக்கும். மணிமகுடம், மணிமாலை, நவரத்தின அணிகள், புஷ்ப அலங்காரம் ஆகியன அன்னபூரணிக்கு அழகூட்டுகின்றன.

இவளின் சந்நிதி திரையால் மூடப்பட்டிருப்பதால், பிட்ச துவாரம் மற்றும் தர்மத் துவாரம் ஆகியவற்றின் மூலமே அன்னபூரணியை தரிசிக்கலாம். அன்னையின் பாதங்களுக்கு அருகில், ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்ரமேரு யந்திரம் உள்ளது.

இந்த அன்னபூரணி ஆலயத்தின் மற்றொரு சிறப்பம்சம் தங்க அன்னபூரணியின் தரிசனம். கோயிலின் முதல் தளத்தில் தங்கியிருக்கும் இந்த தங்க அன்னபூரணி, தீபாவளிக்கு முதல் நாள் உப்பரிகையிலிருந்து இறங்கி வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருகிறாள். அன்னபூரணிக்கு வலப்பக்கத்தில் ஐஸ்வரிய நாயகி லட்சுமியும் இடப்புறத்தில் பூமிதேவியும் காட்சி தருகின்றனர். அன்னபூரணிக்கு முன்னால் பிக்ஷை ஏற்கும் நிலையில், வெள்ளிக் கவசம் பூண்ட விஸ்வநாதரும் அருள்கிறார்.

அன்னபூரணி ஆலயம் அதிகாலை மூன்று மணிக்குத் திறக்கப்படுகிறது. காலை 3 முதல் 4 மணி வரை ஜண்டை, மேளம், டோலக் ஆகிய கருவிகளை முழங்கச் செய்து ஒலி எழுப்புவர். அப்போது ஸ்ரீகாசி விஸ்வநாதர் இங்கு வந்து அன்னபூரணியிடம் உணவு பெற்றுச் செல்வதாக ஐதிகம். நான்கு மணிக்கு மேல்தான் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

காசி விஸ்வநாதரின் ஆத்ம சாந்நித்தியம்... காசி ஆத்ம வீரேஸ்வரர் தரிசனம்!

கால பைரவரும் காசிக் கயிறும்!

சிவ வடிவங்களில் ஒன்று பைரவ வடிவம். பைரவர் என்றால் அச்சம் தருபவர் என்று பொருள். அதாவது, பகைவர்களுக்கு பயத்தையும் அடியவர்களுக்கு அருளையும் அளிக்கும் தெய்வம் இவர். காசி, பைரவரின் பூமி. இவரே காசி மாநகரின் காவல் தெய்வம்.

காசி மாநகரில் அசிதாங்க பைரவர், குரோத பைரவர், உன்மத்த பைரவர், ருரு பைரவர், கபால பைரவர், சண்ட பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் - த்ரிலோசன சங்கம் என எண் திசைகளிலும் கோயில்கொண்டிருக்கிறார் பைரவர்.

காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு வடக்கில் பைரவநாத் ஆலயம் உள்ளது. காசிக்குச் செல்பவர்கள் தவறாமல் இந்த கால பைரவரை தரிசனம் செய்வதுடன், அவருடைய பிரசாதமான கயிற்றைப் பெற்று அணியவேண்டும். இதனால் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள், தடைகள் விலகும். தீவினைகளும் மரண பயமும் நம்மை அண்டாது என்பது நம்பிக்கை.