Published:Updated:

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாளுக்கு அவல் நைவேத்தியம்!

ஆதிகேசவ பெருமாள்
பிரீமியம் ஸ்டோரி
ஆதிகேசவ பெருமாள்

`கேசன்' என்ற அசுரனை மகாவிஷ்ணு அடக்கிய தலம் இது என்கிறது புராணம்.

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாளுக்கு அவல் நைவேத்தியம்!

`கேசன்' என்ற அசுரனை மகாவிஷ்ணு அடக்கிய தலம் இது என்கிறது புராணம்.

Published:Updated:
ஆதிகேசவ பெருமாள்
பிரீமியம் ஸ்டோரி
ஆதிகேசவ பெருமாள்

பெருமாள் சயனக்கோலத்தில் அருள்பாலிக்கும் க்ஷேத்திரங்கள் பல இருந்தாலும் அவற்றில் முக்கியமானது, திருவரங்கம். இந்தத் தலத்துக்கு இணையான பெருமையும் பழைமையும், சாநித்தியமும் கொண்ட அற்புதத் தலம், திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில். 108 திவ்யதேசங்களில் 76-வது திருத்தலமாகவும் 13 மலையாள நாட்டுத் திருக்கோயில்களில் ஒன்றாகவும் திகழ்கிறது இந்தக் கோயில்.

நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்தத் திருத்தலத்தில் பெருமாள் 22 அடி நீளமுள்ள பிரமாண்ட திருமேனியராய் மேற்கு நோக்கியபடி சயனித்து அருள்காட்சி தருகிறார். இடது கை ஆதிசேஷனின் மீது இருக்க, வலது கையில் யோக முத்திரை காட்டியபடி காட்சியளிக்கிறார் பெருமாள்.பிரம்ம சம்ஹிதையின் 5-ம் அத்தியாயத்தை சைதன்ய மஹாபிரபு இந்த ஆலயத்தில்தான் பெற்றார் என்று சொல்லப்படுகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`கேசன்' என்ற அசுரனை மகாவிஷ்ணு அடக்கிய தலம் இது என்கிறது புராணம். முன்னொரு காலத்தில் மகாவிஷ்ணு தடுத்தும் கேளாமல் யாகம் தொடங்கினார் பிரம்மா. அந்த யாகத்தில் பிழை உண்டானதால், யாகக் குண்டத்திலிருந்து கேசன், கேசி என்ற இரு அரக்கர்கள் தோன்றி அட்டகாசம் செய்ய ஆரம்பித்தனர். கூடியிருந்த தேவர்கள் பதறினர். தங்களுக்கு சாகாவரம் அளித்தால் அமைதியாகச் சென்றுவிடுவதாக அந்த அரக்கர்கள் கூற, பிரம்மனும் அதற்கு இசைந்தார்.

ஆதிகேசவ பெருமாள்
ஆதிகேசவ பெருமாள்

சில காலம் மகேந்திரகிரியில் அமைதியாக இருந்த அசுரர்கள் மீண்டும் தொல்லைகள் தரத் தொடங்கினர். அவற்றைப் பொறுக்கமுடியாத தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் விண்ணப்பித்தனர். அசுரர்களை அடக்க நினைத்த மகாவிஷ்ணு, முதலில் கேசனோடு ஏழு ஆண்டுகள் யுத்தம் செய்தார். அப்படியும் கேசன் அழியாத காரணத்தால், தன் விஸ்வரூப தரிசனத்தை அவனுக்குக் காட்டினார். அதைக் கண்டு மயங்கிய கேசன் கீழே சரிந்தான். உடனே, ஆதிசேஷனை அழைத்து கேசனைக் கட்டும்படிக் கூறினார் விஷ்ணு. ஆதிசேஷனும் அவ்வாறே செய்ய, அப்படியே ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டார் பெருமாள். நினைவு மீண்ட கேசன் மீளமுடியாத நிலையில் இருப்பதை உணர்ந்து, தன் பன்னிரண்டு கரங்களையும் நீட்டி விஷ்ணுவைச் சீண்டினான். உடனே விஷ்ணு, அவன் கரங்களில் 12 சிவலிங்கங்களைக் கொடுத்து அதை வணங்கிக்கொண்டிருக்கச் சொன்னார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேசனும் ‘நமசிவாய’ என்னும் ஐந்தெழுத்தை ஓதி அப்படியே அமைதியாகிப் போனான். கேசனின் ஆணவத்தை அடக்கியதால் இந்தப் பெருமானுக்கு ‘ஆதி கேசவன்’ என்ற திருநாமம் உண்டானது.

ஆதிகேசவ பெருமாள்
ஆதிகேசவ பெருமாள்

இந்தக் கோயிலின் மூலவர் சுயம்பு மூர்த்தி (இந்த மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்துவிட்டு பரசுராமர் தன் அவதாரத்தை நிறைவு செய்தார் என்ற தகவலும் உண்டு). மூலவர் சுயம்பு என்பதால் அவருக்குப் பஞ்சகவ்யம் மட்டுமே சாத்தப்படுகிறது. மற்றபடி அபிஷேக ஆராதனைகள் அனைத்தும் உற்சவருக்கே செய்யப்படுகின்றன.

இந்தத் தலத்தில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஆதிகேசவப் பெருமாள் காட்சி கொடுத்தார் என்பதால் கருவறையில் சந்திர, சூரியர் கொலு வீற்றிருக்கின்றனர். பங்குனி மாதமும் புரட்டாசி மாதமும் 3-ம் தேதியிலிருந்து 9-ம் தேதி வரை மாலையில் கோயில் கருவறையில் சுவாமியின் வயிற்றில் சூரியஒளி படுவது விசேஷம். அதை தரிசனம் செய்வது மிகவும் பாக்கியம் என்று சொல்லப்படுகிறது.

ஒற்றைக்கல் மண்டபம் : கருவறைக்கு முன்பாக 18 அடி நீளமும், 18 அடி அகலமும், 3 அடி உயரமும் கொண்ட ஒரே கல்லால் ஆன மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. 12 தூண்களுடன் அமைக் கப்பட்டுள்ள இந்த மண்டபம் இந்தியாவிலேயே பெரிய ஒற்றைக்கல் மண்டபம் என்கிறார்கள்.

ஆதிகேசவ பெருமாள்
ஆதிகேசவ பெருமாள்

உதய மார்த்தாண்ட வர்மா மண்டபம் : பத்மநாப புரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு வேணாடு மன்னர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தபோது, 776-ம் உதய மார்த்தாண்ட வர்மா மகாராஜாவால் கட்டப்பட்ட மரத்தால் ஆன மண்டபம் ஒன்றும் இங்கு உள்ளது. அதன் மேல் பகுதியில், தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும் காட்சி தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக விஷ்ணு ஆலயங்களில் நவகிரக சந்நிதிகள் அமையப்பெறுவது அரிது. இந்த மண்டபத்தின் மேல் பகுதியில் நவகிரகங்கள் அமைந்துள்ளன.

அல்லா மண்டபத்தில் அவல் நைவேத்தியம் : ஒருமுறை திருவட்டாறு பகுதியின் மீது படையெடுத்து வந்த ஆற்காடு நவாப் ஒருவர், இந்தக் கோயிலின் உற்சவ மூர்த்தியை ஆற்காடு எடுத்துச் சென்று ஓரிடத்தில் பூட்டிவைத்து விட்டாராம்.

இந்த நிலையில் ஆற்காடு ராணிக்குத் தீராத வயிற்று வலி ஏற்பட்டது. நாட்டில் பல குழப்பங்கள் நிலவின. இதனால் அச்சமுற்ற மன்னர் ஜோதிடர்களை அழைத்துப் பேசி, பிரச்னைகளுக்கான தீர்வு என்ன என்று கேட்டார். திருவட்டாறு கோயில் விக்கிரகத்தை எடுத்த இடத்திலேயே மீண்டும் கொண்டுசென்று வைத்துவிடுவதுதான் தீர்வு என்று அவர்கள் கூற, ஆற்காடு நவாப் விக்கிரகத்தை எடுத்துக்கொண்டு திருவட்டாறு வந்தார்.

இந்த நிலையில் ‘ஐப்பசி மாதம் ஹஸ்தம் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை திருவிழா நடத்தவேண்டும். திருவோணம் நட்சத்திர தினத்தன்று ஆறாட்டு நடத்தி, கதளி வனம் வழியாகக் கோயிலுக்கு என்னை அழைத்து வர வேண்டும்’ என்றது அந்த அசரீரி.

இதைக் கேட்ட தந்திரிகள், இறைவனின் திருவுளத்தை அறிந்து அவ்வாறே செய்தனர். அந்தத் திருவிழாக் காலத்தில் சுவாமி எழுந்தருளுவதற்காக ஆற்காடு நவாப் ஒரு மண்டபம் அமைத்துக் கொடுத்தார். அந்த மண்டபம் ‘திரு அல்லா மண்டபம்’ என்று அழைக்கப்படுகிறது. ஐப்பசி மாதம் இந்த மண்டபத்தில் சுவாமி விக்கிரகத்தை எழுந்தருளச் செய்து இரவு நேரத்தில் அவல் நைவேத்தியம் சமர்ப்பிக்கிறார்கள்.

பெருமாளுக்குப் பிடித்த அவல் : சர்ப்ப தோஷம், திருமணத்தடை, காரியத்தடை நீக்கும் தலமாகத் திருவட்டாறு விளங்குகிறது. திருமணத்தடை நீங்க பக்தர்கள் மாங்கல்ய வரம் அருளும் சிறப்பு அர்ச்சனை செய்கிறார்கள்.

அவல், சர்க்கரைப் பாகுக் கலவையில், வாழைப் பழத்தை வெட்டிப் போட்டுப் படைப்பது ஆதிகேசவப் பெருமாளுக்கு மிகவும் பிடித்த நைவேத்தியம் என்கின்றனர் பக்தர்கள்.

சிற்பங்கள் : கோயிலின் மகா மண்டபம் 240 கற்தூண்களுடன் திகழ்கிறது. கோயிலின் மேற்கு வாசலில் கிருஷ்ணர், காளி, நடராஜர் முதலிய பிரமிப்பூட்டும் சிற்பங்கள் காணப்படுகின்றன. உதய மார்த்தாண்ட வர்மா மண்டபம் அருகே உள்ள மேற்கு வாசல் பகுதியில் மன்மதன் மற்றும் ரதிதேவி சிற்பங்கள் காணப்படுகின்றன. விநாயகர் சந்நிதி, தர்மசாஸ்தா மற்றும் ஸ்ரீகிருஷ்ணர் சந்நிதிகளும் இங்கு உள்ளன.

திருவிழாக்கள்: இங்கு பங்குனி மற்றும் ஐப்பசி மாதங்களில் திருவிழா நடைபெறும். பங்குனி மாதத் திருவிழாவின்போது மூவாற்று முகம் ஆற்றிலும், ஐப்பசி மாதத் திருவிழாவின்போது களியல் ஆற்றிலும் சுவாமிக்கு ஆறாட்டு நடைபெறும்.

வைகுண்ட ஏகாதசி பிரசித்தமானது. கேரளப் பாரம்பர்யபடி ஓணம் பண்டிகை, சித்திரை விஷு உள்ளிட்ட விழாக்களும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

பாலாலயம் : திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகத்துக்காகத் திருப்பணிகள் நடந்துவருவதால் சுவாமி பாலாலயத்தில் வைக்கப்பட்டுள்ளார். இப்போது கருவறைக்கு வெளியே தனி விக்கிரகத்தில் சுவாமியை எழுந்தருளச் செய்து, பூஜைகள் நடைபெறுகின்றன.

எப்படிச் செல்வது?: நாகர்கோவிலிலிருந்து 28 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது திருவட்டாறு. நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதி உண்டு.

நடை திறந்திருக்கும் நேரம்: அதிகாலை 5 முதல் மதியம் 12 மணி வரை; மாலை 5 முதல் இரவு 8 மணி வரை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism