Published:Updated:

கருவூர் சித்தர் வழிபட்ட பாதாள லிங்கம்!

கரிவேடு கிராமம் பாதாள லிங்கேஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
News
கரிவேடு கிராமம் பாதாள லிங்கேஸ்வரர்

ஆலயம் தேடுவோம்!

ராணிப்பேட்டை மாவட்டம் - அரக்கோணம் வட்டம், காவேரிப் பக்கத்திலிருந்து கிழக்கே சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் கரிவேடு. பல்லவர்கள் காலத்தில் வடக்கு எல்லையின் படைக்கலமாக இந்த ஊர் இருந்ததாம். குறிப்பாக யானைப் படைகள் தங்கியிருந்த இடம் என்பதால், `யானைகள் தங்கும் இடம்’ என்ற பொருளில் கரிவேடு என்று பெயர் பெற்றதாம்.

கருவூர் சித்தர் வழிபட்ட 
பாதாள லிங்கம்!

ங்கு வெட்டவெளியில் சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் முழுவதும் கற்றளியாக ஓர் ஆலயம் அமைந்திருக்கிறது. கட்டுமானத்தின் கற்கள் ஒருவித மஞ்சள் வண்ணத்தில் திகழ, ஆள் அரவம் இல்லாமல் திகழ்கிறது இந்த ஆலயம். இங்கு குடியிருக்கும் ஈஸ்வரனின் திருப்பெயர் அருள்மிகு அரிபிரசாதேஸ்வரர். அம்பிகை - அருள்மிகு தர்மவர்த்தினி எனும் அறம்வளர்த்த நாயகி!

திருமால், சக்தி, சப்த ரிஷிகள், இந்திரன், பிரம்மா, கருவூர் சித்தர் ஆகியோர் வழிபட்டுச் சிறப்பித்த ஆலயம் இது. உள்ளே நுழைந்தோம். எங்கும் இருள் சூழ்ந்து கிடக்கிறது. மண்டபங்களில் வெளவால்களின் வாசம். சுவரெங்கிலும் கல்வெட்டுகள்.

கருவூர் சித்தர் வழிபட்ட 
பாதாள லிங்கம்!

புராணம் சொல்லும் திருக்கதைகள்

ல்வெட்டுகளில் ஒன்று திரிபுவன வீரகண்ட கோபாலனின் 3-ம் ஆண்டு ஆட்சிக் காலத்தில், இந்தக் கோயிலுக்கு ஒரு வேலி நிலம் தானமாக அளிக்கப்பட்ட விவரத்தைச் சொல்கிறது. தெலுங்குப் பல்லவரான இவரது ஆட்சி காலம் 1200-ம் ஆண்டுகளின் முற்பகுதி என வரலாறு சொல்கிறது. இவரது ஆட்சி நெல்லூர் முதல் செங்கல்பட்டு வரை பரவி இருந்ததாம். இவர் நீண்டகாலம் சோழப் பேரரசுக்கு உட்பட்ட சிற்றரசராகத் திகழ்ந்துள்ளார்.

இந்தச் சிவாலயத்தில் திருமாலையும் தரிசித்தோம். ஆம், ஈசனின் திருப்பெயரே அரிபிரசாதேஸ்வரர் அல்லவா... எனில், மகா விஷ்ணுவுக்கும் இந்த ஆலயத்துக்கும் புராணத் தொடர்பு இருக்குமே? நம் மனதில் எழுந்த இந்தக் கேள்விக்கு விரிவான பதிலைச் சொல்கிறது, இக்கோயிலின் தலபுராணம்.

தமது தோஷம் நீக்கி அன்பையே பிரசாதமாக அளித்த ஈசனை வணங்கித் துதித்த திருமால், இந்த ஆலய கோஷ்டத்தில் சங்கு - சக்ரதாரியாக எழுந்தருளினாராம். மட்டுமன்றி, ஒருமுறை திருமாலுக் கும் தேவி மற்றும் பூதேவிக்கும் பிணி ஏற்பட அகத்தியர் முதலான முனிவர்கள் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் போனதாம். திருமால் தேவியருடன் இங்கு வந்து ஈசனை வணங்கி பிணி தீரப் பெற்றாராம். அதனாலேயே இந்த கரிவேட்டில் தேவி - பூதேவி சமேத பத்மநாப சுவாமி கோயில் அமைந்தது என்றொரு தகவலும் கூறப்படுகிறது.

வேறொரு திருக்கதை, `தட்ச யாகத்தில் கலந்துகொண்டதால் தமக்கு ஏற்பட்ட குறையும் தோஷமும் நீங்கிட, பெருமாள் இங்கு வந்து வில்வ மரத்தின் கீழே காட்சி தந்த ஈசனை வணங்கி, சாப விமோசனம் அடைந்தார்’ என்கிறது. அவ்வாறு தான் ஈசனை தரிசித்த இடத்திலேயே சிவாலயம் அமைத்து விழாவும் எடுத்தாராம். இவ்வாறு அரிக்கு அருள் செய்த ஈசன் அரிபிரசாதேஸ்வரர் என்ற திருநாமம் கொண்டார் என்பதை அறியமுடிகிறது.

சரி, அம்பிகை இங்கே அறம்வளர்த்த நாயகியாய் எழுந்தருளக் காரணம் என்னவாக இருக்கும்?

அரியாகிய விஷ்ணுவுக்கு அருள இங்கு எழுந்தருளிய ஈசன், இந்த ஊரின் அழகில் மயங்கி இங்கேயே தங்கிவிட்டாராம். அவரை மீண்டும் கயிலைக்கு அழைத்துச் செல்ல வந்தாள் அன்னை. அவள் இந்த ஊரில் பூஜைகள் செய்து 32 விதமான அறங்கள் செய்து வழிபட்டாள். அவளால் வணங்கப்பட்ட ஈசன் `தர்மேஸ்வரர்’ எனப்படுகிறார்.

அம்பிகை தர்மவர்த்தினி, மேலிரு கரங்களில் மழுவும் செண்டும் திகழ, கீழிரு கரங்களில் அபய-வரதம் காட்டி அருள்கிறாள். கல்யாண வரம் அருளும் நாயகி இவள் என்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள். மண்டபச் சந்நிதி ஒன்றில் ஒயிலாக நின்றருளும் வேறொரு அம்பிகை யையும் தரிசிக்க முடிகிறது.

கருவூர் சித்தர் வழிபட்ட 
பாதாள லிங்கம்!
கருவூர் சித்தர் வழிபட்ட 
பாதாள லிங்கம்!
கருவூர் சித்தர் வழிபட்ட 
பாதாள லிங்கம்!

பாதாள லிங்கேஸ்வரர்!

ந்த ஆலயத்தில் மொத்தம் மூன்று லிங்கத் திருமேனிகள் உள்ளன. முதலாமவர் மூலவர் அரிபிரசாதேஸ்வரர்; இரண்டாமவர் அம்பிகை வழிபட்ட தர்மேஸ்வரர்; மூன்றாமவர் பாதாள லிங்கேஸ் வரர். கருவூர் சித்தர் வழிபட்ட பெருமான் இவர்.

`5 முதல் 12-ம் நூற்றாண்டு வரை வாழ்ந்தவர் என நம்பப்படும் கருவூர் சித்தர், 11-ம் நூற்றாண்டில் தொண்டை மண்டல சிவத்தலங்கள் பலவற்றுக்கும் யாத்திரையாகச் சென்றார். அப்போது இந்தத் தலத்துக்கும் வந்தார். இங்கே ஒரு பாதாள அறையை உருவாக்கி, பல காலம் தங்கியிருந்து பாதாளேஸ்வரரை வழிபட்டார். சோழ மாமன்னன் ராஜராஜனுக்கு குருவாக விளங்கிய கருவூராருக்குப் பல யோக சூட்சுமங்களை அருளியவர் இந்தப் பாதாள லிங்கேஸ்வரர்’ என்றொரு தகவல் சொல்லப்படுகிறது.

இன்றைக்கும் பள்ளம் போன்று அமைந்திருக்கும் இடத்தில் பாதாள லிங்கேஸ்வரரை தரிசிக்க முடிகிறது. இந்த இடம் மிகவும் சாந்நித் தியத்துடனும் அதிர்வுடனும் திகழ்கிறது.

சகல தெய்வங்களையும் தரிசித்துவிட்டு மெள்ள கருவறையை நோக்கி நகர்ந்தோம். மூலவர் அழகிய லிங்கத் திருமேனியராக அருள்கிறார் அரிபிரசாதேஸ்வரர். இவரை ஒரு சாளரத்தின் வழியே எப்போதும் தரிசித்துக்கொண்டிருக்கும் விதமாக நந்தியை மைத்திருக்கிறார்கள்.

மூன்று லிங்க மூர்த்தியரில் - சக்தி வழிபட்ட தர்மேஸ்வரரை வணங்கினால் செல்வபோகம் கிடைக்கும். திருமால் வழிபட்ட அரிபிரசாதேஸ்வரரை வணங்கினால் சகல தோஷங்களும் நோய்களும் நீங்கும். கருவூரார் வழிபட்ட திருமேனியை வணங்கினால் முக்தி நிலையை அடையலாம் என்கிறார்கள் பெரியவர்கள். குறிப்பாக பாதாளலிங்கேஸ்வரர் நோய் நொடிகளை நீக்கும் ஒளஷத லிங்கம் என்பது இங்குள்ள மக்களின் அதீத நம்பிக்கை.

கருவூர் சித்தர் வழிபட்ட 
பாதாள லிங்கம்!

தெய்வங்கள் இல்லாத சந்நிதிகள்

லயப் பிராகாரத்தில் இருந்த சில சந்நிதிகளில் தெய்வச் சிலைகள் இல்லை. ஓரிடத்தில் சந்தனம் அரைக்கப் பயன்பட்ட கல்லும் கட்டையும் காணக்கிடைக்கின்றன. அற்புதமான ஆலயம்... அழகான உறுதியான கட்டுமானத்துடன் திகழ்கிறது. ஆனாலும் வழிபாடுகள்தான் எதுவுமே இல்லை. ஆங்காங்கே தென்படும் மீன இலச்சினைகள், இங்கு பாண்டியர்களின் திருப்பணியும் நடை பெற்றுள்ளது என்பதை உணர்த்துகின்றன.

தற்போது இரண்டு பிராகாரங்களுடன் காணப்படும் இந்த ஆலயம், முன்னொரு காலத்தில் இதைவிடக் கூடுதலான பிராகாரங்களுடன் திகழ்ந்திருக்கலாம்; அந்தப் பிராகாரங்களிலும் கூடுதல் சந்நிதிகள் அமைந்து, இந்த வட்டாரத்திலேயே மிகப் பிரமாண்டமான ஆலயமாக இது போற்றப்பட்டிருக்க வேண்டும் என்பது ஊர்மக்களின் கருத்தாக உள்ளது. அவர்களின் நம்பிக்கைக்கு சாட்சியாக ஆலயத்துக்கு வெளியே திக்குக்கு ஒன்றாக நான்கு சிவலிங்க மூர்த்தங்கள் கவனிப்பாரற்று கிடக்கின்றன.

கருவூர் சித்தர் வழிபட்ட 
பாதாள லிங்கம்!
கருவூர் சித்தர் வழிபட்ட 
பாதாள லிங்கம்!

மனம் கனத்துப்போனது. மிகத் தொன்மையான ஆலயம் வழிபாடு இல்லாமல் திகழ்கிறதே... இங்குள்ளது போன்ற ஒரு தூணைப் புதிதாக உருவாக்குவதே கடினமான காரியம் இப்போது. அப்படியிருக்க, பெரும் பொக்கிஷமான ஆலயம் ஒன்றே சிதைந்துபோகும் விதம் கவனிப்பின்றிக் கிடக்கிறதே என்ற ஆதங்கம் எழுகிறது நமக்குள். இதில் அந்த ஈசனுக்கு எந்த நஷ்டமும் இல்லை; நமக்குத்தான் நஷ்டமும் பாவமும்.

``பிறவி எடுத்த ஆன்மாக்கள் ஒவ்வொன்றும் அந்தப் பிறவிக்கடலை நீந்தி, மீண்டும் பிறவாமல் பேரின்ப மோட்சத்தை அடைய வேண்டி வழிபடும் பொருட்டே ஊர்தோறும் ஆலயம் அமைத்தார்கள் முன்னோர்கள். அதிலும் குறிப்பாக இந்த ஆலயம்... மீண்டும் மீண்டும் கருவில் ஊராமல், இப்பிறவியிலேயே பக்தி மிகுத்து கற்பூரமாய் கரைந்து ஈசனுடன் இரண்டறக் கலந்திட அருள்செய்யும் தலம்; கருவூர்ச் சித்தர் போற்றிச் சிறப்பித்த க்ஷேத்திரம். வேண்டும் அடியார்தம் வினைதீர்க்கும் இறைவன் இங்குள்ள ஈசன்.

இந்த ஐயனையும் அவர் குடியிருக்கும் இந்தக் கோயிலையும் ஊரும் உலகமும் கொண்டாட வேண்டும். அதற்கேற்ப, பெரும் சிறப்புமிக்க இந்த ஆலயம் புனரமைக்கப்படவேண்டும் என்பதே அடியார்கள் அனைவரது விருப்பமும். அதற்கான திருப்பணியில் பக்தர்கள் அனைவரும் கைகோக்கவேண்டும். ஈசனின் இந்த ஆலயத்துக்கு நீங்கள் செய்யும் திருப்பணி உதவிகள், உங்களின் பூர்வஜன்ம வினைகளைத் தீர்க்கும்; ஏழேழு தலைமுறைக்கும் உங்கள் வம்சத்தை வாழவைக்கும்’’ என்று நெகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டார், இந்த ஆலயத்தை நிர்வகித்து வரும் முருகேசன்.

``அற்புதமான இந்தக் கோயில் விரைவில் புதுப்பொலிவு காணும். சீரும் சிறப்புமாக குடமுழுக்கும் நடைபெறும். ஶ்ரீஹரிக்கும் சித்தர் கரூவூராருக்கும் அருளிய ஈசன், திருப்பணி இனிதே நடந்தேறவும் அருள்புரிவார்’’ என்று அவருக்கு உறுதி கூறி, அதன் பொருட்டு அந்தக் கோயில் இறைவனிடத்தும் விண்ணப்பித்து விடைபெற்றோம். சிவம் சித்தம் கொள்ளட்டும்; அவரின் பேரருளாலும் பக்தர்கள் மற்றும் அடியார்தம் பங்களிப்போடும், நம் சிந்தை மகிழ இந்தப் பேராலயம் விரைவில் குடமுழுக்கு காணட்டும்.

வங்கிக் கணக்கு விவரம் :

A/c.Name: MURUGESAN GOVINDARAJ

- SHANTHI MURUGESAN

A/c.No: 277010100028641

Bank Name: UNION BANK OF INDIA

Branch: THIRUPPARKADAL (27703)

IFSC No: UBIN0827703

தொடர்புக்கு: MURUGESAN - 80566 06254