Published:Updated:

பெளர்ணமி காவு

பத்திரகாளி அம்மன்
பிரீமியம் ஸ்டோரி
பத்திரகாளி அம்மன்

பௌர்ணமிக்கு மட்டுமே திறக்கும் சாவடிநடை பத்திரகாளி அம்மன் கோயில்!

பெளர்ணமி காவு

பௌர்ணமிக்கு மட்டுமே திறக்கும் சாவடிநடை பத்திரகாளி அம்மன் கோயில்!

Published:Updated:
பத்திரகாளி அம்மன்
பிரீமியம் ஸ்டோரி
பத்திரகாளி அம்மன்

பொதுவாகக் கோயில்களில் தினமும் இறைவனுக்குப் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், சில ஆலயங்களில் அவ்வாறு நடை பெறுவது இல்லை. மாறாக சில ஆலயங்களில், வாரம் இருமுறை, மாதம் ஒரு முறை அல்லது குறிப்பிட்ட சில தினங்கள் மட்டுமே நடைதிறக்கப்பட்டுப் பூஜைகள் நடைபெறும். அப்படி ஒரு கோயில்தான் திருவனந்தபுரத்தை அடுத்துள்ள ‘பௌர்ணமி காவு பத்திரகாளி அம்மன் கோயில்’!

இங்கு பௌர்ணமி அன்று மட்டுமே கோயிலின் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 18 கி. மீ தொலைவில் உள்ளது சாவடிநடை. இந்த ஊரில்தான் பௌர்ணமி காவு பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் தலவரலாற்றை அறிந்துகொள்வதற்குமுன், ஆலயத்தை தரிசனம் செய்வோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கோயில் வளாகத்தில் நுழைந்ததும் ஏழரை அடி உயரத்தில் கம்பீரமாய் அருள்கிறார் விநாயகர். இவருக்குத் தேங்காய் சமர்ப்பிப்பது மிகவும் விசேஷம்.

பெளர்ணமி காவு

பக்தர்கள் தங்களின் பெயர் மற்றும் நட்சத்திரத்தைத் தேங்காயில் எழுதுகிறார்கள். தொடர்ந்து விநாயகரின் சந்நிதியை மும்முறை வலம் வருகின்றனர். பின்னர், ஆனைமுகத்தானிடம் தம் வேண்டுதல்களை முன்வைத்து அந்தத் தேங்காயை சமர்ப்பிக் கின்றனர். அன்று மாலைக்குள் அந்தத் தேங்காயின் ஓடு உடைந்தால், அவர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இங்கு மூலவர் பத்திரகாளி அம்மன். அக்னிமாடன், பன்றிமாடன், சுடலைமாடன், நாகராஜா, இசக்கி அம்மன் என தெய்வங்கள் புடைசூழ அமர்ந்திருக்கிறாள் அன்னை. இங்கு அம்மனுக்கு நெய்விளக்கு ஏற்றி வழிபடுவது விசேஷம். பத்திரகாளி அம்மனை வேண்டிக்கொண்டு நெய் விளக்கு ஏந்தி, சந்நிதியை மும்முறை வலம் வருகிறார்கள் பக்தர்கள்.

அன்னையின் சந்நிதிக்கு அருகிலேயே லட்சுமி விநாயகரும், வலது புறத்தில் உக்கிர சாமுண்டியும் அருள்கின்றனர். உக்கிர சாமுண்டியின் சந்நிதி திறந்திருக்காது. பக்தர்கள், வேண்டுதலுக்காகத் தாங்களாகவே நடையைத் திறந்து உள்ளே சென்று வழிபடலாம். ஒருவர் பின் ஒருவராக உள்ளே சென்று வழிபடவேண்டும். ஒரே குடும்பத்தினராக இருந்தால் ஒன்றாகச் சென்றும் வழிபாடு செய்யலாம்.

பெளர்ணமி காவு

வேண்டுதல் செய்யும் போது, ஒரே ஒரு வேண்டுதலைத்தான் மனதில் நினைக்கவேண்டும். குடும்பமாகச் சென்றாலும்... அனைவரின் மனதிலும் ஒரே வேண்டுதலை நினைத்துக்கொண்டு வழிபடவேண்டும். இப்படி இந்த அன்னையிடம் வைக்கப்படும் வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும் என்பது ஐதிகம்.

இங்குள்ள இசக்கியம்மன் சந்நிதியில் பூ வைத்து வழிபட்டால், இழந்த பொருள்கள் மீண்டும் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள். இங்குள்ள நாகர் சந்நிதியில், நாக தேவதைகளுக்கு நடுவே 12 அடி உயரத்தில் பிரமாண்டமாகக் காட்சிகொடுக்கிறார் நாகராஜன். இவரின் திருமேனி ஒற்றைக் கல்லில் செய்யப்பட்டது. பௌர்ணமிக்காவு கோயிலிலுள்ள ஒவ்வொரு மரத்திலும் ஒவ்வொரு தெய்வம் உறைந்துள்ளது என்கிறார்கள் பக்தர்கள்.

இக்கோயிலின் சிறப்புகள் குறித்து இங்குள்ள ஜோதிடர் கண்ணன் நாயர் விவரித்தார்.

“சோழ மன்னர்கள் காலத்தில், போருக்குச் செல்லும் முன்பு போரில் வெற்றிபெறுவதற்காக படை பத்திரகாளி அம்மனுக்குப் பெரிய பூஜை கள் நடத்துவார்கள். அந்த பூஜையால் மகிழும் அம்மன், தன் பரிவாரங்களுடன் போர்க்களத்தில் எழுந்தருளி, சோழ மன்னனுக்கு வெற்றியைச் சேர்ப்பார் என்று நம்பினர்.

திருவனந்தபுரம் அருகேயுள்ள விழிஞம் துறைமுகத்தைப் பிடிப்பதற்காக ராஜராஜன் மற்றும் ராஜேந்திரச் சோழன் காலத்தில் பல போர்கள் நடைபெற்றன. அப்போது, சோழ மன்னர்களுடன் போருக்கு வந்த படைபத்திரகாளி அம்மனும் அவளின் பரிவாரங்களும் இங்கேயே தங்கிவிட்டனர் என்கின்றனர்.

பெளர்ணமி காவு

சாவடிநடையில் இருக்கும் மரங்களில் பரிவார தெய்வங்கள் குடிகொள்ள, அம்மன் இங்கேயே கோயில்கொண்டாள். வனத்தில் தெய்வங்கள் உறையும் தலங்களையே ‘காவு’ என்று அழைப்பர்.

அப்படி, இந்தச் சாவடிநடைக்காவில் பத்திர காளி அம்மன் உறைந்திருப்பதைப் பிற்காலத்தில் ஆட்சிக்கு வந்த ‘ஆயி’ எனும் மன்னன் தெரிந்து கொண்டான். அவனும் போருக்குச் செல்லுமுன் இங்கு வந்து ஆடு, கோழிகளைப் பலியிட்டு, பெரிய அளவில் அம்மனுக்கு கொடைகொடுத்து வழிபட்டுச் சென்றான். அதனால் போரில் அவனுக்கு வெற்றிகள் குவிந்தன. ஆனால், அவனுக்குப் பிறகு வந்த அவன் வம்சத்தினர் அம்மனை வழிபடாமல் விட்டுவிட்டனர். ஆகவே, துறைமுகத்தையும் நாட்டையும் இழந்தனர்.

பிற்காலத்தில், இப்பகுதியில் வாழும் மக்கள் இந்த அம்மனுக்குத் தங்களால் இயன்ற அளவில் வழிபாடுகள் நடத்தி மகிழ்ந்தனர். அப்போது, அம்மன் தனது திருவுளத்தைப் பெண்ணொருத்தி மூலம் வெளிப்படுத்தினாள்.

‘மன்னர்களின் ஆடம்பரமான பூஜைகளை ஏற்ற எனக்குத் தினமும் நடைபெறும் சிறிய பூஜைகள் நிறைவைக் கொடுக்கவில்லை. எனவே, நீங்கள் தினமும் பூஜைகளும் வழிபாடுகளும் நடத்தவேண்டாம். அதற்குப்பதில் மாதம் ஒருமுறை பௌர்ணமி அன்று மட்டும் எனக்கு ராஜபோக பூஜை செய்தால்போதும். ஏனைய நாள்களில் நானே பக்தர்களின் வீடுகளுக்குச் சென்று அருள்செய்வேன்’ என்று அருள்பாலித்தாள்.

பெளர்ணமி காவு

அதை ஏற்ற பக்தர்களும், பௌர்ணமி தோறும் இந்தக் கோயிலில் வழிபாடு நடத்த முடிவு செய்தனர். இந்த ஆலயத்தில் பத்திரகாளி அம்மன் உக்கிரமாகவும், பகவதி அம்மன் சாந்தமாகவும் தரிசனம் தருகின்றனர். மேலும் இங்கே தன்வந்திரி பகவானின் சாந்நித்தியம் இருப்பதால், இங்கு வரும் பக்தர்களின் பிணிகள் தீருகின்றன.

ஆகவே, ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் இந்த ஆலயத்துக்கு வந்தவண்ணமிருக்கிறார்கள்” என்றார்.

இந்த அம்மனுக்குப் பக்தர்கள் அஷ்ட திரவிய பொங்கலையும் பஞ்ச திரவிய பொங்கலையும் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். நீங்களும் ஒருமுறை இந்தக் கோயிலுக்குச் சென்று பகவதி மற்றும் பத்ரகாளியம்மனை வழிபட்டு, வேண்டும் வரங்களைப் பெற்று வாருங்களேன்!

எப்படிச் செல்வது: திருவனந்தபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வெங்ஙானூர், விழிஞம் செல்லும் பேருந்துகள் மூலம் சாவடிநடை ஊரைச் சென்று சேரலாம். நாகர்கோவில், மார்த்தாண்டம் வழியாகச் செல்பவர்கள், பாலராமபுரம் சந்திப்பில் இறங்கி, அங்கிருந்து பேருந்து மூலம் `சிசிலிபுரம்' வழியாகவும் செல்லலாம்.

நடை திறந்திருக்கும் நேரம்: பௌர்ணமி தினங்களில் அதிகாலை 5 முதல் இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்.

தொடர்புக்கு: 97477 72177; 96330 00578