Published:Updated:

`வரும்தலைமுறைக்காக புராதனச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும்' - வெங்கய்யா நாயுடு!

சைலபதி

‘ஸ்ரீரங்கநாதர் திருகோயில் ஸ்ரீ ரங்கம் - எதிர்காலத் தலைமுறையினருக்காக பழைமை பாரம்பரியத்தைப் பாதுகாத்தல்’ என்னும் நூலினை இந்தியன் கல்ச்சர் & ஹெரிடேஜ் ட்ரஸ்ட்’ அமைப்பு உருவாக்கியுள்ளது. அதை நேற்று (13.7.19) நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெளியிட்டார்.

வெங்கய்யா நாயுடு
வெங்கய்யா நாயுடு

”நம் நாடெங்கும் புராதனச் சின்னங்கள் அநேகம் உள்ளன. வரும் தலைமுறைக்காக அவற்றைப் பாதுகாத்துத் தரவேண்டும்“ என்று சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டுவிழா ஒன்றில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு பேசினார்.

வெங்கய்யா நாயுடு
வெங்கய்யா நாயுடு

தமிழகத்தின் பழைமைவாய்ந்த கோயில்களில் ஒன்றான திருவரங்கம் ரங்கநாத ஸ்வாமி திருக்கோயிலில் 2014 -ம் ஆண்டில் புனரமைப்புப் பணிகள் தொடங்கின. 156 ஏக்கர் பரப்பளவில் 21 கோபுரங்களுடன் காணப்படும் இந்த பிரமாண்டமான திருக்கோயிலில் புனரமைப்புப் பணிகள் மிக விரைவாகவும் சிறப்பாகவும் நடைபெற்றன.

புனரமைப்புப் பணிகளில், சிற்பிகள், ஸ்தபதிகள், பொறியியல் வல்லுனர்கள் என 1300 பேர் இணைந்து பணியாற்றினர். 50,000 டன் அளவுக் குப்பைகள் ஆலயத்திலிருந்து அகற்றப்பட்டது. துறை வல்லுனர்களின் துணைகொண்டு கோயில்கட்டுமானம் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு 16 மாதங்களில் பணிகள் விரைவாகச் செய்து முடிக்கப்பட்டன. பின் 2017 -ம் ஆண்டு இந்த மாபெரும் முயற்சியைப் பாராட்டி யுனஸ்கோ ‘கலாசார பாரம்பரிய பாதுகாப்பு விருது’ வழங்கியது.

ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம்

இந்தப் புனரமைப்புப் பணிகளை விளக்கும் வகையில், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைத் தொகுத்து ’இந்தியன் கல்ச்சர் & ஹெரிடேஜ் ட்ரஸ்ட்’ அமைப்பு, ‘ ஸ்ரீரங்கநாதர் திருகோயில் ஸ்ரீ ரங்கம் - எதிர்காலத் தலைமுறையினருக்காக பழைமை பாரம்பரியத்தைப் பாதுகாத்தல்’ என்னும் தலைப்பில் ஒரு நூலினை வெளியிட்டுள்ளது. இதை நேற்று (13.7.19) மாலை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள, விவேகானந்தர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெளியிட்டார். நிகழ்வில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமசந்திரன், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

ஸ்ரீ மதுரகவி நான்குநேரி வானமாமலை ஜீயர் சுவாமிகளும், ஸ்ரீ வராக மகா தேசிகன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவர் ஜீயர் சுவாமிகளும் கலந்துகொண்டு ஆசிவழங்கினர். நிகழ்வின் தொடக்கத்தில் திருவரங்கம் திருக்கோயிலின் அறங்காவலர் குழுவின் தலைவரான வேணு ஸ்ரீநிவாசன் வரவேற்புரை வழங்கினார்.

வெங்கய்யா நாயுடு
வெங்கய்யா நாயுடு

நிகழ்வில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, “ நம் நாடெங்கும் புராதனச் சின்னங்கள் அநேகம் உள்ளன. வரும் தலைமுறைக்காக அவற்றைப் பாதுகாத்துத் தரவேண்டும். அதில் பொதுமக்களும் ஆர்வம் செலுத்த வேண்டும். மேலும் தாய்மொழியைப் பாதுகாப்பது, நம் கலாசார அடையாளங்களைப் பாதுகாப்பது போன்றவற்றில் மக்கள் அக்கறை செலுத்தவேண்டும். அதன் மூலமே, நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற பண்பாட்டுப் பொக்கிஷங்களைப் பாதுகாக்க முடியும்” என்று பேசினார்.