Published:Updated:

தட்சிணாமூர்த்தி விநாயகர் திருக்கல்யாணம்... மெலட்டூரில் ஆவணி பிரம்மோற்சவம் நாளை தொடங்குகிறது! 

சைலபதி

தஞ்சை மாவட்டம், மெலட்டூரில் உள்ளது தட்சிணாமூர்த்தி விநாயகர் திருக்கோயில். இங்கு ஆவணி மாத பிரம்மோற்சவம் நாளை ( 23.8.2019) தொடங்குகிறது. 

சித்தி புத்தி விநாயகர்
சித்தி புத்தி விநாயகர்

தஞ்சை மாவட்டம் மெலட்டூரில் அமைந்துள்ளது அபூர்வ தட்சிணாமூர்த்தி விநாயகர் திருத்தலம். 108 விநாயகத் தலங்களுள் 81 வது தலமாகக் கருதப்படுகிறது இந்த ஆலயம்.

தட்சிணாமூர்த்தி விநாயகர்
தட்சிணாமூர்த்தி விநாயகர்

இங்கு எழுந்தருளியிருக்கும் விநாயகர் சித்தி புத்தி சமேதராக 'தட்சிணாமூர்த்தி விநாயகர்' என்ற திருநாமத்தோடு எழுந்தருளியிருக்கிறார். இந்த அற்புத ஆலயத்தில் பிரம்மோற்சவ வைபவம் நாளை (23.8.2019) தொடங்குகிறது.

இந்த ஆலயத்தில் விநாயகப் பெருமான் தட்சிணாமூர்த்திபோல் தென் திசை நோக்கி அருள்புரிகிறார். இந்த ஆலயமும் சிவாலயம் போலவே அமைக்கப்பட்டிருக்கும். சிவாலயங்களில் நடராஜப் பெருமான் எழுந்தருள்வதுபோல இங்கு நர்த்தன கணபதி அருள்புரிகிறார். அஸ்திர தேவரைப் போன்று, சூலாயுதம் தாங்கி சூலத்துறை கணபதியும் காட்சி தருகிறார்.

மெலட்டூர்
மெலட்டூர்

உற்சவராகத் தட்சிணாமூர்த்தி விநாயகர் சித்தி புத்தியுடன் அருள்பாலிக்கிறார். இத்தகைய சிறப்புகளை உடைய இந்த அற்புத ஆலயத்தின் பிரம்மோற்சவம் நாளை தொடங்குகிறது.

23.8.2019 அன்று தொடங்கி 2.9.2019 வரை நடைபெறும் பிரம்மோற்சவத்தில் தன்னைத்தானே விநாயகப் பெருமான் பூஜித்துக் கொள்ளும் ஆத்ம பூஜை திருக்காட்சி 28.8.2019 அன்று நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக சித்தி புத்தி விநாயகர் திருக்கல்யாணம் 30.8.2019 அன்று காலை 9.30 முதல் 10.30 வரை நடைபெறவிருக்கிறது. 31.8.2019 அன்று வெண்ணெய்த்தாழி அலங்காரமும் 1.9.2019 அன்று திருத்தேர் உற்சவமும் நடைபெறும்.

தட்சிணாமூர்த்தி விநாயகர்
தட்சிணாமூர்த்தி விநாயகர்

இங்கு விநாயகர் திருக்கல்யாண உற்சவம் மிகவும் விமரிசையாக நடைபெறும். இந்த வைபவத்தில் கலந்துகொள்ளும் திருமணம் ஆகாதவர்களுக்கு, தடைகள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதிகம். சித்தி - புத்தி ஆகியோர் ஞானத்தின் வடிவாகக் காட்சிகொடுப்பவர்கள் என்பதால் இந்த விநாயகரை சித்தி புத்தி சமேதராகக் காட்சிகொடுக்கும் விநாயகரை தரிசனம் செய்தால் கல்விச் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.