Published:Updated:

திருப்பதியிலிருக்கும் சிவன் கோயிலில் பிரம்மோற்சவ விழா!#Tirupaty

சிவன்
சிவன்

கபில தீர்த்தத்தையொட்டி, மலையடிவாரத்தில் இருக்கிறது கபிலேஸ்வரர் ஆலயம். இங்கு கபில முனிவர் தவம் செய்து சிவபெருமானின் அருளைப் பெற்றதால் இத்தலத்துக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது.

திருப்பதிக்குச் செல்பவர்கள் கீழ் திருப்பதியில் தங்கிச்சென்றால் அலர்மேலு மங்காபுரம், சீனிவாச மங்காபுரம், கோதண்டராமர்கோயில் எனப் பல ஆலயங்களை தரிசித்துச் செல்லலாம். கீழ்த்திருப்பதியிலிருந்து சீனிவாசமங்காபுரம் செல்லும் வழியில் இருக்கிறது கபில தீர்த்தம்.

Kapila Theertham
Kapila Theertham

திருமலையிலிருக்கும் நூற்றுக்கணக்கான தீர்த்தங்களில் கபிலதீர்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. வினாசனம் எனும் நீர்வீழ்ச்சியிலிருந்து உற்பத்தியாகும் நீர் அருவியாகக் கொட்டி கீழே வந்து சேருமிடம் கபிலதீர்த்தம், ஆழ்வார் குளம் என அழைக்கப்படுகிறது.

இந்தக் கபில தீர்த்தத்தையொட்டி, மலையடிவாரத்தில் இருக்கிறது கபிலேஸ்வரர் ஆலயம். இங்கு கபில முனிவர் தவம் செய்து சிவபெருமானின் அருளைப் பெற்றதால் இப்பெயர் ஏற்பட்டது.

Kapileswar on butha vakanam
Kapileswar on butha vakanam
TTD PHOTO

மலைக்குகை வாசலுடன் கூடிய அற்புதமான ஆலயம். இங்கு வீசும்காற்றின் குளிச்சியில் சகல நோய்களும் நம்மை விட்டு விலகுவதாக ஐதீகம். பக்தர்களே லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து பூஜிக்கும் வகையில் ஆலயத்தின் பிராகாரத்தில் நவகிரகங்களும் லிங்கமும் நாகராஜாவும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

கோயிலுக்குச் செல்லும் நுழைவாயிலில் பிரமாண்ட அளவில் நந்தி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருகாலத்தில் பாதாள உலகத்தில் கபில முனிவரால் பூஜிக்கப்பட்டதால் கபிலேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

Nandhi Bagavan
Nandhi Bagavan
TTD PHOTO

காமாட்சியம்மன், விநாயகர், குமாரசாமி (முருகன்), தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கும் இந்தக் கோயிலில் தனித்தனி சந்நிதிகள் இருக்கின்றன.

கபிலேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் திருப்பதி மலையப்ப சுவாமிக்கு நடப்பது போலவே பிரம்மோற்சவ நிகழ்ச்சி நடக்கின்றது.

பிப்ரவரி 14 - ம் தேதி தொடங்கி 23 - ம் தேதி வரை 9 நாள்கள் நடைபெறுகின்றது. விழாவையொட்டி 4 டன் வண்ண மலர்களாலும் வண்ண விளக்குகளாலும் அந்தப் பகுதி அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரம்மோற்சவ நிகழ்ச்சியில் சிவபெருமான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான அலங்காரத்தில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

Kapileswar
Kapileswar
TTD PHOTO

சுவாமி வீதி உலாவின்போது பலவித அலங்காரங்களில் ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்து வருகின்றனர். இன்று பிரதோஷம் என்பதால் மாலையில் விசேஷ பூஜை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு