Published:Updated:

பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா கோலாகலம்! - களைகட்டியது தேரோட்டம்

ச.ரிஷி குமார்

பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தீர்த்தவாரி நடக்கிறது.

Pillaiyar patti
Pillaiyar patti

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் உலகப் பிரசித்திபெற்ற கற்பக விநாயகர் கோயில் உள்ளது. குடவரை கோயில்களில் ஒன்றானதும் வரலாற்றுச் சிறப்புமிக்கதுமான இந்தக் கோயிலுக்கு தமிழகம் மட்டுமன்றி நாடு முழுவதிலுமிருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

Pillayar patti
Pillayar patti

இங்கு விநாயகப் பெருமானின் துதிக்கை வலம் சுழித்ததாக அமைந்திருப்பது சிறப்பம்சம். சாதாரணமாக மற்ற இடங்களில் இருப்பதைப்போல நான்கு கைகள் இல்லாமல் இரண்டு கரங்களை கொண்டு திகழ்கிறார் விநாயகர். வயிறு, ஆசனத்தில் படியாமல்  `அர்த்தபத்ம’ ஆசனம், போன்று கால்கள் மடித்திருக்க அமர்ந்தருள்கிறார். இடக்கரத்தை கடிஹஸ்தமாக இடையில் நாட்டிப் பெருமிதக் கோலத்திலும் வலக்கரத்தில் மோதகம் தாங்கியும் அருள்கிறார். ஆண், பெண் இணைப்பை புலப்படுத்தும் முறையில் வலத்தந்தம் நீண்டும், இடத்தந்தம் குறுகியும் காணப்படுவது இவ்விநாயகருக்கு சிறப்பம்சம். இந்தக் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாள்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான சதுர்த்தி விழா கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் காலையில் உற்சவர் வெள்ளிக் கேடயத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், மாலையில் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும், வீதியுலாவின்போது திருமறை பாராயணமும் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாகக் கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி, 6-ம் நாள் விழாவில்  கஜமுகாசுர சம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Pillayar patti
Pillayar patti

இந்நிலையில் சதுர்த்தி விழாவின் முத்தாய்ப்பாக நேற்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாகக் காலையில் சுவாமி திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மாலை 4.00 மணி அளவில் பிச்சைக்குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்கத் திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 2 தேர்கள் உள்ள இத்தலத்தில் உற்சவர் ஒரு தேரிலும் சண்டிகேஸ்வரர் ஒரு தேரிலும் எழுந்தருளினர். சண்டிகேஸ்வரர் எழுந்தருளிய தேரை பெண்கள் மட்டும் இழுத்தனர்.

பிள்ளையார்பட்டி நகரின் முக்கிய வீதிகள் வழியாகத் தேர்கள் வலம் வந்து, மாலை 6 மணிக்கு நிலையை வந்தடைந்தது. இதன்பின்னர், மூலவரான கற்பக விநாயகர் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சாத்தப்படும் சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகரின் அருள்பெற்றனர்.

Pillayarpatti chandikeswarar
Pillayarpatti chandikeswarar

சதுர்த்தி விழாவில் 10-ம் நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியாகத் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. இதில், காலை குளக்கரையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். தொடர்ந்து மதியம் 16 படி அரிசியில் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை கற்பக விநாயகருக்குப் படைக்கப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படவுள்ளது. இன்று இரவு 11 மணிக்குப் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.