Published:Updated:

பெரிய தேர் பவனிக்குத் தயாராகும் வேளாங்கண்ணி! - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

அந்தோணி அஜய்.ர

இன்று (7.9.2019) நடைபெறும் தேர்த் திருவிழாவுக்காக நாடுமுழுவதுமிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து குவிந்துள்ளதால் வேளாங்கண்ணி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

Velankanni
Velankanni

கிழக்கின் லூர்து மாதா (Lourdes of the East) என்று உலக அளவில் புகழ்பெற்ற நாகை மாவட்டத்தின் வேளாங்கண்ணியில் உள்ள ஆரோக்கிய அன்னை பேராலயத் திருவிழா கடந்த மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடை பெற்று வருகிறது.

Velankanni
Velankanni

போர்சுக்கீசிய மாலுமிகளால் கட்டப்பட்ட இந்தத் தேவாலயம் இன்று இந்தியாவின் மிகப்பெரிய கிறிஸ்துவ தேவாலயங்களில் ஒன்று எனக் கருதப்படுகிறது. இங்கு இன்று (7.9.2019) நடைபெறும் தேர்த் திருவிழாவுக்காக நாடுமுழுவதுமிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து குவிந்துள்ளதால் வேளாங்கண்ணி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

கொடியேற்றத்துடன் 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், மராத்தி, கன்னடம், இந்தி, கொங்கனி ஆகிய மொழிகளில் திருப்பலியும் தேர் பவனியும் நடைபெறும்.

Velankanni
Velankanni

பத்தாம்நாளான இன்று மாலை பேராலயக் கலை அரங்கத்தில் ஜபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜபம் நடைபெற்று கோட்டார் மறைமாவட்ட ஆயர் நாசரேசன் சூசை தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெறும். அதைத்தொடர்ந்து அன்னையின் பெரியதேர் பேராலய முகப்பில் தொடங்கி கடைத்தெரு, ஆரிய நாட்டுத்தெரு, கடற்கரைச் சாலை வழியாக ஊர்வலம் வந்து மீண்டும் ஆலய முகப்பை வந்தடையும்.

திருவிழாவின் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொள்வதற்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து சேர்ந்துள்ளனர்.

 அசம்பாவிதங்களைத் தவிர்க்க திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி வரதராஜுலு, தஞ்சை சரக டிஐஜி லோகநாதன், எஸ்.பி ராஜசேகரன் ஆகியோர் தலைமையில் 2,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Velankanni
Velankanni

விழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் அனைத்து இடங்களிலும் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளபட்டுள்ளன. பேராலயம் மற்றும் நகரின் முக்கிய இடங்களை 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீஸார் கண்காணித்து வருகிறார்கள்.

படங்கள் : பிரசன்னா