Published:Updated:

`காசிக்கு நிகரானது!' - குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்

தேரோட்டம்
தேரோட்டம் ( நா.ராஜமுருகன் )

சிவன் கோயில்கள் பெரும்பாலும் கிழக்கு நோக்கி அல்லது மேற்கு நோக்கி அமைந்திருக்கும். ஆனால், இந்தக் கோயில் வடக்கு நோக்கி அமைந்திருப்பதால், காசிக்கு நிகரான தலமாகப் போற்றப்படுகிறது.

காசிக்கு நிகரான கோயிலாகக் கருதப்படும் குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயிலில் மாசி மகப் பெருவிழாவையொட்டி தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. தமிழகம் முழுக்க இருந்து ஆயிரணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு, தேர் வடம் பிடித்ததோடு, சாமி தரிசனமும் செய்தனர்.

தேரோட்டம்
தேரோட்டம்
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், குளித்தலையில் அமைந்துள்ளது கடம்பவனேஸ்வரர் கோயில். முற்காலத்தில் கடம்ப மரங்கள் நிறைந்திருந்த இந்தப் பகுதியில் கோயில் அமைந்திருந்ததால், சிவபெருமான் கடம்பவனேஸ்வரர் என்று திருப்பெயர் ஏற்றார். இங்கு தல விருட்சம் கடம்ப மரம். சிவன் கோயில்கள் பெரும்பாலும் கிழக்கு நோக்கி அல்லது மேற்கு நோக்கி அமைந்திருக்கும். ஆனால், இந்தக் கோயில் வடக்கு நோக்கி அமைந்திருப்பதால், காசிக்கு நிகரான தலமாகப் போற்றப்படுகிறது.

இந்தக் கோயிலின் சிறப்பு பற்றி, அந்தக் கோயிலின் அர்ச்சகர் சசுதரனிடம் கேட்டோம்.

"இந்தக் கோயிலில் சிவபெருமான் சுயம்புவாகத் தோன்றியவர். அம்பிகை பாலகுஜலாம்பிகை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரையில் அமைந்துள்ள தலம் இது. அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் போர் நடந்தபோது, கத்யாயன முனிவருக்கு சப்த கன்னியர்கள் தொல்லைகொடுத்தனர். இதனால், கோபம் அடைந்த அந்த முனிவர், அவர்களுக்கு சாபம் இட்டார். உடனே பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, கௌமாரி, சாமுண்டி ஆகிய 7 சப்தகன்னிகளும் முனிவரிடம் தங்களை மன்னித்து அருளுமாறு வேண்டினர். அதற்கு அந்த முனிவர், வடக்கு திசையில் இருக்கும் சிவனை வழிபட்டால், சாபம் தீரும் என்று கூறினார்.

சசிதரன் (அர்ச்சகர்)
சசிதரன் (அர்ச்சகர்)
நா.ராஜமுருகன்

இதையடுத்து, அந்த சப்த கன்னியர் குளித்தலை வந்து சிவனை வழிபட்டு, தங்கள் சாபம் நீங்கப்பெற்றனர். பின்னர், அவர்கள் சிவன் வீற்றிருக்கும் கருவறைக்குப் பின்புறமே அமர்ந்து பக்தர்களுக்கு அருள்புரிந்துவருகிறார்கள். சப்த கன்னியர்களுக்கு கோயில்களில் உப சந்நிதி அமைந்திருக்கும். சில இடங்களில் சப்த கன்னியர்களுக்கு தனியாகக் கோயில் அமைந்திருக்கும். மூலஸ்தானங்களில் மற்ற தெய்வங்களுடன் இருப்பதுபோன்ற அமைப்பு எங்கும் இருக்காது.

Vikatan

அதேபோல், காலை கடம்பர், மதியம் சொக்கர், அந்தி வேளையில் திருஈங்கோய்நாதர் என்பது இங்கு சொல்லப்படும் சிறப்பாகும். அதாவது, குளித்தலை கடம்பரை காலையிலும், அய்யர் மலை சொக்கரை மதியமும், மாலையில் முசிறி திருஈங்கோய்மலை நாதரையும் வழிபட்டால், காசிக்கு போனதற்குச் சமம் என்பர். இங்கு சிவனே வடக்கு நோக்கி இருப்பதால், இங்கு துர்க்கை அம்மன் இல்லை. திருமணமாகாத பெண்கள் 48 நாள்கள் இங்கு வந்து சப்த கன்னியர்களுக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால், திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமின்றி, இங்குள்ள கடம்பவனேஸ்வரருக்கும் பாலகுஜலாம்பிகை அம்மனுக்கும் திருமணம் செய்துவைத்தால், திருமணத்தடை அகலும் என்பதால், ஏராளமான பக்தர்கள் சுவாமிக்கு திருமணம் செய்துவைத்து வழிபாடு நடத்துகிறார்கள்.

வடம் பிடிக்கும் பக்ததர்கள்
வடம் பிடிக்கும் பக்ததர்கள்
நா.ராஜமுருகன்

இக்கோயிலின் தீர்த்தம் அக்னி தீர்த்தம் ஆகும். மாசி மாதத்தில் பிரம்மோற்சவமும் தை மாதத்தில் பூசத் திருவிழாவும் மிகவும் சிறப்புப் பெற்றது. அந்த வகையில், இந்தக் கோயிலில் மாசி மகப் பெருவிழாவையொட்டி, குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயில் பெரிய தேரோட்டம் விமரிசையாக நடந்தது. குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயில், முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேஸ்வரர் கோயில் மாசி மகப்பெருவிழா ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியான காலை 10 மணியளவில், திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டம் நடந்தது. இதில், தமிழத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். நேர்த்திக் கடனாக, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு