Published:Updated:

தனி அரிசிப் பொங்கல், கோழிப் படையல்... பெண் வாரிசுகள் பங்கேற்ற கடலாடி காளியம்மன் கோயில் வழிபாடு!

காளியம்மன் கோயில் படையல்.
காளியம்மன் கோயில் படையல். ( உ.பாண்டி )

கடலாடியில் ஆண்டு தோறும் ஆவணி மாத இறுதி செவ்வாய் கிழமையன்று பெண்கள் மற்றும் பெண் வாரிசு சார்ந்தவர்கள் மட்டுமே பொங்கல் வைத்துக் கோழிகளைப் பலி கொடுத்து வழிபாடு செய்யும் விழா காலங்காலமாக நடந்துவருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே விவசாயம் செழிக்க வேண்டி கிராமத்துப் பெண்கள் மற்றும் அவர்களின் பெண் வாரிசுதார்கள் மட்டும் கலந்துகொண்டு கோழிகளைப் பலியிட்டு அதனைக் கோயில் வளாகத்திலேயே சமைத்து உண்ணும் விநோதத் திருவிழா நடைபெற்றது.

வழிபாடு செய்த பெண்கள் வைத்த படையல்
வழிபாடு செய்த பெண்கள் வைத்த படையல்
உ.பாண்டி

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே புனவாசல் கிராமத்தில் அமைந்துள்ளது ஆவாரங்காடு காளியம்மன் கோயில். இந்தக் கோயிலில் உருவ வழிபாடு கிடையாது. இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் ஆவணி மாத இறுதி செவ்வாய் கிழமையன்று இந்தக் கிராமத்துப் பெண்கள் மற்றும் அவர்களின் பெண் வாரிசுகள் மட்டுமே கலந்துகொண்டு பொங்கல் வைத்துக் கோழிகளைப் பலிகொடுத்து வழிபாடு நடத்துவதைப் பல ஆண்டு காலமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இக்கோயிலில் பொங்கல் வைப்பதற்கு என்றே பிரத்யேகமாக நெல்மணிகளை அவித்து அதன் மூலம் கிடைக்கப்பெறும் அரிசியைப் பயன்படுத்துவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

வழிபாட்டிற்கு வந்திருந்த பெண்கள்.
வழிபாட்டிற்கு வந்திருந்த பெண்கள்.
உ.பாண்டி
செல்வம் அருளும் லட்சுமி தீர்த்தம்... நோய் நீக்கும் நவபாஷாண கருடர்... சிங்கவரம் ரங்கநாதர் கோயில்!

இந்த நிலையில் இந்தாண்டுக்கான ஆவணி வழிபாடு கடைசி செவ்வாய் கிழமையான நேற்று இரவு ஆவாரங்காடு காளியம்மன் கோயிலில் நடைபெற்றது. இந்த வழிபாட்டு பூஜையில் புனவாசல் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் அவர்களின் பெண்களின் வாரிசுகள் குடும்பம் குடும்பமாக பங்கேற்றனர். கோயில் முன் பொங்கல் வைத்த பெண்கள், முட்டையிடும் நிலையை அடைந்த கோழிகளைப் பலிகொடுத்ததுடன் அவற்றை காளியம்மனுக்குப் படையலிட்டு வழிபட்டனர். பின்னர் அக்கோழிகளைக் கோயில் வளாகத்தில் வைத்து சமைத்து உண்டனர். மீதமான உணவுகளை வீடுகளுக்குத் திரும்ப எடுத்துச் செல்லாமல் கோயில் வளாகத்திலேயே குழிதோண்டிப் புதைத்துச் சென்றனர்.

காளியம்மன் கோயில் திருவிழா
காளியம்மன் கோயில் திருவிழா
உ.பாண்டி

இந்த வழிபாடு மூலம் தங்கள் பகுதிகளில் நல்ல மழை பொழியும் என்றும் விவசாயம் செழிக்கும் என்றும் இவர்கள் நம்புகிறார்கள். பொங்கல் வைப்பதற்கு அன்றைய நாளிலேயே அவிக்கப்பட்ட நெல்மணியில் இருந்து கிடைக்கும் அரிசியைப் பயன்படுத்துவதோடு எண்ணெய், உப்பு, சர்க்கரை உள்ளிட்ட சமையலுக்குத் தேவையான பொருள்களைக்கூட வீட்டிலிருந்து கொண்டு வராமல் புதிதாகக் கடையில் வாங்கி வந்து படையலிட்டு வழிபட்டு வருவதாகப் புனவாசல் கிராமப் பெண்கள் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு