Published:Updated:

நீதி வழங்கும் சாமுண்டி தேவி

சாமுண்டி தேவி
பிரீமியம் ஸ்டோரி
சாமுண்டி தேவி

கேரள தரிசனம்

நீதி வழங்கும் சாமுண்டி தேவி

கேரள தரிசனம்

Published:Updated:
சாமுண்டி தேவி
பிரீமியம் ஸ்டோரி
சாமுண்டி தேவி

கேரள மாநிலத்தின் பிரசித்திபெற்ற ஆலயங்களில் ஒன்று கரிக்ககம் சாமுண்டிதேவி திருக்கோயில். அம்பிகை மூன்று தேவியராக அருளும் அற்புத க்ஷேத்திரம் இது. இங்கு கொயில் கொண்டிருக்கும் சாமுண்டிதேவியை நீதி வழங்கும் அன்னையாகப் போற்றி வழிபடுகிறார்கள் பக்தர்கள்.

`கரி’ என்ற பதம் யானையைக் குறிக்கும். இந்தப் பகுதியில் யானைகள் நிறைய உண்டு என்பதால், (கரி + அகம்) கரிக்ககம் என்று இந்தத் தலம் பெயர் பெற்றதாகக் கூறுவர். `களி' என்றால் விளையாட்டு என்று பொருள். கதகளி, ஒட்டம் துள்ளல் போன்ற கலைகளின் அகமாக விளங்கியதால், களியகம் என வழங்கப்பட்டு, பின்னாளில் `களி’ என்பது `கரி’ என மருவி கரிக்ககம் என்று பெயர் வந்தது எனச் சொல்வோரும் உண்டு.

சாமுண்டிதேவி
சாமுண்டிதேவி


கரிக்ககம் பகுதியில் தேவியின் மீது அதீத பக்திகொண்ட அந்தணர் ஒருவர் வாழ்ந்தார். அனுதினமும் சாமுண்டிதேவியை வழிபட்டு வந்தார் அவர். இதே பகுதியில் `நடுத்தலை வீடு’ பிரிவைச் சார்ந்த நாயர் குடும்பத்துச் சிறுவன் ஒருவன், தேவி உபாசகரான அந்தணர் குடும்பத்துடன் அதீத பாசத்துடன் இருந்து வந்தான். அந்தணர் தம்முடைய கடைசிக் காலத்தில், அனுதினமும் தான் வழிபட்டு வந்த தேவி விக்கிரகத்தைப் பெட்டி ஒன்றில் வைத்து சிறுவனிடம் ஒப்படைத்தார் (கொல்லம் ஆண்டு 572).

அவன் அந்தப் பெட்டியைத் தன் வீட்டில் கொண்டுபோய் வைத்துக் கொண்டான். ஆனால் அதன் மகிமையை அறியாத அந்த வீட்டுப் பெண்ணொருத்தி, பெட்டியைத் தூக்கி வீதியில் வீசியெறிந்துவிட்டாள்.

அவ்வளவுதான்... மறுகணமே அவள் மயங்கி விழுந்தாள். அப்படியே நினைவிழந்து படுத்த படுக்கையானாள். மருத்துவம் கைகொடுக்காத நிலையில், செய்வதறியாது திகைத்த அந்த வீட்டார், ஜோதிடர் ஒருவரை அழைத்து காரணம் அறிய முற்பட்டனர்.

சாமுண்டி தேவி
சாமுண்டி தேவி


ஜோதிடர் மூலம் உண்மையை அறிந்தவர்கள், உரிய பரிகாரங்களைச் செய்து சாமுண்டிதேவியிடம் மனதார மன்னிப்பு கோரினர். அன்னையும் மனமிரங்கி அவர்களுக்கு அருள் பாலித்தாள். அதன் பிறகு, தேவிக்குத் தனி ஆலயம் எழுப்பி வழிபட்டு வந்தனர். இந்த நிகழ்வு அதே ஆண்டில் (கொல்லம் ஆண்டு 572) மீன மாதம் மகம் நட்சத்திரத்தன்று நிகழ்ந்தது என்கிறது தலவரலாறு. வருடம்தோறும் அந்த நாளையொட்டி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.

`பார்வதி புத்தனாறு’

திருவிதாங்கூர் இளைய ராஜா சித்திரைத் திருநாளுக்கு, 18 வயது ஆகும் வரையிலும், அவர் சார்பில் மகாராணி பார்வதிபாயே அரசு நிர்வாகத்தைக் கவனித்தார். அவர், கரிக்ககம் பகுதியில் சிறியளவில் ஓடிக் கொண்டிருந்த சிற்றோடையை... எர்ணாகுளம், ஆலப்புழா, கொல்லம், வைக்கம் ஆகிய ஊர்களை இணைக் கும் விதமாக சீரமைத்தார்.

அதன் மூலம் நீர்வழிப் போக்கு வரத்து நடந்தது. இந்த நதி இன்றும் இந்தப் பகுதிகளில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்குப் பயனுள்ளதாகத் திகழ்கிறது. மகாராணியாரின் இந்தப் பணிக்கு நன்றி செலுத்தும் விதமாக, `பார்வதி புத்தனாறு’ என்றே அந்த நதிக்குப் பெயர் சூட்டப்பட்டதாம்.

சாமுண்டிதேவியின் ஆலயம் மிக அழகுடன் திகழ்கிறது. பிரதான சாமுண்டிதேவி காருண்யத்துடன் சந்நிதி கொண்டிருக்க, பால சாமுண்டி, ரத்த சாமுண்டி தேவியரும் தனித்தனிச் சந்நிதிகளில் அருள்கிறார்கள்.

ஒரு காலத்தில் ரத்த சாமுண்டிக்கு உயிர்ப் பலியிட்டு வழிபட்டார்களாம். இப்போது அந்த வழக்கம் மாறி விட்டது; தடியங்காய் எனும் காயை வெட்டி வைத்து வழிபடுகிறார்கள். ரத்த சாமுண்டி மற்றும் பால சாமுண்டி தேவி சந்நிதிகள் காலை 7 முதல் முதல் 11 மணி வரையிலும்; மாலை 4:30 முதல் 6 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். கணபதி, பால கணபதி, சாஸ்தா மற்றும் நாக மூர்த்தங்களையும் இந்தக் கோயிலில் தரிசிக்கலாம்.

சாமுண்டி சந்நிதியில் சத்தியம் செய்தால்...

பிரதானமான சாமுண்டிதேவி நீதி காக்கும் அன்னை யாய், தவறு செய்வோரைத் தண்டிக்கும் காவல் தெய்வமாய் அருள்கிறாள். பிரச்னைகளுக்குத் தீர்வு வேண்டி வரும் மக்கள், தங்கள் வாதத்தினை தேவியின் திருமுன் மூன்று முறை கூறி, கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்வார்கள். அவர்களுக்கு அம்பிகை உரிய நியாயத்தை விரைவில் வழங்குவாள் என்பது நம்பிக்கை.

பொய்ச் சத்தியம் செய்தவர்களின் குடும்பம் மூன்று தலைமுறைக்குப் பாதிப்பு அடையும் என்பது நம்பிக்கை. ஆகவே, அன்னையின் சந்நிதியில் எவரும் பொய்ச் சத்தியம் செய்வது இல்லை. இந்தத் தேவிக்குப் பெரிய பாத்திரத்தில் பாயசம் சமர்ப்பிப்பார்கள். அப்போது அர்ச்சகருக்கு அருள் வந்து, அவர் சூடான பாயசத்தை வெறும் கரத்தால் அள்ளிப் பருகும் அதிசயம் இன்றும் நிகழ்கிறது!

பிரமோற்சவ காலங்களில், கோயிலின் தந்திரிகள் தண்ணீர்கூட அருந்தாமல் விரதம் இருக்கிறார்கள்.தென்னைக் கொதும்பையில் துணி சுற்றி, எண்ணெய் பந்தம் ஏற்றி வழிபடுவது இங்கு விசேஷம். அதேபோல், ஆவணித் திருவோணம் திருநாளில் புது நெற்கதிர்களைக் கொண்டு `புத்திரி நைவேத்தியம்’ செய்யப்படுகிறது. விஜயதசமியில் குழந்தைகளுக்குக் கல்வி தொடக்க வைபவம் நடைபெறுகிறது. இந்தச் சாமுண்டிதேவியை தரிசித்து வழிபடும் அன்பர்களுக்குத் தீய சக்திகளின் பாதிப்புகள் விலகும், கல்யாணத் தடைகள் நீங்கும், பிள்ளைப் பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை.

எப்படிச் செல்வது?: திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது கரிக்ககம் சாமுண்டிதேவி ஆலயம். கொச்சுவேலி ரயில் நிலையத்திலிருந்து 250 மீட்டர் தொலைவு. காலை 4 முதல் நண்பகல் 12 மணி வரையும்; மாலை 4 முதல் இரவு 8 மணி வரையில் திருக்கோயில் திறந்திருக்கும். அருகிலேயே வேடர்கள் வழிபட்ட ஆரியவல்லி க்ஷேத்திரம் அமைந்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism