கட்டுரைகள்
Published:Updated:

கோயில் என்றாலே சிதம்பரம்தான்!

தில்லைச் சிதம்பரம்
பிரீமியம் ஸ்டோரி
News
தில்லைச் சிதம்பரம்

ஒரு தலம்: 2

இடையறாது அன்னம் பாலிக்கும் திருத்தொண்டு செய்யப்பட்ட பெருமைக்குரிய தலம் சிதம்பரம். சைவர்களுக்குக் கோயில் என்றாலே தில்லைச் சிதம்பரம்தான். திருமுறைகளில் அதிகம் பாடல் பெற்ற தலம்; பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலம். தில்லை மரமே தல விருட்சமாக அமைந்ததால் இவ்வூர் தில்லை என்றானது.

*  தில்லைக் கூத்தனே மூலவராக அமைந்திருக்கும் ஒரேயொரு தலமும் சிதம்பரம் மட்டுமே. மூலவரே உற்சவராக உலாச் செல்லும் அதிசயமும் இங்கு மட்டுமே நடைபெறுகிறது. பூவுலகில் உள்ள எல்லா சிவமூர்த்தங்களின் சாந்நித்தியமும் நள்ளிரவில் ஒடுங்கும் திருத்தலம் தில்லைச் சிதம்பரம்.

* ஆனந்தக் கூத்தன், ஆடலரசன், நடராஜன், ஆனந்த நடராஜன், அம்பலக் கூத்தன், திருச்சிற்றம்பல முடையான், அம்பலவாணன், திருமூலட்டா னேசுவரன், ஹடயோகி, கூத்த பிரான், கனக சபாபதி, சபாநாயகர் எனப் பல திருநாமங்களுடன் இங்கே சுவாமி எழுந்தருளி உள்ளார். அம்பிகை உமையாம்பிகை எனும் சிவகாமசுந்தரியாக அருள் பாலிக்கிறாள்.

* இங்கே திருமூலட்டானம் எனும் தனிக் கோயிலில், திருமூலட்டா னேசுவரர் எழுந்தருளி உள்ளார். இவரே முதன்மையான மூல மூர்த்தி. சமயக்குரவர் நால்வரும் நான்கு கோபுர வாயில்கள் வழியாக வந்த பெருமை கொண்டது இந்த ஆலயம். நாயன்மார்களில் பலரும் வழிபட்ட தலம் இது. திருநாளைப்போவார், மாணிக்கவாசகர் உள்ளிட்ட பலரும் மோட்சம் அடைந்த புண்ணியப் பதி இது.

கோயில் என்றாலே சிதம்பரம்தான்!

* திருமால், நந்தி, பிரம்மன் ஆகியோர் இசைக்க, ஈசன் ஆதி சேடனுக்காகத் திருநடனம் புரிந்த க்ஷேத்திரம் இது. விராட புருஷனின் அங்கங்களில் சிதம்பரம் ஹ்ருதய ஸ்தானம் எனப்படுகிறது. பஞ்ச சபைகளில் இது இரண்டாவதான பொற்சபை. சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்த சபை, ராஜ சபை என ஐந்து அம்பலங்களைக் கொண்ட அதிசய ஆலயம் இது.

* சுமார் 43 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரமாண்டமான சிதம்பரம் ஆலயத்தில், `நால்வர் கோயில்’ ஒன்று உள்ளது. இதுவே தேவார மூவர்களின் ஓலைச் சுவடிகளைப் பாதுகாத்த இடம். இங்கிருந்தே திருமுறைகள் உருவாயின என்பது வரலாறு.

* சிதம்பரம் சிறப்புக்குரிய வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இங்குள்ள திருச்சித்திரக்கூடத்தில் கோவிந்தராஜ பெருமாள் நடராஜருக்கு அருகிலேயே சந்நிதி கொண்டிருக்கிறார்.

* பொன்னம்பலத்தில் தினமும் ஆறு காலம் நடைபெறும் சந்திர மௌலீசுவரர் எனும் ஸ்படிக லிங்க அபிஷேகத்தைக் காண்பது பிறவிப் பிணி தீர்க்கும் என்பர்.

* உமாபதிசிவம் கொடிக்கவி பாடியது, திருநீலகண்டர் இளமை மீண்டது, ஊமைப் பெண்ணை மாணிக்கவாசகர் பாட வைத்தது, சேந்தனார் பல்லாண்டு பாடி திருத்தேரை ஓட வைத்தது, தில்லை அந்தணர்களைச் சம்பந்தர் சிவகணங்களாக தரிசித்தது, ஈசன் சேக்கிழாருக்கு அடியெடுத்துக் கொடுத்துப் பெரிய புராணம் பாடவைத்தது எனப் பல அற்புதங்கள் நடந்த தலம் இது.

கோயில் என்றாலே சிதம்பரம்தான்!

* தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறும் கோயில் இது. இரவு சாப்பிட்ட ஈசன், அதிகாலையில் பசியோடு இருப்பார் என்பதால், நடை திறந்ததும் பால், வாழைப்பழம், பொரி, வெல்லம், வெற்றிலை பாக்கு வைத்துப் பூஜை செய்வார்கள். இது வேறெங்கும் காண்பதற்கரிய பூஜை.

*  சிதம்பர ரகசியம் என்பது சூட்சுமமானது. நடராஜரின் கருவறைக்கு வலது பக்கத்தில் திரை ஒன்று உள்ளது. அந்தத் திரைக்குப் பின்னே உள்ள சுவரில், தங்கத்தாலான வில்வ மாலைகள் காணப் படும். அவை , சிவா என்கிற சம்மேளனச் சக்கரங்கள் ஆகும்; இந்த தரிசனம் மோட்சம் தரும் ஒன்று என்கிறார்கள். ஞானம் எனும் சக்கரத்தை மாயை மூடியிருக் கிறது. இறைவன் அருளால் மனம் ஒருமுகப்பட்டு, மாயை விலகினால், ஞானமாகிய சக்கரத்தை உணரலாம் என்பதே சிதம்பர ரகசியம்.

* ராஜ உறுப்புகள் எனப்படும் மனிதனின் உள் உறுப்புகளில் இக்கோயில் இதயம். அதனாலேயே இடைவிடாத துடிப்பாக நடராஜர் இயங்கிக்கொண்டிருக்கிறார் என்பதும் இக்கோயிலின் ரகசியங்களில் ஒன்று.

கோயில் என்றாலே சிதம்பரம்தான்!

* தில்லைக் கோயில் அமைந்திருக்கும் இடம் உலகின் சரியான மையப் பகுதி; இங்கே நடராஜரின் ஆனந்த நடனமானது காஸ்மிக் நடனம் எனச் சிறப்பித்துச் சொல்கிறார்கள். அதாவது ‘பிரபஞ்சத்தின் எளிய வடிவம் சிவலிங்க வடிவம். பிரபஞ்ச இயக்கத்தின் எளிய வடிவம் நடராஜர் ஆடும் திருநடனம். பிரபஞ்ச விரிவாக்கத்தின் உருவகமே ஆடல் கோலம்’ என்கிறார்கள் ஆன்றோர்.

* கோயிலின் நூறு கால் மண்டபம், சிவகாம சுந்தரி சந்நிதி, சித் சபைக்குப் பின்புறத்தில் இருக்கும் நந்தி மண்டபம் போன்ற பல இடங்களில் தீட்டப்பட்டிருக்கும் ஓவியங்கள் பலவும் காலத்தால் அழியாத கலைவடிவங்கள். இவை அனைத்தும் 1,200 ஆண்டுகளைக் கடந்தவை என்பதும் விசேஷம்.

* 1962-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய-சீனப்போரின் போது, இந்திய ராணுவத்துக்குப் பெருமளவில் நிதி தேவைப்பட்டது. அப்போது, சிதம்பரம் நடராஜர் கோயிலிலிருந்து பெருமளவு தங்கமும் தொகையும் கொடுக்கப்பட்டன. போர் முடிந்ததும், நமது அரசு இந்தக் கோயிலில் இருந்து அனுப்பப்பட்ட தங்கம் - பணத்தை, வட்டியும் முதலுமாகத் திருப்பிக்கொடுத்தது. அந்தத் தங்கம் ஆதிமூலநாத சுவாமிக்குத் தங்கக் கவசம் செய்ய சமர்ப்பிக்கப்பட்டது.

* தேவதச்சன் மயனால் தில்லை வனத்தில் திரேதாயுகத்தில் சுமார் 17,000 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஆலயம் உருவானதாக வைசம்பாயனம், விஸ்வகர்ம வம்ச பிரகாசிகை போன்ற நூல்கள் கூறுகின்றன. முதலாம் பராந்தகனுக்கு முன்பே புராணக் காலத்து மன்னர்கள் பலரும் இந்த ஆலய பொன்னம்பலத்துக்குப் பொற்கூரை வேய்ந்துள்ளார்கள் எனும் தகவல் உண்டு. சோழர்கள் காலத்தில் இந்த ஆலயம் விஸ்தரிக்கப்பட்டது.

கோயில் என்றாலே சிதம்பரம்தான்!

* பிற்காலத்தில் மராட்டிய செஞ்சி மன்னர் சாம்பாஜியின் ஆணைப்படி, கோபால ததாசி என்பவர் கோயில் திருப்பணிகளைச் செய்து கும்பாபிஷேகம் நடத்தினார். பின்னர், 1747-ம் ஆண்டு சரவணன் தம்பிரான் என்பவர் இக்கோயி லைப் புனரமைத்தார். வெகுகாலமாக அவரே இக்கோயில் நிர்வாகத்தைக் கவனித்தும் வந்தார். இதனால் இன்றும் இக்கோயிலின் மூன்றாம் சுற்றுப்பாதை தம்பிரான் திருவீதி என்று அழைக்கப்படுகிறது.

* பிற்காலத்தில் பல ஆண்டுகள் கழித்து மைசூர்ப் போர், பிரெஞ்சு - பிரிட்டிஷ் போரால் கோயில் சிதிலமாக, வள்ளல் பச்சையப்ப முதலியாரும் அவர் மனைவியும் சேர்ந்து சுமார் 40,000 வராகன் பொன் செலவழித்துப் புனரமைத்தனராம்.

* ராஜேந்திர சோழனின் ஆட்சியில், சிதம்பரம் கோயிலின் பெருமைகளைக் கேட்ட கம்போடிய அரசன் ஒருவன் நடராஜப்பெருமானுக்குத் தங்கம் மற்றும் கம்போடிய மாணிக்கக்கற்களைக் கொண்ட நகைகளை தூதுவர்கள் மூலம் கொடுத்து அனுப்பியதாகவும் வரலாறு கூறுகிறது!