தொடர்கள்
திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

வடகரையில் வைகுண்டம் தென்கரையில் கயிலாயம்!

சித்திரைத் திருவிழா
பிரீமியம் ஸ்டோரி
News
சித்திரைத் திருவிழா

சிந்தை மகிழ்விக்கும் சித்திரைத் திருவிழா

ஒருவர் ‘நிலைத்து நிற்பவர்’ என்பதை எதை வைத்து எப்படிச் சொல்வது? ஒரு விழாவில் பேசிய வாகீச கலாநிதி கி.வா.ஜ அவர்கள் இக்கேள்விக்குப் பதில் கூறினார்.

‘என்னை இங்கே விழா நாயகன் என்று குறிப்பிட்டார்கள். ஆம்... நான் விழா நாயகன்தான்! விழுகின்றவர்கள் எப்படி நாயகர்கள் ஆக முடியும்? அவர்கள் கோமாளிகளாக வேண்டுமானால் ஆகலாம்… அதனால்தான் யாராவது விழுந்தால் உடனே அவரைத் தாங்கிப் பிடிக்க தோன்றாமல் `களுக்’கென்று முதலில் சிரித்துவிடுகிறோம். எனவே விழாதவர்களே நாயகர்கள்!

வடகரையில் வைகுண்டம் தென்கரையில் கயிலாயம்!

விழா என்றாலே விழாதவர்கள் ஒன்று சேருமிடம் என்பதே பொருள். மேடையிலிருந்து பேசிடும் நான் மட்டுமல்லர், கலந்து கொண்ட எல்லோருமே விழாதவர்கள்தான். நாம் விழாதவர்கள் மட்டுமல்லர், நிலைத்து நிற்பவர்கள். எனவே நம்மை நிலைநிறுத்தும் விழாக்கள் இம்மண்ணுக்கு அவசியம் என்றுணர்ந்தே சான்றோர்கள் பலப்பல விழாக்களை இம்மண்ணில் வடிவமைத்தனர்’ என்றாராம்.

இந்த விழா என்கிற ஒரு சொல்லுக்குள்ளேதான் எவ்வளவு பெரிய பொருள்! இந்த விழாக்களில் சில, அதன் பொருளுக்கேற்ப நம்மை நிமிரவைப்பதோடு பெரும் பிரமிப்பை அளிப்பவையாகவும் உள்ளன. அதிலும் மதுரை சித்திரைத் திருவிழாவுக்கு இணைகாட்ட இன்னொன்று எங்கேயுமே இல்லை!

பத்து லட்சம் பேர்! இதுதான் மதுரை சித்திரைத் திருவிழா கூட்டத்தின் குறைந்தபட்ச அளவு. திருமலை நாயக்கர் காலத்தில் வடிவமைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இந்த எண்ணிக்கைக்குக் குறைவேயில்லை கூடித்தான் செல்கிறது.

இந்த வருடம், உலகைச் சூழ்ந்து பயமுறுத்தும் பெருந்தொற்று பிணி பாதிப்பின் காரணமாக மதுரை சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்பட்டிருக்கிறது. வருடந்தோறும் கோலாகலமாக நிகழும் மதுரை மீனாட்சி திருக்கல்யாணமும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என அறிகிறோம். இந்தத் தருணத்தில், நம் மனத்தில் நிறைந்து நிலைத்துவிட்ட மதுரை சித்திரைத் திருவிழாவின் மகிமைகளை, அதுகுறித்த நினைவுகளை அசைபோடு வதும் பகிர்ந்துகொள்வதும் மிக மிக அவசியம்.

மண்ணின் மகிமையைச் சொல்லும் விழாவின் நினைவுகளில் மூழ்கும் மனம், தானாகவே சகல பிரச்னைகளிலிருந்தும் தன்னை மீட்டெடுக்கும் வல்லமையைப் பெற்றுவிடும். நாமும் மதுரைச் சித்திரை விழாவின் சிறப்பை - மகிமைகளை அறிவோம்...

சித்திரை எனும்போது குப்பென்ற வெப்பமுடன், ஜில்லென்ற பௌர்ணமியும் ஒருசேர நினைவுக்கு வரும். இந்த இரண்டும் கலந்த சித்திரை பௌர்ணமி நாள்தான் இத்திருவிழாவின் உச்ச நாள். இதன் களம் வைகை ஆறு எனும்போது வியப்பு மேலும் அதிகரிக்கும்.

திருவிழா
திருவிழா

வடக்கில்கூட ஆற்றை மையமாக வைத்து விழாக்கள் உண்டு. கும்பமேளா என்பார். இந்தக் கும்பமேளாக்கள் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறைதான் நடக்கும். இந்த மேளாக்களில் பெரும்பாலும் உலகெங்கிலுமுள்ள சாது - சந்நியாசிகள் பங்கேற்பர்.

மார்பளவு நீரில் நின்று மந்திர முழக்கமிட்டு, பின் மூழ்கி எழுவர். ஓரே நேரத்தில் லட்சக்கணக்கானவர்கள் நீர் மிசை கிடந்து, நில மிசை நின்று, விண் மிசை நிமிர்ந்து, சூரியனைக்கண்டு வணங்கிடும்போது, பெரும் அருள் அலை உருவாகி அது சுற்றிச் சுழன்று பூமியெங்கும் பரவும்.

அதனால் மக்களிடையே சாந்தியும் ஒற்றுமையும் ஏற்படும். இதுதான் கும்பமேளாக்க ளின் மூல நோக்கம். சுருக்கமாய்க் கூறுவதானால், மனிதர்களை ஓரிடத்தில் கூட்டி, அவர்கள் மனங்களை ஒரு புள்ளியில் நிலைபடுத்தி ஒற்றுமையை உருவாக்குவதும் மனத்துக்குள் பெரும் நம்பிக்கைகளை உருவாக்குவதும்தான் இந்த விழாக்களின் அடிப்படை நோக்கம்.

டக்கில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் விழாவை, தெற்கில் மதுரையில் வருடா வருடம் நிகழ்த்தினால் அதற்குப் பெயர்தான் சித்திரைத் திருவிழா. நிகழ்த்திக் காட்டியவர் திருமலை நாயக்கர்!

அந்த நாளில் சமய பேதங்கள் மிகவே இருந்தன. அதிலும் மதுரை தலைநகராக விளங்கியமையால், இது பல்லோரால் ஆளப்பட்டு பேதங்களுக்குப் பஞ்சமில்லாத ஒரு நிலை உருவாயிற்று. உலகில் நாடுகளில் சர்வ மதத்தவராலும் ஆளப்பட்ட ஒரே நாடு இந்தியா என்றால், சர்வ மதத்தவராலும் ஆளப்பட்ட ஒரு பிராந்தியம் மதுரை மட்டுமே. பாண்டியர், சமணர், களப்பிரர், மொகலாயர், நாயக்கர், வெள்ளையர் என்று ஒரு நீண்ட வரலாறு மதுரைக்கு உண்டு.

இதில் பாண்டிய வம்சத்தவரால்தான் மதுரையே உருவானது. இந்த வம்சத்தின் மூல புருஷன், தேவர் தலைவன் இந்திரன். குருவினால் சாபத்துக்கு ஆளான இந்திரனுக்கு மதுரையில்தான் சாப விமோசனம் ஏற்பட்டது.

மீனாட்சி
மீனாட்சி

பதிலுக்கு, தன் ஐராவத யானைகளையே துாண்களாக்கி, தனக்குச் சாப விமோசனம் அளித்த சொக்கலிங்கத்துக்குக் கோயில் எழுப்பினான் இந்திரன். குடமுழுக்கு அன்று விண்ணில் தோன்றிய சிவபெருமான், தன் சிரம் மேலுள்ள சடையிலிருந்து அமிர்தம் எனும் மதுரத்தைத் தெளிக்கப்போக, மதுரம் பட்ட பூமி மதுரை என்றானது.

இப்படித் தோன்றிய மதுரையில்தான் பாண்டிய வம்சத்தவனான மலையத்வஜ பாண்டியன் பிள்ளைப் பேறின்றி வருந்தினான். பின், பேற்றுக்காக தன் மனைவி காஞ்சனமாலையுடன் இணைந்து வேள்வி புரிந்தான். வேள்வித் தீயில் தடாதகைப் பிராட்டியாக அன்னை மீனாட்சி தோன்றி, பாண்டியன் மகளென்றானாள்.

சர்வ புவனங்களையும் வெற்றி கொண்டவள், தன் பிறப்பின் நோக்கம் ஈடேறும் வண்ணம் அந்த ஈசனையே மணாளனாக அடைந்து மாமதுரையை மீனாட்சிப்பட்டணம் என்றும் ஆக்கினாள். இதனால் மாமதுரை சிவத்தலம், சக்தித்தலம் என இரண்டுமானது. இவ்வாறு, ஒருபுறம் சிவமும் சக்தியும் மதுரையை ஆவிர்பவித்த நிலையில், மகாவிஷ்ணுவும் அழகர்மலையில் கோயில்கொண்டு, மதுரை எனக்கும்தான் தலம் என்றார். அதற்கேற்ப கூடல் மாநகர் நடுவில் கூடழலகர் எனும் பெயரில் கோயில்கொண்டார்.

இக்கோயில்தான், பன்னிரு ஆழ்வார் பெருமக்களில் ஒருவரான பெரியாழ்வார், `நிலைத்த ஒரே பரம்பொருள் அந்த மகா விஷ்ணுவே. மற்றலர் எல்லாம் அவர் படைப்பே. அவரே சர்வக்ஞன்’ பரம்பொருள் தத்துவத்தை நிரூபித்து, பொற்கிழியையும் பரிசாக பெற்றார். அப்படி அவர் பரிசு பெற்ற வேளையில், கூடலழகர் ஆலயத்தின் அஷ்டாங்க விமானத்துக்கு மேல், மகாவிஷ்ணு மகாலட்சுமி சமேதராய்க் கருடன் மேல் காட்சி தந்து அருளினார்.

அக்காட்சியால் பரவசப்பட்ட பெரியாழ்வாரும் பெரிதும் உவந்து `பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நுாறாயிரம் மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வித் திருக்காப்பு' என்று பல்லாண்டுப் பாசுரத்தை பாடியருளினார்.

இதனால் இம்மாமதுரை ஒரு வைணவ க்ஷேத்திரமாகவும் ஶ்ரீவைஷ்ணவர்களால் கொண்டாடப்பட்டது. இதுபோக இதன் எட்டு திசைகளுக்கும்கூட எங்குமில்லாத பெருஞ்சிறப்பு உண்டு

‘சீறா நாகம், கறவா பசு, பிளிறா யானை, முட்டா காளை, ஓடாத மான், வாடாத மாலை, காயாத பாறை, பாடாத குயில்’ என்னும் பொருளில் ‘ஊர்வன, பறப்பன, நடப்பன, கிடப்பன’ போன்றவை ஊர்களாக உள்ளன.

‘சீறா நாகம்தான் நாகமலை புதுக்கோட்டை; கறவாப் பசுதான் பசுமலை; பிளிறா யானைதான் யானை மலை; முட்டாத காளைதான் திருப்பாவை; ஓடாத மான்தான் சிலைமான்; வாடாத மாலை அழகர் மலை; காயாத பாறை வாடிபட்டி; பாடாத குயில் குயில் குடி. இப்படி, மதுரைக்கு சைவத்தால் சிறப்பு, சாக்தத்தால் சிறப்பு, வைணவத்தால் சிறப்பு. திருப்பரங்குன்றமும் இங்கிருப்பதால் கெளமாரத்தாலும் சிறப்பு!

சங்கத் தமிழ் வளர்ந்ததால் இயல் இசை நாடகச் சிறப்பு. சர்வ சமயங்களும் உயிர்த் திருப்பதால், அவற்றின் நிமித்தம் நிகழ்ந்திடும் விழாக்களாலும் சிறப்பு. பல்லோர் ஆண்டதால் வீதிகள் சிறப்பு, மாடங்கள் சிறப்பு, மனைகள் சிறப்பு, மங்கையர் சிறப்பு, மல்லிகையும் இம்மண்ணின் மற்றொரு மகத்தான சிறப்பு.

இச்சிறப்புகளே எல்லோரும் மதுரையம் பதியைத் தங்கள் வசப்படுத்தி ஆண்டிடக் காரணம்... இந்த ஆட்சிகளில் மீனாட்சியின் ஆட்சிதான் உலகின் மகத்தான அதிசயம். ஆம்! மனிதர்கள் ஆள்வது இயல்பான ஒன்று. இம்மண்ணைப் படைத்த இறையே மீனாட்சி வடிவில் இம்மண்ணை ஆண்டது என்றால், அது எவ்வளவு பெரும் சிறப்பு?

மீனாட்சி
மீனாட்சி

அடுத்து பெண்களாலும் அரசாள முடியும் என்பதற்கும் இம்மண்ணே சாட்சி. முதலில் மீனாட்சி. பின் அவள் வழியில் ராணி மங்கம்மாள். இத்தகு மண்ணில் பிற சமயங்கள் காலத்தால் அழிந்துவிட்ட நிலையில், மண்ணின் சமயங்களான சைவம் வைணவம் மட்டுமே நிலைபெற்று தங்களுக்குள் பெரும் போட்டி பொறாமையோடு விளங்கின.

ஆதி சங்கரர் ஆறுவழி பாதையை அமைத்துத் தந்தார். வைணவம், சைவம், சாக்தம், காணாபத்யம், கௌமாரம், சௌரம் என்பவையே அவை. இவற்றில் சைவத்துக்குள் சாக்தம், கெளமாரம், காணாபத்யம் அடங்கி விட்டன. சௌரம் பொதுவாகிப் போனது. வைணவம்தான் தனித்து நின்று தன் விசிஷ்டாத் வைத சித்தாந்தத்தில் உறுதிபட நின்றது. இதனை நிறுவிட ராமாநுஜர், வேதாந்த தேசிகர் போன்ற ஞானியரும் தோன்றி வலுச் சேர்த்தனர்.

ஆக... ஒருபுறம் வைணவம், மறுபுறம் சைவம். இந்த இரண்டையும் சமமாக மதித்து பின்பற்றுபவராக இருந்தார், திருமலை நாயக்கர். நமக்குள் பேதங்கள் வேண்டாம்; நாம் ஒற்றுமையோடு இருந்தால் எவராலும் நம்மை ஏதும் செய்ய இயலாது என்று உணர்ந்து கூறியவர், தன் கருத்துக்கு அளித்த செயல் வடிவமே சித்திரைத் திருவிழா!

திருமலை நாயக்கர் காலத்தில் வைகையின் தென்பகுதியில் மீனாட்சி ஆலயமும் வட பகுதியில் அழகர்மலை கோயிலும் இருந்தன. இந்த தென்பகுதிக்குள்ளேயே கூடலழகர் கோயிலும் இருந்தது.

இதில், வைகை ஆற்றின் வடகரைப் பகுதிக்கு அழகர்மலைக் கள்ளர் சித்திரை பௌர்ணமிக்கு எழுந்தருளும் ஒரு சம்பவமும் இருந்தது. சாபம் ஒன்றால் மண்டூகம் எனும் தவளையாகிப் போன மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அருள, அழகர் வைகை ஆற்றங்கரை ஊரான தேனூருக்கு வருவார்.

இவ்வேளை மதுரையம்பதி மட்டுமல்லாது நெல்லை, திண்டுக்கல், விருதுபட்டி, கொட்டம்பட்டி என்று எல்லா திசைகளிலிருந் தும் ஜனங்கள் வண்டி கட்டிக்கொண்டு வருவர். இவர்களுக் கெல்லாம் அழகரே குல தெய்வம்.

இவர்களில் பத்து ஆண்களில் ஏழு பேருக்கு அழகர்சாமி என்பதே பெயராக இருக்கும். வயலில் முதல் விளைவு அழகருக்கு… மாடு கன்று போட்டால் முதல் கன்று அழகருக்கு... அவ்வளவு பக்தி! காணிக்கைகள் மட்டுமல்ல, முதல் மொட்டை, முதல் காது குத்து என எல்லாமே அழகருக்கே முதலில். இவை அனைத்துக்கும் குறிப்பிட்டதொரு தருணம் வேண்டும் அல்லவா?அப்படியொரு புண்ணிய தருணமாகிப் போனது, சித்திரை பௌர்ணமி!

ஆற்றோரம் முகாமிட்டு, ஆற்றில் நீந்திக் குளித்து, மொட்டையடித்து, காது குத்தி, அப்படியே கரை வெளியில் பொங்கித் தின்று... அழகர் குதிரை மேல் ஏறிவரும் தருணத்தில் ஒன்றாகக் கூடி வரவேற்று மகிழ்ந்தார்கள். அவ்வேளையில் சொம்பு ஒன்றில் நாட்டுச் சர்க்கரையை நிரப்பி, அதில் நெய்விட்டு திரிபோட்டு தீபமேற்றி, அதைச் சர்க்கரைத் தீபம் என்று திருப்பெயரிட்டு சமர்ப்பித்து, `எங்கள் வாழ்வு இந்தச் சர்க்கரையைப் போல இனிக்கட்டும்; எரி நெய்யாக மணக்கட்டும்; எரிச்சுடராக ஒளிரட்டும்’ என்று வேண்டி நிற்பது வழக்கமானது.

அழகர்பெருமானும் தன் பாட்டாளி பக்தர்கள் நிமித்தம், வந்த வேகத்தில் திரும்பி விடாமல் மண்டகபடிகளில் தங்கியும் தசாவதா ரம் எடுத்துக் காட்டியும் மகிழச் செய்தபடி, மெள்ள மெள்ளவே அழகர் மலைக்குத் திரும்பு வார். மலையிலிருந்து வரும்போது இவரை தரிசிப்பதற்கு `எதிர்சேவை’ என்று பெயர். திரும்புகையில் சேவிப்பதை `விடையாற்றி’ என்பர். இந்த நாள்களில் - இதற்கான வேளை களில் வைகையின் வடகரை, கோவிந்த நாமாவால் முழங்கப்பெற்றிடும்! இவ்வேளை யில் ஒரு எதிர்பார்ப்பும் உண்டு!

கள்ளழகர் எந்த பட்டு உடுத்தி வெள்ளைக் குதிரை மேல் வருகிறார் என்பதே அது. பச்சைப்பட்டு என்றால் பயிர்கள் தழைக்கும். வெண்பட்டு என்றால் நாட்டில் அமைதி. சிவப்பு என்றால் சற்றே கலகம் என்று வண்ணங்களின் பின்னணிக்குள் சூட்சமப் பொருள் உண்டு. வைகையின் வடகரையில் இப்படியொரு கொண்டாட்டம் என்றால், தென்கரையில் மீனாட்சி திருக்கல்யாண வைபவம் பெருஞ்சிறப்பு மிக்க ஒன்று.

ரே கூடி நடத்திடும் தெய்வத் திருமணம். இவ்வேளை ஊர் வாழ் சுமங்கலிப் பெண்கள் தங்கள் தாலிச் சரட்டையும் மாற்றிக்கொள்வர். அதனால் இல்வாழ்வு இனிப்பதோடு கணவனும் தீர்க்க ஆயுளுடன் விளங்கிடுவான் என்பது நம்பிக்கை.

மாசி மாதத்தில் நிகழ்ந்து வந்த இவ்விழா வைச் சித்திரைக்கு மாற்றி, வைகையில் ஒரு கரையை வைகுண்டமாக்கி, மறுகரையை கைலாசமாக்கிவிட்டார் திருமலை நாயக்கர். இதனால்தான் இந்த ஆற்றுக்கே ‘வைகை’ என்று பெயர் வந்தது என்கிற ஒரு புதிய பொருளையும் உருவாக்கி, சைவ-வைணவ ஒற்றுமைக்கு அடிகோலினார் அவர்.

அதற்கு, மீனாட்சி கல்யாண சடங்கில் மைத்துனனே தாலியை எடுத்துத் தர வேண்டும் என்கிற சடங்கு துணை நின்றது. அதற்கா கவே கள்ளழகர் வந்தார். ஆனால், ஆற்று வெள்ளம் வரவிடாமல் தடுத்தது. `அதனால் என்ன நானிருக்கிறேன்...’ என்று கூடலழகர் சென்று நடுநாயகமாய் நிற்க, திருமணமும் இனிது முடிகிறது.

திருமலை நாயக்கர் ஒரு கல்லில் மூன்று மாங்காய் அடித்தார். அழகர் கோயில் – மீனாட்சி கோயில் - கூடலழகர் கோயில் மூன்றையும் இணைத்து, குடும்ப உறவுடன் கூடிய தெய்விக நிகழ்வாக்கி, சித்திரை விழாவைப் பெருவிழாவாக்கி விட்டார்.

பத்து நாள்கள் இவ்விழா பல சாஸ்திர சடங்குகளோடு தொடக்கத்தில் நடந்து இன்று சற்று சுருங்கிவிட்டது.

விழா நாள்களில், வணங்க வருபவர் நடுவே, வணங்க வருவோர்க்குச் சேவை செய்வோர் என்போரும் `நேர்த்தி’ எனும் பெயரில் தோன்றினர்.

மாட்டுத் தோலால் ஆன பைகளில் தண்ணீர் நிரப்பி வந்து பீய்ச்சி அடித்துக் குளிர்விப்பது ஒரு நேர்த்திக்கடன். கள்ளழகனாகவே வேடமிட்டு ஆடி வருவதும் அவ்வேளையில் தூபக் குழல் தூக்கி வரு தலும் ஒரு நேர்த்திக்கடன்.

தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர்மோர் தருவதிலிருந்து, அன்ன தானம் செய்வது வரை பலவித நேர்த்தி கள் காலத்தால் தோன்றின. இப்படி, ஏழை எளிய பாட்டாளியர்க்கு இவ்விழா பக்தி புரிய மட்டுமன்றி, பலவிதத் திலும் துணை புரிந்தது.

அழகர் மலை அழகனுக்குப் பதினெட்டாம் படி கருப்புதான் காவல் தெய்வம். எனவே அழகனைச் சார்ந்தவர்கள் கருப்பனையும் வணங்கி அவனுக்கும் பொங்கலிட்டனர். அவன் வேடத்திலும் அரிவாள் தாங்கி விழாக் கூட்டத்தில் நடமாடித் திரிந்தனர்.

அப்படியே பெண் பார்க்கும் படலம் முதல் அடுத்தகட்ட அறுவடைக்கு விதை வாங்குவது வரை சகலமும் இவ்விழா நாளில் நடைபெற்றது.இவ்வளவு பேர் கூடுமிடம்தானே களிப்பூட்ட முனைவோர்க்கும் தேவை. அவ்வகையில் கூத்து கட்டுவோர், ஆட்டம் ஆடுவோர் என்று கலைஞர்களும் கலக்கத் தொடங்கினர்.

காலத்தால் பொருட்காட்சியும் இவ்வேளை வருவதே வருவாய்க்கு உகந்தது என்று ஆகிப்போனது. மொத்தத்தில் சித்திரைத் திருவிழா என்பது தெய்விகமானது மட்டு மல்ல… அது வேளாண் குடிகளின் ஆத்ம சங்கமமும்கூட இதை உணர, எப்படி காசிக்குச் சென்று கங்கையில் நீராடுவது ஒரு கட்டாயக் கடமையோ, அதுபோல் சித்திரைத் திருவிழாவுக்குச் சென்று வடப்புறம் அழகனையும், தென்புறம் மீனாட்சி சொக்கனையும் வணங்கி, வைகையிலும் கால் நனைத்துத் திரும்புவதை ஒரு கடமையாகக் கொள்ள வேண்டும்.

இதனால் ஒற்றுமை வளர்வது மட்டுமல்ல மனம் விசாலமாகிறது; கோயிலாகிறது. அதில் தெய்வமும் வந்தமர்ந்து விடுகிறது.

அழகர் மலையானுக்குக் கோவிந்தா..!

அன்னை மீனாட்சிக்கும் அழகுச் சொக்கனுக்கும் அரோகரா!