Published:Updated:

`இது என் பாக்கியம்!' - தஞ்சைப் பெரியகோயில் கோபுரத்துக்கு ஒளி அமைத்துக்கொடுத்த ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்

பெரிய கோயிலில் வேல்ராஜ்
பெரிய கோயிலில் வேல்ராஜ் ( ம.அரவிந்த் )

இதைக் கேட்ட வேல்ராஜ்,`உலகமே அதிசயித்துப்பார்க்கும் கோபுரத்திற்கு வெளிச்சம் கொடுப்பதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்' எனக் கூறி உடனே அதற்கான பணிகளைச் செய்யத் தொடங்கினார்.

தஞ்சாவூர் பெரியகோயில் விமானக் கோபுரம் போதிய வெளிச்சம் இல்லாமல் காணப்பட்டது. அதைப் பார்த்து பக்தர்கள் அனைவரும் கவலைப்பட்டனர். கலெக்டரும், `எல்லாப் பணியும் செஞ்சாச்சு கோபுரம் மட்டும் வெளிச்சம் இல்லாமல் காணப்படுவது குறையாக இருக்கிறது' எனக் கூற, உடனே ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் அதற்குரிய செலவை ஏற்றுக் கொண்டதுடன், உடன் இருந்து மின்னொளியில் கோபுரம் மின்னும் வகையில் ஃபோகஸ் கைடு அமைத்துக் கொடுத்து அசத்தியிருக்கிறார்.

பெரிய கோயிலில் வேல்ராஜ்
பெரிய கோயிலில் வேல்ராஜ்

'அசுரன்' படம் உட்பட, பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவரும் இயக்குநருமான வேல்ராஜ், சூர்யா தயாரிப்பில் நடிகர் சசிகுமார், நடிகை ஜோதிகா, சமுத்திரக்கனி,சூரி உள்ளிட்ட பலர் நடித்துவரும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துவருகிறார். இதன் படப்பிடிப்பு, தஞ்சை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், தஞ்சாவூர் பெரியகோயில் குடமுழுக்கு விழாவிற்காக தஞ்சை நகரம் முழுவதும் அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக, பெரியகோயில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ள வண்ண விளக்குகளால், கோயில் மட்டுமல்ல, தஞ்சை நகரமே மின்னொளியில் ஜொலிக்கிறது.

பெரிய கோயில்
பெரிய கோயில்

கோயில் வளாகம் முழுவதும் ஜொலித்தாலும், உலகமே அசந்து பார்க்கக்கூடிய கோயில் விமானக் கோபுரம் மட்டும் நேற்று வரை போதிய வெளிச்சமின்றிக் காணப்பட்டது. பல்வேறு காரணங்களால், கோபுரத்தை நோக்கி ஃபோகஸ் லைட்டுகள் ஏற்பாடு செய்யாததே இதற்குக் காரணம். கோயிலுக்கு வரும் பக்தர்களும் விமானக் கோபுரம் மட்டும் இருள் சூழந்து நிற்பதை எண்ணி வேதனைப்பட்டனர்.

கோயிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை கலெக்டர் கோவிந்தராவ் பார்வையிட்டார். `எல்லாம் சிறப்பாக செய்யப்பட்டிருக்கு. ஆனால், கோபுரம் மட்டும் போதிய வெளிச்சம் இல்லாமல் இருக்கு. அதற்கு யாராவது உபயதாரர் கிடைத்தால், உடனே ஏற்பாடு செய்யுங்கள்' எனச் சொல்லியிருக்கிறார். அப்போது விழாக்குழுவினர், ``சார், கோயிலுக்கு வந்திருக்கும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், கோபுரத்திற்கு வெளிச்சம்கொடுத்தால் நன்றாக இருக்கும்'' என்று கலெக்டரிடம் சொல்லியிருக்கின்றனர்.

பெரிய கோயிலில் வேல்ராஜ்
பெரிய கோயிலில் வேல்ராஜ்

இதைக் கேட்ட கலெக்டர், ``அப்ப அவரையே செய்யச் சொல்லுங்களேன்'' என்றிருக்கிறார். `அவர், தஞ்சாவூரில் தான் படப்பிடிப்பில் இருக்கார்' எனக் கூறி, வேல்ராஜிடம் தகவல் சொல்லியுள்ளனர். இதைக் கேட்ட வேலராஜ், ``உலகமே அதிசயித்துப் பார்க்கும் கோபுரத்திற்கு வெளிச்சம் கொடுப்பதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்'' என்று கூறி, உடனே அதற்கான பணிகளைச் செய்யத் தொடங்கினார்.

எங்கும் வண்ண விளக்குகள், மிளிரும் ராஜராஜன் சிலை... இரவில் ஜொலிக்கும் தஞ்சை பெரிய கோயில்!

கோபுரத்துக்கு ஒளி அமைப்பு செய்யப்படும் வரை கூடவே நின்று, அதற்கான பணிகளையும் மேற்பார்வையிட்டதோடு, சில ஐடியாக்களையும் கொடுத்திருக்கிறார். பணிகள் முடிந்தபிறகு மீண்டும் கோயிலுக்கு வந்த கலெக்டர், ``வேல்ராஜ் வேகமாக செயல்படுவார் என சொன்னீர்கள். ஆனால், இவ்வளவு வேகமாகச் செயல்படுவார் எனத் தெரியாது. 'சிறப்பு' எனப் பாராட்டியிருக்கிறார். வேல்ராஜோ, ``பெரிய கோயில்மீது எனக்கு எப்பவும் பெரிய மரியாதை உண்டு. அதன் கோபுரத்திற்கு ஒளி அமைத்துக்கொடுக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது, என் பாக்கியம்' என்று கூறி நெகிழ்ந்திருக்கிறார்.

பின் செல்ல