Published:Updated:

அத்திவரதர் தரிசனத்திற்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்! - காஞ்சிபுரம் வரும் முதல்வர் பழனிசாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாளை மதியம் சுமார் 2 மணி அளவில் அத்திவரதரை தரிசனம்செய்ய வருகிறார். இதனால், வெளியூர் பக்தர்கள் அத்திவரதர் தரிசன நேரத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது நல்லது.

அத்திவரதர்
அத்திவரதர் ( பா.ஜெயவேல் )

காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயிலில் நடைபெறும் அத்திவரதர் தரிசனத்திற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை வர இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அத்திவரதர் வைபவம்
அத்திவரதர் வைபவம்
பா.ஜெயவேல்

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம், கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கியது. கடந்த 22 நாள்களில் இதுவரை சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். மத்திய, மாநில அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், நீதிபதிகள் எனப் பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் அத்திவரதரை தரிசிக்க தினமும் காஞ்சிபுரம் வருகிறார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் வருவதால், தரிசனத்தில் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. கடந்த 18-ம் தேதி, அத்திவரதரை தரிசித்து வெளியே வரும் வழியில், கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் இறந்தனர். பலர் அங்கேயே மயங்கினர். இதைத் தொடர்ந்து, சட்டசபைக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ''எதிர்பாராத அளவிற்கு அதிக அளவில் கூட்டம் இருக்கிறது. திருப்பதியிலேயே தினமும் 70 ஆயிரம் பேரைத்தான் சராசரியாகக் கையாளுகிறார்கள். ஆனால் இங்கே, தினமும் சுமார் 2 லட்சம் பேர் வருகிறார்கள்’ என்றார்.

அத்திவரதர் வைபவம், அதிகாரிகள் சிறப்புக் கூட்டம்
அத்திவரதர் வைபவம், அதிகாரிகள் சிறப்புக் கூட்டம்
பா.ஜெயவேல்

இதனைத் தொடர்ந்து, 20-ம் தேதி இரவு தமிழக தலைமைச் செயலர் சண்முகம், டிஜிபி திரிபாதி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் தேவராஜ பெருமாள் கோயிலை ஆய்வுசெய்தனர். ஆய்வுக்குப் பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து தலைமைச் செயலர் சண்முகம், ”அத்திவரதர் வைபவத்திற்காக மாவட்ட ஆட்சியருக்குத் துணையாக ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பாஸ்கரன் மற்றும் தோட்டக்கலைத்துறை இயக்குநர் சுப்பையன் ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து, குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகளை அதிகப்படுத்த அறிவுறுத்தி இருக்கிறோம். சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். காலை 4 மணிக்கே பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடத்திவருகிறோம்” என்கிறார்.

தற்போது, கோயிலைச் சுற்றி 16 பகுதிகளாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக எட்டு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கொண்ட குழுவினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களே அந்தப் பகுதியில் தண்ணீர், அவசர உதவி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கண்காணித்துச் செய்து கொடுக்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாளை மதியம் சுமார் 2 மணி அளவில் அத்திவரதரை தரிசனம் செய்ய வருகிறார். முதல்வரின் பாதுகாப்பு ஏற்பாடுகள்குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் இன்று தேவராஜ பெருமாள் கோயிலில் ஆய்வுசெய்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், வெளியூர் பக்தர்கள் அத்திவரதர் தரிசன நேரத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்வது நல்லது.