Published:Updated:

வெள்ளலூர் உமாமகேஸ்வரர்!

உமாமகேஸ்வரர் ஆலயம்
பிரீமியம் ஸ்டோரி
உமாமகேஸ்வரர் ஆலயம்

சிவபெருமானின் அரசவை கோவையில் அபூர்வ தரிசனம்

வெள்ளலூர் உமாமகேஸ்வரர்!

சிவபெருமானின் அரசவை கோவையில் அபூர்வ தரிசனம்

Published:Updated:
உமாமகேஸ்வரர் ஆலயம்
பிரீமியம் ஸ்டோரி
உமாமகேஸ்வரர் ஆலயம்

சிவ வடிவங்களில் ஒன்று உமாமகேஸ்வர திருக் கோலம். இமவானின் மகளான உமையவள், சிவ பெருமானைக் கணவனாக அடைய வேண்டும் என்று தவம் இருந்தாள். அதனால் மகிழ்ந்து அவளை மணம் புரிந்த சிவனார், உமையுடன் ரிஷபத்தில் ஏறி கயிலையை அடைந்தார். இங்ஙனம் கல்யாணக் கோலத்தில் ரிஷப வாகனராய் உமையம்மையுடன் சிவனார் அருளும் கோலமே உமாமகேஸ்வர திருவடிவம் என்று சிவமகாபுராணம் விவரிக்கிறது. இந்த அருள்கோலத்தை உமா சகிதர் என்றும் போற்றுவர். இவ்வடிவில் அம்பிகை `பார்யா சௌக்ய பிரதாயினி' என்று அழைக்கப்படுகிறாள்.

சிவம் வேறு சக்தி வேறு என்பது இல்லை; சக்தியும் சிவமும் உலகப் பொருள்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்துள்ளன என்பதை உணர்த்தும் திருவடிவம் இது.இந்த அற்புதக் கோலத்தை பல்வேறு கோயில்களில் தனிச் சந்நிதியிலும், சிற்பங்களிலும் தரிசிக்கலாம். ஆனால் கருவறையில் பிரதான மூர்த்தியாக உமாமகேஸ்வரர் அருளும் தலங்கள் மிகவும் அபூர்வம்.

அந்த வகையில், கோவை வெள்ள லூர் தேர்வீதி பகுதியில், அற்புதமாக அமைந்திருக்கிறது அருள்மிகு உமாமகேஸ்வரர் கோயில். கருவறையில் சிவலிங்கத் திருமேனிக்குப் பதிலாக உமாமகேஸ்வரரே அருள்பாலிக்கிறார்.

பரிவார தெய்வங்கள்

600 ஆண்டுகால பழமை வாய்ந்த கோயில் இது என்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஆலய புனரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. காவல்தெய்வங்களும், எல்லைச் சாமிகளும் இங்கு அருள்வது விசேஷ அம்சம்.

உமாமகேஸ்வரர், நந்தி, ஆலாத்தி பெண், சீதையம்மன், ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர், மகாவிஷ்ணு, அரசமகன், தவசி பண்டாரம், கன்னிமார்கள், அரிகுந்தமாலை, பூமாலை, கமலக்கன்னி, விக்னேஸ்வரர், முருகன், வள்ளி, தெய்வானை, அகத்தியர், ராகுத்தியம்மன், மாரியப்பன், பேச்சியம்மன், வேட்டைக்காரன், கழுவிந்திராஜன், சந்திரன், சூரியன், சித்திரபுத்தன், சனீஸ்வரர், பாவாடை வீரபத்திரன், ரண வீரபத்திரன், உச்சி வீரபத்திரன், சந்தன கருப்பசாமி, பெரிய கருப்பசாமி, எமதர்மராஜன், முடிபொருத்த ராஜன், ஐயனார், அன்னபூரணி, பொற்கொடிவள்ளி, அகோரவீரபத்திரன், தலைமை வீரபத்திரன், பத்ரகாளியம்மன், மாயாண்டிசாமி, இருளப்பசாமி, தடிகார சாமி, திருநாவுக்கரசு அடி களார், செந்தாளம்மன், காத்தாயம்மன், இருயாளம்மன், தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர், நவக்கிரகங்கள் ஆகிய தெய்வங்களை இந்த ஒரே ஆலயத்தில் தரிசிக்கலாம். கோயில் அர்ச்சகர் பழனிச்சாமியிடம் திருக்கோயில் மகிமைகள் பற்றி கேட்டோம்.

கிளுவை மரம்
கிளுவை மரம்
கோவை வெள்ளலூர்
கோவை வெள்ளலூர்
உமாமகேஸ்வரர் ஆலயம்
உமாமகேஸ்வரர் ஆலயம்
இருளப்பசாமி உமாமகேஸ்வரர் கோயில்
இருளப்பசாமி உமாமகேஸ்வரர் கோயில்


“ராமநாதபுரம் பட்டாணிதான் எங்கள் சொந்த ஊர். கி.பி 1500-களில் மன்னருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக நாங்கள் இந்த ஊருக்கு வந்துவிட்டோம். சூலூர், வெள்ளலூர், இருகூர் என்று வெவ்வேறு பகுதிகளில் தங்கினோம். அதன்பிறகு எங்கள் குலதெய்வ வழிபாட்டுக்காக நிறுவப்பட்டதுதான் இந்தக் கோயில். 60 தெய்வங்களைத் தனித்தனிக் குடிசைகளில் வைத்து வழிபட தொடங்கினோம். அப்போது இருளப்ப சாமிதான் முதன்மைக் கடவுளாக இருந்தார். இந்தக் கோயிலை 60 வீட்டுக்கார கோயில் என்றும் அழைப்பார்கள்.

1968-ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்துக்குப் பிறகுதான் உமா மகேஸ்வரர் கோயில் என்று பிரபலமானது. இப்போதும் சிலர் இருளப்பசாமி உமாமகேஸ்வரர் கோயில் என்றே அழைக்கிறார்கள்.

ஆரம்பத்தில் குடிசைக் கோயிலாக இருந்து மெள்ள மெள்ள கட்டடம் எழுந்து, இப்போது இந்த நிலையை எட்டியிருக்கிறது ஆலயம். `உமாமகேஸ்வரராக சிவபெருமான் ஆட்சி செலுத்த, 60 பரிவார தெய்வங்கள் அருள்பாலிக்க, ஓர் அரசவை போன்று திகழ்கிறது இந்தக் கோயில்' என்பார்கள் ஆன்மிகப் பெரியோர்கள்.

மகாசிவராத்திரி, ஆவணிப் பெரும் பொங்கல் ஆகிய விழாக்கள் இங்கு வெகு விமர்சையாக நடைபெறும். சிவராத்திரி அன்று இரவில் வில்லடித்து பாடி, 60 தெய்வங்களுக்கும் வழிபாடு நடத்துவோம். அதேபோல், சித்ரா பௌர்ணமியன்று திருத்தேர் விழா நடைபெறும்.

இடையில் சில ஆண்டுகள் தேர்த் திருவிழா நடைபெறாமல் இருந்தது. 1968 - ம் ஆண்டு முதல் தேரோட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 10 நாள் வைபவங்களுடன் கோலாகலமாக நடைபெறும் தேர்த் திருவிழா. பிரதோஷ வழிபாடு, தேய்பிறை அஷ்டமியில் பைரவ பூஜை, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், திருவா திரை ஆகிய வைபவங்களும் இங்கே விசேஷம்'' என்று சிலிர்ப்புடன் பகிர்ந்துகொண்டார் பழனிச்சாமி.

கொங்கு நாட்டு திருமணஞ்சேரி

திருமணப் பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது இந்தக் கோயில். காலை 7 மணிக்கு இங்கு வந்து பால் பூஜை செய்தால், விரைவில் திருமண கைகூடுமாம். ஆகவே, இந்தத் தலத்தை ‘கொங்கு திருமணஞ்சேரி’ என்று சிறப்பிக்கிறார்கள்.

``எங்கள் கோயிலில் வழிபாடு, அர்ச்சனை ஆகிய அனைத்தும் தமிழில்தான் நடக்கும். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே மாறி மாறி பூஜை செய்து வருகிறோம். எங்களின் குலதெய்வக் கோயில்தான் என்றாலும் பொதுமக்களுடன் கலந்து ஆலோசிக்காமல் எந்த நிகழ்ச்சியையும் நடத்த மாட்டோம்.

கோயிலுக்கென்று பசு வாங்கியிருக்கிறோம். அதன் பால்தான் சுவாமியின் அபிஷேகத்துக்கு.தினசரி கோ பூஜையும் நடைபெறும். கடந்த ஐந்து ஆண்டுகளாக திருப்பணி நடந்து வருகிறது. ஆகவே, உற்சவருக்குத்தான் வழிபாடுகள் நடை பெறுகின்றன. விரைவில் பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்த எண்ணியுள்ளோம்'' என்கிறார் பழனிச்சாமி.

எப்படிச் செல்வது? கோவை காந்திபுரம் பகுதியிலிருந்து 74, 55-A 55 - B ஆகிய பேருந்துகள் உண்டு. `மைதானம் ஸ்டாப்' என்று சொல்லி டிக்கெட் பெறவேண்டும். காலை 8 முதல் 12 மணி வரையிலும்; மாலை 6 முதல் 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும். பிரதோஷ நாள்களில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை நடை திறந்திருக்கும் (தொடர்புக்கு: பழனிச்சாமி - 97891 20185).

அதிசயம் நிறைந்த கிளுவை மரம்!

இந்தக் கோயிலின் மற்றொரு சிறப்பம்சம் கிளுவை மரம். கோயில் உருவான காலத்திலிருந்தே இந்த மரம் உள்ளதாம். ஆலயத்தில் அருளும் தெய்வங்களின் உருவங்கள் இயற்கையாகவே இந்த மரத்தில் உள்ளன என்கிறார்கள். குழந்தை இல்லாதவர்கள், இந்தக் கிளுவை மரத்தில் தொட்டில் கட்டிச் சென்றால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மரத்தின் அருகிலுள்ள புற்றில் பெண்கள் மஞ்சள் குங்குமம் வைத்து, பாலூற்றி வழிபடுகிறார்கள். சமீபத்தில் விளக்கில் இருந்து தீப்பற்றி, இந்த மரத்தின் ஒரு பாகம் முற்றிலும் எரிந்துவிட்டது. ஆனாலும் இந்த மரம் பட்டுப்போகாமல் பசுமையுடன் கிளைபரப்பி நிற்கிறது என்கிறார்கள் பக்தர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism