Published:Updated:

அத்திவரதர் வைபவத்தில் அதிகாரிகள் இடையே பனிப்போர்!

JAYAVEL B

இந்து சமய அறநிலையத்துறையினருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பனிப்போர் நீடித்துவருகிறது.

அத்திவரதர்
அத்திவரதர் ( பா.ஜெயவேல் )

நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைபவம் ஜூலை 1-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. கடந்த சில தினங்களாக இந்து சமய அறநிலையத்துறையினருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் ஏற்பட்டுள்ள மனக்கசப்பு அத்திவரதர் வைபவத்தில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா

அத்திவரதர் வைபவத்திற்கான ஏற்பாடுகள் முழுவதும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையிலேயே நடந்து வருகின்றன. 40 வருடங்களுக்கு ஒருமுறை கிடைக்கும் தரிசனம் என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்த நிலையில் வெளியூர் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளைச் செய்து கொடுப்பதில் மாவட்ட ஆட்சியர் அதிக ஆர்வம் காட்டினார். அவரே எல்லா இடங்களுக்கும் நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தினார்.

கிட்டத்தட்ட பத்து நாள்களுக்கும் மேலாக இரவுபகலாகக் கோயில் பணிகளை ஆய்வு செய்யும் வேலைகளில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். காஞ்சிபுரம் எஸ்.பி சந்தோஷ் ஹதிமானி உள்ளிட்ட காவல்துறையினரும் அத்திவரதர் வைபவத்திற்கு முன்னுரிமை கொடுத்து வேலை செய்து வந்தார்கள்.

மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி
மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி

ஜூலை 1ம் தேதி தொடங்கியது அத்திவரதர் வைபவம். முதல் நாளிலிருந்து நான்கு நாள்களுக்குக் கூட்டம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. ஆனால் கடந்த இருதினங்களாக வழக்கத்தை விடக் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. வாட்ஸ்அப் குழு மூலம் வரும் தகவல்களை உடனுக்குடன் கண்காணித்து பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுத்து வருகிறார் மாவட்ட ஆட்சியர் பொன்னையா. இதனால் பக்தர்களுக்கான பிரச்னைகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறையினருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பனிப்போர் நீடித்துவருகிறது.

“அத்திவரதரை நேரடியாக தரிசிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்துத் துறையைச் சேர்ந்த முக்கியஸ்தர்களுக்கும் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. பாஸ் தேவைப்படுபவர்கள் தங்கள் அலுவலகம் மூலம் கடிதம் கொடுத்தால் மட்டுமே அவர்களுக்குப் பாஸ் வழங்கப்பட்டும். இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறையினர் தமிழகம் முழுவதிலிருந்தும் தங்களுக்கு வேண்டியவர்களைக் கோயிலுக்குள் அழைத்து வரத்தொடங்கினர். பாஸ் இருந்தால் மட்டுமே கோயிலுக்குள் அனுமதி என்பதால் இந்து சமய அறநிலையத் துறையைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களை உள்ளே அழைத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட நிர்வாகத்தினருக்கும் கசப்புணர்வு ஏற்பட்டது. இதனால் தன்னிடம் இருந்த சில ஆயிரம் பாஸ்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கோபத்துடன் கொடுத்துவிட்டார் மாவட்ட ஆட்சியர் பொன்னையா.

அத்திவரதர் வைபவம்
அத்திவரதர் வைபவம்

அதுபோல் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் அந்தத் துறையின் முதன்மை செயலாளர் பனீந்திர ரெட்டி ரெட்டியிடம் அனுமதி பெற்று வெளியூரில் இருக்கும் தங்கள் துறையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கோயில் பணிக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். இவர்கள் தங்கள் துறையினர் சொல்லும் ஆட்களை உள்ளே எளிதாக அழைத்துச் செல்கிறார்கள். கிட்டத்தட்டக் கோயில் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. அத்திவரதர் விழாவில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகமே முழுமையாகச் செய்து கொடுக்க முடியும் என்ற நிலையில் திடீரென இந்து சமய அறநிலையத்துறையினர் தற்போது கோலோச்சுவது விழாவில் சிக்கலை ஏற்படுத்தும்” என்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.