Published:Updated:

செந்நிறக் கற்களால் பிரமாண்ட ஆலயம்!

பாரம்பர்ய சின்னம் ஶ்ரீஇராமப்பா ஆலயம் பனையபுரம் அதியமான்

பிரீமியம் ஸ்டோரி

தெலுங்கானா மாநிலத்தில், முலுகு மாவட்டத்தில் காகதீயப் பேரரசு அளித்த கலைப்பொக்கிஷமாகத் திகழ்கிறது இராமப்பா ஆலயம். யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பர்யச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட அற்புத ஆலயம் இது.

செந்நிறக் கற்களால் 
பிரமாண்ட ஆலயம்!

க்காணம் பகுதியையும் அதில் அடங்கும் தெலுங்கானா உள்ளடக் கிய ஆந்திரப் பிரதேசப் பகுதிகளையும் ஆட்சி செய்தவர்கள் காகதீய வம்சத்தவர். வாரங்கல்லை தலைநகரமாகக்கொண்டு ஆட்சி செய்த இவர்களின் கலைத்திறனுக்குச் சான்றாகத் திகழ்கிறது, பாலம்பேட் கிராமத்தில் அமைந்துள்ள இராமப்பா திருக்கோயில்.

இந்த வம்சத்தில் தோன்றிய மாமன்னர் கணபதிதேவா. இவரின் மகள் பேரரசி ருத்ரமா தேவி, இவரின் வழிவந்த பிரதாப ருத்துரு ஆகியோர் சிறப்புப் பெற்றவர்கள்.

மாமன்னர் கணபதிதேவாவின் ஆட்சியில் பணிபுரிந்த தலைமைப் படைத் தளபதி - ரேச்சர்ல ருத்திரா. இவரின் மேற்பார்வையில் கி.பி.1213-ம் ஆண்டில் இந்த ஆலயமும் அருகிலேயே ஏரியும் அமைக்கப்பட்டன. இக்கோயில் இராமப்பகுடி என்றும் ருத்ரேஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்பட்டது.

கி.பி.17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இராமப்பா என்ற சிவனடியார், வழிபாட்டுக்காக இந்தக் கோயிலையும், பாசனத்துக்காக ஏரியையும் விரிவுபடுத்தினார். அவரைப் பெருமைப்படுத்தும் விதம், கோயிலும் ஏரியும், இராமப்பா ஆலயம், இராமப்பா ஏரி என அழைக்கப்பட்டன.

`காகதீய ஹெரிடேஜ் டிரஸ்ட்'டின் தொடர் முயற்சிகளால் இந்த ஆண்டு உலக பாரம்பர்ய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது இந்த ஆலயம். இது இந்தியாவின் 39- வது சின்னமாக பட்டியலிடப்பட்டுள்ளது.

செந்நிறக் கற்களால் 
பிரமாண்ட ஆலயம்!

இந்தக் கோயில் இப்படியோர் அங்கீகாரம் பெற முக்கிய காரணம், பசால்ட் (Basalt) வகைக் கற்கள் மற்றும் ஒருவகை செந்நிறக் கற்களால் அமைந்த ஆலயத்தின் சிற்பங்களும் கட்டுமானமுமே என்கிறார்கள்.

கிழக்கு நோக்கிய இக்கோயில், கிழக்கு, தெற்கு, வடக்கு என மூன்று வாயில்களுடன் திகழ்கிறது. கிழக்கு வாயிலே பிரதானம். உயரமான கருவறை விமானம் பிரமிடு வடிவில் நான்கு அடுக்கு நிலையில் கட்டப்பட்டுள்ளது. அதாவது, சுமார் ஆறடி உயரத்துடன் அமைந்த மேடைப்பகுதியில் அந்தராளம் - மகா மண்டபத்துடன் திகழ்கிறது கருவறை.

கோயிலின் நான்கு பக்கமும் கல்வெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. வடகிழக்கில் அமைந்துள்ள நான்கு பக்கங்கள் கொண்ட கல்வெட்டு, முக்கிய வரலாற்று ஆவணமாக திகழ்கிறது. கோயிலில் திரும்பும் பக்கங்களில் எல்லாம் சிற்ப அழகு கொட்டிக் கிடக்கிறது.

அர்த்தமண்டபம் கல்வேலைப்பாடுகளுடன் கூடிய சுற்றுச் சுவருடன் திகழ்கிறது. அதிலும் சிற்பத் தொகுப்புகள் ஏராளம். குறிப்பாக யானைகளின் அணிவகுப்பு சிற்பத் திறனுக்குச் சான்று. உள் நுழையும் இடத்தில் தொடங்கி யானைகள் இடமிருந்து வலமாக கருவறையை நோக்கிச் செல்வது போலவும், வெளியேறும் இடத்தில் பார்த்தால், யானைகளும் வெளியேறுவது போன்று திகழ்கிறது!

மொத்தம் 526 யானைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தோற்றத்தில் திகழ்வது சிறப்பு. யானை வரிசைக்கு மேலாக நட்சத்திர வடிவங்கள். அதற்கும் மேலாக இசைவாணர்கள் மற்றும் நடன மனிதர்களின் சிற்பங்கள். இந்தச் சுவர் தூண்களை இணைக்க, தூண்களிலிருந்து புறப்படும் கஜ யாழிகளும் சிம்ஹ யாழிகளும் விதானத்தைத் தாங்குகின்றன.

அர்த்த மண்டப வாயில் கலைநயத்தோடு அமைந்துள்ளது. மகரத் தோரணங்களைப் பற்றியிருக்கும் கொடிப் பெண்கள் சிற்பத் தொகுப்பும், இந்தப் பெண்கள் பற்றியிருக்கும் தூண்கள் இசைத் தூண்களாகத் திகழ்வதும் சிற்ப அற்புதமே. கதவுகள், சட்டங்கள், கொடிப் பின்னல்கள் அனைத்தும் கலைநுணுக்கத்துடன் வடிக்கப்பட்டுள்ளன.

செந்நிறக் கற்களால் 
பிரமாண்ட ஆலயம்!

கருவறை முன்புறம் உள்ள தூண் சிற்பங் களும் நம்மை வியக்கவைக்கின்றன. கருவறை முன்மண்டபத்தின் கூரையில் பாற்கடலில் அமிர்தம் கடையும் காட்சி, ராமாயணக் காட்சி கள், சிவபுராணக் காட்சிகள், கஜசம்ஹாரம், திரிபுராந்தகர் கோலம், விநாயகர், நரசிம்மர், அஷ்டதிக் பாலகர்கள் என அனைத்தும் காகதீயச் சிற்பிகளின் கற்பனைத் திறனுக்குச் சான்று. சிற்பம் ஒவ்வொன்றுக்கும் நடுவில் உள்ள நூல் நுழையும் அளவிலான நுணுக்கமான இடைவெளிகள் வியக்கவைக்கின்றன.

நாட்டிய மங்கையர் மற்றும் இசைவாணர் களின் சிற்பத் தொகுப்பு, கருவறை வாயிலுக்கு அழகு சேர்க்கின்றன. கருவறையில் லிங்கத் திருமேனியராக அருள்கிறார் ராமலிங்கேஸ்வரர்.

இறைவனுக்கு எதிரில் மிகப்பெரிய கல்நந்தி அமைந்துள்ளது. எங்கிருந்து பார்த்தாலும் நந்திதேவர் நம்மைப் பார்ப்பது போலவே, அவரின் திருமேனியை அமைத்திருக்கிறார்கள்.

இறைவன் எப்போது அழைத்தாலும் அக்கணமே பாய்ந்து செல்ல ஏதுவாக கால்களை வைத்துக்கொண்டு காத்திருக்கிறாராம் இந்த நந்திதேவர். ருத்திராட்சங்கள், மணி மாலைகள் என ஆபரண வேலைப்பாடுகளும் நரம்பு புடைப்புகளும் மிக அற்புதமாக படைக்கப் பட்டிருக்கின்றன நந்தியின் சிலையில்.

செந்நிறக் கற்களால் 
பிரமாண்ட ஆலயம்!

கருவறை, அர்த்த மண்டபம் மட்டுமன்றி வாயிற்புறங்களும் சிற்ப அழகுடன் திகழ் கின்றன. உயரமான காலணியுடன் திகழும் பெண் உட்பட விதவிதமான தோற்றங் களில் அருளும் மங்கையர்கள், நாகக் கன்னிகள் ஆகி யோரின் சிற்பங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன.

நாகினி மற்றும் ரதியின் சிற்பங்களை நிஜாம் ஆட்சியாளர்கள் தங்களின் அரண்மனைக்கு எடுத்துச் சென்றதாகவும், அதன் பிறகு அவர்களுக்குப் பல சிக்கல்கள் நேர்ந்ததால், அந்தச் சிலைகளை மீண்டும் இங்கு கொண்டுவந்து வைத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

செந்நிறக் கற்களால் 
பிரமாண்ட ஆலயம்!

அர்த்த மண்டபத்தின் எண்கோண விதானத்திலும் சிற்ப அழகு மிளிர்கிறது. திரிபுராந்தகர், கஜ சம்ஹாரர், கோபியரின் ஆடைகளைத் திருடும் கண்ணன் - கோபியர், நடன மங்கையர் என அற்புதக் காட்சிகள் காணக் கிடைக்கின்றன.

இக்கோயிலின் அருகே சிறிய பழமையான சிவாலயமும் அமைந்துள்ளது. இது இராமப்பா கோயிலுக்கு முன்மாதிரியாக அமைக் கப்பட்டது என்கிறார்கள்.

இங்கிருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில், இராமப்பா பெயரில் பிரம்மாண்ட ஏரி ஒன்று நீர் தளும்ப காட்சி தருகிறது. இது தற்போது சுற்றுலாத்தலமாகவும் விளங்குகின்றது.

தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில், பாலம்பேட் கிராமத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம். ஹைதராபாத் நகரிலிருந்து 210 கி.மீ. தூரம்; வாரங்கல்லில் இருந்து 66 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு