Published:Updated:

`முன்னோர்கள் கட்டளையே காரணம்!' குலதெய்வத்தை வழிபட மாட்டுவண்டியில் வரும் பக்தர்கள்

அபிநய சௌந்தர்யா

கோட்டையூர் என்னும் ஊரிலிருந்து வரும் பக்தர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றனர். காரணம் அவர்கள் மாட்டுவண்டி கட்டிக்கொண்டுதான் இன்றும் அழகர்கோயில் வருகிறார்கள்.

மாட்டுவண்டிப் பயணம்
மாட்டுவண்டிப் பயணம்

மதுரை அழகர்கோயில் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது ஆடி பிரம்மோற்சவம். சித்திரைத் திருவிழாவைப் போலவே இந்த ஆடி மாதத் திருவிழாவுக்கும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அழகரை வழிபடுவர். சுற்றியிருக்கும் ஊர்களிலிருந்து மக்கள் அழகர்கோயிலுக்கு வருவார்கள். அவர்களுள், கோட்டையூர் என்னும் ஊரிலிருந்து வரும் பக்தர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றனர். காரணம் அவர்கள் மாட்டுவண்டி கட்டிக்கொண்டுதான் இன்றும் அழகர்கோயில் வருகிறார்கள்.

வேலங்குடி
வேலங்குடி

போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லாத காலத்தில் மக்கள் மாட்டுவண்டிகளையே பயன்படுத்தினர். கிராமங்களில் போக்குவரத்துக்காக அதிகம் பயன்படுத்தப்பட்டவை மாட்டுவண்டிகளே. காலப்போக்கில் மாட்டுவண்டி பயணம் அபூர்வமாய் மாறிப்போனது.

Vikatan

ஆனால், இன்றும் தங்களின் முன்னோர்களின் கட்டளைப்படி, அழகர்கோயிலுக்கு மாட்டுவண்டி கட்டிக்கொண்டு வருகிறார்கள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூர் வேலங்குடியைச் சேர்ந்த நாட்டார் சமூக மக்கள்.

குலதெய்வத்தை வழிபட வரும் மக்கள்
குலதெய்வத்தை வழிபட வரும் மக்கள்

அழகர்கோயிலில் மூலவர் சுந்தராஜபெருமாள், உற்சவர் கள்ளழகர். இந்தக் கோயிலின் காவல் தெய்வமாக விளங்குபவர் பதினெட்டாம் படிக் கருப்பு. இவர் பல குடும்பங்களுக்குக் குலதெய்வமாக விளங்குகிறார். வேலங்குடியில் வாழும் சில குடும்பங்களுக்குக் கருப்பசாமியே குலதெய்வமாக விளங்குகிறார். இவர்கள் தங்கள் குலதெய்வத்தை வழிபட ஒவ்வோர் ஆண்டும் ஆடித் திருவிழாவின்போது மாட்டுவண்டியில் வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

‘மாட்டுவண்டியில் சென்றுதான் குலதெய்வத்தை வழிபட வேண்டும்’ என்பது அவர்களின் முன்னோர்கள் வாக்கு, இன்றளவும் அதைப் பின்பற்றுகிறார்கள். அழகர்கோயில் ஆடித்திருவிழா தொடங்கியதும், வேலங்குடி மக்களுக்கு விழாவில் பங்கேற்க அழகர்கோயிலில் இருந்து ஓலை அனுப்புவது வழக்கம். அழகர்கோயிலுக்குச் செல்ல பிரத்தியேக மாட்டுவண்டிகளை இவர்கள் தயார் செய்து பயணம் புறப்படுவார்கள். சுமார் 70 கிலோமீட்டர் பயணத்தில், முதல்நாள் ஒ.சிறுவயல், குன்றக்குடி, பிள்ளையார்பட்டி வழியாகப் பயணித்து இரவு எஸ்.எஸ்.கோட்டையில் தங்கி, மறுநாள் மாலை புறப்பட்டு மேலூர் வழியாக நள்ளிரவு அழகர்கோயில் செல்கின்றனர். பயணங்களின் போது புளியோதரை, தயிர் சாதம் எனச் சமைத்து எடுத்துவந்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து உண்பார்கள்.

திருவிழா
திருவிழா

அழகர்மலைக்கு வந்து அங்குள்ள நூபுரக கங்கைத் தீர்த்தத்தில் நீராடி, ராக்காயி அம்மனை வணங்குவர். பின்பு மலை அடிவாரத்தில் உள்ள பதினெட்டாம்படி கருப்பருக்கு, மொட்டை அடித்துப் பொங்கலிட்டுக் கிடா வெட்டி பூஜை செய்து கறி விருந்து படைப்பது வழக்கம். இந்த வழக்கத்தை அவர்கள் காலங்காலமாகப் பின்பற்றுகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்புவரைகூட பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் இதேபோன்று வந்துகொண்டிருந்தனர். காலப்போக்கில் அவர்களின் எண்ணிக்கை குறைந்து சிலர் மட்டுமே இதுபோன்று பாரம்பர்ய முறைப்படி அழகர்கோயிலுக்கு வந்து வழிபடுகின்றனர்.

இந்தக் காலத்திலும் சாரை சாரையாக மாட்டுவண்டி கட்டிக்கொண்டுவரும் வேலங்குடி மக்களை சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கும் மக்கள் ஆச்சர்யமாகப் பார்க்கின்றனர்.