Published:Updated:

சனி பகவான் அருள்புரிவார்! - சனிப்பெயர்ச்சி திருத்தலங்கள்

சனி பகவான்
பிரீமியம் ஸ்டோரி
சனி பகவான்

சனி பகவான் அழிவைத் தருபவர் அல்ல; அழிவு வரும் வேளையைச் சுட்டிக்காட்டுபவர் என்பார்கள்.

சனி பகவான் அருள்புரிவார்! - சனிப்பெயர்ச்சி திருத்தலங்கள்

சனி பகவான் அழிவைத் தருபவர் அல்ல; அழிவு வரும் வேளையைச் சுட்டிக்காட்டுபவர் என்பார்கள்.

Published:Updated:
சனி பகவான்
பிரீமியம் ஸ்டோரி
சனி பகவான்

ன்பது கிரகங்களில் சனி பகவானும் ஒருவர். சனைச்சரன் என்றும் மந்தன் என்றும் அவரைக் குறிப்பிடுவர். `சனை’ என்றால் மெள்ள, அதாவது மெதுவாக என்று அர்த்தம். மற்ற கிரகங்களைவிட இவருடைய பயணம் மெதுவாக இருப்பதால், சனைச்சரன் என்று பெயர் அவருக்கு.

சூரியனின் சாரம் சனி. சூரியனிடமிருந்து வெளி வந்தவர்; சூரியனின் புதல்வன் என்று ஜோதிடம் விவரிக்கிறது. அப்பாவின் சாரம் பிள்ளையாக உருவெடுத்தது என்கிறது வேதம். மகரத்துக்கும் கும்பத்துக் கும் அதிபதியாக உள்ளார்.

சனி பகவான் அழிவைத் தருபவர் அல்ல; அழிவு வரும் வேளையைச் சுட்டிக்காட்டுபவர் என்பார்கள். நம்மை வளர்த்து நமக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து, இன்ப-துன்பங்களைக் கர்மவினைப்படி செயல்படுத்தி வாழவைப்பவர் சனி பகவான்.

சனி பகவான் அருள்புரிவார்! - சனிப்பெயர்ச்சி திருத்தலங்கள்

நிகழும் சார்வரி வருடம் மார்கழி மாதம் 11-ம் தேதி (26.12.2020) சனிக்கிழமை அன்று (வாக்கியப் பஞ்சாங்கப் படி) மகர ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். இந்தப் பெயர்ச்சி காலத்தில் சனிபகவானின் நற்பலன் களைப் பெற்று மகிழ, நம்பிக்கையுடன் அவரை வழிபட வேண்டும். சனிக்கிழமைகளில் சிவாலயங்களுக்குச் சென்று சனி பகவானுக்கு எள்முடிச்சு தீபம் ஏற்றி, `சம் சனைச்சராய நம:’ என்று சொல்லி வழிபட்டு வரம்பெறலாம்.

மேலும் சனிபகவான் வழிபட்டு அருள் பெற்ற திருத் தலங்களுக்குச் சென்று தரிசித்து வழிபட்டும், பலன் பெறலாம். அவ்வகையில், சனி பகவான் வழிபட்ட - அவர் சிறப்புடன் சந்நிதி கொண்டிருக்கும் அற்புதத் திருத்தலங்கள் குறித்த சிறப்புத் தகவல்கள் அடுத்தடுத்த பக்கங்களில் உங்களுக்காக...

தொழில் யோகம் ஸித்திக்கும்!

ருமுறை, நள மகாராஜனைப் பிடிப்பதற்காக திருநள்ளாறு நோக்கிப் புறப்பட்டார் சனி பகவான். இலக்கை அடைய வெகு தூரம் இருக்கும் நிலையில், இருள்கவியத் தொடங்கிவிட்டது. எனவே, சனி பகவானின் காக வாகனத்துக்குப் பார்வை மங்க ஆரம்பித்தது. வழியில் எங்கேனும் தங்கவேண்டிய நிலை. அப்போது, பூமியில் சிவாலயம் ஒன்று தென்படவே, அந்த இடத்திலேயே தரையிறங்கினார் சனிபகவான்.

இரவில் அங்கு தங்கியிருந்தவர் காலையில் எழுந்தபோது, கோயிலின் எதிரில் விருத்தகங்கா நதி பாய்வதைக் கண்டார். தனது வாகனத்துடன் அதில் நீராடி, அந்தத் தலத்தில் கோயில் கொண்டிருந்த சங்கரநாராயணரை யும் நாராயணி அம்பாளையும் வழிபட்டு மகிழ்ந்தார். இங்ஙனம், சனி பகவான் தங்கி வழிபட்டதால், ‘சனீஸ்வர வாசல்’ என்ற திருப்பெயர் கிடைத்தது அந்தத் தலத்துக்கு. இத்தலத்தின் பெருமையைச் சொல்லும் இன்னொரு கதையும் உண்டு.

 ஸ்ரீசனீஸ்வரர்
ஸ்ரீசனீஸ்வரர்

காசியின் ராணியான சம்யுக்தை என்பவ ளின் பணிப்பெண்ணாக இருந்தவள் மந்திரை. இவள் மகத நாட்டு இளவரசனான சுதாங்கனைக் காதலித்து வந்தாள். ஒருநாள், ராணியும் அரசனும் அந்தப்புரத்தில் தனித் திருந்த வேளையில், அவர்களின் அனுமதி இல்லாமல் நுழைந்துவிட்டாள் மந்திரை. இதனால் கோபம் கொண்ட ராணி, ‘ஆயுள் முழுக்க நீ கன்னியாகவே திகழ்வாய்’ என்று மந்திரையைச் சபித்துவிட்டாள்.

இதனால் பெரிதும் வருந்திய மந்திரை, சுதாங்கனை அழைத்துக்கொண்டு சாப விமோசனம் தேடி அலைந்தாள். அப்போது, அவர்களுக்குத் தீர்வு சொல்வதாகச் சொல்லி அழைத்துச் சென்று, தருணம் வாய்த்தபோது இருவரையும் விழுங்கிவிட்டான் அசுரன் ஒருவன். அவன் வயிற்றுக்குள் சென்ற இருவரும், பைரவ மூர்த்தியால் அசுரனின் பெருவயிறு கிழிக்கப்பட்டு வெளியேறினர் என்கிறது புராணம்.

அவர்களிடம், ``சனீஸ்வர வாசலாகிய காரையூர் தலத்தில், விருத்தகங்காவில் நீராடி, சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவ துடன், அந்தத் தலத்தில் அருளும் அம்மை - அப்பனை வணங்கினால் விமோசனம் கிடைக்கும்’’ என்று அருளினார் பைரவர். அதன்படி, அவர்கள் இருவரும் இத்தலத்துக்கு வந்து இறைவழிபாடு செய்து நலம் பெற்றனர்.

சனி பகவான் அருள்புரிவார்! - சனிப்பெயர்ச்சி திருத்தலங்கள்

தேய்பிறை அஷ்டமியில்...

அவர்களுக்குத் திருவருள் புரிந்ததோடு, தானும் இந்தத் தலத்தில் எழுந்தருளிய பைரவ மூர்த்தி, சனீஸ்வரரின் சந்நிதிக்கு அருகில் மேற்கு முகமாகத் தனிச்சந்நிதி கொண்டிருக்கிறார். இவர், உலக வாழ்க்கையில் மனிதர்களின் நிலை பற்றி உபதேசிப்பதாக ஐதிகம்.

வாரணாசியில் கங்கைக்கரையில் பைரவரும், சிவனாரும், அம்பிகையும் அருள்வது போல், இங்கேயும் ஸ்வாமி - அம்பாள் ஆகியோருடன் யோக பைரவரும் அருள்பாலிப்பதால், காசிப் புண்ணியம் இங்கும் கிடைக்கும்.

தேய்பிறை அஷ்டமி தினத்தில் செவ்வரளி மலரால் இந்த பைரவருக்கு அர்ச்சனை செய்து, புனுகு சாற்றி வழிபட்டால், வறுமை நீங்கும்; பொருளாதார நிலை உயரும் என்பது நம்பிக்கை.

 ஸ்ரீசங்கர நாராயணர்
ஸ்ரீசங்கர நாராயணர்

மாங்கல்ய தோஷம் விலகும்

சனிக்கிழமை அல்லது ஜன்ம நட்சத்திர நாளில் காலையில் இந்தத் தலத்துக்கு வந்து தீர்த்த நீராடி, நீல வண்ண கரை இடப்பட்ட வஸ்திரத்தை வேதம் அறிந்தவருக்கு தானம் செய்வதுடன், நீல மலரால் சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து, எள் அன்னம் படைத்து வழிபடுவதால், மாங்கல்ய தோஷங்கள் விலகும்.

ஆயுள் பலம் பெற...

சனிக் கிரக பாதிப்பால் ஆயுள் பலத்தில் பங்கம் இருந்தால், இங்கு வந்து சனி பகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, வன்னி இலைகளால் அர்ச்சனை செய்து, எள்முடிப்பு தீபம் ஏற்றி, சனிக் கவசமும், ஷோடச நாமாவளியும் படித்து வணங்கினால் ஆயுள் பலம் நீடிக்கும். மேலும், எள் தீபம் ஏற்றி சனீஸ்வரரை வழிபடுவதுடன், ஸ்வாமி, அம்பாளுடன் பைரவரையும் வழிபட்டால், தொழில் யோகம் ஸித்திக்கும்; வியாபாரத்தில் லாபம் பெருகும்.

 ஸ்ரீநாராயணி அம்பாள்
ஸ்ரீநாராயணி அம்பாள்

பக்தர்கள் கவனத்துக்கு...

தலம்: சனீஸ்வர வாசல்

சுவாமி: சங்கர நாராயணர்

அம்பாள்: நாராயணி அம்பாள்

திருத்தலச் சிறப்புகள்: காசியின் புண்ணியத்தை நல்கும் திருத் தலம் இது. தனது திருப்பெயரை மும்முறை சொன்னாலே பாவங்களையெல்லாம் பொசுக்கி வாழ்வை விருத்தியடையச் செய்யும் விருத்தகங்கா எனும் நதி பாயும் புண்ணிய பூமி இது. காசியைப் போன்றே காலபைரவரின் சாந்நித்தியம் பெற்ற க்ஷேத்திரம். சந்தோஷத்தை வாரி வழங்கும் சனி பகவானின் திருவருள் பொங்கிப்பெருகும் பெரும் பதி இது. தற்போது ‘காரையூர்’ என்றே இதை அழைக் கிறார்கள்.

எப்படிச் செல்வது?: திருவாரூர், திருவிற்குடி, திருப்பள்ளிமுக்கூடல், திருக்கொள்ளிக் காடு, திருச் செங்காட்டாங்குடி ஆகிய புகழ்பெற்ற தலங்களுக்கு நடுவே அமைந்துள்ளது காரையூர் எனப்படும் சனீஸ்வர வாசல்.

திருவாரூரில் இருந்து கங்களாஞ்சேரி வழியாக நாகூர் செல்லும் வழியில், சுமார் 10 கி.மீ.தொலைவு பயணித்தால், காரையூர் பஸ் நிறுத்தம் வரும். அருகிலேயே இந்த ஆலயத்தை தரிசிக்கலாம். இந்தக் கோயிலுக்குச் செல்லும் அன்பர்கள் பூஜைப் பொருட்களை திருவாரூர், கங்களாஞ்சேரி ஆகிய ஊர்களில் வாங்கிச்செல்வது சிறப்பு.

கே.குமாரசிவாசார்யர்

13.10.15 சக்தி விகடன் இதழிலிருந்து...

வடதிருநள்ளாறு!

சென்னை, பல்லாவரம் - குன்றத்தூர் சாலையில் பம்மலை தாண்டியதும் சுமார் 2 கி.மீ தொலைவில் முக்கிய சாலையிலேயே அமைந்துள்ளது, பொழிச்சலூர். இங்கே அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகையோடு கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு அகத்தீஸ்வரர்.

தொண்டைமண்டல புகழ் நாட்டில், `புகழ்சோழ நல்லூர்' என்று சோழர்கள் காலத்தில் அழைக்கப் பட்டது இவ்வூர். பல்லவர் காலத் தில் பொழில் சேர் ஊர் என்று அழைக்கப்பட்டு அதுவே மருவி, `பொழிச்சலூர்' என்றானது என வரலாறு கூறுகிறது.

அகத்திய மாமுனி தனது தென்னக யாத்திரையின்போது தொண்டை மண்டலம் முழுக்க பல இடங்களில் சிவலிங்கங்களை ஸ்தாபித்து ஆலயங்களை எழுப்பி வந்தார். இந்த பொழிச்சலூர் தலத்தில் தங்கியிருந்த அகத்தியருக்கு, ஈசனே சுயம்புவாக தோன்றி காட்சியளித்தார். இங்ஙனம் அகத்தியரால் வழிபடப்பட்டவர் என்பதால், சுவாமிக்கு அகத்தீஸ்வரர் என்று திருப்பெயர்.

இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சனிபகவான் மிகவும் வரப்பிரசாதி என்று போற்றப்படுகிறார். இவரும் இத்தலத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்றதாக ஞானநூல்கள் சிறப்பிக்கின்றன.

 ஸ்ரீசனீஸ்வரர்
ஸ்ரீசனீஸ்வரர்
சனி பகவான் அருள்புரிவார்! - சனிப்பெயர்ச்சி திருத்தலங்கள்

இந்தக் கோயிலில், சனிபகவான் திருநள்ளாறு திருத் தலத்தில் எழுந்தருளி இருப்பதைப் போலவே இங்கும் தனியாக எழுந்தருளி சின்முத்திரையுடன் காட்சி யளிக்கின்றார். திருநள்ளாறுக்குச் சென்று பரிகாரம் செய்ய இயலாதவர்கள் இங்குள்ள சனீஸ்வரனுக்கு அந்த பரிகாரங்களைச் செய்கின்றனர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழ அரசர்களால் கஜபிருஷ்ட விமானத்துடன் அமைக்கப்பட்ட இந்த ஆலயத்தில் சிவனைப்போலவே சனிபகவானுக்கு தனி வழிபாடுகள், பூஜைகள் செய்யப்படுகின்றன. விநாயகர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங் களுக்கும் இங்கே சந்நிதிகள் இங்கிருக்கின்றன.

ஏழரைச் சனி, பாதச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச் சனி என எவ்வகை சனி தோஷ பாதிப்புகள் இருந்தாலும் பொழிச்சலூரில் இருக்கும் அகத்தீஸ்வரரையும், சனிபகவானையும் வணங்கி வழிபட்டால் தோஷநிவர்த்தி அடையலாம் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.

நெஞ்சில் நீதியும், செயலில் நேர்மையும், வாக்கில் துணிவும் கொண்டவர்களுக்கு எந்நாளும் நலமே அருளும் சனிபகவான், இங்கு வந்து தன்னை வழிபடும் பக்தர்களுக்கு சகல பாதிப்புகளையும் நீக்கி நன்மைகளை வாரி வழங்கி வருகிறார்.

லட்சுமி கடாட்சம் அருளும் பொங்கு சனீஸ்வரர்

திருவாரூர் மாவட்டம், திருவாரூரிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள சிவத் தலம் திருக்கொள்ளிக்காடு. பொங்கு சனீஸ்வர க்ஷேத்திரம் எனப் போற்றப்படுகிறது இத்தலம்.

சனி பகவான் தன் சாபம் நீங்குவதற்காக, இந்தத் தலத்துக்கு வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி, சிவ பூஜை செய்தார். அவரின் தவத்தில் மகிழ்ந்த சிவனார், தேவி யுடன் அவருக்குக் காட்சி தந்தார்.

அப்போது, ‘தனம் மற்றும் தானியங்களுக்கு அதிபதியாக இருந்து அனைவருக்கும் அடியேன் அருளவேண்டும். ஆயுளுக்கும் ஆரோக்கியத்துக்கும் அதிபதியாக இருந்து, குபேர சம்பத்துகளைத் தருபவனாக உயிர்களுக்கு வரம் அளிக்கவேண்டும்’ என வரம் கேட்டார் சனி பகவான். ‘அப்படியே ஆகட்டும்’ என வரத் தைத் தந்தருளினார் சிவனார்.

 ஸ்ரீசனீஸ்வரர்
ஸ்ரீசனீஸ்வரர்

அன்று முதல், திருக்கொள்ளிக் காடு தலத்துக்கு வந்து, தன்னை தரிசிக்கும் பக்தர்களுக்கு, சகல செல்வங்களையும் நோய் நொடியில்லாத, நீண்ட ஆரோக் கியத்தையும் வாரி வழங்கி வருகிறார், ஸ்ரீசனீஸ்வரர்.

இந்தத் தலத்து இறைவனின் திருநாமம் அருள்மிகு அக்னீஸ்வரர். அம்பாளின் திருநாமம் அருள்மிகு மிருதுபாத நாயகி. அதாவது, பஞ்சின் மெல்லடியாள் என்று பொருள்!

கலப்பையுடன் சனி பகவான்!

ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவானின் கோசார நிலைகளை மங்கு சனி, பொங்கு சனி, மரணச் சனி, அந்திமச் சனி என்பார்கள். இந்தத் தலத்தில் அவர் பொங்கு சனீஸ்வரராக அருள்பாலிக்கிறார். மட்டுமன்றி கையில் கலப்பையுடன் சனி பகவான் திருக்காட்சி தந்தருள்வது, இத்தலத்தின் சிறப்பம்சம்.

 ஸ்ரீஅக்னீஸ்வரர்
ஸ்ரீஅக்னீஸ்வரர்

இந்த சனீஸ்வரரை வணங்கிவிட்டு விதை விதை விதைத்தால், அமோக விளைச்சல் கிடைக்கும்;

விதைக்கும் அனைத்தும் பொன்னென விளைந்து, செல்வத்தைத் தரும். வீட்டில், சகல சௌபாக் கியங்களும் ஐஸ்வரியங்களும் சேரும் என்பர்.

எதிரெதில் சந்நிதியில் பைரவரும் சனி பகவானும்!

வேறொரு மகிமையும் உண்டு இத்தலத்து பொங்கு சனீஸ்வரருக்கு. என்ன தெரியுமா? இவர் மகாலட்சுமி அமர்ந்திருக்கும் இடத்தில் சந்நிதி கொண்டிருப்பதால், பக்தர்களுக்குக் குபேர சம்பத்துக்களையும் யோகத்தையும் அருளும் வரப்பிரசாதியாய்த் திகழ்கிறார்.

அதேபோல், இந்த ஆலயத்தில் ஸ்ரீபைர வரும் ஸ்ரீசனீஸ்வரரும் எதிரெதிர் சந்நிதியில் இருந்தபடி அருள்பாலிக்கின்றனர். சிறப்பான அமைப்பு இது என்கிறார்கள் பக்தர்கள். ஸ்ரீகால பைரவர் எதிரிகள் தொல்லை, தீவினைகள் முதலான சகல பிரச்னைகளையும் தீர்த்து, மன தைரியத்துடன் வாழ்வதற்கு அருள்பாலிக்கிறார்.

 ஸ்ரீமிருதுபாத நாயகி
ஸ்ரீமிருதுபாத நாயகி

பக்தர்கள் கவனத்துக்கு!

தலம்: திருக்கொள்ளிக்காடு

சுவாமி: ஸ்ரீஅக்னீஸ்வரர்

அம்பாள்: ஸ்ரீமிருதுபாத நாயகி

திருத்தலச் சிறப்புகள்: அக்னிபுரி, அக்னி க்ஷேத்திரம் என்றெல்லாம் போற்றப்படும் இந்தத் தலத்தில், தனிச் சந்நிதியில் அருளும்

சனீஸ்வரர், லட்சுமிகடாட்சத்தை அள்ளித் தரும், பொங்கு சனீஸ்வரராகக் காட்சி தருகிறார். ஆம், இங்கே லட்சுமி சந்நிதி இருக்கவேண்டிய இடத்தில், சக்தி அம்சமாக, சகல ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்கும் வள்ளலாக அருள்கிறார். அருகிலேயே திருமகளும் சந்நிதி கொண்டிருப்பது விசேஷம்!

எப்படிச் செல்வது?: திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது திருக்கொள்ளிக்காடு. திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில், சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது பாங்கல் நால்ரோடு. இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில், சுமார் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருக்கொள்ளிக்காடு திருத்தலம்.