Published:Updated:

‘பக்தர்களின் இதயமே எனக்கான ஆலயம்!’ - மானசீகமாய் பூஜிப்போம் மணிகண்டனை

அரவிந்த் சுப்ரமணியம்

பிரீமியம் ஸ்டோரி

சுவாமிமார்களுக்கெல்லாம் நமஸ்காரம். ஒரு மண்டல காலம் மாலையிட்டு விரதம் இருந்து, சரண கோஷம் சொல்லி 5 நாள்கள் பெரியபாதையில் பயணம் செய்து, பதினெட்டு படியேறி ஐயனை தரிசிக்கும் பாக்கியத்துக்காகவே ஒவ்வொரு ஐயப்ப பக்தனுக்கும் ஓர் ஆண்டு முழுவதும் காத்திருப்பார்.

அந்த ஒரு மண்டல காலமே, அடுத்து வரும் ஆண்டைக் கடக்க நமக்குக் கிடைக்கும் மாபெரும் உந்துசக்தி. அப்படிப்பட்ட சபரியாத்திரைக்கும் ஐயப்ப தரிசனத்துக்கும் இந்த ஆண்டு ஒரு பெரும் சிக்கல் கொரோனா வடிவில் வந்துள்ளது. பெருந்தொற்றின் பாதிப்பு கருதி, கேரள அரசு இந்த ஆண்டு சபரி யாத்திரைக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் மட்டுமே அனுமதி. விடுமுறை நாள்களில் இரண்டாயிரம் பேர். இந்தக் கணக்கின் அடிப்படையில் ஒட்டுமொத்த சீசனுக்கும் 63 நாள்களுக்கான முன்பதிவு நவம்பர் 1- ம் தேதி தொடங்கிய இரண்டு மணி நேரங்களில் முடிந்தது. மொத்தம் 86 ஆயிரம் பக்தர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும், தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கொரோனா பரிசோதனை செய்து `தொற்றுப் பாதிப்பு இல்லை' என்பதற்கான சான்றித ழோடு 24 மணி நேரத்துக்குள் வரவேண்டும் என்னும் நெருக்கடி வேறு.

‘பக்தர்களின் இதயமே எனக்கான ஆலயம்!’ - மானசீகமாய் பூஜிப்போம் மணிகண்டனை

கேரளத்துக்குச் செல்வதற்கான கோவிட் ஜாக்கிரதா என்ற இணையம் மூலமாக பதிவு செய்தல், 24 மணி நேரத்திற்குள்ளாக எடுத்த கோவிட் நெகடிவ் சர்டிபிகேட், ஆன்லைன் இணையதளம் மூலமாக பதிவு செய்துள்ள தரிசன பதிவு... இவை மூன்றும் இருந்தால் மட்டுமே நிலக்கல் தாண்டி செல்ல முடியும். பெரிய பாதைப் பயணமோ, நெய் அபிஷேகமோ கிடையாது. வயதுக் கட்டுப்பாடு காரணமாக வயது முதிர்ந்த குருசாமிகள் யாரும் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முழுமையான விமானசேவை தொடங்கப் படாத காரணத்தாலும், கேரள அரசின் சபரிமலை ஆன்லைன் பதிவில், இந்திய ஆதார் அட்டை யும் இந்திய வாக்காளர் அடையாள அட்டை மட்டுமே ஏற்றுக் கொள்ளப் படுவதாலும் வெளிநாட்டிலிருந்து வரக்கூடிய லட்சக்கணக்கான பக்தர்களின் தரிசனம் என்பதும் கேள்விக்குறியாகவே நிற்கிறது!

இப்படிப்பட்ட காரணங்களால் பக்தர்கள் மனம் தளர்ந்து போயிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் நான் சொல்ல விரும்பு வது ஒன்றுதான்... கேரளத்துக்கு உள்ளே சென்று சபரியாத்திரை செல்லத்தான் கட்டுப் பாடுகளே தவிர, மாலையிட்டுக் கொள்ளவோ விரதமிருக்கவோ, சரணகோஷம் சொல்லவோ எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.

‘பக்தர்களின் இதயமே எனக்கான ஆலயம்!’ - மானசீகமாய் பூஜிப்போம் மணிகண்டனை

இவற்றை மேற்கொள்ள ஐயப்ப பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய விரதமுறைகள் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

பிரமாண்ட புராணத்தின் ஒரு பகுதி பூதநாத உபாக்யானம். ஐயப்பனுடைய திருச்சரிதம் மற்றும் விரத முறைகள் குறித்து நமக்கு விளக்கும் நூல் இது. தன் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகளை மணிகண்டனே பாண்டிய மன்னனுக்கு உபதேசித்தார்.

அந்த முறையின்படியே நாம் விரதம் இருந்துவருகிறோம். அந்த முறைமையின்படி ஆண்டுதோறும் எப்படி நாம் மாலையிட்டு சபரி யாத்திரை செல்கிறோமோ அதேபோல மாலையிட்டு விரதம் இருக்கலாம். அதைக் கைவிட வேண்டிய அவசியம் இல்லை. இதை யாரும் தடுக்க முடியாது.

‘பக்தர்களின் இதயமே எனக்கான ஆலயம்!’ - மானசீகமாய் பூஜிப்போம் மணிகண்டனை

அவ்வாறு மாலை அணிந்து ஒரு மண்டல காலம் விரதமிருந்து விரதம் பூர்த்தியாகும் நாளில் சுவாமிக்கு தங்களின் சக்திக்கு ஏற்ப, தாங்கள் இருக்கும் இடத்தின் சட்ட திட்டங் களுக்கு உட்பட்டு, வீட்டிலேயோ அருகிலுள்ள கோயிலிலேயோ, விசேஷ பூஜைகள் செய்ய வேண்டும். தாங்கள் இருக்கும் இடமே சபரிமலை என்று மானசீகமாக நினைத்துக்கொண்டு இந்த பூஜைகள் செய்ய வேண்டும்.

மானசீக பூஜையின் மகிமை!

பூதநாத உபாக்யானத்தில் பந்தள மகாராஜா, சுவாமிக்குக் கோயில் கட்ட வேண்டும் என்று அவரிடம் அனுமதி கேட்டார். அதற்கு பகவான் பதில் சொன்னார்:

“எனக்கென்று தனியாகக் கோயில் கட்ட வேண்டிய அவசியமில்லை. என் பக்தர்கள் ஒவ்வொருவரின் இதயமுமே என் கோயில். ஒவ்வொரு ஜீவராசிக்குள்ளேயும் அந்தர்யாமியாக நான் தான் வசிக்கிறேன். ஆனாலும் பக்தர்கள் ஊனக்கண்ணால் அதைக் காண முடியாது என்பதால் சபரி மலையில் ஒரு கோயிலை எழுப்பு. அங்கு நான் வாசம் செய்வேன்” என்று கூறியருளினார்.

`எனக்கு மொத்தம் மூன்று கோயில்கள்.தேவர்களும் முனிவர்களும் உருவாக்கிய பொன்னம்பலம் ஒன்று. ராஜசேகர பாண்டி யனால் சபரி பர்வதத்தில் உருவான கோயில் இரண்டாவது. என் பக்தர்கள் ஒவ்வொருவரின் இதயமும் எனது நிரந்தரமான கோயில்; அதுதான் மூன்றாவது கோயில்' என்று பகவான் உரைக்கிறார்.

‘பக்தர்களின் இதயமே எனக்கான ஆலயம்!’ - மானசீகமாய் பூஜிப்போம் மணிகண்டனை

பகவான் சொல்வதுபோல ‘தத்வமஸி’ என்னும் பொருள் உணர்ந்து வணங்க, பகவான் கொடுத்த வாய்ப்பாக இந்த ஆண்டு விரதத்தை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சபரிமலை பயணத்தைக் மானசீகமாக மேற் கொள்வோம். பெரிய பாதையில் என்னென்ன நாம் காண்போமோ கடந்து செல்வோமோ அவற்றையெல்லாம் சொல்லி வழிநடைச் சரணமாக சொல்லுவோம்.

எரிமேலிக்கோட்டையே சரணம் ஐயப்பா, பேட்டைதுள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா, ஸ்வாமியின் பூங்காவனமே சரணம் ஐயப்பா, கோட்டைப்படியே சரணம் ஐயப்பா, பேரூர்தோடே சரணம் ஐயப்பா, காளைகட்டி ஆசிரமமே சரணம் ஐயப்பா, அழுதா நதியே சரணம் ஐயப்பா, அழுதாநதி ஸ்நானமே சரணம் ஐயப்பா என்று ஒவ்வொன்றாகச் சொல்லும்போது அந்த ஒவ்வோர் இடத்தையும் கடந்து செல்வதுபோன்ற பாவனையை மனத்துள் ஏற்படுத்திக்கொள்வோம்.

இந்த வழிநடை சரணத்தை புத்தகத்தை வைத்துக்கொண்டு சொல்ல வேண்டாம் அதேபோல், மானசீகமாக 18 படிகளும் ஏறி அபிஷேகம் செய்து தரிசனம் செய்வோம். வழக்கமான பூஜையைவிட மானசீக பூஜைக்குப் பலன் அதிகம். இதை நான் சொல்லவில்லை. பெரிய பெரிய குருசாமிகள் சொல்கிறார்கள்.

நேரடியாகச் சென்று சுவாமியை தரிசனம் செய்ய முடியவில்லையே என்ற தாபம் பலருக்குள்ளும் இருக்கிறது. ஆனால் காலச் சூழல் நம்மைக் கட்டிப்போட்டிருக்கிறது. எனவே எல்லோரும் அவரவர் எங்கெங்கு இருக்கிறீர்களோ அங்கங்கே பாதுகாப்பாக இருந்து போன ஆண்டைவிடச் சிறப்பாக சிரத்தையோடு விரதத்தைக் கடைப்பிடியுங்கள். அதற்குக் கூடுதலான பலன்களை ஐயப்பன் அருள்வார்.

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான சுவாமி ஐயப்பனுக்கு ‘சர்வரோக நிவாரண தந்வந்தர மூர்த்தி’ என்ற திருநாமமும் உண்டு. அதாவது எந்த நோயையும் தீர்க்க வல்லவர் என்று பொருள். எனவே அவர் அருளால் இந்த நோய்த்தொற்று, விரைவில் விலகும். அந்தத் தருணத்தில் நேரில் சென்று ஐயனை ஆனந்தமாக தரிசனம் செய்வோம். இந்த ஆண்டு நம் மானசீக பூஜையில் மகிழட்டும் மணிகண்டன்.

சுவாமியே சரணம் ஐயப்பா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு