Published:Updated:

சதுரகிரியை ஆளும் அநாதி சித்தன்!

சதுரகிரி
பிரீமியம் ஸ்டோரி
News
சதுரகிரி

தென்னாடுடையான்

சித்தர்களுக்கெல்லாம் தலைவர் அநாதி சித்தர். அவர் வீற்றிருக்கும் தலைமைப்பீடம் ‘சதுரகிரி’.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பூமி, சங்கப் புலவர்களுள் ஒருவராக இருந்து தெய்வமே தமிழை ஆராய்ந்த பூமி, சிவபெருமானின் திருவிளையாடல்கள் நடைபெற்ற பூமி, உலகுக்கெல்லாம் தாயான அம்பிகை, ‘மீனாட்சி’ என்ற திருநாமத்தில் அன்பு அரசாட்சி நடத்தும் பூமி - பாண்டிய நாடு!

பாண்டிய நாட்டின் ஒரு பகுதி சதுரகிரி. அதன் நடுவில் மாபெரும் சஞ்ஜீவி மலை இருக்கிறது. பலன் தரும் மரங்களின் நிழலில் பல குகைகள் உள்ளன. தனித்துவம் வாய்ந்த சித்த புருஷர்கள் பலர், அந்தக் குகைகளில் தவம் செய்தபடி அங்கிருக்கும் காயகற்ப மூலிகைகளை இன்றும் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து வருகிறார்கள்.

அநாதி சித்தன்
அநாதி சித்தன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உலகுக்காகவே வாழும் உத்தமர்களின் உள்ளம்கவர்ந்த அந்தச் சதுரகிரி மேல் ஏறினார் அகத்தியர். அங்குள்ள சித்தர்களோடு மனம்விட்டுப் பேசினார். அமைதி ததும்பும் அந்த இடத்தில், ஒரு சிவலிங்கத்தை நிறுவி பூஜை செய்தார். அம்பிகையுடன் ஈசன் அங்கே திருமணக் கோலத்தில் தரிசனம் தந்தார். விழுந்து வணங்கி எழுந்த அகத்தியர், ‘‘பெருமானே... தாங்கள் இங்கேயே இருந்து, தங்களை வழிபடுபவர்களுக்கு இல்லறம் இனிதாக நடக்கவும் ஒற்றுமை வளரவும் அருள்புரியுங்கள்!’’ என உள்ளம் கசிந்து வேண்டினார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘‘அப்படியே ஆகும் அகத்தியா’’ என்ற ஸ்வாமி, அம்பிகையுடன் (அகத்தியர் நிறுவிய) சிவலிங்கத்தில் மறைந்தார்.

அகத்தியரின் மாணவர் சுந்தரானந்தர். இவர் தன் குருநாதர் நிறுவிய சிவலிங்கத்தைப் பல காலம் வழிபட்டார் (இன்றும் வழிபடுகிறார் என்றும் சொல்லப்படுவதுண்டு). சுந்தரானந்தர் வழிபட்ட அந்தச் சிவலிங்கம் அவர் பெயரால் ‘சுந்தரலிங்கம்’ எனக் கூறப்படுகிறது. இந்த ஸ்வாமியை வழிபடுபவர்களின் வாழ்வு இன்ப மயமாகும் மகிமையை மக்கள் உணரும் படியான ஒரு நிகழ்ச்சி, பாண்டிய நாட்டின் கோட்டையூரில் அரங்கேறியது.

கோட்டையூரில் வாழ்ந்த, இடையர் குலத்தைச் சேர்ந்த பச்சைமாலின் மனைவி சடைநங்கை. சதுரகிரியின் சாரலில் பசுக்களை மேய்த்து, பால் கறப்பார் பச்சைமால். அதை விற்று வருவாள் அவள். இல்லறம் இனிமையாகப் போய்க்கொண்டிருந்தது.

சதுரகிரி
சதுரகிரி

ஒருநாள் சடைநங்கை, பால் குடத்துடன் புறப்பட்டாள். வழியில் முனிவர் ஒருவர் எதிர்பட்டார். பால்குடத்தைக் கீழே வைத்த சடைநங்கை, அவரைக் கும்பிட்டாள். ‘‘அம்மா! நாக்கு வறள்கிறது. அரை ஆழாக்குப் பால் தர முடியுமா?’’ எனக் கேட்டார் முனிவர்.

‘‘இந்தாருங்கள் ஸ்வாமி! எவ்வளவு வேண்டுமோ குடியுங்கள்!’’ என்ற சடைநங்கை, குடத்தை அவரிடம் கொடுத்தாள். முனிவர், அரைப்படிப் பாலைக் குடித்தார். குடத்தை சடைநங்கையிடம் கொடுத்து, ‘‘தாயே... இன்னும் சில நாள்கள் நான் இங்கே இருப்பேன். இதேபோல தினந்தோறும் பால் கொடுக்க முடியுமா?’’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சடைநங்கை ஒப்புக்கொண்டாள். இந்தச் செயல் சில நாட்களுக்கு நீடித்தது. ஒருநாள், பச்சைமாலின் தாயார், ‘‘ஏண்டா! தினந்தோறும் குடம் நிறைய பால் வரும். வர வரக் குறைந்துகொண்டே வருகிறதே... ஏன்?’’ எனக் கேட்டாள். தாயார் அடிக்கடி இவ்வாறு கேட்பதும், பச்சைமால் மௌனமாக இருப்பதும் வழக்கமானது.

மனைவி சடைநங்கையைச் சோதிக்கத் தீர்மானித்தார் பச்சைமால். மறுநாள் பாலுடன் கிளம்பியதும் அவளுக்குத் தெரியாமல் பின்தொடர்ந்தார். வழியில் முனிவரைச் சந்தித்துப் பால் கொடுத்தாள் சடைநங்கை.

சதுரகிரியை ஆளும் அநாதி சித்தன்!

வீட்டுக்குள் நுழைந்ததும் சடைநங்கையின் இரு கன்னங்களிலும் மாறி மாறி அறை விழுந்தது. ‘‘ஆணவம் பிடித்தவளே... எவனோ ஒரு சாமியாருக்கு தினந்தோறும் பாலைக் கொடுக்கிறாயே! உனக்கு என்னடி உரிமை இருக்கிறது?’’ என்று கத்திய பச்சைமால் வீட்டைவிட்டு வெளியேறினார்.

சடைநங்கை உள்ளம் உடைந்தாள். ‘சீ! என்ன வாழ்வு இது... நான் செய்யும் புண்ணியம் இந்தக் குடும்பத்தைத்தானே சேரும். இதுகூடச் செய்வதற்கு உரிமையில்லாத எனக்கு, இல்லறம் தேவைதானா...’ என்று புலம்பியவள் சதுரகிரி மலை மேல் ஏறினாள். சுந்தரலிங்கர் சந்நிதியில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தாள். ‘தெய்வமே... உன் அடியவர்களுக்கு உதவாத வாழ்வு ஒரு வாழ்வா... அதைச் செய்ய முடியாத என்னை உலகத்தில் விட்டு வைக்கலாமா நீ... என்னை ஏற்றுக்கொள்!’ என்று கதறினாள்.

‘கலகல’ என்று சிரிப்புச் சத்தம் எழுந்தது. திடுக்கிட்டாள் சடைநங்கை. அவளிடம் பால் வாங்கிக்குடித்த முனிவரின் வடிவம் சிவ லிங்கத்திலிருந்து வெளிப்பட்டது. அதைப் பார்த்த சடைநங்கையின் உடல் முழுவதும் ஆடியது.

சதுரகிரியை ஆளும் அநாதி சித்தன்!

எதிரிலிருந்த ஸ்வாமி வாய் திறந்தார். ‘`சடைநங்கை... சித்தர்களுக்கு எல்லாம் தலைமைச் சித்தன் யாமாவோம். உத்தமமான சித்தர்களை உருவாக்கி அவர்கள் மூலம், உலகம் வாழ வழிகாட்டுவது எனது இயல்பு. எமக்குப் பால் அளித்த நீ, இன்று முதல் எமது நவசக்திகளில் ஒருத்தியாக இரு. உன்னுடன் பிறந்த உத்தமர்கள் ஏழு பேரும் ‘ஐயன்மார்கள்’ எனும் பெயருடன் இந்தச் சதுரகிரியில் திசைக்கு ஒருவராகத் தங்குவார்கள். வழி தவறுபவர்களுக்கு அவர்கள் நேர்வழி காட்டுவார்கள்!'’ என்று சொல்லி, சிவலிங்கத்துக்குள் புகுந்து மறைந்தார்.

அப்போதே சடைமங்கையின் திருமேனி மின்னி, ஜொலித்து தெய்விக வடிவமானது. சிவசித்தர் சொன்னபடி, நவசக்திகளில் ஒரு சக்தியாகி, சதுரகிரியில் இருந்தபடி உலகனைத்தையும் பாதுகாக்கத் தொடங்கினாள் சடைநங்கை. அவள் சகோதரர்கள் எழுவரும் ஐயன்மார்களாக ஆனார்கள்.

இந்த நிகழ்ச்சிகள் எல்லாம், சடைமங்கை யின் கணவரான பச்சைமாலின் கனவில் அப்படியே தெரிந்தன. நடுங்கினார் அவர். உள்ளம் உடைந்தது. செய்த பாவத்தை நினைத்துப் பதைத்தது மனம். ‘சடைநங்கை உத்தமி. பாவி நான். அவளைப் போய் உடம்பு நோகும்படி அடித்தேனே... கொஞ்சம் பால் தானம் செய்தாள் என்று பரபரப்பாகக் கொதித்தேனே... பொருளே அருள் என்று இருந்த நான், அருளே பொருள் என்று இருந்த சடைநங்கையை அடித்துவிட்டேனே!’’ என முகத்தில் அடித்துக்கொண்டு அழுதார். விரக்தி பிறந்தது. அதன் விளைவு?

சதுரகிரியை ஆளும் அநாதி சித்தன்!

பசுக்களை ஓட்டிக்கொண்டு சதுரகிரிக்குப் போனார் பச்சைமால். அங்கேயே தொழுவம் அமைத்தார். மாடுகளை மேய்ப்பது, தொழுவத்தில் கட்டுவது, பாலைக் கறப்பது, வருவோருக்குப் பாலாகவும் தயிராகவும் அன்போடு தருவது, மற்ற நேரங்களில் சிவ சிந்தனையிலேயே ஆழ்ந்து இருப்பது என்று நாள்களைக் கழித்துக்கொண்டிருந்தார்.

உத்தமியை உடல் நோக அடித்தது, அவ்வப் போது சிந்தனையில் குறுக்கிடும். கண்ணீர் சிந்துவார். இந்தக் கண்ணீரை மாற்றத் தீர்மானித்தார் மகா லிங்கர். அது என்ன?

பச்சைமால் வாழ்ந்த கோட்டையூரை மூவரைய தேவர் என்பவர் ஆண்டு வந்தார். அரசாட்சியில் மட்டு மல்லாது, கொடுப்பதிலும் அவர் சிறந்து விளங்கினார். நல்லதைக் கேட்கும் ஆர்வமுள்ள அவர், அவ்வப்போது சிவசித்தர் மகிமைகளைக் கேட்டு, அவரை தரிசிப்பதில் மிகவும் விருப்பம் உள்ளவராக இருந்தார். ஒரு முறை ஏராளமான படை களுடன் சதுரகிரி மலையை அடைந்தார். தன் படைகளும் சிவசித்தரை தரிசிக்கட்டும் என்ற ஆவல் போலும்!

தம்மை தரிசிக்க வந்த அரசர் முன்னால் அநாதி சித்தர் (சிவபெருமான்) நின்றார். ‘`மூவரைய தேவா... உயர்ந்த உள்ளம்கொண்ட நீ இங்கே ஓர் ஆலயம் கட்டு!’' என்று சொல்லி, அதற்குண்டான பொருள்களையும் காட்டினார்.

அநாதி சித்தர் உத்தரவுக்குக் கட்டுப்பட்டார் அரசர். குறித்த காலத்தில் கோயில் கட்டி முடிக்கப் பட்டது. குளமும் அமைக்கப்பட்டது. சூரியன் உதயமானான். எல்லோரும் அறியும்படியாக அநாதி சித்தராக இருந்த ஸ்வாமி அரை நொடியில் சிவலிங்கமாக ஆவிர்பவித்தார். அரசர் அதிர்ந்தார். சிவசித்தரைச் சேவிக்கும் பேறு கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தார். இயற்கையாக அங்கே அமைந்த மாவூற்றில் நீராடி சிவலிங்கத்தைத் தன் படைகளுடன் சேர்ந்து வழிபட்டார். அந்தச் சிவலிங்கமே மகாலிங்கம்!

அங்கேயே மற்றொரு புறத்தில் (நாம் ஏற்கெனவே பார்த்த) சுந்தரானந்தர், சுந்தரலிங்கத்தை பூஜை செய்துகொண்டிருந்தார். அதைப் பார்த்த பச்சைமால் அவரை வணங்கி ஆசிபெற்று அவருக் கெனவே ஒரு மாட்டை ஒதுக்கி, அதன் பாலைத் தினந்தோறும் அவருக்கு அளித்து வந்தார்.

ஒருநாள் அந்தப் பசுவை தொழுவத்தில் காணாது தவித்த பச்சைமால் அதை தேடிச் சென்றார். நெடுந்தூரத்தில் பசு நிற்பதைக் கண்டார்.

மகிழ்ச்சியோடு பக்கத்தில் சென்றால், வேடன் ஒருவன் அந்தப் பசுமாட்டின் காம்பில் வாயை வைத்துப் பால் குடித்துக் கொண்டிருந்தான். பச்சை மாலுக்குத் தாங்க முடியாத ஆத்திரம். குச்சி ஒன்றை எடுத்து வேடனை ‘பளீர் பளீர்’ என அடித்தார்.

சதுரகிரியே அதிர்ந்தது. ‘ஹர... ஹர...’ என்ற அலறல் எங்கும் எதிரொலித்தது.சுந்தரானந்தர் தன் அணுக்கர்களோடு விரைந்து வந்தார். ‘அம்மா!’ என்ற குரல் எழுந்தது. அது ரிஷபதேவரின் குரல். அதன் மேல் பேரொளி மயமாக அநாதி சித்தரான சிவபெருமான் காட்சியளித்தார்!

பச்சைமால் அதிர்ந்தார். ‘‘சிவ பெருமானே... உத்தமியான சடை நங்கையை அடித்தேன். உமது ஆடலைப் புரிந்துகொள்ளாமல் உம்மையும் அடித் தேன். என்னைப் போல பாவி யாரும் கிடையாது. என் பாவம் தீர தண்டனை தாருங்கள் ஸ்வாமி!’’ என்று கதறினார். அவரை அன்போடு அணைத்து தன் திருவடி நிழலில் சேர்த்து அருள்புரிந்தார்.

இந்தப் புனித மகாலிங்கமும், அகத்தியர் ஸ்தாபித்த சுந்தரானந்தர் வழிபடுகிற சுந்தரலிங்கமும் இன்னும் சதுரகிரி மலையில் சித்த புருஷர்களால் பூஜை செய்யப்படுகின்றன.

தரிசிப்போம்! தரித்திரம் போம்!

23.8.2006 இதழிலிருந்து

அஷ்டமி திதியை விலக்குவது சரியா?

தினைந்து திதிகள், ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பிரதமை, சஷ்டி, ஏகாதசி- நந்தா. துவிதியை, சப்தமி, துவாதசி- பத்ரா. திருதியை, அஷ்டமி, திரயோதசி - ஜயா. சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி- ரிக்தா. பஞ்சமி, தசமி, பூர்ணிமா - பூர்ணா. சில முகூர்த்தங் களுக்கு அஷ்டமியைச் சேர்ப்பதில்லை. ‘ஜயா பிரிவில் தென்படும் திருதியையும், திரயோ தசியும் முகூர்த்தங்களில் இடம் பிடித்திருப் பதால், அஷ்டமியும் சேர்க்கப் படுவதில் தவறில்லை’ என்று முகூர்த்தப் பதவி நூல் விளக்குகிறது.

‘இஷ்டா கிருஷ்ணாஷ்ட மீன்ந்தோ’ என்று ஆரம்பிக்கும் செய்யுளின்படி, தேய்பிறை அஷ்டமியில் திருமணம் செய்யலாம் என்கிறார்கள் கேரள தேசத்தவர்கள். அம்பாள் பூஜைக்கு அஷ்டமி சிறப்பு என்பார்கள்.நவராத்திரியில் நடுநாயகமாக விளங்குவது அஷ்டமி. ஜன்மாஷ்டமி, அசோகாஷ்டமி போன்ற விரதங்கள் அஷ்டமிக்குப் பெருமை சேர்க்கின்றன.

திதிகளுக்கு வெற்றி- தோல்வி என்ற பாகுபாடு இல்லை. முகூர்த்தப் பொதுப் பட்டியலில் அஷ்டமி இடம் பெறாததால், அது விலக்கத் தக்கது என்ற தோற்றம் பரவி விட்டது. நல்ல நாள்- கெட்ட நாள் என்று நிர்ணயிப்பது திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்தின் கூட்டணியே. திதி- செல்வச் செழிப்பை அளிக்கும். வாரம்- வாழ்க்கையின் நீட்டிப்பு. நட்சத்திரம்- தவறுகளை மன்னிக்கும். யோகம்- பிணியை அகற்றும். கரணம்- வெற்றி தரும் என்று பலன் சொல்வதுண்டு.

ஐந்தில் ஒன்றை மட்டும் வைத்து முடிவுக்கு வரக் கூடாது. ‘அஷ்டமியில் தொடங்கும் காரியத்துக்கு வெற்றி கிடைக்காது!’ என்று அஷ்டமியின் பலனை மட்டுமே நடைமுறைப் படுத்துவது தவறு.

- சேஷு மாமா