Published:Updated:

சிற்பங்கள்... அற்புதங்கள்!

கோயில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கோயில்கள்

குவாலியர் கோயில்கள்

ம் தேசத்தின் பொக்கிஷங்கள் என்றால் சிற்பங்கள் மலிந்து கிடக்கும் கோயில்களையே சொல்லலாம். பாரம்பர்யப் பெருமையைச் சொல்லும் நகரங்களுள் முக்கியமானது குவாலியர். குவாலியர் மத்திய பிரதேசத்தின் பெருநகரங்களுள் ஒன்று. வரலாற்று விரும்பிகள் கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டிய நகரமும்கூட. குப்தர்கள், ஹூணர்கள், பிரதிஹாரர்கள், கச்சப்ப ஃகடா மன்னர்கள், சந்தேல வம்ச மன்னர்கள், தோமர், டெல்லி சுல்தானகம், முகலாயர்கள் என பல நூற்றாண்டுகளாக பேரரசுகள் உருவாக்கி சென்ற வழித்தடங்கள், இன்றும் நம் கண்களின் முன்னே வரலாற்றின் எச்சங்களாய், பிரமிப்பாய்... கோயில்கள், கோட்டைகள், அரண்மனைகள் என உயர்ந்து நிற்கின்றன!

சிற்பங்கள்... அற்புதங்கள்!

செளஸாத் யோகினி கோயில் ஏகத்தார்சோ மகாதேவா கோயில்

குவாலியரில் இருந்து 40 கிமீ தொலைவில் ஜபல்பூர் அருகே உள்ள சிறு குன்றின்மீது, கிட்டத்தட்ட 100 படிக்கட்டுகளைக் கடந்தவுடன் தென்படுகிறது இந்த யோகினி கோயில்.1323-ல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு தகவல்களின் படி, இந்தக் கோயில் கச்சப்ப ஃகடா மன்னன் தேவபாலா காலத்தில் 1055-1075-க்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.

சிற்பங்கள்... அற்புதங்கள்!

வானியல் கணக்கீடுகளைக் கொண்டு கட்டப்பட்ட மிக அரிதான அமைப்புள்ள தனித்துவம் வாய்ந்த கோயில் இது. வட்ட வடிவ வளாக மதில்களுடனும், அதன் கருவறைகள் ஒவ்வொன்றிலும் 64 யோகினிகளின் சிற்பங்களோடும் அழகுற அமைந்துள்ளது. 64 யோகினி சிற்பங்களுக்கு நடுவில் மகாதேவரும் நந்தியும் அருள் பாலிக்கும் கோயில் இது.

சிற்பங்கள்... அற்புதங்கள்!

கார்ஹி பாதவளி கோட்டை- சிவன் கோயில்

பதினெட்டாம் நூற்றாண்டில் கச்சப்பஃகடா பேரரசால் கட்டப்பட்ட `கார்ஹி பாதவளி' கோட்டை இதுதான். இதனுள்ளே பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த சிவன் கோயிலின் முகமண்டபம் அழகிய சிற்பங்களால் வார்த்தெடுக்கப்பட்டுள்ளது.

சிற்பங்கள்... அற்புதங்கள்!

அமுதக் குடத்துடன் ஒய்யாரமாய் நிற்கும் தன்வந்திரி பகவான். அபூர்வமான இந்தச் சிற்பம் உடைந்த நிலையில் உள்ளது. அருகில் யாளியை எதிர்க்கும் வீரனின் அற்புதத் திருவுருவம் உள்ளது.

சிற்பங்கள்... அற்புதங்கள்!

அழகாய் நாட்டியமாடும் விநாயகர் சிற்பம். அபிநயத்தோடு வளைந்த ஆனைமுகனின் அற்புதத் திருவுருவம் கண்கொள்ளா காட்சி எனலாம்.

சிற்பங்கள்... அற்புதங்கள்!

எட்டு கரங்களுடன் கூடிய வீணாதரர். அபூர்வமான இந்த கலைப்படைப்பு சிதிலமான நிலையில் உள்ளது. வீணாதரரின் அருகில் குழலூதும் அழகிய கிருஷ்ணன்.

சிற்பங்கள்... அற்புதங்கள்!

முகமண்டபத்திலேயே இத்தனை சிற்பங்கள் எனில், கோயில் முழுமையாக இருந்திருந்தால் இன்னும் ஏராளமான ஆச்சரியங்கள் நம்மை கவர்ந்திருக்குமே என்ற ஏக்கம் பிறக்கத்தான் செய்கிறது. முகமண்டபத்தின் வெளித்தோற்றம் இது!

சிற்பங்கள்... அற்புதங்கள்!

தென்திசை நோக்கி நிற்கும் இந்தக் கோட்டைச் சிவன் கோயில் சிற்பத்தொகுதியில், பழைமையான பிரம்மா, சிவன் மற்றும் விஷ்ணு சிற்பங்களைப் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிற்பிகள், தங்களின் கலைத்திறனின் அடையாளமாக செதுக்கி வைத்திருக்கிறார்கள். அனைத்தும் சிற்ப அற்புதங்கள்!

சிற்பங்கள்... அற்புதங்கள்!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பிரதிகாரா பேரரசின் கீழ் இந்தக் கோயில்கள் கட்டப்பட்டன. இதில் பெரும்பாலானவை சிவன் கோயில்களாகவும் சில கோயில்கள் விஷ்ணுவுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த நிலநடுக்கத்தில் முற்றிலுமாய் சிதைந்துள்ளது படேஸ்வர் கோயில் வளாகம். இன்னும் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை, இந்தப் பகுதி கொள்ளைக்காரர்களின் கூடாரமாய் இருந்துள்ளது என்பதுதான்!

சிற்பங்கள்... அற்புதங்கள்!

வடக்கு திசை நோக்கி நிற்கும் இந்த சிற்பத்தொகுதியில் சிவன், பார்வதி, கணபதி, நந்தி மற்றும் மகாபாரதப் போர் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

சிற்பங்கள்... அற்புதங்கள்!

படேஸ்வர் கோயில்

சிவன் கோயில் முன்னேயுள்ள நந்தியுடன் காணப்படும் வீரனின் அரிய சிற்பம். கால வெள்ளத்தால் நந்தியம்பெருமானின் திருமுகம் பொலிவிழந்து போயிருந்தாலும் ஈசன் மீது அவர் கொண்ட பக்தியை அந்த முகபாவத்தில் காண முடிகிறது.

சிற்பங்கள்... அற்புதங்கள்!

விஷ்ணு கோயில் - கலை வண்ணம் மிளிரும் இந்த மகரதோரணம் ஒன்றே கச்சப்ப ஃகடா பேரரசின் கட்டடக்கலைக்குச் சான்று என்று கூறலாம். பதினொன்றாம் நூற்றாண்டில் எழுந்த இந்தக் கல் பொக்கிஷம் காலங்களைக் கடந்து நிற்கிறது.

சிற்பங்கள்... அற்புதங்கள்!

அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடனான மகரத் தோரணவாயிலும் அதை அடுத்துள்ள மகா சதாசிவமாகிய சிவலிங்கமும் அழகு. இன்னிசை மீட்டும் தேவகணங்களின் அணி வகுப்பை வாயிலின் மேற்புறம் காணலாம்!

சிற்பங்கள்... அற்புதங்கள்!

சூரிய கோயில்

கோனார்க்கில் உள்ள சூரியன் கோயிலை ஒட்டி சமீபத்தில் (1988-ம் ஆண்டு) கட்டப்பட்டதுதான் இந்த கோயில். இருபத்தி நான்கு சக்கரங்கள் ஒரு நாளைக்கான இருபத்தி நான்கு மணி நேரத்தையும், 365 சிற்பங்கள் ஓராண்டிற்கான நாட்களையும் குறிப்பிடுகின்றன. இந்தக் கோயில் இருக்குமிடத்தில் முன்பு பழைமையான ஆலயம் ஒன்று இருந்ததாகக் கூறப்படுகிறது.