Published:Updated:

சேதி சொல்லும் சிற்பங்கள்

சிற்பங்கள்
பிரீமியம் ஸ்டோரி
Listicle
சிற்பங்கள்

இதிகாசச் சம்பவம் சிற்பமாகித் திகழும் இடம், திருபுவனை - அருள்மிகு வரதராஜ பெருமாள் ஆலயம்.


1

`கண்டறியாதன கண்டேன்!'

லைப் பொக்கிஷங்களாக மட்டுமல்ல, சரித்திரச் சான்றுகளாகவும் புராணக் கருவூலங்களா கவும் திகழ்வன திருக்கோயில் சிற்பங்கள். அவற்றில் சில, கோயிலின் கதையைச் சொல்லும்.

வேறு சில, அவை வடிக்கப்பட்ட காலத்தின் வரலாற்றைப் பேசும். இன்னும் சில அடியார்களின் பெருமையைச் சிலாகிக்கும்; ஆண்டவனின் மகிமையைச் சிறப்பிக்கும். அத்தகைய சிற்பச் சிறப்புகளில் நான்கு இங்கே உங்களுக்காக!

`அப்பர் பெருமான் உழவாரப்பணி செய்த திருத்தலம் இது. அதனை அடியேன் மிதிப்பதா...' என சம்பந்தப்பெருமான் ஊரின் வெளியிலிருந்தபடியே இறைவனைப் பாடிய தலம். அவருக்காக கோயிலின் நந்தியை நகரச்செய்து சிவனார் காட்சி தந்தருளிய ஊர் - திருப்பூந்துருத்தி.

இந்தத் தலத்தின் கோட்டத்தில் அமைந்த எழில்மிகு அர்த்தநாரீஸ்வரரின் திருமேனி, சோழ நாட்டுச் சிற்பத் திறனுக்குச் சான்று.

`காதல் மடப்பிடியோடு களிறு

வருவனக் கண்டேன். வரிக்குயில்

பேடையோடு ஆடி வருவதைக் கண்டேன். பேடைமயிலோடும் கூடிப் பிணைந்து வருவது கண்டேன். கண்டேன் அவர் திருப்பாதம்... கண்டறியாதன கண்டேன்’ என இத்தலத்தில் இறைவன் உமையோடு சேர்ந்து இருக்கும் கயிலாயக் காட்சியைத் திருநாவுக்கரசர் போற்றிப் பாடுகிறார்.


2

`அழகு நங்கையல்ல அரக்கி!'

`நில் அடீஇ என கடுகினன் பெண் என நினைத்தான்

வில் எடாது அவள் வயங்கு எரி ஆம் என விரிந்த

சில் வல் ஓதியைச் செங் கையில் திருக்குறப் பற்றி

ஒல்லை ஈர்த்து உதைத்து ஒளி கிளர் சுற்று வாள் உருவி

ஊக்கித் தாங்கி விண் படர்வென் என்று உருத்து எழுவாளை

நூக்கி நொய்தினில் வெய்து இழையேல்என நுவலா

மூக்கும் காதும் வெம்முரண் முலைக்கண்களும் முறையால்

போக்கி போக்கிய சினத்தொடும் புரிகுழல் விட்டான்’

ராமனின் வனப்பில் மயங்கிய சூர்ப்பணகை அழகு உருவம் கொண்டு காதலை வெளிப்படுத்த வந்ததை அறிந்த லட்சுமணன், அவள் அழகு நங்கையல்ல; அரக்கி எனக்கண்டு விலகிச் செல்லும்படி சொன்னான். அந்தச் சொல்லைக் கேளாது அடாத செயற்புரிந்தவளின் மூக்கறுத்தான் லட்சுமணன். லட்சுமணன் அருகில் ராமனும் நிற்கிறான். இந்த இதிகாசச் சம்பவம் சிற்பமாகித் திகழும் இடம், திருபுவனை - அருள்மிகு வரதராஜ பெருமாள் ஆலயம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

3

குடக்கூத்து

வாணாசுரன் இவன். மாபலிச் சக்ரவர்த்தியின் மகனாவான். இவனுடைய மகளாகிய உஷை, அநிருத்தன்மீது காதல் கொண்டாள்.

வாணனுக்குத் தெரியாமல், தோழி சித்ரலேகையின் உதவியால் அநிருத்தனைத் தன் அரண்மனைக்கு அழைத்து வரச்செய்து கந்தர்வமணம் புரிந்து வாழ்ந்து வந்தாள். இதையறிந்த வாணாசுரன் கடுங்கோபம்கொண்டு அநிருத்தனைச் சிறைபடுத்தினான்.

அதையறிந்த கண்ணபிரான் வாணனின் `சோ’ நகரத்துக்குச் சென்று, அநிருத்தனை மீட்கக் குடங்களைக் கையிலேந்தி ஆடியதாய்க் கருதப்படுவது ‘குடக்கூத்து’ ஆகும். ஆடல்அணங்கு மாதவி இக்கூத்தினை ஆடுவதில் கைதேர்ந்தவள் என்கிறது சிலப்பதிகாரம்.

`கண்டராதித்த விண்ணகரம்' எனும் அழிவுபட்ட ஆலயத்திலிருந்து கிடைத்த - சற்று பின்னமான இந்தச் சிற்பம், தற்போது அரியலூர் மாவட்டம் கண்டிராதீர்த்தம் எனும் ஊரின் பிள்ளையார் கோயிலில் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


4

பாகாசுரன் வதம்!

“புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்

கிள்ளிக் களைந்தானே”

பால்மனம் மாறா பாலகனான கிருஷ்ணனை அழிக்க, பாகாசுரன் என்பவனை ஏவினான் கம்சன். அந்த அசுரன் பெரிய கொக்கின் உருவம் கொண்டு கண்ணனை அழிக்க வந்தான்.

ராட்சச பறவையைக் கண்டு கண்ணனின் தோழர்கள் அஞ்சி ஓடினர். வந்த வேகத்தில் அசுரன் கிருஷ்ணனை விழுங்கிவிட, அவன் வயிற்றுக்குள் சென்ற கிருஷ்ணன், கடும் உஷ்ணத்தை வெளிப்படுத்தினான். வெம்மையைத் தாங்க முடியாமல் கிருஷ்ணனை உமிழ்ந்தான் அசுரன். வெளி வந்ததும், சிறு புல்லினை பிடுங்கி எறிவது போன்று அசுரப் பறவையைத் தூக்கியெறிந்து வதம் செய்தான் கிருஷ்ணன். இந்தச் சம்பவத்தைச் சொல்லும் அழகிய சிற்பம் இது. திருவெள்ளறை புண்டரீகாட்சப் பெருமாள் கோயிலில் உள்ளது.