தொடர்கள்
திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

சேதி சொல்லும் சிற்பம்!

சிற்பம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிற்பம்

திருச்சி பார்த்திபன்

வாதாபி கணபதியின் மூலக்கோயில்!

சாளுக்கியம் மீதான படையெடுப்பின்போது பல்லவ தளபதி பரஞ்சோதியாரால் (சிறுத்தொண்டநாயனார்) வாதாபி யிலிருந்து (இன்றைய கர்நாடக மாநிலத்திலுள்ள பதாமி)கொண்டுவரப்பட்ட விநாயகர் சிற்பம், திருச்செங்காட்டங்குடி உத்ராபதீஸ்வரர் கோயிலில் உள்ளது.

வாதாபி கணபதியின் மூலக்கோயில்
வாதாபி கணபதியின் மூலக்கோயில்

வாதாபி கணபதியின் சிற்பம் இடம்பெற்றிருந்த மூலக் கோயில் இதுதான் என்பது ஆய்வாளர்களின் நம்பிக்கை. இக்கோயிலின் கருவறையில் சிலை பெயர்த்தெடுக்கப்பட்ட வடுக்களைக் காணலாம் என்கிறார்கள். இக்கோயில் அமைந்திருக்கும் மலைப்பகுதியில், நரசிம்மவர்மனின் வாதாபி வெற்றியைச் சிறப்பிக்கும் கல்வெட்டைக் காணலாம்!

பழங்கால மதகு அமைப்பு
பழங்கால மதகு அமைப்பு

பழங்கால மதகு அமைப்பு - `குமிழித்தூம்பு'

மிழகத்தில், சுமார் 1,600 ஆண்டுகளுக்கு முன் ஏரிகளிலும், குளங்களிலும் இருந்து நீர் வெளியேறும் மதகு அமைப்பு சுருங்கைகளாக இருந்தன. இதையே `குமிழித்தூம்பு’ என்பார்கள். தற்போது இந்த குமிழித்தூம்புகள் முற்றிலுமாய்த் தவிர்க்கப்பட்டு, வெறும் நினைவுச்சின்னங்களாகவே காட்சியளிக்கின்றன. படத்தில் நீங்கள் காணும் குமிழிக்கல், புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் அருகேயுள்ள ஓர் ஊரணியிலிருந்தது. ஐநூற்றுவர் எனும் வணிகக்குழுவின் தன்மம் இது.

முதல் கங்காதர மூர்த்தம்!

மிழகத்தின் முதல் கங்காதரர் இவர். 64 சிவ வடிவங்களில் 18-வது வடிவம் கங்காதர மூர்த்தம். ஆகாயத்திலிருந்து பூமிக்குப் பாயும் கங்கையை திருமுடியில் பெருமான் ஏற்று அருள்செய்யும் கோலம் இது.

இச்சிற்பத்தினை தமிழகத்தில் முதன் முறையாக, திருச்சிராப்பள்ளி மேற்குடைவரை கோயிலில், குடைவுச் சிற்பமாக அமைத்தவர் மகேந்திரவர்ம பல்லவன்.

முதல் கங்காதர மூர்த்தம்!
முதல் கங்காதர மூர்த்தம்!

இடது காலை தரையில் ஊன்றி, வலது காலை முயலகன் மேல் நிறுத்தி, வலது முன்கையால் பாம்பின் வாலைப் பிடித்தபடியும், வலது பின்கையால் கங்கையை தன் சடையில் ஏற்கும் நிலையிலும் அருள்கிறார், இந்தச் சிவமூர்த்தி.

சிற்பத்தொகுதியின் மேலே கந்தர்வர்கள் பறக்கும் தோரணையில் உள்ளனர். கீழே இரண்டு உருவங்கள் கருடாசனத்தில் அமர்ந்துள்ளன. இவை மகேந்திரவர்மனின் உருவங்களே என்பர். இதனை இங்குள்ள கல்வெட்டுகள் உறுதிபடுத்துகின்றன.

ஆடல்வல்லான்!

மிழகத்தின் முதல் ஆடலரசர் சிற்பம் இது. திருவண்ணாமலை மாவட்டம் - சீயமங்கலத்தில், மகேந்திரவர்மர் அமைத்த குடைவரை சிவாலயம் உள்ளது. இங்குள்ள தூண் ஒன்றின் மேற்பகுதியில் இந்தச் சிற்பம் காணப்படுகிறது.

ஆடல்வல்லான்!
ஆடல்வல்லான்!

நாற்கரம்கொண்ட ஆடல் வல்லானை அடியவர் இருவர் வணங்குகிறார்கள். நடராஜ மூர்த்தியின் காலின் கீழ் முயலகன் உருவம் இல்லை; பாம்பு ஒன்று உள்ளது. மூர்த்தியின் மேல் திருக்கரத்தில் உடுக்கை இல்லை. மாறாக பரசு ஆயுதம் திகழ்கிறது. கீழ் இடக்கரம் டோலா முத்திரையைக் காட்டுகிறது என்பார்கள்.

வாகீசர் வழிபாடு

யிரத்தளி என வரலாற்றில் குறிப்பிடப்படும் ஊர்கள் நந்திபுரம் மற்றும் நியமம் ஆகியவை. இந்த ஊர்களில் மட்டுமே, படத்தில் நீங்கள் காணும் சிலைகள் உள்ளன. `நந்திபுரம் ஆயிரத்தளி' என்று அழைக்கப்பட்ட மிகப்பெரும் நகரம், பிற்காலத்திய படையெடுப்பினால் அழிக்கப்பட்டது. இன்றைய கண்டியூர் வீரசிங்கம்பேட்டை மற்றும் அருகேயுள்ள சில ஊர்கள் அடங்கிய பகுதியே முற்காலத்தில் நந்திபுரம் என்று அழைக்கப்பட்டது. மற்றொரு ஆயிரத்தளியான நியமம், கல்லனை - திருக்காட்டுப்பள்ளி இடையே சிற்றூராக உள்ளது.

வாகீசர் வழிபாடு
வாகீசர் வழிபாடு

‘ஆடகப்புரிசை நந்திபுரத்து ஆயிரத்தளி’ எனச் சிறப்பித்து கூறப்படும், நந்திவர்ம பல்லவனால் நிர்மாணிக்கப்பட் நந்தி புரத்திலும், சிற்றரசர்களான முத்தரையர்களின் தலைநகரான நியமத்திலும் ஆயிரம் லிங்கங்களை நிர்மாணித்து வணங்கும் வழக்கம் இருந்துள்ளது. இன்றும் இவ்வூர்களைச் சுற்றி நிறைய எண்ணிக்கையில் பாணலிங்கங்கள் கிடைக்கின்றன. இவ்வகை வழிபாட்டில் வாகீசர் வழிபாடும் ஒன்று. இச்சிற்பங்கள் பொதுவாக ஐந்தரை அடி உயரம் குறையாமல் இருக்கும். இறைவன் தாமரை பீடத்தில், நான்கு தலைகள்- நாற்கரங்களுடன் சுகாசன கோலத்தில் அமர்ந்திருப்பார். சதாசிவம் என்றும் கூறுவர்.

பல்லவர்களும் சோழர்களும் சதாசிவ வடிவத்தைப் பல்வேறு விதங்களில் வடித்துள்ளனர். இரண்டாம் நந்திவர்மனின் உதயேந்திரம் செப்பேடும் சதாசிவ வணக்கம் கூறித்தான் ஆரம்பிக்கிறது. எனவே, பெரும்பாலும் இந்தச் சதாசிவ வழிபாடு நான்முகனாகவே வடிக்கப்பெறும். மாணிக்கவாசகர், சதுரனாகிய வாகீசரை ‘தாமரைச் சைவனாக’க் காட்டுகிறார். தேவாரம், திருவாசகம், அஜிதாகாமம், காரணாகாமம் போன்ற ஆகம நூல்களில் வாகீசர் குறிக்கப்படுகிறார். இவ்வரிய சிற்பம் இன்று பிரம்மனாக கண்டியூரிலும், செந்தலையிலும் வணங்கப்படுகின்றன.

அந்தணருக்கு நடுகல் வழிபாடு

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நன்னிமங்கலம் எனும் ஊரின் சிவாலயத்தில் இந்த அரிய வகை நடுகல் உள்ளது. பொதுவாக படை வீரருக்கோ, ஆநிரை கவரும் போரில் நிறைமீட்ட வீரருக்கோ, வன விலங்குகளிடமிருந்து மக்களைக் காப்பாற்றியவருக்கோ கல்லெடுத்து வணங்குவர்.

அந்தணருக்கு நடுகல் வழிபாடு
அந்தணருக்கு நடுகல் வழிபாடு

இது, கோயில் மடத்தைக் காக்கும் பொருட்டு நடந்த கைகலப்பில் இறந்த அந்தணருக்கான நடுகல். அவரின் பெயர் சந்திமுற்ற தேவன். இந்த நடுகல் மூன்றாம் நந்திவர்ம பல்லவன் காலத்தில் எழுப்பப்பட்டதாகும்.

இராவணப்பாடி நடராஜர்

ர்நாடக மாநிலம் அய்கொளேவில் அமைந் துள்ள இராவணப்பாடி, சாளுக்கியர்களின் பழைய தலைநகராய் இருந்துள்ளது. இங்கே சாளுக்கிய மன்னர்கள் பல கலைக்கோயில்களைக் கட்டி யுள்ளனர்.

இராவணப்பாடி நடராஜர்
இராவணப்பாடி நடராஜர்

அவற்றில் முதலாம் புலகேசியால் (புலிகேசி அல்ல புலகேசி என்பதே சரியான பதம்) கி.பி 6-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம் குறிப்பிடத்தக்கது. அந்த ஆலயத்தில் திகழும் இந்த நடராஜர் சிற்பமே இந்திய அளவில் மிகப் பழைமையானதும் முதலாவதுமாகும் என்பது ஆய்வாளர்கள் தரும் தகவல்.

அரிட்டாப்பட்டி லகுலீசர்

துரை - மேலூர் புறவழிச் சாலையில் 20 கி.மீ தொலைவில் உள்ள ஊர் அரிட்டாப்பட்டி, இங்கே முற்கால பாண்டியரின் குடைவரைக் கோயில் உள்ளது. குடைவரையின் வலப்புறம் லகுலீசர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. கி.பி 2-ம் நூற்றாண்டு அளவில் குஜராத்திலுள்ள காயரோஹனம் எனும் நகரில் லகுலீசர் என்பவரால் பாசுபதம் எனும் மதம் தோற்றுவிக்கப்பட்டது. உலக பந்தங்களிலிருந்து விடுபட்ட யோகியரைச் சிவனாகவே கருதினர். வடக்கில் பிரபலாக இருந்த இம்மதம் கி.பி 5-ம் நூற்றாண்டு அளவில் தென்னகம் நோக்கி பரவியது என்பர்.

அரிட்டாப்பட்டி லகுலீசர்
அரிட்டாப்பட்டி லகுலீசர்

தமிழகத்தில் லகுலீசரின் சிற்பம் வெகு அரிதாகவே காணப்படுகிறது. அரிட்டாப்பட்டியிலுள்ள இந்தச் சிற்பம் மிகப்பெரிய அளவில் அமைந்து தனித்துவம் பெறுகிறது. முன்னோக்கி அமர்ந்தவாறு சுகாசன கோலத்தில் இவர் உள்ளார். கணுக்கால் வரை பட்டாடை அணிந்துள்ளார். கையிலுள்ள மழுவினைப் பாம்பு சுற்றியுள்ளது. வடக்கிலும் சாளுக்கிய தேசத்திலும் உள்ள சிற்பங்களில் லகுலீசர் சிற்பம் நிர்வாணக் கோலத்தில் திகழும். ஆனால் இச்சிற்பம் முற்றிலும் வேறுபட்டு தனித்துவத்துடன் காணப்படுகிறது.