Published:Updated:

திருவண்ணாமலை: 5,000 மற்றும் 3,000 ஆண்டுப் பழைமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு!

"வெண்சாந்து கொண்டு தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள்... பெருங்கற்காலத்தில் வாழ்ந்த மனிதர்களால் தீட்டப்பட்ட ஓவியங்களாகவும்; செஞ்சாந்து நிறம் கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்கள்... புதிய கற்காலத்தைச் சேர்ந்தவையாகவும் இருக்கலாம்."

பாறை ஓவியங்கள், நம் முன்னோர்களின் வரலாற்றை மேலும் அறிந்திட காலங்களால் பின்னோக்கி அழைத்துச் செல்லக்கூடியவை. அத்தகைய பாறை ஓவியங்கள், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகளவில் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் பகுதியில் உள்ள சிறு கிராமம் ஒன்றில் பாறை ஓவியங்கள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனைத் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

5000 ஆண்டுகளுக்கு மேல் பழைமை; முன்னோர்கள் ஆயுதம் தீட்டிய இடம் கண்டுபிடிப்பு! வரலாறு சொல்வது என்ன?

இதுதொடர்பாக, இந்த ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரிடம் பேசினோம். "வேட்டவலம் பகுதியில் பாறை ஓவியங்கள் இருப்பதாக நண்பர்கள் மூலம் தகவல் கிடைத்தது. அதன் பேரில் நண்பர்களுடன் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டோம். வேட்டவலம் அடுத்த பன்னியூர் மற்றும் நெய்வாநத்தம் கிராமங்களில் இருந்துதான் நமக்குப் பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. பன்னியூர் கிராமத்தில் கிழக்குப்பகுதியில் குன்றுகள் காணப்படுகின்றன.

வில்லுடன் மனிதன் ஓவியம்
வில்லுடன் மனிதன் ஓவியம்

அங்குள்ள பாறை ஒன்றின் மேற்குப் பக்கத்தில் பாறை ஓவியத் தொகுதி காணப்படுகிறது. வெள்ளை நிறத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. இந்த பாறை ஓவியங்களை குறித்து, பாறை ஓவிய ஆய்வாளர் காந்திராஜன் என்பவரிடம் கேட்டறிந்தோம். 'வெள்ளை நிற ஓவியத்தில், முதல் பகுதியில் பல்லக்கு/வீடு போன்ற ஒன்றில் மனித உருவம் நின்ற நிலையில் இருப்பதுபோல உள்ளது. மேல் இரு புறமும் மூங்கில் போன்ற கம்புகளில் பூக்களைக் கொண்டு அலங்காரம் செய்தது போல உள்ளது. அதனைப் பின்புறமாக இரண்டு பேர் தூக்கிச் செல்வதாகக் காட்டப்பட்டுள்ளது. முன்புறமாக ஓர் உருவமும் தெரிகிறது. இதற்கு முன்னால் ஒரு நாயின் உருவமும் காணப்படுகிறது. இதை வைத்துப் பார்க்கையில், இனக்குழுத் தலைவனின் இறப்புக்குப் பின்னர் நடக்கும் நிகழ்வாக இது இருக்கக்கூடும். இதுபோன்ற பல்லக்கில் தூக்கி செல்லும் காட்சிகள் ஏற்கனவே சிஷ்பாறை ஓவியங்களில் காட்டப்பட்டுள்ளன.

வலப்புறமாக உள்ள ஓவியம், செஞ்சாந்து நிறத்தில் தீட்டப்பட்டுள்ளது. வட்ட வடிவில் 2 உருவம் காணப்படுகின்றன. அதில் ஒன்றில் உடலின் மேற்பகுதி மார்புடனும், தனித்த இடத்தில் தலையும் உள்ளதைப் போன்று காணப்படுகிறது. இந்த ஓவியத்தின் உள்ளே வெந்தைய நிறத்தில் ஒரு உருவம் வரையப்பட்டுள்ளது. அது உள்ளுறுப்பாக இருக்கலாம். அருகிலுள்ள மற்றொரு ஓவியத்தில், நீண்ட விலங்கு ஒன்றின் மேல் பகுதியும்; வால் போன்ற பகுதியும் காணப்படுகிறது. அருகில் ஒரு மனித உருவம் காணப்படுகிறது.

இந்த கிராமத்தின் அருகே உள்ள நெய்வாநத்தம் கிராமத்தில் 'தொப்பிதூக்கி கல்' உள்ள மலைக்குன்று காணப்படுகிறது. அங்குள்ள பெரிய பாறையின் அடிப்பகுதியில் வெள்ளை நிறத்தில் நான்கு உருவங்கள் வரையப்பட்டுள்ளன. அதில் இரண்டு உருவம், மனித உருவத்தை ஒத்த வடிவில் உள்ளது. தலை பகுதி வட்டமாகவும், மூக்கு நீண்டு பக்கவாட்டுத் தோற்றத்தில் இருப்பது போலவும் உள்ளன. விரிந்த நிலையில் உள்ள கைகளில் வாள் போன்ற ஆயுதத்தை ஏந்தி இருப்பதைப் போல அந்த ஓவியம் உள்ளது. மற்றொரு கை, விரிந்த நிலையிலும்; தலையின் பின்புறம் வட்ட வடிவம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. இது வழிபாட்டுக்கான உருவமாகவும் இருக்கலாம்.

தூங்காநகர நினைவுகள் - 2 | ஆதி மனிதனின் பாறை ஓவியங்கள் - மதுரை மலைகளில் மூதாதையர்களின் ரேகைகள்!

மற்றொரு ஓவியத்திலும் மனித உருவம் ஒன்று உள்ளது. அதன் இடது கையில் 'வில்' போன்ற ஆயுதமும், மற்றொரு கையில் அம்பு போல ஒன்றை வைத்திருப்பது போலவும் காணப்படுகின்றது. தலையில் வட்டவடிவக் கோடு உள்ளது. அவனது பின்புறம் விலங்கின் உருவம் பாதியாக தெரிகிறது. அந்த விலங்கின் கால்கள், அவனுக்கு மேல்புறம் இருப்பது போல உள்ளது. இதனைக் காணும்போது, வேட்டையாடிய விலங்கினை அந்த மனிதன் தனது முதுகில் தூக்கிச் செல்வது போன்ற காட்சியாகத் தெரிகிறது. மனித உருவத்தின் கீழ்ப்பகுதி மங்கிய நிலையில் உள்ளது. மற்றொரு ஓவியம் படகு போன்ற வடிவத்தில் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நெய்வாநத்தம் பகுதியில் உள்ள மற்றொரு மலைக்குன்றில், வெண்சாந்து கொண்டு தீட்டப்பட்ட மற்றும் சில ஓவியங்கள் காணப்பட்டன. அதில் ஒரு மனித உருவமும், ஒரு நாயின் உருவமும் காணப்படுகிறது. இப்பகுதியில் 10்க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இருப்பதைக் கண்டறிந்தோம். இதில் வெண்சாந்து கொண்டு தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள்... பெருங்கற்காலத்தில் (3000 ஆண்டுகளுக்கு மேல் பழைமை) வாழ்ந்த மனிதர்களால் தீட்டப்பட்ட ஓவியங்களாகும். செஞ்சாந்து நிறம் கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்கள்... புதிய கற்காலத்தை (5,000 ஆண்டுகளுக்கு மேல் பழைமை) சேர்ந்தவையாக இருக்கலாம்." என்று கூறினார்.

பாறை ஓவியம்
பாறை ஓவியம்

வேட்டவலம் பகுதியில் அமைந்துள்ள மலை குன்றுகளில் தொடர்ந்து பல பாறை ஓவியங்கள் அண்மைகாலமாகக் கண்டறியப்படுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் மனித நாகரிகம் சிறப்பாக இருந்தமைக்கான குறியீடுகள் இந்த ஓவியங்கள் மூலம் தெரியவருகின்றன. கற்கால மனிதர்களின் கற்பனைத்திறன், சிந்தனையை வெளிப்படுத்தும் தன்மை, பழக்கப்படுத்திய விலங்குகள், பொருள்கள் எனக் கற்கால மனிதர்களின் பண்பாட்டுக் கூறுகள் தொடர்ந்து கிடைத்துவருகின்றன. மனித நாகரிக வளர்ச்சியில் அறுபடாத வரலாற்றுச் சுவடுகள் திருவண்ணாமலை மாவட்டத்திலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கிடைத்து வருகின்றன. தொல்லியல், மானுடவியல், கலைக்கோட்பாடுகள் எனப் புதிய ஆய்வுகளுக்கு இந்த ஓவியங்களின் கண்டுபிடிப்பு முக்கியப் பங்காற்றுவதாகத் தொல்லியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இதுபோன்ற ஓவியங்கள் பாதுகாக்கப்பட்டு ஆவணப்படுத்தத் தொல்லியல்துறை முன்வர வேண்டும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு