Published:Updated:

‘மூக்குத்தியும் அம்மனும்!’

சுமங்கலி பூஜைக்கு அம்மனே வந்தாள். கிடாத்தலைமேடு அற்புதம்!

பிரீமியம் ஸ்டோரி

ம்ஹார பைரவருக்கு இணையாக சண்டிகாதேவியாக அம்பிகை அருளும் ஊர் ஒன்று உண்டு. அது, நாகை மாவட்டம், மயிலாடுதுறை - கும்பகோணம் மார்க்கத்தில், குத்தாலத்திலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கிடாத்தலைமேடு.

இந்த ஊரில்தான் அம்பிகை சண்டிகாதேவி அம்சத்தில் அருள்கிறாள். அசுரன் மகிக்ஷனை அம்பிகை சம்ஹரித்தாள் அல்லவா? அப்போது துண்டிக்கப்பட்ட அசுரனின் தலை விழுந்த

இடம்தான் கிடாத்தலைமேடு. மகிஷசிரோன்ன புரம் எனும் கிடாத்தலைமேடு என்று இவ்வூரின் திருப்பெயர் சிறப்பைச் சொல்கின்றன ஞான நூல்கள்.

 ‘மூக்குத்தியும் அம்மனும்!’

மகிஷனைப் போன்றே அந்தகாசுரன் என்றொருவன் கொடுமைகள் பல புரிந்து வந்தான். அவனை வதைப்பதற்காக சிவனாரி டமிருந்து உருவான அம்பிகையின் வடிவங்கள் எட்டு. இந்த தேவியரை அஷ்ட மாதாக்கள் என்கின்றன புராணங்கள். பிராம்மி முதலான சப்தமாதரை நாம் அறிவோம். இவர்களில் எட்டாவதாக ஒருதேவியைச் சேர்த்து அஷ்ட மாதாக்கள் எனக் குறிப்பிடுவார்கள். எட்டாவது தேவியே கெளரிகை எனப்படும் சண்டிகை.

அஷ்ட பைரவர்களில் சம்ஹார பைரவருக்கு இணையானவளாக சண்டிகை விளங்குகிறாள். இந்த தேவி வடிவம் அற்றவளாக, அன்பர்களின் மனத்தில் மறைந்துறைபவளாக சித்திரிக்கப்படுகிறாள். யோகினி, யோக நாயகி, மோகினி ஆகிய பெயர்களும் இவளுக்கு உண்டு.

ஸ்ரீசண்டிகாதேவி
ஸ்ரீசண்டிகாதேவி

யுத்த களங்களில் சப்தமாதர்கள் உக்கிரத்து டன் போர்செய்யும் வேளையில், கண்களுக் குப் புலப்படாமல் எதிரிகளின் மனத்தினைக் கலங்கச் செய்வது இவளது பணியாகும். இப்படியான மகிமைகளோடு சண்டிகையின் அம்சமாக இவ்வூர் ஆலயத்தில் தனிச்சந்நிதியில் அருள்கிறாள் துர்காம்பிகை.அவளின் அற்புதங்களைப் பார்க்குமுன் இந்த ஆலயத்தின் பிரதான அம்பாள் மற்றும் ஈஸ்வரனின் மகிமைகளை அறிந்துகொள்வோம்.

விருப்பங்களை நிறைவேற்றும் ஸ்ரீகாமுகாம்பாள்

கிடாத்தலைமேடு ஆலயத்தில் எழுந்தருளி இருக்கும் பிரதான அம்பாளின் திருநாமம்- ஸ்ரீகாமுகாம்பாள் என்பதாகும். லலிதா சகஸ்ர நாமம் அம்பிகையை ‘காமேச்வர பிராணநாடி’ என துதிக்கிறது. சக்தியின் அருள் இல்லை யெனில் இவ்வுலகில் எந்த நிகழ்வும் இல்லை. பிறப்பு எனும் விஷயம் நடந்தால்தான் உலகம் உயிர்ப்புடன் விளங்கும். அவ்வகையில், உயிர் களின் விருத்திக்குக் காரணமாக இருப்பவன் மன்மதன். அவன் உயிர்களின் மனத்தில் மோகத்தை உண்டாக்கும் ஆற்றலை எப்போதும் தன் வசம் தக்க வைத்திருக்கும் வரம் வேண்டி எந்நேரமும் அம்பிகையை ஆராதித்துக் கொண்டே இருக்கிறானாம். ஆகவேதான் `மன்மதனால் ஆராதிக்கப்படுபவள்’ என அம்பிகை துதிக்கப்படுகிறாள்.

ஸ்ரீதுர்காபுரீஸ்வரர்
ஸ்ரீதுர்காபுரீஸ்வரர்

சிவனாரின் எட்டு வீரச் செயல்களில் ஒன்று ‘மன்மத தகனம்’. இது நிகழ்ந்த `குறுக்கை’ எனும் தலம், கிடாத்தலைமேடு எனும் இவ்வூருக்கு அருகில் உள்ளது. இந்நிகழ்வுக்குப் பிறகு மன்மதன் இழந்த ஆற்றலை பெறவேண்டி பூஜித்து வழிபட்ட தலம் கிடாத்தலை மேடு. மன்மதனின் வழிபாட்டில் மகிழ்ந்து அவனுக்கு வில்லையும் புஷ்ப பாணங்களையும் அம்பிகை தந்து அருளியதாக தலபுராணம் சொல்கிறது. இப்படிக் காமன் பூஜித்ததால், இத்தலத்து அம்பிகை ‘காமுகாம்பாள்’ என்ற திருநாமத்தை ஏற்று எழுந்தருளியுள்ளாள். இந்த அம்பிகை யைச் சுக்ர வாரமாகிய வெள்ளிக் கிழமைகளில் அர்ச்சனை செய்து வழிபட் டால், தம்பதி ஒற்றுமை ஏற்படும் என்கின்றனர் உள்ளூர் பக்தர்கள்.

துர்காதேவி சிவனாரை வழிபட்ட தலம் என்ற சிறப் பும் இவ்வூருக்கு உண்டு. மகிஷனை வதம் செய்ததால் அம்பிகைக்கு தோஷம் உண்டானது. ஈசனின் திருவுளப் படி அவள் இந்தத் தலத்துக்கு வந்து சிவபூஜை செய்து தோஷ நிவர்த்தி பெற்றாள். அத்துடன் வடதிசையை நோக்கியவளாக, சண்டிகா தேவியாக இங்கே நிலைபெற்றுவிட்டாள் என்கிறது புராணம். துர்கைக்கு அருளியதால் இத்தலத்து ஈசன் துர்காபுரீஸ்வரர் என்ற திருப்பெயருடன் விளங்குகிறார்.

அம்மன் கேட்ட மூக்குத்தி ஆபரணம்!

இங்கே மகிஷாசுரமர்த்தினியாய் அஷ்ட புஜங்களோடு சக்கரம், பாணம், வில், கத்தி, கேடயம் ஆகியவற்றை ஏந்தியபடி ஒரு திருக் கரத்தை தொடையில் பதித்தவளாக, மேலும் இரு கரங்களில் அபய வரதம் காட்டியபடி அருள்கிறாள். அம்பிகையின் இந்த மூர்த்தத்தை அமைத்தபோது மூக்கணி இல்லாமல் வடித்துவிட்டாராம் சிற்பி.

ஸ்ரீகாமுகாம்பாள்
ஸ்ரீகாமுகாம்பாள்

பணி பூர்த்தியானதாக அவர் நினைத்திருந்த வேளையில், இரவில் சிற்பியின் கனவில் தோன்றிய அம்பிகை, தன் சிலையில் மூக்கணி விடுபட்டுப் போனதை அவருக்கு உணர்த் தினாள். விடிந்ததும் பதறியபடி ஓடோடி வந்த சிற்பி, அம்மையின் சிலையைக் கவனித்தபோது, அவளின் மூக்கில் மூக்குத்தி போடும் அளவு சிறு துளை ஒன்று தானாகவே ஏற்பட்டிருந்ததைக் கண்டு வியந்தார்.

அம்பிகையை `நாஸிகாபரணி’ என ஞான நூல்கள் போற்றுகின்றன. நாஸிகாபரணம் என்றால் மூக்கில் அணியும் ஆபரணம் எனப் பொருள். அந்த மங்கல ஆபரணத்தை அணிவதில் விருப்பமுள்ளவள் அம்பிகை. அதற்கேற்ப இந்த அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறாள் அன்னை என்று ஊரே வியந்தது. உடனடியாக மூக்குத்தி ஆபரணம் செய்து அன்னைக்குச் சமர்ப்பித்தார்களாம்!

 ‘மூக்குத்தியும் அம்மனும்!’

அன்னை நடத்திய வேறோர் அருளாடலை யும் உள்ளம் சிலிர்க்க பகிர்கிறார்கள் பக்தர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சுமங்கலி பூஜைக்கு வந்த துர்காம்பிகை!

“சுமார் 20 வருடங்களுக்கு முன்பு, இந்த ஆலயத்தில் சுமங்கலி பூஜை நடந்தது. இந்த வைபவத்தை 308 சுமங்கலிப் பெண்களைக் கொண்டு நிகழ்த்த திட்டமிடப்பட்டது. பூஜை தினத்தன்று 307 பெண்கள் மட்டுமே உணவருந்தி, மஞ்சள் புடவை, குங்குமம் முதலான மங்கலப் பொருள்களைப் பெற்றிருந்தனர். எண்ணிக்கையில் ஒரு பெண் குறைவுபட, சிவாசார்யர்கள் செய்வதறியாது திகைத்தனர்.

மீதமிருந்த ஒன்றை அம்மன் பாதத்திலேயே வைத்துவிட்டு இல்லம் திரும்பலாம் என அவர்கள் முடிவுசெய்திருந்த நிலையில், வயதான பெண்மணி ஒருவர், `தாமதமாகிவிட்டது பொறுத்துக் கொள்ளுங்கள்’ என்றவாறு வந்தார். அவரை வரவேற்று உணவிட்டு உபசரித்து, மங்கலப் பொருள்கள் அடங்கிய தாம்பூலத்தை அளித்து, கோயிலில் இளைப்பா றச் சொல்லி வேண்டினார்கள்.

 ‘மூக்குத்தியும் அம்மனும்!’

சிறிது நேரம் கழித்து மூதாட்டியைத் தேடிய போது அவர் அங்கு இல்லை. எங்குதேடியும் அவரைக் காண இயலவில்லை. எவ்வித போக்குவரத்து வசதியும் இல்லாத காலகட்டம் அது. ஆகவே, குறுகிய நேரத்தில் அவர் வேறெங்கு சென்றிருக்க முடியும் என்று எல்லோருக்கும் திகைப்பு. சிறிது நேரத்தில் கூட்டத்திலிருந்த சிறுவயது பெண்ணின்மீது அருளாக இறங்கி, `308-வது சுமங்கலியாக வந்தது நானே’ என்று அருள்வாக்கு சொன்னாளாம் அம்பிகை. அதுகேட்டு அனைவரும் சிலிர்த்துப் போனார்கள்'' என்றார் கோயிலில் சேவை செய்யும் சந்திரசேகர சிவாசார்யர்.

அவரே தொடர்ந்து, “அம்பிகை சந்நிதிக்கு எதிரே, அன்னையின் மொத்த சக்தியையும் ஏற்ற நிலையில் மிகப்பெரிய சூலாயுதம் ஒன்று உள்ளது. இந்தச் சக்தி ஆயுதம், சாமுண்டீஸ்வரியாகவே பாவிக்கப்படுகிறது.

அன்னைக்குச் செய்யப்படும் அனைத்து அபிஷேக ஆராதனைகளும் இந்தச் சூலத்துக்கும் நிகழ்கின்றன. பெரும் பிரச்னைகளால் கலக்கமுற்ற அன்பர்கள் இங்கே புடவை, மாலை சாற்றி வழிபட்டு நற்பலன் பெறுகிறார்கள். அன்னை துர்காம்பிகையின் சந்நிதியில் ஸ்ரீசக்ர மஹாமேரு ஒன்றும் பூஜிக்கப்படுகிறது. மாதாந்திர தேய்பிறை மற்றும் வளர்பிறை அஷ்டமி திதிகளிலும், விஜய தசமியிலும் இந்த ஆலயத்தில் நடத்தப்படும் சண்டி ஹோமம் பிரசித்திபெற்றது” என்றார்!

பத்து வருடங்களுக்குமுன் ஆன்மிக அன்பர்களின் பங்களிப்பினால், திருப்பணிகள் செய்யப்பெற்று கும்பாபிஷேகம் கண்டது இந்த ஆலயம்.

அன்பர்கள் அனைவரும் ஒருமுறையேனும் இந்தத் தலத்துக்குச் சென்று, அன்னையை மனமுருகி வழிபட்டு வாருங்கள். அவளின் திருவருளால் தடைகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் நிச்சயம் வெற்றி காண்பீர்கள்.

பக்தர்கள் கவனத்துக்கு...

தலம்: கிடாத்தலைமேடு

சுவாமி: அருள்மிகு துர்காபுரீஸ்வரர்

அம்பாள்: அருள்மிகும் காமுகாம்பாள்

தலச்சிறப்பு: இங்கே தனிச் சந்நிதி யில் அருளும் துர்காதேவி வரப்பிரசாதியானவள். அவளின் சந்நிதியில் உள்ள சூலாயுதம் சண்டிகாதேவியாகவே வணங்கப் படுகிறது. அம்மனையும் சூலத்தை யும் தரிசித்து வழிபட்டால், தீயவினை கள் அனைத்தும் விலகும்; நல்லன அனைத்தும் கைகூடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

பிரதான அம்பாளான காமுகாம்பாள் சந்நிதியில் வெள்ளிக் கிழமைகளில் அர்ச்சனை செய்து வழிபட்டால், இல்லறம் இனிக்க வரம் கிடைக்கும்; தம்பதி ஒற்றுமை மேலோங்கும்; நம் விருப்பங்கள் நிறைவேறும்.

எப்படிச் செல்வது ?: நாகை மாவட்டம் மயிலாடுதுறை - கும்பகோணம் மெயின்ரோட்டில் குத்தாலத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. குத்தாலத்திலிருந்து கார்,ஆட்டோ, மினிபஸ் வசதி உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு