Published:Updated:

‘ஈ’ வடிவில் சித்தர் உலா!

ஈசன் மலை உலா
பிரீமியம் ஸ்டோரி
News
ஈசன் மலை உலா ( ஈசன் மலை உலா )

ஈசன் மலை அற்புதங்கள்!

நாகரிக மனிதனை உருவாக்கியதில், பயணங்களுக்கு மிக முக்கிய பங்குண்டு. அவை அவனது புற வாழ்வின் முன்னேற்றத்துக்கும் அக வாழ்வின் ஆத்ம விசாரத்துக்கும் பெரிதும் துணைபுரிந்தன. அவற்றில் புண்ணிய யாத்திரைகள், மனிதன் தன்னைத் தானே உணரவும் `தான் யார்?' என்று அறியவும் வழிகாட்டின!

அவ்வகையில் மலைத் தலங்களுக்கான யாத்திரைகள் மகத்தானவை. அங்கே, இயற்கையின் பிரமாண்டம் உங்களை இறைவனுக்கு மிக அருகே அழைத்துச் செல்லும். அடர்ந்த வனங்களும் நெடிதுயர்ந்த மலைகளுமாய் ஏகாந்த சூழலில் இறைவனின் இருப்பை ஆனந்தமாய் உணரவைக்கும்.

அப்படியான அற்புத மலைத்தலங்களில் ஒன்றுதான் ஈசன் மலை! வேலூர் மாவட்டம் - காட்பாடி வட்டத்தில், தெங்கால் கிராமத்தில் அமைந்துள்ளது ஈசன் மலை. ராணிப்பேட்டையிலிருந்து பொன்னை - சித்தூர் செல்லும் சாலையில் 26 கி.மீ தொலைவில் உள்ளது இந்த மலை.

ஈசன் மலை முருகன்
ஈசன் மலை முருகன்

மனத்துக்குப் பலம் சேர்ப்பவன் சந்திரன். அவனின் சாந்நித்தியம் நிறைந்த சந்திரகாந்த பாறைகள் உள்ள இந்த மலை, மனப் பிணி தீர்க்கும். மேலும் புளியாரை, புளி நாரை, தண்ணீர்விட்டான் கிழங்கு, இடி தாங்கி என இம்மலையில் திகழும் அபூர்வ மூலிகைகளால் நம் உடற்பிணிகளும் நீங்கும்.

ஈசன் மலை
ஈசன் மலைஇவை மட்டுமா? சித்தத்துக்கு மகிழ்வு தரும் சிவகிரி தீர்த்தம், பல சிற்றோடைகள், மலை இடுக்குகளில் புகுந்து வெளிவரும் காற்றால் எழும்பும் ஓம்கார நாதம், `ஈ' வடிவில் உலா வரும் சித்தர் ஒருவரின் அருள்கடாட்சம், தேடி வருவோருக்குக் கோடி இன்பம் அருளும் ஜம்புகேஸ்வரர் தரிசனம்... இப்படி ஈசன் மலையின் அற்புதங்களைக் கேள்வியுற்று, உடனடியாகக் கிளம்பினோம்.

சென்னை - பெங்களூரு மார்க்கத்தில் ஆற்காடு பைபாஸ் சாலையிலிருந்து, வலப் புறமாகப் பிரிந்து, ராணிப் பேட்டை, லாலா பேட்டை வழியாக பயணித்தது நம் வாகனம். ராணிப்பேட்டையிலிருந்து சுமார் 26 கி.மீ. தொலைவு பயணித்து ஈசன் மலையை அடைந்தோம்.

வழியில் பொன்னை ஆறு குறுக்கிடுகிறது. சமீபத்திய மழையில் பாலம் சேதமுற்றுள்ளது. கவனமாகக் கடந்து முன்னேறினோம். வழி நெடுகிலும் சாலையின் இருபுறமும் பசுமை போர்த்தித் திகழ்ந்தது, மலைப் பகுதி.

இதோ ஈசன் மலையின் அடிவாரத்துக்கு வந்துவிட்டோம். அடர்த்தியான மரங்கள், சுழன்றடிக்கும் குளிர் காற்று, சலங்கையின் பரல்களாய் சத்தமிடும் நீரோடைகள், பெயர் தெரியாத பல வண்ண பறவைகளின் சங்கீதக் கச்சேரிகள் என இயற்கையின் விநோத ஜாலங் கள் ஈசனின் அருளுக்கு சாட்சியாய் திகழ, நம் மனத்தில் இனம்புரியாத பரவசம்!

மட்டுமன்றி, நமக்குள் தோன்றிய ஓர் உள்ளுணர்வு, ‘இங்கு ஏதோ ஓர் இறை அனுபவம் காத்திருக்கிறது’ என்றது. ஆர்வம் மேலிட நடக்கத் தொடங்கினோம்.

ஈசன் மலை
ஈசன் மலை

தொன்றுதொட்ட காலம் முதல், மலையை வழிபடத் தொடங்கியவன் மனிதன். மலைகள் ஆதிமனிதனின் தாய் மடியாக விளங்கியது. அதன் குகைகள் அவன் வீடாயின. வேட்டை அவனுக்கு உணவிட்டது. அனைத்தையும் தந்த மலைகள், அள்ளிக்கொடுத்த வளங்களாலும் அளப்பரிய பிரமாண்டத்தாலும் அவனுக்குத் தெய்வங்களாயின என்றே சொல்ல வேண்டும்!

தான் பெரியவன் இல்லை; நித்தியமானவன் இல்லை என்பதை ஒவ்வொரு கணமும் மனிதனுக்கு அழுத்தமாக உணர்த்தும் இறையின் பிம்பங்கள் மலைகள் என்பார்கள் பெரியோர்கள். ‘ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!’ என்பது மாணிக்கவாசகரின் மணிவாசகம் அல்லவா?

மலையின்மீது ஏற, ஏற குளிர்ச்சியும் நம்மைச் சூழ்ந்துகொண்டது. உச்சி வரையிலும் செல்ல அவசியம் இல்லை. அடிவாரத்திலிருந்து சற்று மேலே அமைந்திருக்கின்றன சந்நிதானங்கள்.

பேய் மிரட்டி, பேராமுட்டி, புளியாரை, புளி நாரை, நிலப்பனங்கிழங்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு, இடி தாங்கி, என நூற்றுக்கணக்கான மூலிகைச் செடிகளை அடையாளம் காட்டி, அவற்றின் அருமைபெருமைகளை விளக்கிச் சொன்னார்கள் நம்மை அழைத்துச் சென்ற அடியார்கள். அனைத்தும் அற்புத மூலிகைகள்.கருங்காலி, வலம்புரி, பாதிரி, வெண்நாவல், தவிட்டான் ஆகிய விருட்சங்களையும் கண்டோம்.

ஈசன் மலை
ஈசன் மலை
ஈசன் மலை
ஈசன் மலை
ஈசன் மலை
ஈசன் மலை
eesan malai
eesan malai
eesan malai
eesan malai
ஈசன் மலை
ஈசன் மலை


பிரசித்திபெற்ற முருகன் தலமான வள்ளி மலை அருகில் அதன் ஈசான்ய மூலையில் அமைந்திருப்பதால், ‘ஈசானிய மலை’ என்றும், சித்தர்கள் வழிபடும் ஜம்புகேஸ்வரர், சித்தேஸ் வரர் என்ற லிங்க மூர்த்தங்களாக ஈசன் அருள்பாலிக்கும் மலை ஆதலால் ஈசன் மலை என்றும் திருப்பெயர்கள் பெற்றதாம் இது.

`ஈசன் மலை' என்று பெயர்பெற்றிருந்தாலும் தற்போது முருகன் ஆலயமே புகழ் பெற்று விளங்குகிறது. அதனாலென்ன, அவனும் சிவத்தில் உதித்த ஆறுமுக சிவம் அல்லவா?

சிறியதொரு ஆலயத்தில் குறமகள் வள்ளி யோடும், வானவர்கோன் திருமகளாம் தெய்வானையுடனும் முருகப்பெருமான் காட்சி அளிக்கிறார். நீக்கமற எங்கும் இயற்கையாய் வியாபித்து நிற்கும் அந்தத் தமிழ்க்கடவுளை, தன்னிகரில்லாத அழகனை உளமார தரிசித்தோம். முருகனின் ஆலயத்துக்கு சற்றே பின்புறம் சித்தர் பெருமகன் ஸ்ரீகாளப்ப ஸ்வாமியின் சமாதி உள்ளது.

siddhar samathi
siddhar samathi

ஈசன் மலையின் பெருமைக்கும் புகழுக்கும் காரணமான அந்த மகானின் திருவடிகளைத் தொழுது மேலே ஏறினோம். இந்த மகான் செய்த அற்புத லீலைகளை உடன் வந்தவர்கள் கூறினார்கள். இன்றும் இந்தச் சித்தரை இங்கு வந்த பலரும் ஒளி ரூபமாக தரிசித்து வரங்களைப் பெற்றிருக்கிறார்கள் என்கிறார்கள்.

குறுக்கிட்டது ஒரு சுனை, பெயர் மருந்து சுனையாம். ஜில்லென்ற அந்த நீருக்கு அப்படி ஒரு சுவை! அதன் அருகிலிருக்கும் வெண் நாவல் மரத்தினடியில் ஸ்ரீஜம்புகேஸ்வரர் காட்சி தருகிறார். ஜம்பு என்றால் நாவல் மரம்தான். திருவானைக்காவில் பெருங் கோயிலில் குடியிருக்கும் ஈசன், இங்கு ஆள் அரவமற்ற இடத்தில், மிக எளிமையாய் எழுந்தருளியிருக்கிறார்.

eesan malai eswaran
eesan malai eswaran

அந்த இடத்தில் தெய்வ அதிர்வுகளை உணர முடிந்தது. உடலெங்கும் சிலிர்க்க ஈசனின் திருமுன்பு அமர்ந்து தியானித்தோம். அங்கேதான் அந்த அனுபவம் கிட்டியது.

தியானத்திலிருந்த நம் தலையைச் சுற்றிச் சுற்றி ஒரு ஈ ரீங்காரமிட்டது. அமைதியான அந்த மலையில் அந்த ஈயின் சத்தம் நம்முள் ஏதோ செய்தது. விர்ரென்று உடலெங்கும் ஒரு அதிர்வு பரவியது. உருவில் வழக்கத்தைவிட பெரிதான அந்த ஈ, ஏதோ ஒரு தொடர்பின் காரணமாக நம்மைச் சுற்றி ரீங்காரமிட்டது.

eesan malai siddhar
eesan malai siddhar

``பெரும்பாலும் இதுபோன்ற இடங்களில் குளிர் அதிகமுள்ள சூழலில் ஈக்கள் இருக்காது. ஆனால் இங்கு இந்த ஒற்றை `ஈ' வருகை தந்து அடியார்களைச் சிலிர்ப்பில் ஆழ்த்துகிறது. இங்கு சூட்சுமமாய் வசிக்கும் சித்தர் பெருமான் ஒருவரே ஈ வடிவில் வருவதாக நம்பிக்கை.

தகுதியானவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் தியானம் புரியும் தருணம் வந்து வலம் புரிந்து ஆசீர்வதிக்கிறார் சித்தர் என்பது இங்குள்ளவர்களின் நம்பிக்கை'' என்றார்கள் அடியார்கள். நமக்குக் கிடைத்த கொடுப்பினை இது என்று மனம் மகிழ்ந்தது. சித்தபுருஷரையும் மனதால் வணங்கித் தொழுதோம்.

பாலைச் சித்தர், மௌனகுரு சாமிகள், வள்ளிமலை சாமிகள், திருப்புகழ்ச் சித்தர் போன்றோர் தவமிருந்த இடம் இந்த மலை. ஆகவே அதீத சாந்நித்தியம் கொண்டு திகழ்கிறது அந்த இடம்!

மலைமீது, ஆங்காங்கே பாறைகளுக்கு இடையே அபூர்வமான குளிர்ச்சி மிக்க சந்திர காந்தக் கற்கள் காணப்படுகின்றன. அதேபோல், ஏதோ பாறைக் குழம்பு இறுகியதுபோன்ற இரும்பைப் போலான பாறைத்தொடர் ஒன்றும் மலையைச் சுற்றிக் காணப்படுகிறது. இது, இந்த மலையின் தொன்மையைக் கூறுகிறது என்கிறார்கள்.

eesan malai
eesan malai

நாம் தியானம் செய்த இடத்திலிருந்து மலை உச்சியைக் காணலாம். அங்கேயும் ஒரு சிவ லிங்கம் இருப்பதாகவும், அதுவே சித்தர்கள் வழிபட்ட சித்தேஸ்வரர் மூர்த்தம் என்றும் சொல்கிறார்கள். பாதுகாப்பின் பொருட்டு, தற்போது அங்கு செல்ல அனுமதி இல்லை. மானசீகமாக சித்தேஸ்வரரை வழிபட்டுவிட்டு, கீழிறங்கத் தொடங்கினோம்.

தேகம் நகர்ந்ததே தவிர, மனம் அந்த இடத்தை விட்டு நகர மறுத்தது. அவசியம் மீண்டும் மீண்டும் ஈசன் மலைக்குச் சென்று வரவேண்டும் என்று சங்கல்பம் எடுத்துக்கொண்டோம்.

இயற்கையை விரும்பும், அமைதியை வேண்டும், மலையேற்றத்தின் அழகை விரும்பும் அன்பர்களுக்கு ஈசன் மலை வரப்பிரசாதம்.

ஈசன் மலைக்குச் சென்றால் `இயற்கையும் இறைவனும் வேறு வேறு அல்ல; எங்கும் எதிலும் இறைவனே நிறைந்திருக்கிறான்' எனும் பேருண்மை எளிதில் புரியும்.

ஈசன் மலை முருகன்
ஈசன் மலை முருகன்
eesan malai ganapathy
eesan malai ganapathy
ஈசன் மலை முருகன்
ஈசன் மலை முருகன்

நீங்களும் ஒருமுறை ஈசன் மலைக்குச் சென்று வாருங்கள். சிந்தை மகிழ அங்கு குடிகொண் டிருக்கும் சிவனாரையும், அழகன் முருகனையும் தரிசித்து வழிபட்டு வாருங்கள்; இறையருளோடு சித்தர்களை மானசீகமாக வணங்கி குருவருளையும் பெற்று வாருங்கள். ஈசன் மலை தரிசனம் ஈடு இணையில்லாத அனுபவத்தையும் அற்புத வரங்களையும் உங்களுக்கு அருளும்.