திருக்கதைகள்
Published:Updated:

முருகப்பெருமானைப் பேச வைத்த ஈசன்!

எருக்கத்தம்புலியூர் நீலகண்டேஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
News
எருக்கத்தம்புலியூர் நீலகண்டேஸ்வரர்

எருக்கத்தம்புலியூர்

தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்களில் 4-வது தலம் எருக்கத்தம்புலியூர் நீலகண்டேஸ்வரர் திருக்கோயில். சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய தலம் இது. தற்போது ராஜேந்திரப் பட்டினம் என அழைக்கப்படும் இவ்வூர், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது.

எருக்கத்தம்புலியூர் நீலகண்டேஸ்வரர்
எருக்கத்தம்புலியூர் நீலகண்டேஸ்வரர்
நீலமலர்க்கண்ணி
நீலமலர்க்கண்ணி
எருக்கத்தம்புலியூர் நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்
எருக்கத்தம்புலியூர் நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்


புலியூர் என்ற பெயரில் ஒன்பது தலங்கள் உண்டு. அவற்றை நவ புலியூர் என்கின்றன ஞானநூல்கள். அவை: பெரும்பற்றப் புலியூர், திருப்பாதிரிப் புலியூர், எருக்கத்தம் புலியூர், ஓமாம்புலியூர், சிறு புலியூர், அத்திப் புலியூர், தப்பளாம் புலியூர், பெரும்புலியூர், கானாட்டம் புலியூர். அது என்ன நவபுலியூர்கள்!

வேத காலத்தில் திருப்பட்டூர் எனும் தலத் தில் தவமிருந்த வியாக்ரபாதரும் பதஞ்சலி முனிவரும் மோட்சம் செல்ல விரும்பினர். அதற்குத் தடையாக இருக்கும் தங்களின் கர்மாக்கள் மற்றும் தோஷங்களை விலகிட அருள்செய்யும்படி பரமனை வேண்டினர்.

அவரின் அருளாணைப்படி, இந்த 9 தலங்களுக்கும் யாத்திரை சென்று, சிவத் தாண்டவங்களை தரிசித்தனராம். அப்போது இந்த யாத்திரையின் மகத்துவத்தை ஈசனே அவர்களுக்குப் போதித்து அருளினாராம். `தில்லை (பெரும்பற்றப்புலியூர்) தொடங்கி இந்த 9 தலங்களுக்கும் ஒரே யாத்திரையாகச் சென்று தரிசிப்போருக்கு முக்தி நிச்சயம்' என்று உரைத்தாராம். அதன்படி இருவரும் நவ புலியூர்களைத் தரிசித்து அருள்பெற்றார்கள் என்கின்றன புராணங்கள்.

ஆக, வியாக்ரபாதர் எனும் புலிக்கால் முனிவர் தரிசித்த தலங்கள் என்பதால் இவை நவ புலியூர்கள் என்றாயின. இவை நவகிரகப் பரிகாரத் தலங்களாகவும் விளங்குகின்றன. அவ்வகையில் நவ தலங்களில் 3-வதான எருக்கத்தம்புலியூர் கேது பரிகார ஸ்தலம் என்று போற்றப்படுகிறது. அதியற்புதமான நவபுலியூரையும் தரிசிப்பவர்களுக்குப் பிறப்பே இல்லை என்கிறது சைவம்.

குமார ஸ்வாமி, ஸ்வேதாண்யேஸ்வரர், நீலகண்டேஸ்வரர் என்று போற்றப்படும் இங்குள்ள மூலவர், சுயம்பு சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். மார்ச் 16 முதல் 20-ம் தேதி வரை சூரிய ஒளி மூலவர்மீது படுவது இத்தலத்தின் சிறப்பு. சிவச் சந்நிதிக்கு வலப்புறம் அம்பாள் சந்நிதி உள்ளது. நீலோற்பலாம்பாள், நீலமலர்க்கண்ணி, அமிர்தகுஜநாயகி, வீரமுலையம்மை என்ற திருநாமங்கள் கொண்ட இந்த தேவி, மிகுந்த வரப்பிரசாதி.

ஈசன் வேதாகமத்தை உபதேசித்தபோது, அதைக் கவனிக்கத் தவறியதால் ஈசன் சக்தியைச் சபித்தார். இதனால் கோபித்த முருகப்பெருமான், தன் அன்னை சபிக்கப்பட காரணமாக இருந்த வேதாகமங்களைக் கடலில் வீசினார். ஈசன் அவரையும் சபித்தார். அதன் விளைவாக வணிகர் ஒருவருக்கு ஊமைப் பிள்ளையாகப் பிறந்தார் கந்தன். ‘உருத்திரசன்மர்’ என்ற பெயரில் அவதரித்த முருகன் சாபம் நீங்க, பல்வேறு தலங்களுக்குச் சென்று வழிபட்டார்.

நிறைவில் எருக்கத்தம் புலியூருக்கு வந்து வழிபட்டு பேசும் திறன் பெற்றார். உருத்திரசன்மர் வழிபட்டதால் ஈசன் ‘குமார ஸ்வாமி’ ஆனார். இன்றும் உருத்திரசன்மரின் உருவம் மக்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. பேச்சுத் திறன் குறைந்தவர்கள், இங்கு வந்து வழிபட்டால் நலம் பெறுவர் என்பது நம்பிக்கை.

எருக்கத்தம்புலியூர் நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்
எருக்கத்தம்புலியூர் நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்
எருக்கத்தம்புலியூர் திருக்கோயில்
எருக்கத்தம்புலியூர் திருக்கோயில்

இந்தத் தலத்தில் கந்த தீர்த்தம், நீல தீர்த்தம், செங்கழுநீர் தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. 1000 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த இந்தக் கோயில் , அருணகிரிநாதர் பாடிய 16-வது தலமாக உள்ளது. வள்ளலாரும் இந்தத் தலத்துக்கு வந்து பாடியுள்ளார் என்பது சிறப்பு.

நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட யாழ்ப்பாணர் அவதரித்த தலமாகவும் இந்த ஊர் திகழ்கிறது. இவர் திருஞானசம்பந்தர் அருளிய தேவாரத் திருப்பதிகங்களுக்கு பண்ணிசைத்துக் கொடுத்தவர். இவர் மரபில் வந்த பெண்கள் பிற்காலத்தில், ராஜராஜசோழன் வேண்டுகோள்படி தேவாரத் திருப்பதிகங்களுக்கு பண் அமைத்துக் கொடுத்துள்ளனர்.

விருதாச்சலம் பழமலைநாதரை வணங்கிய தேவ கணங்கள், `அருகில் உள்ள தலங்களில் எண்ணற்ற வரங்களும் முக்தியும் அருளும் தலம் எது' என்று கேட்க, `எருக்கத்தம்புலியூர்' என்று அருள்பாலித்தாராம் பழமலைநாதர். அதன்படியே தேவகணங்கள் இங்கே வந்து வழிபட்டு வேண்டிய வரங்களைப் பெற்றதாக தலவரலாறு கூறுகிறது.

ராஜராஜசோழன் மகப்பேறு வேண்டி இங்கு வந்து வழிபட்டு ராஜேந்திரச் சோழனை ஈன்றதா லும், ராஜேந்தர சோழனுக்குத் திருமண வரம் அருளியதாலும் சோழ மன்னர்கள் பலரும் இந்த ஆலயத்திற்கு ஏராளமான திருப்பணிகள் செய்துள் ளனர். இதனாலேயே இவ்வூர் ராஜேந்திரப் பட்டினம் என்றும் வழங்கப்பெறுகிறதாம்.

இத்தலத்தின் பெருமைகளைக் கேட்ட நைமிசாரண்யத்து முனிவர்களில் பலரும் பறவை களாகவும், மரங்களாகவும் உருக்கொண்டு இங்கு வந்து ஈசனை வழிபட்டு வந்தனர். அந்த மரங்களை வெட்டி விற்க வேடர்கள் வந்தபோது ஈசன், ‘எவரும் வெட்டாத முடியாத வெள்ளெருக்கு மரமாக இருக்கவும்’ எனக்கூறி மறைந்தார். அதன்படியே வெள்ளெருக்கு மரமாய் முனிவர்கள் மாறினர். இதனால் இத்தலம் எருக்கத்தம்புலியூர் எனப் பெயர் பெற்று விளங்குகிறது.

வெள்ளெருக்கே இங்கு தல விருட்சம். ஈசனுக்கு இணையாக வெள்ளை எருக்கஞ்செடியையும், பூக்களையும் சேர்த்தே வணங்குகிறார்கள். இங்கு வந்து வழிபட்டால் பேச்சில் குறைபாடு நீங்கும்; குழந்தைப் பாக்கியம், திருமணப் பாக்கியம் கிடைக்கும். ஈசனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபட்டால் தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும் என்கிறார்கள் பக்தர்கள்!

`சிவா' என்றாலே போதும்!

நமசிவாய' என்பது, ஸ்தூல பஞ்சாட்சரம். `சிவாய நம' என்பது சூட்சும பஞ்சாட்சரம். `ஸ்தூல' என்றால் கண்ணால் காணக் கூடியது; 'சூட்சுமம்' என்றால் காண முடியாதது. அதாவது, 'நமசிவாய' என்று உச்சரித்து வழிபட்டால், ஈசன் நம் கண்களுக்குப் புலப்படுவார். `சிவாய நம' என்று மனதுக்குள் சொல்லி தியானித்தால், நம் மனதில் உறைவார்!

நமசிவாய எனும் மந்திரத்தில் உள்ள `ந' எனும் அட்சரம்- சத்ய ஜோதி வடிவானது. `ம'- சக்தி ரூபமானது. `சி'- தேயு மற்றும் ருத்திர சொரூபமானது. `வ'- வாயு வடிவம். அதாவது மகேஸ்வர ரூபமானது. `ய'- ஆகாய வடிவானது; சிவ ரூபமானது. இந்த ஐந்து அட்சரங்களும் பஞ்ச பூதங்களின் பிரதிநிதிகள்.

இந்த அட்சரங்கள் முறையே நமசிவய, நமவசிய, வசியநம, சிவயநம, மநயவசி மற்றும் சிவயவசி என்று மாறுபட்டும் வழங்கப் பெறும். `ஐந்துக்கு இரண்டு பழுதில்லை!' என்பார் வாரியார் ஸ்வாமிகள். அதாவது, 'இந்தக் கலியுகத்தில் `நமசிவாய' என்று உச்சரிக்காவிட்டாலும் பரவாயில்லை; `சிவா' என்ற இரண்டு எழுத்துகளையாவது உச்சரியுங்கள்... பாவம் நீங்கும்!' என்கிறார் அவர்.

- நியோகி, சென்னை-92