Published:Updated:

திருப்பதிக்குக் கல்யாணப் பத்திரிகை அனுப்பினால் லட்டுப்பிரசாதம் வருமா? வாட்ஸ்அப் செய்தியும் உண்மையும்

திருமலை திருப்பதி

உண்மையில் திருப்பதிக்குக் கல்யாணப் பத்திரிகையை அனுப்பினால் லட்டு பிரசாதம் வீடு தேடிவருமா? திருமலை திருப்பதியில் அப்படி ஒரு திட்டம் இருக்கிறதா என்பது குறித்து விசாரித்தோம்.

திருப்பதிக்குக் கல்யாணப் பத்திரிகை அனுப்பினால் லட்டுப்பிரசாதம் வருமா? வாட்ஸ்அப் செய்தியும் உண்மையும்

உண்மையில் திருப்பதிக்குக் கல்யாணப் பத்திரிகையை அனுப்பினால் லட்டு பிரசாதம் வீடு தேடிவருமா? திருமலை திருப்பதியில் அப்படி ஒரு திட்டம் இருக்கிறதா என்பது குறித்து விசாரித்தோம்.

Published:Updated:
திருமலை திருப்பதி
இது வாட்ஸ்அப் யுகம். ஆன்மிகம் முதல் அரசியல்வரை செய்தி எதுவாக இருந்தாலும் முதலில் வெளியாவது வாட்ஸ்அப்பில்தான். அந்தச் செய்தியின் உண்மைத்தன்மை என்ன என்பதை அறியாமல் கடமையாக வரும் அனைத்தையும் ஷேர் செய்யும் பழக்கம் பலருக்கும் உள்ளது. இதனால் பல தவறான செய்திகளும் வேகமாகப் பரவுவதால் இப்போதெல்லாம் வரும் செய்தியின் உண்மைத்தன்மை என்ன என்பதை ஆராய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறோம்.

ஆன்மிகம் சார்ந்து பெரும்பாலும் பரப்பப்படும் வாட்ஸ்அப் தகவல்கள் மிகவும் பொதுவானதாக இருக்கும். அவற்றில் பழைய செய்தி, புதிய செய்தி அனைத்தும் கலந்திருக்கும். திடீரென்று யார் அதைப் பரப்ப ஆரம்பித்தார் என்பது தெரியாத அளவுக்கு வேகமாகப் பரவும்.

திருமலை பிரசாதம்
திருமலை பிரசாதம்

அதிலும் திருப்பதி பற்றிய செய்தி என்றால் அது பரவும் வேகம் அதிகமாக இருக்கும். அப்படிச் சமீபத்தில் பரவிக்கொண்டிருக்கிறது ஒரு வாட்ஸ்அப் செய்தி.

"உங்கள் வீட்டில் திருமணம் நிச்சயமான கல்யாண பத்திரிகையை ஒரு மாதம் முன்பு திருப்பதி கோயிலுக்குக் கீழ்க்கண்ட விலாசத்திற்கு அனுப்பி வைக்கவும். உங்களுக்குக் கோயிலிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். தம்பதிகள் கையில் கட்டிக் கொள்ளும் கங்கணம், குங்குமம், மஞ்சள் ஆகியன அனுப்பி வைக்கப்படும். திருமண முக்கியத்துவத்தைச் சொல்லும் ஒரு புத்தகமும் அனுப்பி வைக்கப்படும். திருப்பதி கோயிலிலிருந்து வரும் அந்த பிரசாதத்தின் சுவையே வேறு. நமக்குக் கல்யாண பத்திரிக்கையைச் சுவாமிக்குச் சமர்ப்பித்த நிம்மதியும் கிடைக்கும்.

To,

Sri Lord Venkateswara swamy,

The Executive Officer

TTD Administrative Building

K.T.Road

Tirupati

517501."

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் செய்தியோடு லட்டு பிரசாதத்தின் படமும் சேர்த்து பகிரப்படுகிறது. செய்தியில் எங்கும் லட்டு பிரசாதம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்படவில்லை என்றாலும் பிரசாதத்தின் ருசியே தனி என்றெல்லாம் குறிப்பிடப்படுவதால், லட்டுப் பிரசாதமும் கிடைக்கும் என்று பலரும் புரிந்துகொள்கிறார்கள்.

உண்மையில் திருப்பதிக்குக் கல்யாணப் பத்திரிகையை அனுப்பினால் லட்டு பிரசாதம் வீடு தேடிவருமா? திருமலை திருப்பதியில் அப்படி ஒரு திட்டம் இருக்கிறதா என்பது குறித்து விசாரித்தோம்.
திருமலை பிரசாதம்
திருமலை பிரசாதம்

திருமலை திருப்பதி தேவஸ்தானம் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி ஒரு திட்டத்தை அறிவித்தது. அதன்படி தங்களின் திருமணப் பத்திரிகையை அனுப்பிவைக்கும் தம்பதியை ஆசீர்வதிக்கும் விதமாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து அட்சதை, குங்குமம், கங்கணம் ஆகியன அனுப்பி வைக்கப்படும். ஓர் ஆண்டில் குறைந்தபட்சம் பத்தாயிரம் புதுமணத் தம்பதிகளுக்கு இந்தப் பிரசாதத்தை அனுப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்று அந்தச் செய்திக் குறிப்பு தெரிவித்தது. இந்த பிரசாதத்தைப் பெற ஒரு மாதம் முன்னதாகவே பத்திரிகையை திருமலைக்கு அனுப்பிவைக்க வேண்டும். அதன்படிப் பலருக்கும் அந்தப் பிரசாதம் வந்து சேர்ந்தது. இதில் லட்டு பிரசாதம் சேராது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, பலரும் தங்கள் வீட்டுத் திருமணத்தின் முதல் பத்திரிகையை ஏழுமலையானுக்கு சமர்ப்பிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். எனவே ஆண்டுக்குப் பத்தாயிரம் என்பது மிகக் குறைவான எண்ணிக்கையே. பலர் பத்திரிகை அனுப்பிவிட்டுத் தங்களுக்குப் பிரசாதம் வரவில்லை என்று புகார் தெரிவிக்கிறார்கள். இது குறித்து அறிந்துகொள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தை (0877-2233333/2277777 அல்லது 155 257 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு) அழைக்கலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஶ்ரீநிவாச கல்யாணம்
ஶ்ரீநிவாச கல்யாணம்

புதுமணத் தம்பதியருக்குக் கல்யாண உற்சவ டிக்கெட்

திருமணம் ஆகி ஏழு நாள்களுக்குள் திருப்பதி வரும் தம்பதிகள் முன்பதிவின்றி கல்யாண உற்சவத்தில் பங்குகொள்ள டிக்கெட்கள் வழங்கப்படுகின்றன. தரிசனத்துக்கு முன்தினமே தேவஸ்தான பி.ஆர்.ஓ அலுவலகத்துக்கு வந்து திருமணப் பதிவுச் சான்றிதழ் அல்லது திருமண அழைப்பிதழ் மற்றும் திருமணப் புகைப்படங்களை (தாலி கட்டுதல் முதலிய புகைப்படங்கள்) ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். அதைப் பரிசீலித்து மறுநாள் கல்யாண உற்சவ சேவையில் கலந்துகொள்ள டிக்கெட் வழங்குவார்கள். அதற்குரிய கட்டணதைச் செலுத்த வேண்டும். இந்த டிக்கெட்டும் அனைவருக்கும் கிடைக்கும் என்பது உறுதியில்லை. சிலருக்குக் கிடைத்து சிலருக்குக் கிடைக்காமல் போகலாம். எனவே ஏமாற்றங்களைத் தவிர்க்க முறையாக முன்பதிவு செய்துகொண்டு திருப்பதி செல்வதே நல்லது.