இந்தியாவில் உள்ள பணக்காரக் கோயில்களில் முதலிடம் பிடிப்பது திருமலை திருப்பதி. இங்கு தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவர். விசேஷ நாள்களில் இந்த எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டும்.
மேலும் திருப்பதிப் பெருமாளை ஆண்டுக்கு ஒருமுறையேனும் தரிசனம் செய்ய வேண்டும் என்பது பக்தர்களின் விருப்பம். அதனால் தரிசன டிக்கெட்கள் விற்பனை தொடங்கிய உடன் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. இதைப் பயன்படுத்திக்கொண்டு சமூக விரோதிகள், தேவஸ்தானம் பெயரில் போலி இணைய தளங்கள் தொடங்கி பக்தர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு போலி டிக்கெட் விற்பனையில் ஈடுபடுகின்றனர். இதனால் அப்பாவி பக்தர்கள் பணத்தை இழந்து தரிசனமும் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இந்தப் பிரச்னை கடந்த 2020 - ம் ஆண்டு பூதாகரமானது. அப்போது 19 போலி இணையதளங்களைக் கண்டறிந்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் போலீஸில் புகார் அளித்து அந்த இணைய தளங்களை முடக்கின. அதன்பிறகு தற்போது இந்த சிக்கல் மீண்டும் எழுந்துள்ளது. இந்தமுறை 40 இணைய தளங்களுக்கும் மேலாகப் போலிகள் என அடையாளம் கண்டு அவற்றை முடக்க திருப்பதி தேவஸ்தானம், சைபர்கிரைம் போலீஸில் புகார் அளித்தது. அந்த சிக்கல் முடிவடைவதற்கு முன்பாகத் தற்போது அச்சு அசல் தேவஸ்தானத்தின் இணையம் போலவே ஒரு போலி இணைய தளம் கண்டறியப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம், தன் இணைய வடிவை இந்த மாதம் புதிதாக மாற்றியுள்ளது. உடனே, பழைய இணைய தள வடிவிலேயே ஒரு போலி இணையதளத்தைத் தொடங்கிவிட்டனர் சமூக விரோதிகள். இணையத்தின் முகவரியையும் தேவஸ்தான இணைய முகவரிபோலவே வைத்துள்ளனர்.
அதாவது தேவஸ்தான இணைய முகவரி : tirupatibalaji.ap.gov.in
போலியான இணைய முகவரி : tirupatibalaji-ap-gov.org

இதில் கடைசி .in என்பதை .org என்று மாற்றி இணைய தளம் தொடங்கியிருக்கிறார்கள். இது தொடர்பாகப் பல பக்தர்கள் தேவஸ்தானத்திடம் புகார் தெரிவித்ததின் அடிப்படையில் இந்த இணைய தளத்தை முடக்குமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சைபர் கிரைம் போலீஸிடம் புகார் அளித்துள்ளனர். சைபர் கிரைம் போலீஸார் இந்தப் புகாரைப் பெற்றுக்கொண்டு உடனடியாக இணைய தளங்களுக்கான டொமைன் வழங்கும் godaddy நிறுவனத்துக்குக் கடிதம் எழுதியுள்ளது. அதன்படி உடனடியாக இந்த இணையத்தைத் தடை செய்ய வேண்டும். போலியான இந்த இணையதளம் யார்மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது... அதற்குப் பணம் எவ்வாறு செலுத்தப்பட்டுள்ளது ஆகிய விவரங்களைக் கேட்டுள்ளனர்.
இந்தக் கடிதத்தின் அடிப்படையில் விரைவில் அந்த நிறுவனம் நடவடிக்கை எடுக்கும். அதற்கிடையில் பக்தர்கள் யாரும் அந்த இணையத்துக்குச் சென்று ஏமாற வேண்டாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.