Published:Updated:

தோஷங்கள் நீங்கும் கல்யாண வரம் கிடைக்கும்!

பெரியகுளம் முருகன் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
பெரியகுளம் முருகன் கோயில்

பெரியகுளம் ஶ்ரீபாலசுப்ரமணிய சுவாமி ஆலய மகிமைகள் ம.பாலசுந்தரம்

தோஷங்கள் நீங்கும் கல்யாண வரம் கிடைக்கும்!

பெரியகுளம் ஶ்ரீபாலசுப்ரமணிய சுவாமி ஆலய மகிமைகள் ம.பாலசுந்தரம்

Published:Updated:
பெரியகுளம் முருகன் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
பெரியகுளம் முருகன் கோயில்

தேனி மாவட்டம், பெரியகுளம் நகரில் அழகுற அமைந்துள்ளது அருள்மிகு பால சுப்ரமணிய சுவாமி திருக்கோயில். ஐயன் அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர், அம்மை அருள்மிகு அறம்வளர்த்த நாயகி ஆகியோருடன் முருகப்பெருமான் அருளும் இந்தக் கோயிலுக்கு ஒருமுறை வந்து வழிபட்டால், சகல வளங்களும் நிரம்பிய மகிழ்ச்சியான வாழ்க்கை வரமாகக் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள். இந்தக் கோயிலின் ஸ்தல வரலாறு, சிலிர்ப்பூட்டும் திருக்கதையைச் சொல்கிறது.

தோஷங்கள் நீங்கும் 
கல்யாண வரம் கிடைக்கும்!

ரு முறை சோழ மன்னன் ராஜேந்திரன், அகமலைக் காட்டுப்பகுதிக்குள் வேட்டைக்குச் சென்றான். அவன் எய்த அம்பு ஒன்று, குட்டி களை ஈன்றிருந்த ஒரு பன்றியின் மீது பாய்ந்து, அந்தப் பன்றி இறந்துபோனது.

தாயை இழந்த பன்றிக்குட்டிகள், பசிக்குப் பால் கிடைக்காமல் ஓலமிட்டன. அதனைக் கண்ட மன்னன், தனது செயலுக்காக மனம் கலங்கினான். அப்போது ஓர் அற்புதம் நிகழ்ந்தது. சாட்சாத் முருகப்பெருமானே அங்கு தோன்றி குட்டிகளின் பசியைத் தீர்த்து அருள்பாலித்தாராம்.

முருகப்பெருமானின் கருணையைக் கண்டு சிலிர்த்த மன்னன், தாய்ப் பன்றியைக் கொன்ற தனது பாவத்தைப் போக்கவும், முருகப் பெருமானின் பெருமையை உலகுக்கு உணர்த்தவும் விரும்பினான். ஆகவே, அக மலையின் அடிவாரப் பகுதியில் மிக அற்புத மாக ஒரு கோயில் கட்டினான்.

அந்த ஆலயத்தில் சிவபெருமான், பார்வதி தேவி ஆகியோருடன் முருகப்பெருமானையும் எழுந்தருளச் செய்து, மூவரையும் முதன்மை தெய்வங்களாக்கி வழிபட்டான் என்கிறது தல வரலாறு.

தோஷங்கள் நீங்கும் 
கல்யாண வரம் கிடைக்கும்!

ஆலய அமைப்பு

வராக நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயில் சோழர்கால கட்டுமானத்துடன் திகழ்கிறது. ராஜேந்திரன் வழிபட்ட சிவபெருமான், ராஜேந்திர சோழீஸ்வரர் எனும் திருப்பெயருடன் அருள்கிறார். அம்பாள் தனது பெயருக்கேற்ப அறங்கள் செழிக்க வைக்கும் நாயகியாய் அருள்கிறாள்.

மற்றொரு சந்நிதியில், வள்ளி-தெய்வானை தேவியருடன் ஆறுமுகம் கொண்ட பெருமானாக அருள்கிறார் பாலசுப்ரமணிய சுவாமி. மூவருக்கும் தனித்தனியே கொடி மரங்கள் அமைந்திருப்பது சிறப்பம்சம்.

ஆலயத்தின் வெளிச்சுற்றில் நடராசர், தேவியருடன் சூரியன், சந்திரன், ஏகாம் பரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, பைரவர், சப்த கன்னியர், மகாவிஷ்ணு, நவகிரகங்கள் ஆகியோரை தரிசிக்கலாம். மரண பயத்தைப் போக்கி வாழ்வாங்கு வாழ ஆயுள் பலம் தரும் மிருத்யுஞ்ஜயர் சந்நிதியும் இந்தக் கோயிலில் உண்டு.

முருகப்பெருமானின் சந்நிதிக்கு நேர் எதிரில் மயில் மண்டபம் அமைந்துள்ளது. இதன் விதானத்தில் 27 நட்சத்திரங்கள் மற்றும் 12 ராசிகள் சிற்பங்களாக காட்சி தருகின்றன.

அம்பாள், ஈஸ்வரன், பாலசுப்ரமணியர் ஆகியோருக்கு உகந்த சிறப்பு தினங்களில் அவரவர் சந்நிதிகளில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. முருகப்பெருமானுக்கு வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை தைப்பூசம் போன்ற வைபவங்களும், அம்பாளுக்கு ஆடிப்பூரமும் விசேஷம்.

மட்டுமன்றி பங்குனி பிரம்மோற்சவம், சித்திரைப் பெருவிழா ஆகியவை இந்த ஆலயத்தில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.

இந்தத் திருக்கோயிலுக்கு அருகில் ஓடும்வராக நதியின் இக்கரையிலும் அக்கரையிலுமாக ஆண் - பெண் மருத மரங்கள் திகழ்கின்றன. இவை மிகவும் பழைமையான மரங்களாம். காசிக்கு அடுத்தபடியாக இங்கு மட்டுமே இரண்டு மருத மரங்களுக்கு இடையில் நதி பயணிக்கிறது என்கின்றனர். எனவே, இங்கு வந்து வழிபட்டால் காசிப்புண்ணியம் வாய்க்கும் என்பது நம்பிக்கை.

தோஷங்கள் நீங்கும் 
கல்யாண வரம் கிடைக்கும்!

வராக நதியை ‘பிரம்ம தீர்த்தம்’ என்றும் அழைக்கின்றனர். மிகப் புனிதம் வாய்ந்த இந்த வராக நதியில் நீராடி, கோயிலுக்குச் சென்று, இறைவனையும் இறைவியையும் முருகப் பெருமானையும் மனமுருகி வழிபட்டால், கல்யாணத் தடையால் வருந்தும் அன்பர் களுக்குத் தடைகளும் தோஷங்களும் நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும்; குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிக்கு விரைவில் பிள்ளைப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மட்டுமன்றி வராக நதியின் கரைகளில் திகழும் ஆண்-பெண் மருத மரங்களை தரிசித்துச் செல்லும் தம்பதிகள் மனவேறுபாடு இல்லாமல் எப்போதும் ஒற்றுமையுடன் இல்லறம் செழிக்க வாழ்வார்களாம்.

மறைந்து போன கோயில்

பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர், வழிப்போக்குச் சித்தர் என்பவரிடம் தனது தோஷம் நீங்க வழி கேட்டாராம்.

அந்தச் சித்தர், “நதிக்கரையில் மூன்று கொடிமரங்களுடன் அமைந்த திருக்கோயில் எங்கு உள்ளதோ, அங்கு சென்று மூன்று முறை நதியில் நீராடி எழுந்து, கோயிலுக்குச் சென்று வேண்டிக் கொண்டால், உன்னுடைய தோஷம் நீங்கும்” என்று வழிகாட்டினாராம்.

சித்தர்பிரான் சொன்னது போன்ற அமைப் பில் திகழும் ஆலயத்தைத் தேடி அலைந்த அந்த அன்பர், நிறைவில் இந்தக் கோயிலைக் கண்டடைந்தார். ‘தோஷம் நீங்கப் போகிறது’ என்கிற ஆர்வத் துடன், வராக நதியில் இறங்கியவர், ஒரு முறை மூழ்கி எழுந்து கோயிலைப் பார்த்து வணங்கினார்.

இரண்டாவது முறை அவர் மூழ்கி எழுந்து பார்த்தபோது, அதிர்ச்சி அடைந்தார். அங்கு கோயில் இல்லை; அந்தப் பகுதி முழுவதும் வயல்வெளியாக காட்சி யளித்தது. பயந்து போன அந்த நபர், ஆற்றிலிருந்து வெளியேறி னார். அங்கு தவம் செய்துகொண்டிருந்த ஜெயதேவ மகரிஷியிடம் நடந்ததைச் சொல்லிப் புலம்பினார்.

அந்த அன்பரைச் சமாதானப்படுத்திய மகரிஷி, “கவலை வேண்டாம். இது இறைவனின் திருவிளையாடலே. நீ பயப்படாமல், மூன்றா வது முறையும் நதியில் மூழ்கி எழுந்து பார். உனக்குக் கோயில் தெரியும்” என்றார்.

அதன்படியே மீண்டும் நதிக்கு வந்து மூன்றா வது முறையாக மூழ்கி எழுந்து பார்த்தார். இப்போது அவருக்குக் கோயில் முழுமையாகத் தெரிந்தது. அதன் பிறகு, மகிழ்ச்சியுடன் கோயிலுக்குள் சென்று வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றாராம்.

பெரியகோயில்!

பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ளோர், ராஜேந்திரனால் கட்டப்பட்ட இந்தக் கோயிலை ‘பெரியகோயில்’ என்றே அழைக்கின்றனர்.

கோயிலின் பிரதான மூர்த்தி அருள்மிகு ராஜேந்திர சோழீசுவரரே. என்றாலும் பால சுப்ரமணிய சுவாமி கோயில் என்றே பலரும் குறிப்பிடுகிறார்கள். ஆலயம் அமைந்திருக்கும் இடம் முன்பு ‘குளந்தை’ என்று அழைக்கப் பட்டிருக்கிறது. பிற்காலத்தில் இவ்வூரில் அமைந்திருந்த பெரிய குளம் ஒன்றின் அடையாளமாக, ‘பெரியகுளம்’ என்று பெயர் மாற்றம் பெற்றது என்கிறார்கள். அருணகிரி நாதர் தமது திருப்புகழில் இக்கோயில் முருகனைப் பாடியுள்ளார்.

எப்படிச் செல்வது?: தேனி மாவட்டம், பெரியகுளம் நகரின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது இந்தத் திருக்கோயில். பெரியகுளம் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து நகரப்பேருந்து மற்றும் சிற்றுந்து வசதிகள் இருக்கின்றன.

இந்த ஆலயம் தினமும் காலை 5 முதல் 11 மணி வரையிலும்; மாலை 5 முதல் இரவு 7:30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.மாங்கல்ய பலம்!

மாங்கல்ய பலம் பெருகும்!

சுமங்கலிகள் ஸ்நானம் செய்யும்போது, தாலிக் கயிற்றில் மஞ்சள் பூசிக் குளித்தால், அவர்கள் மாங்கல்ய பலம் பெருகும்.

காலை, மாலை இரு வேளைகளிலும் தீபமேற்றி ஸ்வாமியை நமஸ்காரம் செய்யும் போது, தாலிக் கயிற்றில் ஒரு குங்குமப் பொட்டும், நெற்றியில் வகிடு ஆரம்பத்தில் ஒரு குங்குமப் பொட்டும் வைத்துக் கொண்டால் கணவனின் ஆயுள் நீடித்து வளரும். லட்சுமி கடாட்சத்துடன், சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

தாலிக் கயிற்றில் உள்ள 9 இழைகளும், தெய்விகக் குணம், இல்லற வாழ்க்கையைப் புரிந்து கொள்ளுதல், தூய்மை, மேன்மை, நற்பண்புகள், ஆற்றல், விவேகம், தொண்டு, அடக்கம் ஆகிய 9 பண்பு நலன்களும், ஒரு சுமங்கலிப் பெண்மணியிடம் அமைந்திருக்க வேண்டும் என்பதை விளக்கும் என்கின்றன ஞானநுல்கள்.

- கே. ராஜலட்சுமி, சென்னை-61

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism