Published:Updated:

திருத்தொண்டர் 13 - `காலமெல்லாம் சுவாமியின் திருவடியில்தான்!'

சுந்தரமூர்த்தி குருக்கள்
பிரீமியம் ஸ்டோரி
சுந்தரமூர்த்தி குருக்கள்

இந்த சுவாமியோட திருநாமம் முல்லைவனநாதர். தாயார் கற்பகவல்லி. மகாவிஷ்ணுவோட பிரம்மஹத்தி தோஷம் நீங்கின தலம்.

திருத்தொண்டர் 13 - `காலமெல்லாம் சுவாமியின் திருவடியில்தான்!'

இந்த சுவாமியோட திருநாமம் முல்லைவனநாதர். தாயார் கற்பகவல்லி. மகாவிஷ்ணுவோட பிரம்மஹத்தி தோஷம் நீங்கின தலம்.

Published:Updated:
சுந்தரமூர்த்தி குருக்கள்
பிரீமியம் ஸ்டோரி
சுந்தரமூர்த்தி குருக்கள்

நீடாமங்கலத்திலிருந்து திருமுல்லைவாசலுக்கு வருவது ஒன்றும் சிரமமாக இருக்கவில்லை. திருமுல்லைவாசல் என்று வேறு தலங்களும் இருப்பதால், இதைத் தென்முல்லைவாசல் என்று சொல்கிறார்கள். நீடாமங்கலத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர்தான். சாலை இன்னும் கொஞ்சம் சரியாக இருந்தால் 10 நிமிடத்தில் வந்திருக்கலாம்.

ற்கெனவே இந்தப் பகுதியில் அரவூரை தரிசனம் செய்து அங்கு சேவை செய்யும் திருத் தொண்டர் குறித்து எழுதியிருக்கிறோம். அரவூர், பூவனூர், திருமுல்லைவாசல் ஆகிய மூன்றுமே ஆலங்குடி தலபுராணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தலங்கள். இந்த மூன்று தலங்களையும் தரிசனம் செய்வதால் உண்டாகும் சிறப்புகள் குறித்து அந்த நூல் விளக்குகிறது. அப்படிப்பட்ட புண்ணிய க்ஷேத்திரமான தென்முல்லைவாசலை அடைந்தோம்.

ஊர் மிக அமைதியாக இருந்தது. அப்போது பெய்திருந்த சிறுமழை ஊரைப் பசுமையாகக் காட்டியது. எங்கிருந்தோ பறவைகள் இடும் சத்தம் காதுகளை நிறைத்தது. இவற்றுக்கு மத்தியில் அமைதியாக பழைய வரலாற்றின் அசையாத சான்றாக நம் முன் நின்றிருந்தது கோயில். கோபுரத்தை வணங்கிக் கோயிலுக்குள் சென்றோம். கோயிலில் பக்தர்கள் யாரும் இல்லை. நாம் சந்திக்கச் சென்ற சுந்தரமூர்த்தி குருக்களும் அவர் மகன் கீர்த்திவாசனும் மட்டுமே இருந்தார்கள். சுந்தரமூர்த்தி குருக்களுக்கு எழுபது வயதாகிவிட்டது. அவர்தான் இங்கே அர்ச்சகராக இருந்தார். அறுபது வயதானபின் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர் மகன் கீர்த்திவாசன் அந்தப் பணிக்கு நியமிக்கப்பட்டார்.

சுந்தரமூர்த்தி குருக்கள் நம்மைக்கண்டதும் எழுந்துவந்து ``வாங்கோ வாங்கோ'' வரவேற் றார். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம். ``முதல்ல சுவாமி தரிசனம் பண்ணுங்கோ. அப்புறம் பேசலாம்'' என்றார். மகன் கீர்த்தி வாசனை அழைத்து சுவாமிக்கு தீபாராதனை செய்யச் சொன்னார்.

கீர்த்திவாசனுக்கு நடுவயது. நாற்பதுக்குள் இருக்கலாம் என்று தோன்றியது. இந்த வயதிலும் தந்தை சொல்லி முடிக்கும் முன் எழுந்து ஓடிவந்த விதம் அவரைத் தந்தைக்கு அடங்கிய பிள்ளை என்பதை உணர்த்தியது. சுவாமி எளிய அலங்காரத்திலும் தீப ஒளியில் ஜொலித்தார்.

``இந்த சுவாமியோட திருநாமம் முல்லைவனநாதர். தாயார் கற்பகவல்லி. மகாவிஷ்ணுவோட பிரம்மஹத்தி தோஷம் நீங்கின தலம். இங்கே சுவாமியை நமஸ்காரம் செய்துகொண்டால் சகல தோஷங்களும் விலகும் என்பது ஐதிகம்'' என்று சொல்லி ஆரத்தி காட்டி அதை நம்மிடம் நீட்டினார். கண்களில் ஒற்றிக்கொண்டோம்.

பின்பு கோயிலைச் சுற்றிக்காட்டி அனைத்து சந்நிதிகளிலும் தரிசனம் செய்துவைத்து அழைத்து வந்தார். சுந்தரமூர்த்தி குருக்கள், அடுத்தகால பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார். நம்மைக் கண்டதும், அடுத்து செய்ய வேண்டியவற்றை மகனிடம் சொல்லிவிட்டு நம்மருகே வந்தார்.

திருத்தொண்டர் 13 - `காலமெல்லாம் சுவாமியின் திருவடியில்தான்!'

``அஃபீஷியலா அவன்தான் இங்கே அர்ச்சகர். ஆனா, சுவாமிக்கான கைங்கர்யத்தில் என்ன அஃபீஷியல்... அன்அஃபீஷியல்... இது ஆபீசுக்குப் போயி பத்திலேர்ந்து எட்டுவரை பார்க்கிற வேலையில்லையே. இது சுவாமி காரியம். காலமெல்லாம் அவர் திருவடிதான். அதனால் அவருக்குச் சேவை செய்றதில் என்ன கணக்கு வேண்டிக் கிடக்கு... அதுவும் போக இங்கே ஒருத்தர் வேலை செய்தால் சீக்கிரம் வேலை முடியாது. பார்த்தீங்கதானே எவ்வளவு சந்நிதிகள்னு... அத்தனைக்கும் ஒருத்தர்தான்னா எப்படி முடியும்?

தலைமுறை தலைமுறையா இங்கே கைங்கர்யம் பண்றோம். எங்க தாத்தா சுப்பராய குருக்கள் காலத்திலேர்ந்தே நான் இந்தக் கோயிலுக்கு வர்றேன். அவர் கை பிடிச்சு இந்தப் பிராகாரம் எல்லாம் நடந்திருக்கேன். என் அப்பா, ராமநாத குருக்கள் தாத்தாக்கிட்ட எல்லாம் கத்துக்கிட்டார். நானும் என் அண்ணா திருஞானசம்பந்த மூர்த்தியும் இங்கேயேதான் இருப்போம்... விளையாடுவோம்...

எங்க அண்ணாவுக்கு இந்தக் கோயிலும் சுவாமியும் ரொம்பப் பிரியம். அவர்தான் முதலில் இந்தக் கோயிலில் கைங்கர்யம் பண்ணினார். ரொம்ப காலமாக கும்பாபிஷே கமே நடக்காமல் இருந்தது. அண்ணாதான் நாலுபேரை சந்திச்சு விடாமுயற்சி எடுத்துக் கும்பாபிஷேகம் நடக்கச் செய்தார். ஆனா, அடுத்த சில வருஷத்தில் அவர் காலமாயிட்டார். அண்ணாவோட பசங்க சென்னைக்குப் போய்ட்டாங்க. அதனால் கோயில் பொறுப்பு என்கிட்டே வந்தது.

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து கோயிலோடேதான் இருக்கேன். இந்தத் தலம் புராண சிறப்புப் பெற்றது. ஹிரண்யனை வதம் பண்ணின தோஷம் நீங்க மகாவிஷ்ணு இங்கே வந்து சிவபெருமானை வணங்கிய தலம். இங்கே இருக்கும் மிருகபாத தீர்த்தத்தில் நீராடியதும் அவர் தோஷம் நீங்கியதாம். அது என்ன மிருகபாத தீர்த்தம்னு கேட்கிறீங்களா.. மகாவிஷ்ணுவின் பிரம்ம ஹத்தி தோஷம் நீங்க, சிவபெருமான் தன் கை மானை இங்கே வரச் செய்ய, மான் தன் பாதத்தாலேயே தோண்டின தீர்த்தம் அது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் மூணுமே இங்கே விசேஷம். அதனால் ஒருநாள் கூட பூஜையை விடக் கூடாதுன்னு எங்க அப்பா சொல்லிக் கொண்டே இருப்பார். சிறப்பு பூஜை நடக்கிறதோ இல்லையோ, நாலுகால பூஜையை யாவது குறைவில்லாமல் பண்ணனும்னு சொல்லுவார். நானும் என்னால் இயன்ற வரைக்கும் குறைவில்லாமல் செய்றேன்.

திருத்தொண்டர் 13 - `காலமெல்லாம் சுவாமியின் திருவடியில்தான்!'

எனக்குக் கடைசிவரைக்கும் சம்பளம்னு பார்த்தா முன்னூறு ரூபாய்தான். ஆனா இத்தனை வருஷத்திலும் சம்பளம் குறைச்சல்னு தோணினதே இல்லை. பல கஷ்டங்கள் வரும்; போகும். ஒரு நிமிஷம் சுவாமி சந்நிதானத்துல நின்னு கண்ணீர் விடுவேன். அவ்வளவுதான். `நான் இருக்கேன் போடா'ன்னு சுவாமி சொல்றமாதிரித் தோணும். அடுத்த கணம் சரியாயிடுவேன். இதனால் பூஜை காரியங்கள் சுணங்கக் கூடாது பாருங்க.

என் காலம் வேற.. இந்த அளவுக்கு எதுவும் முன்னேறலை. நான் சொற்ப சம்பளத்துக்கு வேலை பார்த்தா மாதிரி என் பையனும் வேலை பார்க்கணும்னு நான் எதிர்பார்க்க முடியுமா... சுவாமி கைங்கர்யத்தை விடாம செய்வானான்னு கவலையா இருந்தது. ஆனா, என்னைவிட சுவாமி மேல அவனுக்குப் பிரியமும் பக்தியும் அதிகமா இருந்தது. அதனால்தான் அவனே விரும்பி இந்த வேலையை ஏத்துக்கிட்டான். அவனுக்கு இப்போ மூவாயிரம் சம்பளம். அதுவும் பெரிய சம்பளம் இல்லைதான். ஆனா, சம்பளம் மட்டுமே முக்கியம் கிடையாது இல்லையா...

இந்தக் கோயிலுக்குன்னு பரம்பரை நிர்வாகிகள் இருக்காங்க. அவாளோட ஒத்துழைப்போட கொஞ்சம் கொஞ்சமா எடுத்து செய்யுறோம். இந்த சுவாமிகிட்ட என்ன வேண்டிக் கொண்டாலும் உடனே நிறைவேத்திடுவார். நிறையபேர் இங்கே வந்து வேண்டிக்கொண்டு வெளிநாட்டுக்கு வேலைக்குப் போயிருக்காங்க. நிறைய பேருக்குக் கல்யாணம் ஆகியிருக்கு. வழக்கு பிரச்னைன்னு எது இருந்தாலும் வேண்டிக் கொண்டால் சீக்கிரம் சாதகமாகிவிடும்.

கீர்த்திவாசன்
கீர்த்திவாசன்

ஆனால் பக்தர்கள் வருவது குறைச்சல்தான். பிரதோஷம், பண்டிகைன்னா இருபதுபேர் வருவாங்க. இங்கே சரபேஸ்வரர், கோஷ்டத்தில் துர்கைக்கு மேலே புடைப்புச் சிற்பமா எழுந்தருளியிருக்கார். ரொம்ப வரப்பிரசாதி. அமாவாசை நாளில் சரபேஸ்வரர் வழிபாடு செய்வது ரொம்ப விசேஷம். ரொம்ப காலமா அமாவாசை நாளில் சரபேஸ்வரர் யாகம் செய்யணும்னு ஆசை. அது இப்போதான் கூடியிருக்கு. போன அமாவாசை (6.9.2021) அன்றிலிருந்து இங்கே யாகம் செய்யத் தொடங்கியிருக்கோம்.

இந்த யாகத்தோட மகிமை தெரிஞ்சு பலரும் வந்து கலந்துக்கணும் முல்லைவன நாதரை தரிசனம் பண்ணி அனுக்கிரகம் பெறணும். இதுதான் என் ஆசை. மற்றபடி கோயில் பணிகளை எல்லாம் ஒருகுறை இல்லாமல் கீர்த்தி பார்த்துப்பான். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு'' என்று சொல்லிவிட்டு `உச்சிகால பூஜைக்கு எல்லாம் தயாரா' என்று குரல் கொடுத்தார். கீர்த்திவாசனும் `எல்லாம் தயார்' என்று சொல்லிக் குரல் கொடுக்க சுந்தரமூர்த்தி எழுந்துகொண்டார்.

திருத்தொண்டர் 13 - `காலமெல்லாம் சுவாமியின் திருவடியில்தான்!'

பன்னிரண்டாம் நூற்றாண்டுத் திருக்கோயில். இன்னும் பாதுகாக்கப்பட்டுப் பூஜிக்கப்பட்டு வருகிறதென்றால் அது சுந்தரமூர்த்தியின் பரம்பரையினரின் சேவையால்தான்.

இப்படி ஒரு குடும்பம் வாய்க்காமல், சிதிலமடைந்து கிடக்கும் கோயில்கள் எத்தனை எத்தனை? நம் வரலாற்றையும் பண்பாட்டையும் ஆன்மிகத்தையும் கட்டிக் காப்பாற்றிவரும் சுந்தரமூர்த்தி குருக்கள் போன்ற திருத்தொண்டர்களை மனதில் வணங்கி நன்றி கூறினோம்.

``இருந்து பூஜையைப் பார்த்துவிட்டுத் தான் போகணும்'' என்றார் சுந்தரமூர்த்தி.

அதைவிட வேறு பாக்கியம் நமக்கு உண்டா என்ன?

- தொண்டர்கள் வருவார்கள்.