Published:Updated:

நின்ற கோலத்தில் அத்திவரதர்... புதிய புகைப்படம்!

JAYAVEL B

நேற்று இரவிலிருந்து விடியற்காலை வரை அத்திவரதரை நிற்க வைப்பதற்கான தீவிர ஏற்பாடுகளைக் கோயிலில் உள்ள அர்ச்சகர்கள் செய்தனர்.

நின்ற கோலத்தில் அத்திவரதர்
நின்ற கோலத்தில் அத்திவரதர் ( பா.ஜெயவேல் )

காஞ்சிபுரம் தேவராஜப் பெருமாள் கோயிலில், 40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கோலாகலமாக நடந்துவருகிறது. ஜூலை 1-ம் தேதி தொடங்கி, கடந்த 31 நாள்களாக அத்திவரதர் சயன கோலத்தில் காட்சியளித்தார்.

அத்திவரதரைத் தரிசிக்க காத்திருக்கும் கூட்டம்
அத்திவரதரைத் தரிசிக்க காத்திருக்கும் கூட்டம்
பா.ஜெயவேல்

32-வது நாளான இன்றிலிருந்து ஆகஸ்டு 17-ம் தேதிவரை அத்திவரதரை நின்ற கோலத்தில் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி, நேற்று மாலை 5 மணியுடன் சயன கோலத் தரிசனம் நிறைவுற்றது. இதுவரை சுமார் 45 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துச் சென்றுள்ளனர்.

அத்திவரதரின் கால் பகுதியில் சேதம் உள்ளது. அதுபோல் கைப்பகுதியும் ஏற்கெனவே உடைந்து, தங்கம் கலந்த செப்புத் தகட்டால் ஒட்ட வைக்கப்பட்டுள்ளது. இதனால் அத்திவரதரை நிற்கவைப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன. இந்த நிலையில், நேற்று இரவிலிருந்து விடியற்காலை வரை அத்திவரதரை நிற்க வைப்பதற்கான தீவிர ஏற்பாடுகளைக் கோயிலில் உள்ள அர்ச்சகர்கள் செய்தனர். இதனைப் பார்வையிட மாவட்ட நிர்வாக அதிகாரிகள், அறநிலையத்துறையினர் என யாருக்கும் அனுமதி இல்லை.

நின்ற கோலத்தில் அத்திவரதர்
நின்ற கோலத்தில் அத்திவரதர்
பா.ஜெயவேல்

அத்திவரதர் நின்ற கோலத்திற்குத் தயாரான பிறகு, இன்று அதிகாலை 5.20 மணியிலிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நின்ற கோலத்தின் முதல் நாளான இன்று, அடர் ஊதா நிற பட்டுடுத்தி, மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

நின்ற நிலையில் இருக்கும் அத்திவரதரைக் காண பக்தர்கள் நள்ளிரவு முதலே காத்திருக்கிறார்கள். மேலும், நேற்று மாலை காஞ்சிபுரம் வந்த வெளிமாநில பக்தர்களும் அத்திவரதரை தரிசிக்கக் காத்திருந்தனர். இதனால் பக்தர்கள் கூட்டம் காஞ்சிபுரம் முழுவதும் அலைமோதுகிறது.

அத்திவரரை தரிசித்த பக்தர்கள் கூட்டம்
அத்திவரரை தரிசித்த பக்தர்கள் கூட்டம்
பா.ஜெயவேல்

விஐபி மற்றும் விவிஐபி வழியில் யாரும் நுழையாதவாறு காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தடுப்புகளை அமைத்துள்ளனர். அதிக அளவு கூட்டம் வரும் என்பதால், வெளிமாவட்டங்களில் இருந்து பாதுகாப்புப் பணிக்கு காவலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு சுமார் 7,500 காவலர்கள் காஞ்சிபுரம் நகரம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். சயன கோலத்தில் அத்தி வரதரைத் தரிசித்தவர்கள், நின்ற கோலத்திலும் தரிசிக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளதால், 17 நாள்களும் மக்கள் கூட்டத்தால் காஞ்சிபுரம் நிரம்பிவழியும் என்பதில் ஐயமில்லை என்கின்றனர் கோயில் நிர்வாகத்தினர்.