Published:Updated:

தமிழ்நாட்டின் கங்கைத் தலங்கள்!

அரியதுறை
News
அரியதுறை

இந்த தேசத்தின் புண்ணியத் தலங்கள் பலவற்றிலும் பல்வேறு காரணங்களுக்காக எழுந்தருளி பக்தர்களுக்கு அனுக்கிரகம் தருபவள் கங்கை மாதா.

பாரத தேசத்தில் பாயும் புண்ணிய நதிகளில் தலையாயது கங்கை. புனித நீராடுதலில் கங்கை ஸ்நானம் பெரிதெனப் போற்றப்படுகிறது. தீபாவளி நாளில் அனைத்து நீர் நிலைகளிலும் கங்கையே நிறைந்திருப்பாள் என்பது ஐதிகம். அதுமட்டுமன்றி, இந்த தேசத்தின் புண்ணியத் தலங்கள் பலவற்றிலும் பல்வேறு காரணங்களுக்காக எழுந்தருளி பக்தர்களுக்கு அனுக்கிரகம் தருபவள் கங்கை மாதா. அப்படித் தமிழகத்தில் அவள் எழுந்தருளியதால் புண்ணியம் வாய்ந்தவையாய்த் திகழும் திருத்தலங்கள் சிலவற்றை இங்கே தரிசிப்போம்.

திருப்பூந்துருத்தி

இறைவன் : ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர்

இறைவி : ஸ்ரீசௌந்தர்ய நாயகி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

திருத்தலச் சிறப்புகள்: ஒருமுறை முனிவர்கள் கூடி, தங்களுக்குள் புண்ணிய நதிகளில் நீராடுவது குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு முனிவர், ``ஆடி அமாவாசை தினத்தில் வேதாரண்யம், தனுஷ்கோடி, சங்குமுகம், திருவேணி சங்கமம், கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, காவிரி, சிந்து, பிரம்மபுத்ரா, தாமிரபரணி, ராமேஸ்வரம் ஆகிய 13 புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடினால் பெரும் புண்ணிய பலன் கிடைக்கும்; பித்ரு சாபங்கள் விலகும் என்றெல்லாம் புராணங் களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஒரே நாளில் எப்படி ஒருவரால் 13 தீரங்களிலும் நீராடமுடியும்...'' என்று கேட்டார்.

இறைவன்	:	ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர்; இறைவி	:	ஸ்ரீசௌந்தர்ய நாயகி
இறைவன் : ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர்; இறைவி : ஸ்ரீசௌந்தர்ய நாயகி

பலரும் அவர் சொல்வதை ஆமோதித்தபோது காசியப முனிவர் மட்டும் மாறுபட்டார். ``ஏன் முடியாது... நான் ஆடி அமாவாசை அன்று இந்தப் 13 தீர்த்தங்களிலும் நீராடி, பிதுர் தர்ப்பணம் முடித்துக் காட்டுகிறேன்'’ என்று கூறினார்.

இதற்காக அவர் சிவத்தலம்தோறும் சென்று வழிபட்டு வந்தார். அப்படி திருப்பூந்துருத்தி வந்தடைந்து இங்கு கோயில்கொண்டிருந்த ஈசனை வழிபட்டபோது, ஈசன் அவருக்குக் காசிவிஸ்வநாதராக தரிசனம் கொடுத்தார். மேலும், அங்கே ஒரு தீர்த்தம் ஒன்றை உருவாக்கி அதில் 13 புனித தீர்த்தங்களையும் எழுந்தருளச் செய்தார். காசியபர் அந்தத் தீர்த்ததில் நீராடி, இறைவனையும் அபிஷேகித்து மகிழ்ந்தார். அவரால் உருவான அந்த தீர்த்தத்துக்கு காசிப தீர்த்தம் என்றே பெயர் உண்டானது.

வழிபாட்டுச் சிறப்புகள் : திருப்பூந்துருத்தியில் ஈசனை வழிபட்டால் காசியில் சென்று இறைவனை தரிசித்த பலன் கிடைக்கும். மேலும், கிணற்று வடிவில் உள்ள காசிப தீர்த்ததில் ஆடி அமாவாசை அன்று நீராடினால், கங்கை முதலான 13 நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும் என்கின்றன புராணங்கள்.

எப்படிச் செல்வது?: தஞ்சாவூரிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது திருப்பூந்துருத்தித் திருத்தலம். பேருந்து வசதி உண்டு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அரியதுறை

இறைவன் : ஸ்ரீவரமூர்த்தீஸ்வரர்

இறைவி : ஸ்ரீமரகதவல்லி.

திருத்தலச் சிறப்புகள்: கடும் தவமிருந்த ரோம மகரிஷிக்கு சிவபெருமான் காட்சி கொடுத்த தலம் அரியதுறை. அவ்வாறு காட்சி தந்த ஈசனிடம், ``வரமூர்த்தீஸ்வரராக தாங்கள் இங்கே கோயில் கொண்டு அருளவேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார் மகரிஷி.

ஈசனும் அவ்வாறே அங்கு கோயில் கொண்டருளினார். ரோம மகரிஷியின் சீடர் முகுந்தன் என்பவர். இவர், நாள்தோறும் வரமூர்த்தீஸ்வரருக்குத் திருப்பணியும் ரோம மகரிஷிக்குத் தொண்டும் செய்து வந்தார்.

ஒருமுறை, முகுந்தனுக்கு கங்கையில் நீராடும் ஆவல் ஏற்பட, அதைத் தன் குருநாதரிடம் தெரிவித்தார். உடனே, ``நாளை காலை அரணி நதியில் நீராடு'' என்று சொன்னார் குரு. குருவின் கட்டளைப்படி மறுநாள் நீராட நதியில் மூழ்கி எழுந்த போது, முகுந்தனுக்கு ஈசன், காசி காலபைரவராகக் காட்சி கொடுத்தார். அப்போது பைரவர் காட்சி கொடுத்த இடத்துக்குப் பின்னால் இருந்து கங்கை நதி ஒரு பிரவாகமாகப் புறப்பட்டு அரணியில் கலந்தது. முகுந்தனின் விருப்பம் பூர்த்தியானது. முகுந்தனுக்காகப் பொங்கிய கங்கை இன்றும் அரியதுறையில் ஒரு கிணறாக உள்ளது.

ஸ்ரீவரமூர்த்தீஸ்வரர்; இறைவி	:	ஸ்ரீமரகதவல்லி.
ஸ்ரீவரமூர்த்தீஸ்வரர்; இறைவி : ஸ்ரீமரகதவல்லி.

வழிபாட்டுச் சிறப்புகள் : வரமூர்த்தீஸ்வரர் என்ற திருநாமத்துக்குக்கேற்ப கேட்கும் வரங்களையெல்லாம் தரும் ஈசன் இவர். இந்த ஆலயம் வந்து தொழுதால், எந்த கிரக தோஷமும் நம்மை பாதிக்காது என்பது ஐதிகம். அதனால்தான் இங்கு நவகிரக சந்நிதி இல்லை. அம்பாளையும் அவள் சந்நிதி விதானத்தில் திகழும் நாகம், பல்லி போன்ற உருவங்களையும் ஒருசேர தரிசித்தால், தோஷங்கள் எதுவும் நம்மை அண்டாது. மேலும் கங்கை பொங்கிய தீர்த்தக் கிணற்றின் நீர் நம்மீது பட்டாலே, கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும் என்கிறார்கள் அடியவர்கள்.

எப்படிச் செல்வது?: சென்னையிலிருந்து காளஹஸ்தி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 37 கி.மீ. தொலைவில் உள்ளது அரியதுறை.

திருவிசநல்லூர்

இறைவன் : ஸ்ரீசிவயோகிநாதர்

இறைவி : ஸ்ரீசாந்தநாயகி

திருத்தலச் சிறப்புகள் : நான்கு யுகங்களாக உள்ள திருத்தலம் இது என்கிறது தலபுராணம். இந்த ஊரில் வாழ்ந்த மகான் ஸ்ரீதர ஐயாவாள், சிவநாம ஸ்தோத்திர மகிமையை விளக்குவதற்கும் திருநாம சங்கீர்த்தனம் செய்வதற்கும் தன் வாழ்வை அர்ப்பணித்த மகான். ஒருநாள் அவர் வீட்டில் சிராத்தம் நடைபெற இருந்தது. அப்போது உணவு வேண்டி வந்தான் ஒரு பிச்சைக்காரன். அப்போது அந்தணர்களுக்கு அளிக்கப்படும் சிராத்த உணவு மட்டுமே தயாராக இருந்தது. இதைத் திதி கொடுத்த பின்பு, வேதியர்கள் மட்டுமே உண்ண வேண்டும்.

ஆனால், இந்த நியதியை மீறி, அந்த உணவை அந்த ஏழைக்குத் தந்துவிட்டார் ஸ்ரீதர ஐயாவாள். ஊரும் உறவும் இதுகுறித்துக் குற்றம் சாட்டியது. இதனால் அபசாரம் நேர்ந்ததாகச் சொல்லி கங்கை யில் நீராடி வந்தால் மட்டுமே மீண்டும் சிராத்தம் செய்துவைக்க முடியும் என்றும் கூறினர். கங்கை சென்று வரவே ஓராண்டு ஆகும் என்பதால் தன் பித்ரு காரியம் தடைப்படுமே என்று வருந்திய ஸ்ரீதர ஐயாவாள், ஈசனை நினைத்து வேண்டி கங்காஷ்டகம் என்னும் ஸ்தோத்திரம் பாடினார். அப்போது அவர் வீட்டிலேயே கங்கை ஆவிர்பவித் தாள். கிணறு பொங்கி அந்த ஊரே மூழ்கிவிடும் அளவுக்கு பெருகினாள். ஊர் மக்கள் அஞ்சி ஸ்ரீதர ஐயாவாளைச் சரணடைந்தனர். அவர் அவர்களை மன்னித்து அருளவும் கங்கை கிணற்றில் அடங்கினாள்.

ஸ்ரீசிவயோகிநாதர்;
இறைவி	:	ஸ்ரீசாந்தநாயகி
ஸ்ரீசிவயோகிநாதர்; இறைவி : ஸ்ரீசாந்தநாயகி

வழிபாட்டுச் சிறப்பு : இந்தத் தலத்தில் ஞானகால பைரவர் அருகில் தட்சிணாமூர்த்தியும், சொர்ணா கர்ஷண பைரவர் அருகே மகாலட்சுமியும், உன்மத்த பைரவர் அருகே பால சனியும், யோக பைரவர் அருகே உத்திரகயிலாய லிங்கமும் அருள்பாலிக்கிறார்கள்.

இங்கு தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவர்களின் துன்பங்கள் யாவும் தீரும் என்பது நம்பிக்கை. மேலும் கங்கை பிரவாகமெடுத்ததன் சாட்சியாக, ஸ்ரீதர ஐயாவாள் மடத்தில் இன்றும் கார்த்திகை அமாவாசை நாளில் நீர் பொங்கி வருகிறது. இந்த அதிசயத்தை அனைவரும் காணலாம். அந்த நாளில் அங்கு நீராடுபவர்களுக்குப் பாவங்கள் நீங்கி கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

எப்படிச் செல்வது?: கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் திருவிசநல்லூர் உள்ளது.

மயிலாடுதுறை

இறைவன் : ஸ்ரீமயூரநாதர்

இறைவி : ஸ்ரீஅபயாம்பாள்

திருத்தலச் சிறப்புகள் : சிவபெருமானின் அருளை வேண்டி உமையம்மை மயிலாக மாறி வழிபட்ட தலம் மயிலாடுதுறை. மயில் வடிவில் வழிபட்ட அம்பிகையின் பக்திக்கு இரங்கிய சிவபெருமான், ஆண் மயிலாக வந்து காட்சி தந்து தாண்டவமாடிய திருத்தலம் இது. சிவனார் இங்கு மயிலுருக்கொண்டு தாண்டவமாடியதால் கௌரி மயூரநாதர், கௌரி தாண்டவரீசர், மயூரநாதர் என்றெல்லாம் போற்றப்படுகிறார். இந்தத் தலத்தில் பாயும் நதி காவிரி.

சகல பாவங்களையும் போக்கும் புண்ணிய நதியாகக் கருதப்படும் கங்கை ஒருமுறை தன் பொலிவை இழந்தாள். மக்களின் பாவங்களை எல்லாம் அவள் ஏற்றுக்கொண்டு போக்குவதால் அவள் மேனி மாசடைந்தது. தன்னிடம் சேர்ந்த பாவங்கள் நீங்கி மீண்டும் பொலிவுபெறும் மார்க்கம் என்ன என்று அவள் சிவனாரை வேண்டிக் கேட்டபோது, ``தென்திசையில் மயில்வடிவாக அம்பிகை என்னை வழிபட்ட தலத்தில் பாயும் காவிரிக் கரைக்குச் சென்று நீராடினால், உன் அனைத்தும் பாவங்கள் நீங்கும்'' என்று ஈசன் கூறியருளினார். அதன்படி ஒரு ஜப்பசி மாதத்தில் கங்கை வந்து காவிரியில் நீராடினாள். அதனால் அவள் பாவங்கள் எல்லாம் நீங்கி புத்தொளி பெற்றாள்.

ஸ்ரீமயூரநாதர்;
இறைவி	:	ஸ்ரீஅபயாம்பாள்
ஸ்ரீமயூரநாதர்; இறைவி : ஸ்ரீஅபயாம்பாள்

வழிபாட்டுச் சிறப்புகள் : மயிலாடுதுறையைச் சுற்றிக் காவிரிக் கரையோரமெங்கும் சிவபெருமான் எழுந்தருளும் தலங்கள் மிகவும் இன்றியமையாதவை. கங்கை எழுந்தருளுவதாலும் காசி விஸ்வநாதரே இந்தத் தலத்தில் எழுந்தருளிக் காட்சியருளியதாலும் இது காசிக்கு நிகரான தலமாகக் கொண்டாடப் படுகிறது.

கங்கை, தனக்குப் புத்தொளி அளித்த காவிரியில் ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி முதல் நாள் முதல், கார்த்திகை முதல் நாள் வரை எழுந்தருள்வதாகவும் அப்போது அதில் நீராடினால் கங்கைக் கரையில் நீராடிய புண்ணிய பலன்கள் உண்டாகும் என்றும் சொல்கின்றன புராணங்கள். குறிப்பாக ஐப்பசி மாதம் வரும் தீபாவளி நாளில் இத்தலத்துக் காவிரியில் நீராடுவதன் மூலம் சகல பாவங்களும் நீங்கி வாழ்வில் புத்தொளி பெறலாம் என்பது நம்பிக்கை.

எப்படிச் செல்வது?: மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ தொலைவில் இந்த ஆலயஉள்ளது.

திருக்காஞ்சி

இறைவன் : ஸ்ரீகங்கை வராக நதீஸ்வரர்

இறைவி : ஸ்ரீகாமாட்சி அம்மன்

திருத்தலச் சிறப்புகள் : இந்தத் தலம் சங்கராபரணி நதிக்கரையில் உள்ளது. சங்கரா பரணி என்றால் சங்கரனுக்கு ஆபரணம் ஆனவள் என்று பொருள். சங்கரன் ஆபரணமாகத் தன் மேல் சூடிக் கொண்டிருக்கும் நதி கங்கை. அதனால் சங்கரா பரணியும் கங்கையும் வேறு வேறு இல்லை.

இந்த நதிக்கரையில் அமைந்திருப்பதால் ஈசனுக்கும் கங்கை வராக நதீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. வேத விற்பன்னர் ஒருவர், தன் தந்தைக்கு நீத்தார் கடன் செய்ய அஸ்தியைக் காசிக்குக்கொண்டு சென்றதாகவும், அவர் திருக்காஞ்சியை அடைந்தபோது, மண் பானையில் இருந்த அஸ்தி பூக்களாக மாறியதாகவும் சொல்லப் படுகிறது. முற்காலத்தில் காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் திருக்காஞ்சி தலத்துக்கும் வந்து வழிபாடுகள் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்களாம்!

ஸ்ரீகங்கை வராக நதீஸ்வரர்; இறைவி	:	ஸ்ரீகாமாட்சி அம்மன்
ஸ்ரீகங்கை வராக நதீஸ்வரர்; இறைவி : ஸ்ரீகாமாட்சி அம்மன்

வழிபாட்டுச் சிறப்புகள் : ஆலயத்தில் இறைவன் மேற்கு நோக்கிக் காட்சி தருகிறார். சகல வியாதி களையும் போக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது இத்தலம். காசியில் ஸ்ரீவிசாலாட்சி, ஸ்ரீஅன்னபூரணி ஆகியோர் அருள்வது போலவே, இத்தலத்திலும் ஸ்ரீகாமாட்சி, ஸ்ரீமீனாட்சி ஆகியோர் அருட்காட்சி தருகின்றனர். அமாவாசை நாள்களில் காலை வேளையில் இந்தக் கோயிலுக்கு வந்து முன்னோர் களுக்குத் தர்ப்பணம் கொடுத்து, சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்து வழிபட்டால் பித்ரு தோஷம் விலகி, சுவாமியின் திருவருளோடு முன்னோரின் ஆசிகளும் நமக்குக் கிடைக்கும் என்பது ஐதிகம்.

எப்படிச் செல்வது?: பாண்டிச்சேரி - விழுப்புரம் சாலையில் வில்லியனூர் என்ற இடத்தில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருக்காஞ்சி திருத்தலம்.