Published:Updated:

"ராஜேந்திர சோழர் பிறந்த ஆடித் திருவாதிரை விழாவை அரசு கொண்டாட வேண்டும்!" - பொறியாளர் கோமகன்

ராஜேந்திர சோழர்
ராஜேந்திர சோழர்

"ராஜேந்திர சோழனைக் கொண்டாடினால் உலகம் நமது பெருமைகளை அறிந்து கொள்ளும் என்பது எங்கள் நம்பிக்கை." - கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் தலைவர் பொறியாளர் கோமகன்.

ஆடித் திருவாதிரை தினம் மாமன்னன் ராஜேந்திர சோழனின் ஜன்ம நட்சத்திர தினம் என்று வரலாறு குறிப்பிடுகிறது. இந்திய வரலாற்றில் மாவீரன் அலெக்ஸ்சாண்டர், செங்கிஸ்கான், அசோகர் போன்றோரைக் கொண்டாடும் அளவுக்கு மாமன்னன் ராஜேந்திர சோழனைக் கொண்டாடவில்லை என்பது சோகமே. தமிழகமும் அப்படியே விட்டுவிடக் கூடாது இல்லையா!

படைத்திறனில் மாபெரும் முன்னோடி; வீரத்தில் அரிமா; கட்டடக் கலையில் வியத்தகு கலைஞன்; சமூக சமத்துவத்தில் புரட்சியாளன் என எல்லாத் தளத்திலும் புகழ வேண்டிய மாமன்னன் ராஜேந்திரனை கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம் ஆண்டுதோறும் விழா எடுத்துக் கொண்டாடி வருகிறது. ஆடித் திருவாதிரை விழாவின் (5-8-2021) சிறப்பு குறித்து கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் தலைவராக உள்ள பொறியாளர் கோமகனிடம் உரையாடினோம்.

கங்கை கொண்ட சோழபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்

ஆடித் திருவாதிரை தினம் தமிழர்களின் போற்றுதலுக்குரிய பண்டிகை தினம் என்கிறீர்களே, ராஜேந்திர சோழனைக் கொண்டாட வேண்டிய கட்டாயம் இப்போது என்ன?

"வடதிசை கங்கையும், தென்திசை ஈழமும், குடதிசை மகோதையும், குணதிசை கடாரமும் வென்றெடுத்த மாமன்னன் ராஜேந்திர சோழனைக் கொண்டாடுவது என்பது நம் பாராம்பர்யப் பெருமையை நினைவுகொள்வது என்றே பொருள். போற்றுதலுக்குரிய ராஜராஜ சோழருக்கும் வானவன் மாதேவிக்கும் திருமகனாக ஆடி மாதம் திருவாதிரையில் பிறந்தவர் மதுராந்தகன். இவர் கி.பி.1012-ல் இளவரசராக முடி சூட்டிக்கொண்ட போது அபிஷேகப் பெயராக 'ராஜேந்திரன்' என்னும் பெயரைக் கொண்டார். ராஜேந்திர சோழனைக் கொண்டாடினால் உலகம் நமது பெருமைகளை அறிந்து கொள்ளும் என்பது எங்கள் நம்பிக்கை."

ராஜேந்திர சோழரின் பிறந்த நாள் குறித்து பல சர்ச்சைகள் உருவாகின. அது பற்றி உங்கள் குழுமம் எடுத்த தெளிவான ஆய்வு முடிவுகள் குறித்தும் இன்னும் சர்ச்சைகள் உள்ளனவா?

"இல்லை. மிகத் தெளிவாக ராஜேந்திர சோழரின் பிறந்த தினத்தை அவர் காலத்தில் அவரே எடுப்பித்த கல்வெட்டுகள் வழியே அறிந்து சொன்னோம். இது பரவலாக நம்பப்படுகிறது. முதலில் ராஜேந்திரர் பிறந்த மாதத்தைக் கண்டறிவதே பெரும் சவாலாக வரலாற்று ஆய்வாளர்களுக்கு இருந்து வந்தது. பஞ்சவன்மாதேவீச்சரம் கல்வெட்டு, விருத்தாசலம் கல்வெட்டு மற்றும் திருவொற்றியூர் கல்வெட்டுகளின் அடிப்படையில் ராஜேந்திர சோழன் பிறந்தது ஓர் ஆதிரை நாளில் என்பது உறுதிப்பட்டது. இதை வைத்து சதாசிவப் பண்டாரத்தார் மார்கழித் திருவாதிரையே ராஜேந்திரனின் பிறந்த தினம் என்று எழுதினார். நீலகண்ட சாஸ்திரியோ ஆதிரை என்றாலும் எந்த மாதம் என்பதைக் குறிப்பிடவில்லை. இந்த நிலையில் திருவொற்றியூர் கல்வெட்டின்படி ஒவ்வொரு மாதத்தின் திருவாதிரை நாளிலும் ராஜேந்திர சோழரின் நினைவாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன என்றே முடிவுக்கு வரப்பட்டது.

கங்கைகொண்ட சோழபுரம்
கங்கைகொண்ட சோழபுரம்

மேல்பாடி சோழேந்திர சிங்க ஈஸ்வரமுடையார் கோயிலில் உள்ள கல்வெட்டு ஒன்று ராஜேந்திரன் ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர் என்று சான்று கூறியது. இதற்கு மேலும் உறுதியான சான்றாக திருவாரூர் கல்வெட்டு, ஐப்பசி சதயத்தில் ராஜராஜ சோழரும், ஆடித் திருவாதிரை நாளில் ராஜேந்திர சோழரும் பிறந்தவர்கள் என ராஜேந்திர சோழனின் வழியாகவே ஆணித்தரமாக எடுத்துக் காட்டுகிறது. 'அய்யர் பிறந்து அருளிய ஐப்பிகைச் சதயத் திருவிழா வரைவுக்குத் திருமுளையட்டவும், தீர்த்தத்துக்குத் திருச்சுண்ணம் இடிக்கவும், நாம் பிறந்த ஆடித் திருவாதிரை நாளில் திருவிழா வரைவு குருமுளையட்டவும், தீர்த்தத்துக்குத் திருச்சுண்ணம் இடிக்கவும்’ என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட கல்வெட்டுகளின் அடிப்படையில் ராஜேந்திர சோழரின் பிறந்த நாளை கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம் கொண்டாடத் தொடங்கியது.

ஆடித் திருவாதிரை
ஆடித் திருவாதிரை

மேலும் ராஜேந்திர சோழரின் 1000-வது பட்டமேற்ற விழாவையும், அவரின் பிறந்த நாளையும் கொண்டாட விரும்பிய அரியலூர் மாவட்ட நிர்வாகம் ஒரு குழுவை அமைத்தது. அதில் முனைவர். குடவாயில் பாலசுப்ரமணியம், முனைவர் இல.தியாகராஜன், இவர்களோடு நானும் இணைந்து திருவாரூர் ஆலயத்தில் பல ஆய்வுகள் செய்து இறுதியில் மாவட்ட நிர்வாகத்துக்கு ராஜேந்திர சோழன் பிறந்தது ஆடித் திருவாதிரை நாள்தான் என்று தெரிவித்தோம்."

ஆடித் திருவாதிரை விழாவின் சிறப்புகளை முன்னெடுத்தத்தில் உங்கள் குழுமத்தின் பங்கு என்ன?

"ராஜேந்திர சோழரின் பிறந்த நாளை அறிவித்ததோடு இல்லாமல், கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுவை அமைத்து 2014-ம் ஆண்டு முதல் ஆடித் திருவாதிரை விழாவைக் கொண்டாடவும் ஆரம்பித்தோம். அது ராஜேந்திர சோழன் அரியணை ஏறி ஆயிரம் ஆண்டுகளை நிறைவு செய்த ஆண்டு என்பதால் அவர் பிறந்த நாளிலேயே இந்த விழாவைக் கொண்டாடினோம். மூன்று நாள் விழாவாக வெகு விமரிசையாகக் கொண்டாடினோம். தஞ்சையிலிருந்து தொடர் தீபம் ஏந்திவந்து, கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆயிரம் பெரிய அகல் விளக்குகளில் தீபம் ஏற்றினோம்.

அதிலிருந்து தொடர்ச்சியாக ஒவ்வோர் ஆண்டும் எங்கள் குழுமம் இந்த விழாவைக் கொண்டாடியது. இதன் வழியே பல மக்களுக்கு ராஜேந்திர சோழன் குறித்த பார்வை விரிவானது. ஆடித் திருவாதிரை நட்சத்திர நாளில் காலை கங்கை கொண்ட சோழபுரப் பெருவுடையாருக்கு மகாஅபிஷேகம், மதியம் அன்னதானம், மாலையில் கலாசார நிகழ்வுகள் என நடைபெறும். இந்த நிகழ்வுகளுக்கு முந்தைய தினம், ஒருநாள் கருத்தரங்கமாக ராஜேந்திர சோழனைக் குறித்து நடத்தப்படும். இந்த விழாவின் வழியே உலகெங்கும் உள்ள தமிழக வரலாற்று ஆய்வாளர்களுக்கு, சோழர்கள் மீது பற்று கொண்ட வரலாற்று மாணவர்களுக்கு பெரும் உந்துதல் உண்டானது. ராஜேந்திரன் குறித்த பெருமைகளும் பலருக்கும் சென்று சேர்ந்தது. என்றாலும் எங்களுக்கு ஒரு குறை இருந்து வருகிறது..."
என்று நிறுத்திக் கொண்டார் கோமகன்.

அது என்ன என்று சொல்லுங்கள் என்றதும்...

ராஜேந்திரன்
ராஜேந்திரன்

"தஞ்சையில் ஆண்டுதோறும் ஐப்பசி சதய நாள் ராஜராஜ சோழரின் பிறந்த நாளாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இரண்டு நாள் விழாவாக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

தஞ்சையில் ஆண்டுதோறும் ஐப்பசி சதய நாள், ராஜராஜ சோழரின் பிறந்த நாளாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இரண்டு நாள் விழாவாக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழா மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் காலத்தில் எடுக்கப்பட்டது. உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு சதய விழா தொடர்கிறது. எப்படித் தந்தை கலைஞர், ராஜராஜ சோழரின் சதய விழாவை சிறப்பாகக் கொண்டாடினாரோ, அதேபோல் மகனான முதல்வர் ஸ்டாலின், ராஜராஜசோழரின் மகனான ராஜேந்திர சோழரின் ஆடித் திருவாதிரை விழாவை அரசு விழாவாக முன்னெடுத்துக் கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறோம். அதை கோரிக்கையாக விடுத்தும் இருக்கிறோம். இந்த ஆண்டு ஆடித் திருவாதிரை 5.8.21 அன்று வருகிறது. அதற்கு அரசு பரிசீலித்து நல்ல பதில் சொல்லும் என்று காத்திருக்கிறோம்.

இந்த விழா நடத்துவது மட்டுமில்லாமல் எங்களுடைய கோரிக்கைகள் மூன்று உள்ளது. ஒன்று ஜெயங்கொண்டத்தில் சென்ற ஆண்டு அரசு கலைக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு ராஜேந்திர சோழரின் பெயர் சூட்டப்பட வேண்டும். இரண்டு, கல்லூரி தற்போது இட வசதியின்றி உள்ளது. அதனால் அந்தக் கல்லூரி கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைப்பட வேண்டும். மூன்றாவதாக அந்தக் கல்லூரியில் வரலாறு மற்றும் தொல்லியல் துறை பாடப்பிரிவு ஒன்று தொடங்க வேண்டும்.

இப்போது மாளிகைமேட்டில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அது மன்னர் வாழ்ந்த பகுதி. அதேபோல் கங்கை சோழபுரம் பகுதி முழுக்க பெரும் வணிகர்கள், பெரும் தொழிற்சாலைகள், பெரும் ஆயுதக் கிடங்கு என அமைந்திருந்தது என வரலாறு கூறுகின்றது. எனவே மாளிகைமேடு மட்டுமின்றி இந்தப் பகுதி முழுக்கப் பெரும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும். அப்போது கிடைக்கும் அரிய பொருள்களைக் கொண்டு அங்கேயே ஓர் அருங்காட்சியகமும் அமைக்கப்பட வேண்டும்.

கங்கை கொண்ட சோழபுரம் சுமார் 267 ஆண்டுகள் தலைநகராக இருந்த பகுதி. இந்தப் பகுதியில் இருந்தே தென்கிழக்கு ஆசியா முழுக்கத் தமிழினம் தன்னுடைய ஆளுமையைச் செலுத்தி வந்துள்ளது. இந்த காலத்தில்தான் தென்கிழக்கு ஆசியா முழுக்க வணிகம், சைவ சமயம் போன்றவை பரவி சிறப்புற்றது என்று போற்றுகிறார்கள். இந்தப் பெருமைகளை இன்னும் விரிவாக அறிந்து கொள்ள இங்கு சோழர் வரலாற்று ஆய்வு மையம் ஒன்றையும் உருவாக்க வேண்டும். இங்கு பதிவு செய்யப்பட வேண்டிய வரலாற்று நிகழ்வுகள் பல உள்ளன. அதை புறக்கணித்துவிடக் கூடாது. மேற்கூறிய எல்லா கோரிக்கைகளையும் அரசு பரிசீலிக்க வேண்டும்.

"பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சி, தொழில் விரிவாக்கம் என்று முனைப்புடன் செயல்படும் அரசு இந்தக் கோரிக்கைகளை உடனே செய்வார்கள் என்று நம்புகிறீர்களா?"

திருவாரூர் கல்வெட்டு
திருவாரூர் கல்வெட்டு


"நிச்சயம் நம்புகிறோம். இப்போது கங்கை கொண்ட சோழபுரம் சிறு கிராமமாக சுருங்கி விட்டது. இங்குள்ள மக்களின் வாழ்வாதாரமாக இருப்பது கங்கை கொண்ட சோழபுர ஆலயச் சுற்றுலாதான். இந்தச் சுற்றுலா எத்தனை மேம்படுகிறதோ அந்த அளவுக்கு இந்தப் பகுதி மக்களின் வாழ்க்கையும் உயரும். மேற்கண்டபடி இங்கு ஓர் அருங்காட்சியகம், ஆய்வு மையம் எல்லாம் உருவானால் சுற்றுலா இன்னும் மேம்படும், இந்த பகுதியும் வளர்ச்சியுறும். அதன் முதல் கட்டமாகவே இந்த விழாவை நாங்கள் முன்னெடுத்தோம். எங்கள் முயற்சி இவ்வளவுதான். இதற்கு மேல் அரசும் இந்த மக்களுக்காக, இந்த வரலாற்றுப் பொக்கிஷங்களுக்காக உதவினால் நிச்சயம் இந்த பகுதி பொலிவு பெரும்.

கிட்டத்தட்ட 85 ஆண்டுகளுக்குப் பிறகு 2016-ம் ஆண்டு கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்துக்கு குடமுழுக்கு விழா எடுத்தோம். அப்போது எங்கள் குழுவைச் சேர்ந்த வீர சோழர் அனுக்கர் படை கங்கைக்குச் சென்று அங்கிருந்து 1000 லிட்டர் நீரைக் கொண்டு வந்தனர். அந்த நீரைக் கொண்டுதான் குடமுழுக்கு செய்தோம். எப்படி ராஜேந்திர சோழன் கங்கையிலிருந்து கொண்டு வந்து குடமுழுக்கு செய்தாரோ அப்படியே செய்தோம். இந்த பகுதி மக்களின் விருப்பப்படி அரசு செயல்பட்டு ராஜேந்திர சோழரின் விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும். இந்த பகுதியின் வரலாற்று மறைவுகள் வெளியாக வேண்டும். எனவே இப்போதைய மைந்தர் அரசு, தந்தை கலைஞரைப் போலவே தமிழனத்தின் பெருமைகளைப் பாதுகாக்க முன் வரவேண்டும். வரும் என்றும் நம்புகிறோம்." என்று முடித்தார் கோமகன்.

வரலாறு தேங்கிய குட்டை அல்ல, அது நீரோட்டம்! நீரோட்டம் விரைந்து செல்ல வழி ஏற்படுத்துவோம்.
அடுத்த கட்டுரைக்கு