திருக்கதைகள்
Published:Updated:

சிதைந்து கிடக்கும் பெருங்கோயில்!

ஆலயம் தேடுவோம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆலயம் தேடுவோம்

ஆலயம் தேடுவோம்

கோயில்கள் கலாசாரப் பொக்கிஷங்கள். வரலாறுப் பதிவுகள். மக்களை ஆன்மிக நெறியில் வழிநடத்தும் போதனைக் கூடங்கள். அதனால்தான் அந்தக் காலத்தில் மன்னர்களும் மக்களும் கோயில்களைக் கட்டி அவற்றைக் கண்ணும் கருத்துமாகப் பராமரித்து வந்தனர். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதைப் புதுப்பிக்கும் செயல் பாடாகக் கும்பாபிஷேக முறைகளையும் வகுத்தனர்.

ஆலயம் தேடுவோம்
ஆலயம் தேடுவோம்


ஆனால் அந்நியர் படையெடுப்பாலும் இயற்கைச் சீற்றங்களாலும் பராமரிப்பின்றியும் பல கோயில்கள் புதையுண்டு போயின. சில கோயில்கள் அழிவைச் சந்தித்து வருகின்றன. அவற்றைப் புதுப்பித்துப் பாதுகாப்பது வரலாற்றுக்கும் ஆன்மிகத்துக்கும் செய்யும் மாபெரும் தொண்டு. அப்படிக் காக்கப்படவேண்டிய ஒரு கோயில் குறித்த செய்தி யோடு அடியவர் ஒருவர் நம்மைத் தொடர்புகொண்டார்.

``செஞ்சி பக்கத்தில் ஒரு பிரமாண்ட கற்றளி சிவாலயம். கொஞ்சம் கொஞ்சமாக மண்ணில் புதைந்து கொண்டிருக் கிறது. அதைப் பார்க்க வருகிறீர்களா ஐயா!" என்று அழைப்பு விடுத்தார். உடனே புறப் பட்டோம்.

செஞ்சி வட்டம், கோணை புதூர் பஞ்சாயத்து, சோமசமுத்திரம் என்னும் ஊரில் இருந்தது அந்தப் பழைமையான சிவன் கோயில். `சோம சமுத்திரம்' என்ற புராணக் காலத்துப் பெயர் இன்று `சோமசுந்தரம்' என்று வழங்கப்படுகிறது.

சற்று தூரத்திலிருந்து, `அதுதான் கோயில்' என்று அடியவர் காட்டியபோது, நம்மையும் அறியாமல் கண்ணீர் பெருகியது. போர்க்களத்தில் அம்புகளால் துழைக்கப்பட்டும் சாய்ந்துவிடாமல் நிமிர்ந்து நிற்கும் மாவீரனைப் போல அந்தக் கற்றளி காலவெள்ளத்தில் பல சிதைவுகளைச் சந்தித்தாலும், முற்றிலும் சாய்ந்துவிடாமல் நின்றது.

ஆலயமும் அதன் அமைவிடமும் செஞ்சி மலையடிவாரத்தில் பரந்துவிரிந்து திகழ்கிறது. செஞ்சி வட்டாரம் சமணர்களின் அடையா ளங்கள் நிறைந்த பூமி. ஒரு காலத்தில் சமணர் களின் தலைநகரைப்போலப் புகழ்பெற்றுத் திகழ்ந்த இடம். பல குடைவரைகளும் கல்வெட்டுகளும் நிறைந்த இந்தப் பகுதியில் சிவாலயத்துக்கு அருகிலேயே சில சமண சமயக் குடைவரைகளும் காணப்படுகின்றன. அவை குறைந்தபட்சம் 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை என்கிறார்கள் ஆய்வாளர்கள். கோயிலுக்கு 500 மீட்டர் அருகிலேயே இவை காணக் கிடைக்கின்றன.

ஆலயப் பகுதிக்குள் பிரவேசித்தோம். முன்புறம் பிரமிக்கவைக்கும் பிரமாண்ட கற்றளியாகத் திகழ்ந்திருக்கவேண்டும். உள்ளே, இடிபாடுகளுக்கு நடுவில்தான் சிவபெருமான் பலகாலம் இருந்துள்ளார்.

சோமசமுத்திரம் கோயில்
சோமசமுத்திரம் கோயில்
சோமசமுத்திரம் சிவாலயம்
சோமசமுத்திரம் சிவாலயம்
சோமசமுத்திரம் கோயில்
சோமசமுத்திரம் கோயில்

25 ஆண்டுகளுக்கு முன்பாக சிவனார் சில அடியவர்களின் மனதோடு பேச, அவர்கள் இந்த ஆலயத்துக்குள் நுழைந்து மூலவரை மீட்கும் முயற்சியில் இறங்கினர். என்ன ஆச்சர்யம்... மூலவர் திருமேனியிலும் நந்தியின் திருமேனியிலும் சிறு பின்னம்கூட இல்லையாம். அடியார்கள் சிலிர்ப்போடு அவற்றைப் பத்திர மாக மீட்டனர். அருகே ஒரு தகரக் கொட் டகை எழுப்பி அதில் ஈசனை எழுந் தருளச் செய்தனர். இன்றுவரையிலும் சுவாமியின் அருளாட்சி அந்தச் சிறு கொட்டகையில் இருந்துதான் நடந்துவருகிறது.

பல்லவர்கள், சோழர்கள், நடுநாட்டு மலையமான்கள், விஜயநகர மன்னர்கள் எனப் பலரும் திருப்பணி செய்த திருக்கோயில் இது. அப்படியானால் நித்திய ஆராதனைகளும் வழிபாடுகளும் எவ்வளவு விமர்சியாக நடந்திருக்கும்?! கோயில் இவ்வளவு பெரிது என்றால், ஊர் எவ்வளவு பெரிதாக இருந்திருக் கும்? ஆனால் இன்று எதுவுமே மிச்சமில்லை. ஆற்காட்டு நவாபுவின் படையெடுப்பின்போது ஊரும் கோயிலும் அழிக்கப்பட்டன.

செஞ்சிக்கோட்டையைச் சுற்றிய பகுதிகளில் சோமசமுத்திரம் கிராமத்தில் உள்ள இந்தக் கோயில்தான் மிகப்பெரிய கோயில் என்கிறார்கள் ஊர்க்காரர்கள். உயர்ந்த மதில் சுவருடன் இருந்த இந்தக் கோயிலின் வாயில் பகுதியும், அதை அடுத்துள்ள மண்டபமும் தற்போது இடிந்து உள்ளே செல்ல முடியாத வகையில் உள்ளன. வட்ட வடிவிலான கருவறை மண்டபமும் விமானமும் இடிந்த நிலையில் உள்ளது. அர்த்த மண்டபம், மகா மண்டபம், சுற்றுப் பிராகாரம் என அனைத்தும் சரிந்துகிடக்கின்றன.

சிவாலயம்
சிவாலயம்

இந்தக் கோயில்களில் உள்ள தூண்களில் நுட்பமான சிற்ப வேலைப்பாடுகள் காணப் படுகின்றன. அவற்றில் புராண நிகழ்வுகள் வடிக்கப்பட்டுள்ளன. இவை எப்போது செதுக்கப்பட்டவை, இந்த ஆலயத்தின் காலம்தான் என்ன என்பது குறித்த தகவல்கள் எதுவும் தற்போது தெரியவில்லை. முழுமையாக இடிந்துகிடக்கும் இந்தக் கோயிலை மீண்டும் புனரமைப்பு செய்தால், இது குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள இயலும். ஆனால் இதைச் செய்ய வேண்டிய அரசு இயந்திரங்கள் மௌனமாக வேடிக்கைப் பார்க்கின்றன.

உள்ளூர் மக்களும் சிவனடியார் கூட்டமும் இதைப் புனரமைக்கும் முயற்சியில் இறங்கி யிருக்கிறார்கள். `நம் தர்மத்தையும் கலாசாரத் தையும், கட்டடக் கலையின் சிறப்பையும் வெளிப்படுத்தும் வகையில் உள்ள இந்தக் கோயிலைப் புனரமைக்க எந்தத் தியாகத்துக்கு தயார்' என்கிறார்கள் அடியார் பெருமக்கள்.

சோமன் என்றால் சந்திரன் என்று பொருள். சந்திரன் வழிபட்ட ஈசனையே `சோமசுந்தரர்' என்று அழைப்பது வழக்கம். தட்சனின் சாபத்தால் தன் கலைகளை இழந்த சந்திரன், இங்குள்ள சுவாமியை வழிபட்டு, அவரது திருமுடியை அலங்கரிக்கும் பேறு பெற்றான். அதனால் சுவாமிக்கு, `சோமசுந்தரர்' என்றும் 'பிறைசூடன்' என்றும் திருநாமங்கள் உண்டாயின என்கிறார்கள்.

சோமசமுத்திரம் கோயில்
சோமசமுத்திரம் கோயில்

இத்தலத்தோடு தொடர்புடைய வேறொரு சோமன் குறித்த புராணக்கதை ஒன்றும் உண்டு. அஷ்ட வசுக்களில் சோமன் மூன்றாமவன் என்றும், இவன் பணி சந்திரனை இயக்குவது என்றும் புராணங்கள் கூறுகின்றன.

ஒருமுறை பிரம்மனிடம் சென்ற அஷ்ட வசுக்கள், தாங்கள் பெற்ற வரங்கள் குறித்து ஆணவமாகப் பேசினார்கள். அதைக் கேட்ட பிரம்மன், `உங்களுக்குப் பிரம்மஹத்தி தோஷம் பீடிக்கட்டும்' என்று சாபமிட்டார். இதனால் வேதனை அடைந்த அஷ்ட வசுக்கள், விமோசனம் வேண்டினர். அதற்கு பிரம்மா, `ஈசனை வழிபட உங்கள் சாபம் தீரும்' என்றார்.

அஷ்ட வசுக்களும் கங்கைக் கரைக்குச் சென்று ஈசனை நோக்கித் தவம் இருந்தனர். ஈசன் தோன்றி அவர்களிடம் ``திருவண்ணாமலைக்குச் சென்று அங்குள்ள மலையை நோக்கியவாறு ஆளுக்கொரு பக்கமாக 8 திசை களிலும் அமர்ந்து தவம் செய்யுங்கள். எப்போது உங்களுக்கு 8 முகங்களாக மலை காட்சி தருகிறதோ, அப்போது உங்கள் சாபம் நீங்கும்'' என்று அருள்பாலித்தார்.

அதன்படி அஷ்ட வசுக்களும் வந்து தவமிருக்க, அவர்களில் சோமன் தவமிருந்த பகுதியே இந்தத் தலம் என்கிறது புராணம். சோமன் தன்னுடைய பட்டணமான விபா புரியைப் போலவே அந்தக் காலத்தில் இந்த ஊரை அமைத்திருந்தானாம்.

வசுவாகிய சோமன் உருவாக்கிய ஆலயம் இது. எனவே அவன் பெயரைக் கொண்டே சுவாமி எழுந்தருளினார். ஊரும் சோம சமுத்திரம் என்றானது. அஷ்ட வசுக்கள் பிறந்தது அவிட்ட நட்சத்திரம். ஆக, அவிட்ட நட்சத்திரத்துக்குரியவர்கள் வழிபட வேண்டிய கோயில் இது என்றும் விவரிக்கிறார்கள். இங்கு வந்து வழிபட, சகலவிதமான தோஷங்களும் தீரும் என்பது ஜோதிடர்களின் கூற்று.

`புராணப் பெருமைகளும், வரலாற்றுச் சிறப்புகளும், வழிபாட்டு முக்கியத்துவமும் கொண்ட இந்த ஆலயம் இந்த பகுதிக்கே பெருமை ஐயா! எங்கள் சுவாமி தனியே நின்றிருக்க இனியும் பொறுத்திருக்க மாட்டோம். சோமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் என அனைத்துப் பரிவார தெய்வங்களுடன் விரைவில் பிரமாண்ட ஆலயமாகப் புனரைமைப்போம். அதற்காக எங்கள் உடல், பொருள் அனைத்தும் தருவோம்' என்கிறார்கள் அடியார் பெருமக்கள்.

அவர்களின் திருப்பணியில் நாமும் உதவு வோம் அன்பர்களே. ஆலயப் பணிக்குக் கொடுப்பது என்பது, நம் தலைமுறைகளுக்கு சேர்த்துவைக்கும் சொத்துதானே!

வங்கிக் கணக்கு விவரம் :

A/c.Name: SRI SOMASUNDARESWARAR

TEMPLE TRUST

A/c.No: 1603115000004532

Bank Name: Karur Vysya Bank

Branch: Gingee

IFSC No: KVBL0001603

தொடர்புக்கு: சிவ.சக்தி குமார் (97873 70151)

ரத சப்தமி சூரிய வழிபாடு!

பல யுகங்களுக்குப் பிறகு பொலிவிழந்த சூரியன், பிரம்மாதி தேவர்களின் முயற்சியால் மீண்டும் ஒளி பெற்ற நாள் ரதசப்தமி. அதே நாளில் மஹாவிஷ்ணு ஒரு சக்கரம் கொண்ட, ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தைச் சூரியனுக்குக் கொடுத்தார்.

தை மாத வளர்பிறை சப்தமி அன்றுதான் ‘ரத சப்தமி’ கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையிலேயே சப்தமி திதி இருந்தால், அன்றே விரதம் இருந்து பூஜை செய்ய வேண்டும். ஒரு வேளை சப்தமி திதி - இரண்டு நாள் தொடர்ந்து அதிகாலையில் இருக்கும்படி வந்தால், முதல் நாளிலேயே விரதத்தையும் பூஜையையும் செய்ய வேண்டும்.

ரத சப்தமியன்று அதிகாலையில் எழுந்து நீராட வேண்டும். தங்கம், வெள்ளி, தாமிரம் முதலான ஏதாவது ஒரு பாத்திரத்தில் எண் ணெய் வார்த்து, தீபம் ஏற்ற வேண்டும். சூரிய வடிவத்தை வரைந்து (அல்லது பிம்பமாக வைத்து) பூஜை செய்ய வேண்டும். அதன் பிறகு அந்தத் தீபத்தை புண்ணிய நதிகளில், நீர்நிலைகளில் விட வேண்டும். இதன் பிறகு, பித்ருக்களுக்கு உண்டான தர்ப்பணம் முதலான வற்றைச் செய்ய வேண்டும். இவ்வாறு முறைப் படி செய்வதன் மூலம் ஏழு ஜன்ம பாவங்களும் விலகிப் போகும்.

ரத சப்தமி அன்று குளிக்கும் முறை: ஏழு எருக்கு இலைகள், ஏழு இலந்தை இலைகள் எடுத்து ஒன்று சேர்த்து அவற்றுடன் அட்சதை, மஞ்சள்தூள் சேர்த்துத் தலையில் வைத்தபடி பெண்கள் நீராடுவது மரபு.

ஆண்களாக இருந்தால் மேலே சொன்னவாறு எருக்கு, இலந்தை இலைகளுடன் அட்சதை மட்டும் சேர்த்து உச்சந் தலையில் வைத்து நீராடுவது மரபு. பெற்றோர் இல்லாதவர்கள் மேற் சொன்ன இலைகளுடன் பச்சரிசியும் எள்ளும் சேர்த்துவைத்து நீராட வேண்டும்.

- சக்திதர், சென்னை-67