Published:Updated:

நல்லன எல்லாம் அருள்வாள் கிரிவல நாயகி !

அருணாசல மகிமை! - எஸ்.கண்ணன்

பிரீமியம் ஸ்டோரி

நினைத்தாலே முக்தி தரும் புண்ணிய க்ஷேத்திரம் திருவண்ணாமலை. எத்தனை முறை வலம் வந்தாலும், தரிசித்தாலும் ‘இன்னும் இன்னும்’ என்ற ஆசையைத் தூண்டும் அற்புதத் தலம் இது.

நல்லன எல்லாம் அருள்வாள்
கிரிவல நாயகி !

`ஆதியே அமரர் கோவே அணி அண்ணாமலையுளானே’ என்று அப்பர் பெருமானும், `தேடிக்காணார் திருமால் பிரமன் தேவர் பெருமானை...’ என்று சம்பந்தப் பெருமானும் சொல்மாலை அணிவித்த அண்ணாமலையார் மலை ரூபம் கொண்டும் அருளும் பதி இது.

அண்ணாமலையார் என்றால், எளிதில் அணுக முடியாதவர் என்று ஒரு பொருள் உண்டு. ஆனால், மிக மிக எளிதில் அணுகக்கூடியவராக அருளும் அண்ணாமலையார் அதிசயத்துள்ளும் அதிசயம்தான்!

அருணாசலேஸ்வரர், அருணகிரியார், சோணாசலேஸ்வரர், அண்ணாநாட்டுப் பெருவுடையார், அண்ணாமலை மாதேவர், அண்ணாமலையான், அருணை மாமணி என்றெல்லாம் போற்றப்படும் அண்ணாமலையார் என்றெல்லாம் இத்தல இறைவனின் நாமங்களை சொல்லச் சொல்ல நம் பாவங்கள் எல்லாம் பொசுங்கிப் போகும்.

இறைவனுக்கு நிகராக அம்பிகையும் வரப்பிரசாதியாக இங்கே அருள்பாலிக்கிறாள். சொல்லப்போனால்... தீபங்கள் ஏற்றியும் கிரிவலம் வந்தும் இந்தத் தலத்துக்கே உரிய வழிபாட்டுச் சிறப்புகளை உலகுக்கு உணர்த்தி முதலில் வழிகாட்டியது இத்தலத்து அம்பிகையே!

நல்லன எல்லாம் அருள்வாள்
கிரிவல நாயகி !

உண்ணாமுலை அம்மன், அபீதகுசாம்பாள், திருக்காம கோட்டமுடைய தம்பிராட்டி, உலகுடைப் பெருமான் நம்பிராட்டி, காம கோட்டமுடைய உண்ணாமுலையாள் என பல திருநாமங்கள் கொண்டவள் திருண்ணாமலை அம்பிகை!

நின்றகோல நாயகியாக, கரங்களில் தாமரை மலர் தாங்கி அருள்கிறாள். சின்னஞ்சிறு பெண் போன்று திருப்பாதங்களைச் சேர்த்து வைத்துக்கொண்டு நிற்கிறாள். சாந்தம் தவழும் திருமுகம்; எல்லையற்ற கருணையைக் கொட்டும் விழிகள்... இந்த அன்னையை தரிசிக்கும் நொடியில் மலர்ச்சி உண்டாகிறது மனதில். எவ்வித துன்பம் வந்தாலும் கவலையில்லை; நம் அம்மை இருக்கிறாள்... காத்தருள்வாள்’ எனும் நம்பிக்கை பொங்கும் அடியார் உள்ளத்தில்.

தெருளே வருக சிவஞானத் தேனே வருக திருவாளர்
தேடி வைத்தப் பேரின்பத் திரளே வருக சன்மார்க்க
அருளே வருக திருவருணை அருந்தாமுலையாய் வருக
அலகில் விளையாட்டு அயருமெங்கள் அம்மே வருக வருகவே


- என்று அம்மையைப் பாடுகிறது உண்ணாமுலையம்மன் பிள்ளைத்தமிழ். நாமும் அப்படியே நம் மனதுக்குள் குடியேற வரும்படி அன்னையை வணங்கி வழிபடுவோம்.

நல்லன எல்லாம் அருள்வாள்
கிரிவல நாயகி !

அருணாசல மாகாத்மியமும், அருணாசல புராணமும் இந்தக் கதையைப் பெருமிதமாகச் சொல்கின்றன. ஸ்காந்த புராணத்தின் மாஹேஸ்வர காண்டத்தில் சுமார் 37 அத்தியாயங்களில் அமைகிறது அருணாசல மாகாத்மியம். பார்வதியும் பரமேஸ்வரரும், திருக்கயிலையில் விளையாட்டாக உரையாடிக் கொண்டிருந்தனர். இறைவனாரின் திருக்கண்களைப் பற்றி அம்பாள் வினவ, அவையே சூரியனும் சந்திரனும் என்று விடையளித்தார் பரமன். அதே விளையாட்டில் ஐயனுடைய கண்களைப் பொத்தி அம்பாள் சிரிக்க, ஐயனும் சிலிர்த்துப் போனார்.

இருப்பினும் அந்தச் சில கணங்கள் உலகம் இருளுக்குள் மூழ்கியதைக் கண்ட கருணை நாயகி, உயிர்களுக்கு அதனால் ஏற்பட்ட தவிப்புக்குப் பிராயச்சித்தம் தேட விழைந்தாள். ‘தவம் செய்யவேண்டும்; தக்க இடம் எது?’ - அம்மை கேட்க, ‘காஞ்சிபுரம்’ என்றார் சிவனார்.

அங்கே வந்து மணலால் லிங்கம் பிடித்து பூஜை செய்தாள் அம்மை. அவளின் அன்பை உலகுக்குக் காட்டும் விதத்தில் சிவனார் திருவிளையாடல் நிகழ்த்த, கம்பா நதி வெள்ளமெனப் பாய்ந்தது. ஆற்றுவெள்ளத்தில் மணல் லிங்கம் கரைந்துவிடுமோ என்று பதறிய அம்பாள், அப்படியே அதனை ஆலிங்கனம் செய்துகொண்டாள். அம்பாளின் பிடியில் ஐயனும் இறுகிக் கொள்ள, ஐயனுக்கு ‘தழுவக் குழைந்தநாதர்’ எனும் சிறப்புத் திருநாமமே ஏற்பட்டது.

அம்பாளுக்கு நெருடல் ஓயவில்லை. ஐயனிடமிருந்து பிரிந்து தனியாக இருப்பதால்தானே இந்த நிலைமை! அவருடைய திருமேனி யுடன் ஒன்றிவிட்டால்..? எண்ணம் உருவானவுடன் அம்மை, ஐயனை வேண்டினாள். கயிலையை விடவும் உயர்ந்த காஞ்சி; அதைவிடவும் உயர்ந்த தலத்தில் தவம் செய்யும்படி ஐயன் ஆணையிட்டார்.

அப்படியொரு தலம் எது? சாட்சாத் திருவண்ணாமலைதான்!

ஒருமுறை திருவண்ணமலை எனும் புனிதப் பதியைப் பற்றி கூறும்படி நந்திகேஸ்வரரிடம் கேட்டாராம் மார்க்கண்டேயர்.அந்தத் தலத்தைப் பற்றி எண்ணியவுடனேயே சமாதி நிலைக்குச் சென்றுவிட்ட நந்தி, நெடுநேரம் கழித்தே எழுந்து சொன்னாராம் அண்ணாமலையின் பெருமைகளை!

கயிலையும் மேருவும் எம்பெருமான் வாசம் செய்யும் இடங்கள் எனில், அண்ணாமலையோ எம்பெருமான் தாமேயாக நிற்கும் தலம்!

கயிலையையும் காஞ்சியையும் விட மேலான தலம் எது என்று அன்னை கேட்டபோது பரமன் அவளுக்குச் சுட்டிக்காட்டியதும் அண்ணாமலையையே! அம்மையும் வந்தாள் தவம் செய்யத் தலைப்பட்டாள். அப்போது, தேவர்களும் முனிவர்களும் அவளைத் தேடி வந்தனர். மகிஷன் எனும் அசுரனின் கொடுமைகளைச் சொல்லி சரண் அடைந்தனர்.

நல்லன எல்லாம் அருள்வாள்
கிரிவல நாயகி !

அம்பாள், தமது வடிவமாக துர்கையை தோற்றுவித்தாள். மகிஷனை அழித்துவரச் சொன்னாள். நீலகிரி மலையில் வாசம் செய்த மகிஷனை அழிக்க, துர்கை புறப்பட்டாள்.

மகிஷனுடைய அசுர வீரர்கள், அம்பிகை தவமிருந்த வகுளாரண்யத்தைச் சிதைக்க ஆரம்பித்தனர். இவர்களை, காட்டில் காவலிருந்த அஷ்ட பைரவர்கள் வதம் செய்தனர்.

சினம் எல்லை மீறிய மகிஷன், தனது படைத் தலைவனான நிகும்பாசுரனை அனுப்பினான். நிகும்பனின் கொட்டத்தை, அஷ்ட பைரவர்களும் மந்திரிணியும் வாராஹியும் அடக்கினர். மகிஷனேப் போருக்கு வந்தான். மகிஷனை எளிதில் அழிக்க முடியவில்லை.

பற்பல படைக்கலங்களை எடுத்து துர்கை போர் செய்ய, எதற்கும் அஞ்சாத மகிஷன், தானும் பற்பல வடிவங்கள் எடுத்து எதிர்த்தான். ‘அசுரன் தனது இயற்கையான எருமைத் தலையுடன் எதிர்ப்படும்போது அவனை மிதித்தால் அழிவான்’ என்று அம்பிகை அறிவுறுத்த, அவ்வாறே செய்தாள் துர்கை.

பின்னர், தமது பரிவாரங்கள் புடைசூழ... இத்தனை பெருமையும் இறைவனார் தந்தது என்று அண்ணாமலையை கிரிவலம் செய்தாள் அம்பிகை. அக்னி மலையின் முன் வணங்கினாள்; தெற்கு முனையும் நிருதி முனையும் தாண்டினாள்; மேற்கு முனையை அடைந்தபோது, ஐயன் ரிஷப வாகனராகக் காட்சி தந்தார். வழிபட்டு, அம்மை தொடர்ந்தாள்;

அவள் ஈசானம் சுற்றி, கிழக்குத் திசையைத் தொட்டவுடன், மங்கல வாத்தியங்கள் முழங்க ஐயன் எதிர் நின்றார். ‘அப்பனும் அம்மையும் வேறு வேறில்லை; இதனை உலகம் உணரட்டும்’ என்றுரைத்த சிவனார், அம்மையைத் தமது இடது பாகத்தில் ஏற்றார். ஆணும் பெண்ணுமாக, அர்த்தநாரியாக, உலகம் உய்ய மாதொருபாகனாகக் காட்சி கொடுத்தார்.

நல்லன எல்லாம் அருள்வாள்
கிரிவல நாயகி !

சிவனாரை மட்டுமே வலம் வந்து வணங்கிய பிருங்கி முனிவரின் செயல் கண்டு, ஸ்வாமியின் திருமேனியுடன் ஒன்றிவிடும் எண்ணம் கொண்டாள் அம்பிகை. கெளதம முனிவர் சொன்னபடி திருவண்ணா மலையில் விரதம் இருந்து சிவபூஜை செய்து ஸ்வாமியின் மேனியில் இடப் பாகம் பெற்றாள் என்ற திருக்கதையும் ஞானநூல்களில் உண்டு.

சிவனாரின் வாம பாகத்தை அம்மை பெற்ற அருள் நாளே, கார்த் திகை மாதத்துப் பௌர்ணமியும் கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருநாள். அந்த நாளில் மட்டுமே, உள்ளிருக்கும் அர்த்த நாரீஸ்வரர் திருவீதியுலா வருவார்.

நாமும் அற்புதமான கார்த்திகைத் திருநாளன்று தீபங்கள் ஏற்றி, `காணும் பொருள் யாவிலும் உலவும் உயிர்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் அம்மையையும் அப்பனையும் ஒளிவடிவாய் தரிசித்து அருள்பெறுவோம்.

நல்லன எல்லாம் அருள்வாள்
கிரிவல நாயகி !

அற்புதக் கல்யாணம்!

திருவண்ணாமலையை அருணை சக்தி பீடம் என்று போற்றுவார்கள். உண்ணாமுலை அம்மன் அருணை சக்தியாக - அனல் பிழம்பாக இங்கு கொலுவிருக்கிறாள். இவளை வணங்கிட இல் வாழ்க்கை சிறக்கு என்பது ஐதீகம்.

அண்ணாமலையாருக்கு அநேகப் பதிகங்களும் புராணங்களும் இருப்பது போலவே உண்ணாமுலை அம்மனுக்கும் உண்ணாமுலையம் மன் பதிகம், உண்ணாமுலையம்மன் சதகம், உண்ணாமுலையம்மன் வருகைப்பதிகம் போன்ற பல பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன.

கார்த்திகை விழா மட்டுமன்றி வேறு சில விழாக்களும் அண்ணா மலையில் விசேஷம். ஆடிப் பூரத்தன்று மாலையில் உண்ணாமுலை அம்மன் சந்நிதி முன்பு தீமிதித் திருவிழா நடைபெறும். தீமிதித் திருவிழா நடைபெறும் ஒரே சிவாலயம் இதுவே என்பது சிறப்பு.

பங்குனி உத்திரத்தை ஒட்டி பெரும்பாலான சிவாலயங்களில் சிவ-பார்வதி திருக் கல்யாணம் நடைபெறும். திருவண்ணாமலையில் திருக்கல்யாண உற்சவம் 6 நாள்கள் நடைபெறுகிறது. பெண் பார்ப்பது, மாலை மாற்றுவது, நலங்கு வைப்பது, தாம்பூலம் மாற்றுவது, பூப்பந்து விளையாடுவது, மணமாகி மறுவீடு செல்வது... என கோலாகலமாக நடைபெறுகிறது இந்த இறைக் கல்யாணம்.

மற்றுமொரு சிறப்பும் இங்கு உண்டு. ஆம், மூலவரான அண்ணா மலையார் உண்ணாமுலை அம்மன் கல்யாணம் முதலில் நடக்கும். பிறகு, உற்சவரான பெரிய நாயகர் - உண்ணாமுலை அம்மன் திருமணம் நடைபெறும். மூலவரே போக சக்தியான கருவறை உண்ணாமுலை அம்மனைத் தாலி கட்டி மணக்கும் வைபவம் இத்தலத்தின் சிறப்பம்சம். பெரும்பாலும் மற்ற தலங்களில் உற்சவருக்கே திருக்கல்யாண வைபவம் நிகழும்.

நல்லன எல்லாம் அருள்வாள்
கிரிவல நாயகி !

மகா தீப விழா!

திருவண்ணாமலையில் கார்த்திகைப் பெருவிழா வெகு விமரிசை யாகப் பல நாட்கள் நடைபெறுகிறது. பத்து நாட்கள் நடைபெறும் அண்ணாமலையார் ஆலய விழாவுக்கு முன்னதாக மூன்று நாட்கள்... துர்கையம்மன் விழா, பிடாரியம்மன் விழா, விநாயகர் விழா ஆகியவை நடந்தேறும். பின்னர் கிராம சாந்தி முளைப்பாலிகை போன்றவை நடந்தேறும். அடுத்து, கொடியேற்றம் தொடங்கும்.

கார்த்திகை விளக்கீடான கார்த்திகைத் திருவிழா வெகு கோலாகலம். முதலில் பஞ்ச மூர்த்திகள் அலங்கார ரூபர்களாக காட்சி மண்டபத்தின் அருகில் கொடி மரத்தடியில் எழுந்தருள்வர். தீபம் ஏற்றப்படுவதற்கு ஏறத்தாழ இரண்டு மூன்று நிமிடங்களுக்கு முன்னர் (மாலை 5:50 - 6:00 மணி வேளையில்) வேணுகோபாலன் சந்நிதிக்கு அருகில் இருந்து புறப்பட்டு ஆடிக்கொண்டே வருவார் அர்த்தநாரீஸ்வரர்.

ஸ்வாமி பஞ்சமூர்த்திகளை நெருங்கியதும், வந்த வேகத்திலேயே உள்ளே செல்ல... அவரது தரிசனம் கிட்டிய தருணம், மலை மீதிருக்கும் பர்வத ராஜகுலப் பெருமக்கள், கார்த்திகை பெருந் தீபத்தை ஏற்றுகின்றனர். ஆறடி உயரமான கொப்பரையில், மலைமீது ஏற்றப் படும் தீபம், மகாதீபமாகத் தொடர்ந்து 11 நாட்கள் எரியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு