Published:Updated:

இறை அபிஷேகம் ஏன்... எதற்கு... எப்படி?

அபிஷேக மகிமைகள்
பிரீமியம் ஸ்டோரி
அபிஷேக மகிமைகள்

காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்

இறை அபிஷேகம் ஏன்... எதற்கு... எப்படி?

காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்

Published:Updated:
அபிஷேக மகிமைகள்
பிரீமியம் ஸ்டோரி
அபிஷேக மகிமைகள்

எல்லாம்வல்ல இறைவனை ஓரிடத்தில் வரவழைத்து, நிலை நிறுத்தி, உயிரினங்கள் அனைவரும் நன்மையைப் பெறவேண்டி செய்யப்படும் வழிமுறைகள் பல உண்டு. அவற்றைப் பற்றி விளக்கும் உண்மைகளைக் கொண்டவை சிவாகமங்கள். அவற்றில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ள பல விஷயங்களில் முக்கியமானது அபிஷேகம்.

இறை அபிஷேகம் ஏன்... எதற்கு... எப்படி?

? அபிஷேக வழிபாட்டின் முக்கியத்துவம் என்ன?
அபிஷேகத்தைத் திருமஞ்சனம் என்று கூறுவார்கள். இதுவொரு முக்கியமான கிரியை என்று ஆகமங்கள் விளக்குகின்றன. அபிஷேகத்துக்குமுன், அபிஷேகத்துக்குப் பின் என்றும் இதற்கன கிரியைகளை பிரித்து வகுத்துள்ளன. அர்ச்சனம்... அதாவது அபிஷேகத்தை ஜலார்ச்சனம் என்று குறிப்பிடுகின்றன ஆகமங்கள். எல்லாம்வல்ல இறைவனை ஜலத்தினால் திருப்தி செய்யக்கூடிய மிகச் சிறந்த வழிபாடு அபிஷேகம் என்கின்றன ஆகமங்கள்.

எப்படி ஒரு மரத்தின் வேர்ப்பகுதியில் விடும் நீரானது, அதன் இலை, கிளைகள், மலர்கள், கனிகள் ஆகிய அனைத்துப் பாகங்களுக்கும் சென்று சேர்கிறதோ, அப்படி ஆலயங்களில் இறைவனுக்கு நிகழும் அபிஷேகத்தால் அனைத்து ஜீவராசிகளும் நன்மையை அடைகின்றன. இந்த உலகில் 84 லட்சம் உயிரினங்கள் இருக்கின்றன என்கின்றன நம் ஞானநூல்கள். அபிஷேகம் முதலான இந்தக் கிரியைகள் மூலம் நாம் அளிக்கும் திரவியங்கள் அந்த 84 லட்சம் உயிரினங்களுக்குச் செல்கின்றன எனில் நாம் எவ்வளவு பெரிய பாக்கியசாலிகள்!

? அபிஷேகத் திரவியங்கள் குறித்து ஆகமங்கள் கூறும் நியதிகள் என்ன?

ஆகமங்களில் அபிஷேகம் செய்விக்கக் கூடிய மூர்த்தியின் அளவுக்கு ஏற்ப, அபிஷேகத் திரவியங்களின் அளவு மாறுபடும். அதேபோன்று அபிஷேகத்துக்கான திரவியங்களை எப்படி கொண்டுவர வேண்டும், எப்படி தயாரிக்க வேண்டும், எந்த மந்திரங்களைக் கூறி அவற்றை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் போன்ற விவரங்கள் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளன. கிரியைகள் நமக்கு ஓர் அத்ருஷ்ட (மறைமுக) பலனைத் தருவதால் இம்முறைகளில் நாம் மிகவும் கவனம் செலுத்தவேண்டும்.

எந்தத் திரவியத்தை வேண்டுமானாலும் கடவுளுக்கு அர்ப்பணிக்கலாம், அவர் எதையும் ஏற்றுக்கொள்வார் என்ற எண்ணம் தவறானது. நம் சாஸ்திரங்கள் இயற்கையை எப்படி ஆராதிக்க வேண்டும், இயற்கையுடன் எப்படி இணைந்திருக்க வேண்டும் என்பதற் கான வழிகாட்டலை - இயற்கைக்கும் நமக்கு மான தொடர்பினை அபிஷேகம் முதலான கிரியைகளின் மூலம் ஏற்படுத்தித் தருகின்றன.

ஆகவே பக்தியுடனும் கவனத்துடனும் விதிப்படி அபிஷேக ஆராதனைகளைச் செய்யவேண்டும். உரிய அளவில் நிவேதனம் சமர்ப்பிக்கவேண்டும்.

இறை அபிஷேகம் ஏன்... எதற்கு... எப்படி?

? ஞானநூல்கள் விளக்கும் அபிஷேகத் திரவியங்கள் என்னென்ன?

அபிஷேகத் திரவியங்கள்: பஞ்சகவ்யம், பஞ்சாம்ருதம், பால், தயிர், நெய், தேன், சர்க்கரை, அன்னாபிஷேகம், இளநீர், சந்தனம், விபூதி, பன்னீர், புஷ்போதகம், பத்ரோதகம், சுவர்ணோதகம், விசேஷ அர்க்ய தீர்த்தம் ஆகிய இவை அனைத்தும் முக்கியமானவை.

? எந்தெந்த மாதத்தில் என்னென்ன திரவியங்களால் அபிஷேகிப் பது சிறப்பு?

மாதங்கள் - சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வதை நாம் 12 மாதங் களாக கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு மாதமும் எந்தெந்த திரவியங்களால் இறைவ னுக்கு அபிஷேகம் செய்யவேண்டும், அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பது குறித்த ஆகம வழிகாட்டலும் உண்டு.

மார்கழி: நெய் அபிஷேகம்
தை: தேன் அபிஷேகம்
மாசி: நெய், கம்பளம் ஊறிய மார்ஜனோதக அபிஷேகம்
பங்குனி: தயிர் அபிஷேகம்
சித்திரை: மருக்கொழுந்து ஊறிய புஷ்பாபிஷேகம்
வைகாசி: சந்தன அபிஷேகம்
ஆனி: முக்கனிகள் ஊறிய அபிஷேகம்
ஆடி: பால் அபிஷேகம்
ஆவணி: சர்க்கரையால் அபிஷேகம்
புரட்டாசி: வெண் கரும்புச் சாறு கொண்டும், வெல்ல அப்பம், அதிரசம் முதலிய பக்ஷணங்களினால் அபிஷேகம்.
ஐப்பசி: சுத்த அன்னத்தால் அபிஷேகம்
கார்த்திகை: நெற்பொரியாலும் அவற்றின் பொடி ஊறிய நீரால் அபிஷேகம், சூடான நீரால் அபிஷேகம் செய்யத் தக்கது.

இங்கு கூறப்பட்டுள்ள அபிஷேக திரவிய வகைகள், ஒவ்வொரு ஆகமங்களின் படியும், அந்தந்த ஆலயங்களில் கடைப்பிடிக்கப்படும் வழக்கங்களின்படியும் சில மாறுதல்களுடன் நடைபெறும். இப்படியான அபிஷேகத்தை குறிப்பிட்ட மாதத்தின் பெளர்ணமி நாளிலோ, அந்த மாதத்துக்கான நக்ஷத்திரத்தன்றோ நடத்தவேண்டும் என்கின்ற ஆகமங்கள்.

இறை அபிஷேகம் ஏன்... எதற்கு... எப்படி?

? ஆலய அபிஷேகங்கள் குறித்த நியதிகள் என்னென்ன?

ஆலயங்களில் அபிஷேகம் செய்யும்போது அந்தந்த சுவாமிக்கு உரிய வஸ்திரங்களை அணிவித்து செய்திடல் நலம்.

சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யும் போது ஆவுடையார் என்ற சக்திப் பகுதியில் மேல் வஸ்திரம் தரித்தும், சிவபெருமானின் சிரசில் கொண்டை மாலை என்று கூறப்படும் வட்டமான மாலையை இருக்கச் செய்தும் அபிஷேகம் செய்வது அவசியம்
அபிஷேகத்துக்கு அளிக்கப்படும் திரவியங்கள் தூய்மையாக இருக்கவேண்டும்.

அபிஷேகக் காலங்களில், திரைச்சீலையால் மறைக்கப்பட்டு அபிஷேகம் நடைபெற வேண்டும். முக்கியமான பால், தயிர், சந்தனம், விபூதி, கலசாபிஷேகம் போன்ற தருணத்தில் மட்டும் திரையை நீக்கி மக்கள் யாவரும் தரிசிக்குமாறு செய்யலாம்.

முக்கியமாக கடவுளுக்கு எவ்வளவு அபிஷேகம் செய்கிறோமோ, அந்த பங்குக்கு நிவேதனம் செய்யவேண்டும்.

அபிஷேக திரவியங்கள் நிறைய உள்ளன என்பதற்காக பெரியளவில் அபிஷேகம் நடத்தி விட்டு நிவேதனத்தைக் குறைத்துவிடக் கூடாது. விதிப்படி எந்த அளவு நிவேதனம் கூறப்பட்டுள்ளதோ, அந்தளவு இறைவனுக்கு அபஷேகத்துடன் நிவேதனம் அளிப்பது சிறப்பாகும்.

? நம் வீடுகளில் நான் செய்யும் அபிஷேகம் குறித்த நியதிகள் என்ன?

வீட்டில் நம்முடைய ஆன்மார்த்த மூர்த்திக்கு ( 12 அங்குலதுக்குக் குறைவான அளவில் உள்ள மூர்த்திக்கு) நம்மால் இயன்ற பால், தயிர் போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்து வழிபடுவோம். அத்துடன் ஆலயங்களில் நடைபெறும் பொதுவான வழிபாடு எனும் சிறப்புக்குரிய அபிஷேக ஆராதனைகளுக்கு (ஆலய வழிபாடு களைப் பரார்த்த பூஜை என்பார்கள்) நம்மால் இயன்ற திரவியங்களை அளித்தும் வணங்கி வழிபடலாம்.

இறை அபிஷேகம் ஏன்... எதற்கு... எப்படி?

?சிறப்பு வகை அபிஷேகங்கள் ஏதேனும் உண்டா?

அபிஷேகம் பல வகைப்படும். முக்கியமாக கலசாபிஷேகம். சுவாமிக்கு ஆயிரம், பத்தாயிரம் என்ற பல எண்ணிக்கைகளில் நடைபெறும் அபிஷேகம் இது. அதேபோல் தினமும் 9 கலசங்கள் வைத்துச் செய்யப்படும் நவகலச பூஜையும் உண்டு. முற்காலங்களில் மன்னர்கள் பலரும் சிறப்பு அபிஷேகங்களை நடத்தியுள்ளார்கள். போர்ச் சூழலின்போது, மழை வேண்டி, அதிக மழைப்பொழிவு முதலான இயற்கைச் சீற்றங்களின் பாதிப்பிலிருந்து விடுபட, உலகின் பாதுகாப்பு வேண்டி... இங்ஙனம் பல பிரார்த்தனைகளை முன்வைத்துச் செய்ய வேண்டிய சிறப்பு அபிஷேகங்களையும் ஆகமங்கள் அளித்திருக்கின்றன.

`தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உனதொழிலே’ என்று சுந்தரரும், `தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி’ என்று அப்பர் பெருமானும் ஆலயம் தொழுதலின் - வழிபாட்டின் சிறப்புகளைக் கூறியுள்ளார்கள்.

ஆலயங்களில் இருக்கும் சக்தியானது நம் குடும்பச் செழிப்புக்கு மட்டுமல்ல உலகின் இயக்கத்துக்கும் காரண மான சக்தி என்பதை அறிந்தே, நம் பெரியோர்கள் ஆலய வழிபாடு களைக் கொண்டாடினார்கள். நாமும் அபிஷேகம் - திருமஞ்சனம் போன்ற வழிபாடு கள் சகல ஆலயங்களிலும் தடையின்றி சிறப்புற நடைபெற உறுதுணையாய் இருக்க வேண்டும்.

- பதில்கள் தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism